எழுத்தாளர் இறையன்பு அவர்களை 2005ஆம் ஆண்டு மதுரையில் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்த போது ஏற்பட்ட அறிமுகம், பின்னர் நட்பாக மலர்ந்தது. தமிழ்நாடு அரசில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியபோது அவரை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். சமகாலப் பிரச்சினைகள் முதலாக இலக்கியம், பண்பாடு, அரசியல் எனப் பல்வேறு தளங்களில் எங்களுடைய பேச்சுகள் நீளும். அறம் என்ற சொல்லின் முழுமையான பொருண்மையை அவருடைய செயல்பாடுகளிலும் எழுத்துகளிலும் கண்டு வியப்படைந்திருக்கிறேன். தமிழர் வாழ்க்கையும் மனித சமூகமும் மேம்பாடு அடைவது குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் யோசித்தும் வருகின்ற நண்பர் இறையன்புவை ‘உங்கள் நூலகம்’ இதழுக்காக மாலைப்பொழுதில் சந்தித்துப் பேசினேன். தலைமைச் செயலர் பணியில் காத்திரமாகச் செயலாற்றி, இன்று விட்டு விடுதலையாகிச் சுதந்திரப் பறவையாகச் சிறகடிக்கிற இறையன்பு எவ்விதமான மனத்தடைகளும் இல்லாமல் என்னுடன் பேசிய பேச்சுகள், அவருடைய காத்திரமான மறுபக்கத்தை வெளிப்படுத்துகின்றன. அவை, வாசிப்பில் உங்களுக்குள் ஏற்படுத்துகின்ற மாற்றங்கள் முக்கியமானவை.

சந்திப்பு: ந.முருகேசபாண்டியன்

கடந்த 36 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசுப் பணியில் காத்திரமாகப் பணியாற்றி, ஓய்விற்குப் பின்னர் அண்மைக் காலமாகப் பல்வேறு அரங்குகளில் உரையாற்றி வருகிறீர்கள். எப்பொழுதும் பரபரவெனச் செயலாற்றிய நீங்கள் தற்சமயம் கிடைத்துள்ள ஓய்வை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஓய்வைப் பற்றி எப்போதுமே எனக்கு ஒரு பார்வை உண்டு. சாய்வு நாற்காலியில் ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு பத்திரிகை ஆசிரியருக்கு அத்தனையும் தவறாக நடப்பதைப்போல கடிதம் எழுதி அனுப்புவதே பணி என்று என்னால் கருத முடியவில்லை. ‘எங்கள் காலத்தில்...' என்று தொடங்கி அனைவரையும் பயமுறுத்தும் சுயபுராணங்களில் காலத்தைக் கடத்த விரும்பவில்லை. ஒவ்வொரு நொடியும் நமக்குக் கிடைத்த ஊக்கப் பரிசு. என்னைப் பொருத்தவரை செய்ததிலிருந்து விலகி வேறொன்றைச் செய்வதுதான் ஓய்வு. அதுவே இனிமையான இளைப்பாறுதல். எதுவுமே செய்யாமல் இருப்பதை ஓய்வு என்று ஒரு போதும் எண்ண முடியாது. அது ஓய்ந்து போவது. அரசுப் பணியில் நான் அடைந்த அனுபவங்களை என் கடைவாயில் தேக்கி வைத்திருந்தேன். இப்போது
அவற்றை உரைகளாக இளைஞர்களிடம் ஓயாமல் ஆற்றிக் கொண்டிருக்கிறேன். நண்பர்களைச் சந்திக்கிறேன். அவர்களோடு பலவற்றையும் கலந்துரையாடுகிறேன். அந்த வகையில் இது பணியின் இன்னொரு பரிமாணமாகப் பரிமளிக்கிறது. எனக்குப் பரிச்சயமான சில பகுதிகளில் இளைஞர்களுடன் களத்தில் இறங்கி சில விழிப்புணர்வுப் பணிகளையும் செய்து கொண்டிருக்கிறேன். செல்கிற கல்விக்கூடங்களிலெல்லாம் போதை மருந்தின் தீமைகள் குறித்தும், மின்னணு சாதனங்களை அளவாகப் பயன்படுத்துவது குறித்தும் பேசி வருகிறேன். பணிக் காலத்திற்கும், ஓய்வு காலத்திற்கும் இடையே தொய்வு ஏதுமின்றி இயங்கி வருகிறேன். பணி ஓய்வு எனக்கு காற்புள்ளியே தவிர, முற்றுப் புள்ளி அல்ல.v iraianbu 457தமிழ்நாடு அரசு இயந்திரத்தில் நீங்கள் தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர்பதவிகள் வகித்தபோது, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்து வதற்கான வாய்ப்பாகக் கருதிச் செயல்பட்டீர்கள். இடைவிடாமல் செயல்பட்ட மனநிலை, எப்படி உங்களுக்குள் உருவானது? அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள்.

