மறைந்தாலும் மறையாத மாமனிதர்களில் ஒருவர் புவியரசு. இவர் மாணவப் பருவத்திலேயே தமிழில் மரபுப் பாக்கள் புனையும் ஆற்றல் பெற்றார். தமிழ் மொழி, காதல், புத்திலக்கியம், சமூகம் என பாரதி, பாரதிதாசன் தாக்கத்தில் பாக்களைப் புனைந்தார். சி.கே. ஆறுமுகம் உதவியல் 1964இல் 1½ அணா விலையில் ஒரு தொகுப்பை வெளியிட்டார். வள்ளுவரும் இளங்கோவும், ஔவையும் மூவேந்தரும், காவலரும் பாவலரும், காமராஜ், திருக்குறள் தெளிவுரை ஆகிய தலைப்புகளில் குறைந்த விலைகளில் நூல்கள் எழுதினார்.
இளமைப் பருவத்தில் வறுமையை எதிர்கொண்டவர், திண்ணைப் பள்ளியில் தமிழைக் கற்றவர். திராவிட இயக்கத்தின் தாக்கத்தால் அக்காலத்தில் நூல்களைத் திருமணப் பரிசாக வழங்கும் பழக்கத்தால் நூல்கள் ஏராளமாக விற்பனையாயின. ஆனால் திராவிட இயக்கத்திற்கு மாற்றாக ஓர் எதிர் இயக்கமாகச் சொல்லப்பட்ட தமிழரசு இயக்கத்தில் இவர் ஈடுபாடு உற்றதால், சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு தமிழிசை ஞானமடைமாற்றப்படுத்தும் கவிதையாகவே இளைஞராற்றுப்படை வெளிவந்தது. உடுமலைப்பேட்டைக்கருகிலுள்ள லிங்கவ நாயக்கன் புதூரில் சுப்பையா - தாயம்மாள் இணையருக்கு ஒரே புதல்வராகப் பிறந்தவர், சு.சகந்நாதன், தமிழின் தாக்கத்தாலும் தமிழரசு இயக்கத்தின் தாக்கத்தாலும் புவியரசு ஆனார்.
காலம் தோறும் கவிதை எரியும் எரியும் கணலை கண்ணீர் தணிக்கும் – என்ற புவியரசின் வரிகள் ‘ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்’ என்ற மொழியை நினைவூட்டுகின்றன.
கோவை நகரை நிலைக்களனாகக் கொண்டு தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர் புவியரசு. இவர் ஒரு பெருநகரக் கவிஞராகத் தம்மை உருப்பெருக்கம் செய்துகொண்டார். திராவிட இயக்கத்தின் பழம்பெருமை பேசும் நடையைக் கைவிட்டு, பழைய உள்ளடக்கங்களை, உவமைகளை, உத்திகளைக் கைவிட்டு, சொல் புதிது, பொருள் புதிது, வளம் புதிது, என்ற பாரதியின் பழக்கங்களை வழிமொழிந்து, மாற்றத்தை எதிர்நோக்கி புதிய தேடல்களில் தம் கவனத்தைச் செலுத்தினார். அவருடன் தன்னை அடிக்கடி புதுப்பித்துக்கொள்ள வேண்டிய வரலாற்றுச் சூழலைச் சரிவரப் புரிந்து கொண்டு தம் நண்பர் இளமுருகுடன் இணைந்து ‘தேனீ’ சிற்றிதழை நடத்தினார். மரபு, மரபில் புதுமை, புதுமையில் மரபு, புதுமை எனத் தம் கவிதைப் பரிமாணத்தை வளர்த்துக் கொண்டார் புவியரசு.
சமத்துவச் சிந்தனைகள் வயப்பட்ட கவிஞர் தம் தேடலை சோவியத் இலக்கியத்தின் பால் மேற்கொண்டார். மயாகவ்ஸ்கி, பாப்லோ நெரூதா ஆகியோரின் படைப்புகளில் தொடங்கிய அவரது ஆர்வம் தால்த்தாய், மாக்ஸிம் கார்க்கி, தஸ்தாயேவ்ஸ்கி, ஆண்டன்செகவ் போன்ற மகத்தான சோவியத் ஆளுமைகளின் பால் ஈர்க்கப்பட்டது. மேலும், கிழக்கு ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதைகளிலும் தென்அமெரிக்கக் கவிதைகளிலும் தம் ஈடுபாட்டை வளர்த்துக் கொண்டார். மரபுக்கவிதைகளில் கொடிகட்டிப் பறந்தவர், தம் முனைப்பைப் புதுக்கவிதைகளில் செலுத்தினார்.
படைப்பிலக்கியத்தில் இவரது 12 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. சேக்சுபியர், ஓசோ, கலில் கிப்ரான், காசி நஸ்ரூல் இஸ்லாம், தஸ்தயேவ்ஸ்கி போன்றோரின் படைப்புகளையும் இவர் மொழியாக்கம் செய்துள்ளார்.
மார்க்ஸ் கூறியபடி மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை வானம்பாடிகள் எளிதாய்ப் புரிந்துகொள்ள இலக்கிய வரலாறும் சமூக வரலாறும் உதவியதே காரணமாகும். கோவையில், ஞானி, சக்தி, புவியரசு, சிற்பி, கி.வேங்கடசாமி, இளமுருகு, முல்லை ஆதவன், அக்கினிபுத்திரன், மு.மேத்தா நித்திலன், தேனரசன் போன்றோர் தமிழாசான்களாக இருந்தது. ஒரு வழியில் மரபை அறிந்து மரபைப் படைக்கும் உத்தியில் வல்லவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
புவியரசின் முத்திரை பதித்த சில கவிதைகளில் முதலாவது, இறைவா என்னை ஏன் கைவிட்டு விட்டாய் என்பது.
இசுரேலிய விமானங்கள் வீசும் குண்டு மாதா கோவிலில் விழுந்து அங்கிருந்த ஏசுவின் சிலையை உடைத்துவிட்டது. சிலுவையை ஒரு கையில் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருக்கும் ஏசுவைப் பார்த்து கவிஞன் கேட்கிறான்.
“ஏசுவே. உன்னை இக்கதிக்கு உள்ளாக்கியவன் யார்?
இசுரேல் விமானிகள் என்று கூறினர்.
இரத்த சம்பந்தம் உடையவர் ஆயிற்றே.
கொலைக்களங்கள் இனியில்லை என்றெண்ணினேன்.
அவை தொடர்கின்றன.
மீண்டும் சிலுவையில் அடைய நான் பிளாத்து மன்னனல்ல
ஏசுவே தேவகுமாரா.
உன் பரமபிதா
உன்னை ஏன் இப்படிக் கைகழுவி விட்டான்?
இது உலகளாவிய கவிதையாக இன்றளவும் புவியரசை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறது.
- கனல் மைந்தன்