அரசுப் பணி என்பது ஒருவகை சேவை. சம்பளம் பெற்றுக்கொண்டு சேவை ஆற்றுகின்ற வாய்ப்பு மகத்தானது. அது ஒருவித வழிபாடும்கூட. அதில் ஒரு நொடியைக்கூட வீணாக்க முடியாது. ஒரு நிமிடம் விரயம் செய்தால் ஓர் உயிரை இழக்க நேரிடலாம். விழிப்புணர்வும், அக்கறையும், அர்ப்பணிப்பும் இணைந்தால்தான் அரசுப் பணி முழுமையானதாக மகிழ்ச்சியை அளிக்கும். அரசுப் பணியில் நாம் செய்த செயல் நிறைவுறுகிறபோது நெஞ்சு பூரிக்கின்றது. அந்த சுகத்தை அனுபவித்தவர்களுக்கே அதன் அருமை புரியும். பதவி என்கிற பதம் வசீகரிக்கக்கூடியதாகத் தொனித்தாலும், அது நுண்ணிய பொறுப்புகளும், முதுகை அழுத்துகிற சுமைகளும் கொண்ட, பலரும் கேள்விக்குட் படுத்தி ஒரு வட்டத்திற்குள் முன்னிறுத்துகிற இக்கட்டுகள் கொண்ட பணிதான். நாம் தூர் வாரிய கால்வாயில் நீர் வழிந்தோடும்போது நாமே வழிந்தோடுவதைப் போன்ற பரவசம் ஏற்படும். நாம் அனுமதி அளித்த பள்ளிக் கட்டடத்தில் குழந்தைகள் படிப்பதைப் பார்க்கும்போது மனத்திற்குச் சிறகுகள் முளைக்கும். கல்லும் முள்ளுமாக இருந்த சாலை கான்கிரீட்டாக மாறும்போது பதக்கம் பெற்ற திருப்தி தென்படும். அரசுப் பணி அயர்ச்சி அளிக்காத அற்புதப் பணி. ஓய்வு பெற்றபிறகு ஒரு கோப்பில்கூட நாம் ஆணை பிறப்பிக்க முடியாது. இந்திய ஆட்சிப் பணியில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்புகள் இருப்பதால் தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்ற முடியும். எனவே, இருக்கும்வரை சுழன்று பணியாற்றுவதும், பணி நிறைவு பெற்றதும் திரும்பிப் பார்த்து தித்திக்கும் நினைவுகளை அசைபோடுவதும் ஆனந்த அனுபவம்.

நாகப்பட்டினத்தில் சாராட்சியராகப் பணியாற்றிய போது அது தனி மாவட்டமாக உதயமானது. அப்போது ஆற்றிய பணிகளையும், அங்கிருக்கும் மீனவப் பெரு மக்களோடு நெருங்கிப் பழகியதையும் நினைக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. கடலூரில் பணியாற்றியபோது சிறைச்சாலையைச் சுற்றி நட்ட தேக்குக் கன்றுகள் நெடிய மரங்களாக வளர்ந்திருப்பதை அண்மையில் சென்று பார்த்த போது அகம் நிறைந்தது. அங்கே கைதிகளுக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தொழிற்பயிற்சி அளித்ததை நினைத்தால் இப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடலூர் நகரில் ஏழைப் பெண்களுக்கு முதல்முறையாக ஆட்டோ ஓட்ட கற்றுக்கொடுத்ததும் நினைவுக்கு வந்தது. வெள்ளிக் கடற்கரையை அழகுபடுத்திய காட்சிகள் நெஞ்சில் நிழலோடின. காஞ்சியில் நிலவொளிப் பள்ளியில் படித்த மாணவர்கள் நெஞ்சம் நிறைய அரசுப் பணியில் இணைந்தது குறித்துப் பெருமிதம் கொள்ள முடிகிறது. இப்படிப் பணியாற்றிய துறைகளிலெல்லாம் அசை போடுவதற்கு ஆயிரம் நிகழ்வுகள் இருக்கின்றன. இடை விடாமல் செயல்பட்டதற்குக் காலம் தந்த பரிசுகள் அவை.

பொதுவாகத் தலைமைச் செயலாளராகப் பணியாற்றியவர்கள் களத்திற்கு வந்தது குறித்து நான் கேள்விப் பட்டதில்லை. நீங்கள் ஒவ்வொரு வாரமும், அதுவும் குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் கள ஆய்வு மேற்கொண்டதை நாளிதழில் வாசித்தும் தொலைக் காட்சியில் பார்த்தும் வியப்பாக இருந்தது. நீங்கள் மரபை மீறி களத்திற்குச் சென்றதற்குக் காரணம் என்ன?

களப்பணி செய்யக்கூடாது என்று எந்த மரபும் இல்லை. பெரும்பாலும் தலைமைச் செயலாளராக இருப்பவர்களுக்கு அதற்கு நேரம் இருக்காது. மேலும் ஒவ்வொரு துறையிலும் திட்டங்கள் முறையாக நடக்கின்றனவா என்பதை முழுமையாக உறுதி செய்பவர்கள் இயக்குநர், ஆணையர் போன்ற பதவிகளில் இருப்பவர்கள் தாம். அவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு துறைச் செயலர்களுடையது. ஏதேனும் தவறு நடந்தால் துறைச் செயலர்களும், துறைத் தலைவர்களும்தான் பொறுப்பு. துறைகளுக்கிடையே பணிகளை ஒருங்கிணைப்பதும், ஆய்வு செய்வதும், இரண்டு துறைகளுக்கு இடையே சிக்கல்கள் இருந்தால் தீர்த்துவைப்பதும் தலைமைச் செயலாளருடைய பணி. ஏனென்றால், மொத்தம் முப்பதுக்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் கீழும் பல துறைத் தலைவர்கள். அனைத்தையும் கண்காணிக்க தலைமைச் செயலாளருக்கு சாத்தியம் இல்லை. களத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால்தான் கொள்கை முடிவுகளை எடுக்க ஆலோசனைகளை வழங்க முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையும் அனுபவமும் உண்டு.

நான் அதனால் ஓய்வாக இருக்கும் ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். செஸ், ஒலிம்பியாட் போன்ற சர்வதேச நிகழ்வுகளைப் பிசிறில்லாமல் ஒருங்கிணைக்க தொடர்ந்து மேற்கொண்ட கள ஆய்வுகளே காரணம். அதைப் போலவே, பல துறைகளில் நடக்கும் பணிகளை நான் வாரந்தோறும் ஆய்வு செய்து சில ஆலோசனைகள் நடத்திப் புதிய திட்டங்களையும், ஏற்கெனவே இருக்கிற திட்டங்களில் சில மாற்றங் களையும் செய்ய முடிந்தது. ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் எனக்குத் தோதாக அகப்பட்டதால் சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் போன்ற அருகிலிருக்கிற மாவட்டங்களில் மட்டுமே வார ஆய்வு நடந்தது. ஆனால், முதலமைச்சர் நடத்துகிற ஆய்வுக் கூட்டங்களுக்குச் செல்கிறபோது மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தினேன்.

அதிகார போதையில் விடுபட்டுச் சுயமாக இருப்பது எளிதானது அல்ல. கடந்த பதினெட்டு ஆண்டுகளாக நீங்கள் பல்வேறு அலுவலகங்களில் உயர்பதவிகளில் இருந்தபோது உங்களை நேரில் சந்தித்ததுக்கும் இப்பொழுது சந்திப்பதற்கும் வேறுபாடு எதுவுமில்லை. இந்த எளிய மனம் உங்களுக்கு எப்படி வாய்த்தது?

திபெத்திய புத்தக் கோட்பாட்டில், சீடர்களிடம் குரு தினமும் ‘நம் மரணம் உறுதியானது’ என்று நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார். நான் ஒவ்வொரு நாளும் ‘ஓய்வு பெறுவது நிச்சயம்’ என்று எண்ணிக்கொண்டுதான் என் பணியைத் தொடங்கினேன். எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை நான் முழுமையாக அறிவேன். நாம் யாராகவோ முயற்சி செய்து தோற்றுப் போவதைவிட எதுவுமற்றவராக ஆகி தொலைந்து போவது நல்லது. எனவே, பணி எனக்கு ஒருபோதும் பதக்கமாகவும் தெரியவில்லை, பாரமாகவும் தெரியவில்லை. மாறாகத் துலாபாரமாகத் தெரிந்தது. எளிமையாக இருப்பதுகூட ஒருவிதத் தந்திரம் என்றே நான் நினைக்கிறேன். அது பிரயத்தனங்களால் ஏற்படுவது. நான் இயல்பாக இருப்பதாகவே கருதுகிறேன்.

நான் காரில் பயணிக்கிறபோதும் சின்ன வயதிலே நடந்து பள்ளிக்குச் சென்ற நினைவுகளை அசை போடுவேன். எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த மாட்டு வண்டி ஓட்டும் தோழர்கள் என்னைப் பள்ளியில் இறக்கிவிட்டுச் செல்வார்கள். ராயக் கோட்டையில் வேளாண் அலுவலராகப் பணியாற்றும் போது ஓசூரில் நடக்கும் ஆய்வுக் கூட்டங்கள் முடிந்ததும் திரும்பப் பேருந்து இல்லாததால் சரக்குந்துகளில் நின்று பயணித்திருக்கிறேன். தொடர் பேருந்து இல்லாததால் கிருஷ்ணகிரியில் வாணியம்பாடி உணவகத்தின் மரப் பலகையில் நள்ளிரவு முதல் விடியல்வரை படுத்திருந்த அனுபவம் உண்டு. எனவே, அவற்றை நினைக்கும்போது இயல்பாக வாழ்வதே உன்னதம் என்கிற எண்ணம் ஆழமாகிறது.

வாழ்க்கை எப்போதும் வசந்தமாக வாய்ப்பதில்லை. சில நேரங்களில் ஒதுக்கப்பட்ட பணிகளிலும் நான் பணியாற்றியிருக்கிறேன். அப்போதும் நான் அதற்காக அங்கலாய்த்ததில்லை. அந்தக் காலகட்டத்தில்தான் அன்புமயமான நண்பர்களைப் பெற்றேன்.

எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கையில் இயல்பாக இருப்பதே இனிமையான வழிமுறை. துறவு மனப்பான்மை என்பது வசதிகளை வழித்தெடுத்து விட்டு வாழ்வதில் இல்லை. அவை நிலையானவை அல்ல என்பதை உணர்வதும், வசதிகளற்ற சூழலில் மன மகிழ்ச்சியோடு இருப்பதும்தான். அதுதான் உண்மையான இயல்புடன் இருப்பது.

அரசாங்கத்தில் உயரிய பதவிகள் வகித்தபோது, நீங்கள் சிறப்பாகப் பணியாற்றி உங்களுடைய முத்திரையைப் பதித்து இருப்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். அரசாங்கத்தின் இறுக்கமான கட்டமைப்பும் விதிகளும் பணி நெருக்கடிகளும் உங்களுக்குள் உருவாகியிருந்த நானைப் பாதிக்கவில்லையா?

பொதுப் புத்தியில் அரசு பற்றியும், அரசு விதிகள் பற்றியும் இருக்கிற கருத்துகள் பல நேரங்களில் தவறாக இருக்கின்றன. விதிகள் மக்களுக்கு விரைவாகச் செல்ல வேண்டும், முறையாகச் செல்ல வேண்டும் என்கிற அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. உன்னதமான நோக்கமே அவற்றின் அடிநாதமாக இருக்கின்றது. செயல்படுத்துபவர்களின் விருப்பு வெறுப்புகளாலும், மறைமுக எதிர்பார்ப்புகளாலும் அவை மக்களின் வெறுப்புக்கு உள்ளாகின்றன. இதை மையமாக வைத்து நர்மதை நதிக்கரையில் எனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவங்களின் அடிப்படையில் ‘ஆத்தங்கரை ஓரம்’ என்கிற நாவலைக்கூட எழுதினேன். எல்லாவற்றையுமே ஒரு சாட்சியாக நின்று பார்க்கக் கற்றுக்கொண்டதால் எந்த நேரத்திலும் என் சுயத்தை அவை பாதிக்கவில்லை.

அச்சு ஊடகம், மேடைப் பேச்சு என்று ஆழமாக கருத்துகளை முன்வைத்துச் செயற்படும் நீங்கள் 90களுக்குப் பிந்திய உலகமயமாக்கல் காலகட்டத்தில் தமிழர் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள முக்கியமான சமூக மாற்றங்களை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

சமூகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் மாணவர் களிடமும், இளைஞர்களிடமும், விவாதங்களோ கலந்துரையாடல்களோ பெருமளவில் நடப்பதில்லை. அவர்கள் மிகுந்த சுயநலத்தோடு தங்கள் எதிர் காலத்தை மட்டுமே மனத்தில் வைத்துச் செயல்படுகிறார்கள். பணம் குறித்த அக்கறையும், வசதிகள் குறித்த ஈடுபாடும் அதிகரித்திருப்பதால் பொது அக்கறை வெகுவாகக் குறைந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் நிறுவனத்திற்கான விசுவாசம் என்பது பொருளாதார அடிப்படையில் தேவை யில்லாத உபரி பாகமாகக் கருதப்படுகிறது. அதனால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தூக்கி எறிகிற கலாச்சாரத்திற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள். எந்தப் பொருளை வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம் என்கிற எண்ணமும், எதையும் தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம் என்கிற மோகமும் அதிகரித்திருக்கின்றன. பெருமளவில் நுகர்வு வெறி தலைதூக்கி இருக்கிறது. நாளைக்கு என்கிற சிந்தனை குறைந்து வருகிறது. இதன் ஒட்டுமொத்தத் தாக்கம் எளிய மக்களையும், நடுத்தரக் குடும்பங்களையும் பெருமளவில் பாதித்திருக்கிறது. நம் ஊரில் ஏழை மக்கள் செய்து விற்ற பொருட்களெல்லாம் முத்திரை பதித்த அந்நியப் பொருட்களால் காணாமல் போய்விட்டன. கைமுறுக்கு செய்து வயிற்றைக் கழுவி வந்த அபலைகள் இன்று நிர்க்கதியாக நிற்கிறார்கள். விளக்குமாற்றுக்குக்கூட வர்த்தக நிறுவனங்களின் முத்திரை விழுந்துவிட்டது. ‘தண்ணீரோடு போட்டி போடுகிறோம்’ என்று அறை கூவிய அயல்நாட்டு குளிர்பானங்களால் உள்ளூர்க் குளிர்பானங்கள் விழிபிதுங்கி உயிரை விட்டு விட்டன. அந்நியப் பொருட்கள் உள்ளூர்ப் பொருட்களின் கழுத்தை நெரித்து காலாவதியாக்கி விட்டன.

அந்நியப் பொருட்களுக்கு எப்போதுமே ஆக்கிரமிக்கும் தன்மை உண்டு. நம் ஊரில் உள்ள பெரும்பாலான மரங்கள் வெளிநாட்டு மரங்களே. அவை வேகமாய் வளர்ந்து வேகமாய் விழுந்து விடுகின்றன. அந்நியப் பசுக்கள் நம் நாட்டுக் கால்நடைகளை வெளியே தள்ளிவிட்டன. கேவன்டிஷ் என்கிற வாழை இன்று உலகம் முழுவதும் கோலோச்சுகிறது. நூற்றுக்கணக்கில் இருக்கும் நம் ரகங்கள் இதனால் நலிந்து போய்விட்டன. நாங்கள் தீவுத் திடலில் வாழைத் திருவிழா நடத்தியபோது வியாபாரிகள் கொண்டு வந்த எண்ணற்ற ரகங்கள் எங்களுக்கு வியப்பைத் தந்தன. அமெரிக்க மக்காச் சோளம் இப்போது சந்தையில் வழிந்து நிற்கிறது. நம்மூர்ச் சந்தைகளில் வெளிநாட்டுப் பொருட்கள் உள்ளூர் மக்களின் உழைப்பை உதாசீனம் செய்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றன.

விரைவில் காலாவதி ஆகின்ற பொருட்களும், குறிப்பிட்ட காலத்துடன் காலாவதி ஆவதைப் போன்ற மயக்கத்தை இளைஞர்களுக்கு அளிக்கிற பொருட்களும் ஊதியத்தில் பெரும் பகுதியை உறிஞ்சிக்கொள்கின்றன. தொடக்கத்தில் நிறைய வேலைவாய்ப்பு இருப்பதைப்போல பூச்சாண்டி காட்டிவிட்டு இப்போது பொறியியல் படித்த இளைஞர்களை பொட்டல உணவை எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் செல்ல வைத்திருக்கின்றன. எதிர்காலத்தில் மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுவதற்கான அத்தனை சாத்தியக் கூறுகளையும் நாம் பார்க்கிறோம். இதில் தொழில் நுட்பத்தின் தாக்கமும் வெகுவாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால் மருத்துவத் துறையில்கூட பல மாற்றங்கள் ஏற்பட உள்ளன. நமக்கான சாதகமான தொழில்களில் நாம் அக்கறை செலுத்த வில்லையோ என்கிற வருத்தமும் இருக்கிறது. சமூகம் சார்ந்த தனிப்பட்ட முன்னேற்றமே ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முடியும். பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் மாநிலங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து வகை களிலும் ஊடுருவும் என்பது இப்போதைய கணிப்பு. இனிப்பு மிட்டாயைக் கொடுத்துவிட்டு கழுத்து நகையைக் கபளீகரம் செய்வதைப்போல இவை தோன்றுகின்றன.

குறிப்பாக மின்னணு ஊடகம் பரவலான பின்னர் எல்லோர் கையிலும் ஸ்மார்ட் மொபைல் போன் இருக்கிற சூழலில், சமூக வலைதளங்கள், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்றவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னவாக இருக்கின்றன? அவை முக்கியமானவையா?

அறிவியலும் தொழில்நுட்பமும் கிட்டத்தட்ட மாயா ஜாலங்களோ என்று தோன்றும் அளவிற்கு கிளர்ச்சியூட்டும் வளர்ச்சியை அடைந்துவிட்டன. நாங்கள் குடிமைப் பணித் தேர்விற்குப் படிக்கும் போது முந்தைய ஆண்டு வினாத்தாள்களைத் தேடி ஒரு வாரத்துக்கு மேல் அலைந்தது உண்டு. இப்போது விரலைச் சொடுக்கி விவரங்களைப் பெறலாம் என்கிற நிலை. தேர்வு முடிவைப் பார்க்க அல்லாட வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. அனைத்தும் விரைவாகிவிட்டன. வேகமே விவேகம் என்கிற முன்னேற்ற கதியில் ஒட்டுமொத்த மனித இனமும் இயங்கினால்தான் இருக்கிற இடத்திலேயே நீடிக்க முடியும் என்பது யதார்த்தம்.

எந்தவொரு சாதனமும் இரண்டு விதமான தாக்கங்களை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான தாக்கங்கள் என்று பார்த்தால் அவை ஏற்படுத்தியிருக்கும் தகவல் புரட்சி. தகவல் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாக மாறிக் கொண்டிருக்கும் சூழலில் இந்த மிடுக்குப்பேசிகள் பரவலாகத் தகவலைப் பரப்பியிருக்கின்றன. ஒரு காலத்தில் தொலைபேசி இணைப்பு பெறுவது காட்டில் தவமிருந்து வரம் பெறுவதைப்போல அரிதாக இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரை இருந்தால்தான் விரைவில் கிடைக்கும். இப்போது காசு இருந்தால் கைப்பேசி வாங்கி உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் பேசலாம். சாமானியரும் தகவலை அறிந்துகொள்ளவும், விழிப்புணர்வு பெறவும் இவை பேருதவி. உலகத்தின் எந்தக் கோடியிலிருந்தாலும் தொடர்புகொள்ள முடியும் என்கின்ற வசதி இவற்றால் சாத்தியமாகியிருக்கின்றது. அதிகம் கற்றுக்கொள்ளவும், விரல் சொடுக்கில் விவரங்களைப் பெறவும் இச் சாதனங்களின் மூலம் முடியும் என்பது மிகப் பெரிய அதிகாரப் பரவலாக்கம். இது தவிர, எங்கோ ஒரு மூலையில் ஓர் அரசதிகாரி முறைகேடாக நடப்பதை

உலகத்திற்கே வெளிச்சம் போட்டுக் காட்டும் ஆற்றலை இன்று இவை வழங்கியிருக்கின்றன. எந்த ஒரு பொருண்மை குறித்தும் நாம் தகவலை உடனடியாகப் பெற முடியும். நிறைய வாசிக்கலாம். நிறையத் தெரிந்துகொள்ளலாம். யார் சொன்னதையும் உண்மையா என்று சரிபார்க்கலாம். ஒரு வகையில் இது மிகப் பெரிய மனித உரிமைப் பங்களிப்பு. இனி தகவலால் மக்களை இரு பிரிவுகளாகப் பாகுபடுத்திப் பார்க்க முடியாது.

அதேநேரத்தில் அவை ஏற்படுத்தியிருக்கிற எதிர் மறையான பாதிப்புகளையும் அலச வேண்டும். மிகப் பெரிய அளவில் அவை நேரத்தை உறிஞ்சிக் கொள்கின்றன. காரணம், அவற்றை தேவையில்லாத வற்றிற்கு மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். கேளிக்கைகளுக்கும் பொழுதுபோக்குகளுக்கும் அவற்றில் அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். சிலர் நல்லவர்கள் மீது அவதூறுகள் பரப்பவும், அவற்றைச் சாதுர்யமாகக் கையாளுகிறார்கள். உயர்ந்த மனிதர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதற்கு அவை பயன்படுத்தப் படுகின்றன. யாருடன் வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பேசலாம் என்பதும், யாருக்கு வேண்டுமானாலும், எந்தச் செய்தியை வேண்டு மானாலும் அனுப்பலாம் என்பதும் மிகப் பெரிய அத்து மீறல்கள். சில நேரங்களில் அவை தனிமனித சுதந்தரத்தில் எச்சமிடுபவையாக அமைந்திருக்கின்றன. சமூக ஊடகங்கள் போலியான மாய பிம்பத்தைக் கட்டமைக்கவே அதிகம் உபயோகப் படுகின்றன. இளைஞர்கள் அவற்றில் மோகம் கொண்டு விலை மதிப்பற்ற நேரத்தை வீணடிக்கிறார்கள்.

மின்னணு சாதனங்களால் ஏற்படும் வாசிப்பு மேம்போக்காக இருக்கிறது. நுனிப்புல் மேய்ந்து விட்டுத் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். நன்னூல் கூறும் கடை மாணாக்கர்களே இவர்கள். உயர்தர வாசிப்பு அண்மைக் காலமாக வெகுவாகக் குறைந்து வருகிறது. விமர்சனத்தோடு வாசித்தல், விரிவாக வாசித்தல், ஆழமாக வாசித்தல், அமிழ்ந்து வாசித்தல், ஓய்வுக்காக வாசித்தல், நீளமான வற்றை வாசித்தல், மெதுவாக வாசித்தல், ஆராய்ந்து வாசித்தல் போன்றவை முற்றிலுமாகக் குறைந்து போய்விட்டன.

உறவுகளிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ரகசியமாகச் செய்திகள் அனுப்புவது, அதனால் உறவுகளுக்குள் விரிசல் போன்றவை சகஜமாகி விட்டன. உறவினர்கள் ஒன்று சேர்ந்து குழுவை ஆரம்பிக்கிறார்கள். விரைவிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு முறிந்து போகிறார்கள்.

உளவியல்ரீதியாகவும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிற பலர் தங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணி மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

பொருளாதாரரீதியாகவும் பகட்டு அதிகரித்திருக்கிறது. தங்களை வளமானவர்களாகக் காட்டிக் கொள்ள போட்டி போடும் நிலை.

மிடுக்குப்பேசிகளை இந்தியர்களைப்போல மற்றவர்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை. எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் பயன்படுத்துவது என்பது ஆபத்தானது. வெளி நாடுகளில் யாரும் வீதியில் பேசிக்கொண்டு போவதைப் பார்க்க முடியாது.

வரையறைகளுடன் அவற்றைப் பயன்படுத்தினால் நம்மை மேம்படுத்திக் கொள்ள உதவும். ஏனென்றால் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த இனி ஒருபோதும் நம் கதவுகளை மூட முடியாது.

மின்னணு வலைதளங்களில் வெளியாகின்ற மின்னணுப் பத்திரிகைகள், மீம்ஸ், யூ-டியூப் சேனல்கள், வாட்ஸ் அப் போன்றவைதான் எதிர்காலத்தில் சமூகப் பிரச்சினைகளைத் தீர்மானிக்கின்ற சக்தியாக வடிவெடுக்க வாய்ப்புள்ளதா?

இத்தகைய தகவல்களை எந்த அளவிற்கு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது ஆராய வேண்டிய ஒன்று. அனைத்தையும் நகைப் புள்ளாக்கும் மனப்பான்மையை இவை ஏற்படுத்துகின்றன. இவற்றைச் சிரித்துவிட்டு மறந்து விடுகிறவர்களே அதிகம் என்று தோன்றுகிறது. இன்னும் முதிர்ச்சியான வடிவத்தை இவை அடையும் போது ஒரு வேளை தாக்கத்தை ஏற்படுத்தலாம். யார் விமர்சனம் செய்கிறார்களோ அவர்களுடைய தனிப்பட்ட நடத்தையும் முக்கியமானதாக இருக்கிறது. நடுநிலைமையுடன் செய்யப்படுகிற நியாயமான விமர்சனங்கள், நேர்மையாக வைக்கப்படும் வாதங்கள் அவசியம் தாக்கத்தை ஏற்படுத்தும். சில நேரங்களில் பொய்யைப் பரப்புவதற்கு இவை பயன்படுவதால் ஒரு காலத்தில் புலனாய்வுப் பத்திரிகைகள் பெற்றிருந்த செல்வாக்கு இன்று இல்லாமல் போனதைப்போல இவையும் புறந்தள்ளப் படலாம். செய்யப்படுகிற விமர்சனங்கள் வன்மத் தோடும், பாரபட்சத்தோடும் செய்யப்படுகின்றன என்பதை வாசகர்கள் உணர்ந்தால் அதற்குப் பிறகு அத்தகைய முன்மொழிபவர்களை அசட்டை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். தவறான செய்திகளைப் பரப்பி சமூகப் பிரச்சினைகளை எளிதில் ஏற்படுத்திவிடும் வல்லமை இவற்றிற்கு உண்டு. வட இந்தியத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாகச் சமூக ஊடகத்தில் பரவிய செய்தி இத்தன்மையதே.

சமூகப் பிரச்சினையை முன்வைத்து, இலக்கியத்தில் மேலாண்மை, போன்ற பெரிய அளவிலான கட்டுரை நூல்கள் எழுதுவதற்கான திட்டம், உங்களுக்குள் முதன்முதலாகத் தோன்றியது எப்படி?

பெரும்பாலும் இதழ்களுக்கு எழுதுகிற நெருக்கடியில் தான் என்னுடைய தொடக்க கால நூல்கள் எழுதப்பட்டன. அப்போது ஒதுக்கப்படும் வாரங்களுக்கேற்ப புத்தகத்தின் வடிவமும் அமைந்து விட்டது. இதழ்களைத் தாண்டி எழுத வேண்டும் என்கிற அடிப்படையில் ‘இலக்கியத்தில் மேலாண்மை’ எழுதினேன். அதற்குப் பிறகு அதை வார இதழிலும் வெளியிட்டேன். நூலாக எழுதுவது என்று முடிவு செய்த போது பக்க வரையறை இல்லை. எடுத்துக் கொண்ட பொருண்மை சார்ந்த, எனக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும் எழுதுவதற்கு அது வாசல்களை அகலத் திறந்து வைத்தது. அவ்வாறு எழுதுவது மிகப் பெரிய சுதந்தரமாகவும் இருந்தது. இலக்கியத்தில் மேலாண்மை வாசகர்களிடையே பெற்ற வரவேற்பும், விற்ற நூல்களின் எண்ணிக்கையும் பதிப்பாளருக்கு வர்த்தக ரீதியான திருப்தியைத் தந்தது. அப்போது அதைப்போன்ற முயற்சிகளைத் தொடரலாம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாக ‘உலகை உலுக்கும் வாசகங்கள்’, ‘தென்கிழக்குத் தென்றல்’, ‘நட்பெனும் நந்தவனம்’,

மூளைக்குள் சுற்றுலா போன்ற பெரிய நூல்களை எழுத முடிந்தது. இவற்றில் உலகை உலுக்கிய வாசகங்கள் தினத்தந்தியில் நூறு வாரங்கள் தொடர்ந்து வந்த தொடராகும். அண்மையில் வந்த ‘என்ன பேசுவது, எப்படிப் பேசுவது’ என்கிற நூலும் அந்த வகையைச் சார்ந்தது.

நீங்கள் எழுதுகின்ற கட்டுரை நூல்கள் தமிழ்ச் சமுதாயத்தில் என்ன வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்புகிறீர்கள்?

சில கட்டுரை நூல்களை இளைஞர்களுக்காக எழுதியிருக்கிறேன். என்னைச் சந்திக்கின்ற இளைஞர்கள் அவற்றை வாசித்ததாகவும், அவை மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள். மாணவர் களுக்குத் தேர்வு குறித்து எழுதிய நூல்கள் பயனுள்ளதாக இருந்ததாகவும் பல மாணவர்கள் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். 1995ஆம் ஆண்டு நான் எழுதிய ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’ என்கிற நூல் குடிமைப் பணிகள் பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அதுவரை சிற்றூர் இளைஞர்களுக்கு அந்தத் தேர்வைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், அதற்குப் பிறகு நமக்கும் இது சாத்தியம் எனப் பலர் முயன்று வெற்றி பெற்றதை என்னிடம் நேரடியாகப் பகிர்ந்திருக்கிறார்கள். இலக்கியத்தில் மேலாண்மை பலருக்கு ஆய்வுப் பட்டங்கள் பெற உதவியிருப்பதாகத் தொடர்புடையவர்கள் கூறி யிருக்கிறார்கள். மிகப் பெரிய திருப்பத்தைத் தங்கள் வாழ்வில் ‘போர்த்தொழில் பழகு’, ‘வையத் தலைமைகொள்’ போன்ற நூல்கள் ஏற்படுத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள். வாசகர்களைச் சந்திக்கும்போது அவர்கள் விழிகளில் தோன்றும் மகிழ்ச்சி அதற்கு அத்தாட்சியாக இருந்திருக்கிறது. மற்றபடி என்ன தாக்கம் என்று ஆய்வு எதுவும் நான் மேற்கொள்ளவில்லை. நிறைய இளைஞர்கள் என்னுடைய நூல்களில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்வதன் மூலம் நூல்கள் சோடைபோகவில்லை என்பதும், இன்னும் எழுதலாம் என்பதும் பிடிபடுகின்றன.

தனிப்பட்ட முறையில் ‘இறையன்புவின் நூல்களும் வாசகர்களும்’ என்கிற சந்திப்பை ஏற்பாடு செய்தால் வாசகர் களிடமிருந்து பலவித பின்னூட்டங்கள் கிடைக்கப் பெறலாம். எனவே, என்னால் இதைப் பற்றி தோராயமாகத் தான் கூற முடியும். ஆனால், அவை அதிக எண்ணிக்கையில் விற்பனையாவதாலும், படிக்கப்படுவதாலும் அவற்றால் ஏதேனும் பலன் இருக்கக்கூடும் என்று யூகிக்கவே தோன்றுகிறது.

இலக்கியத்தில் மேலாண்மை, மூளைக்குள் சுற்றுலா, என்ன பேசுவது! எப்படிப் பேசுவது! போன்ற பெரிய நூல்களை அடுத்தடுத்து எழுதுவதற்கான பின்புலம் என்ன?

மேலாண்மை என்பது தனித்து காணப்படும் தொங்கும் தோட்டம் அல்ல. அது தொடர்ந்து வந்த தொன்மையின் ஒழுங்குபடுத்தப்பட்ட கோட்பாடே என்பதை என்னுடைய முனைவர் பட்டங்கள் மூலம் நான் உணர்ந்தேன். அதனால் அதைப் பற்றி தமிழில் எழுதி பலருக்கும் சென்று சேர்க்க வேண்டும் எனக் கருதினேன். எழுதத் தொடங்கும்போது அவ்வளவு பெரிய புத்தகமாக அது வடிவெடுக்கும் என்று நான் அனுமானிக்கவில்லை.

மூளையைப் பற்றி மூன்று நான்கு ஆண்டுகளாக நான் வாசித்துக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு தகவலும் அதுவரை நான் வைத்திருந்த அபிப்பிராயங்களைத் தகர்த்து எறிந்தது. மூளைக்கும் பயிற்சி தேவை, கவனிப்பு தேவை என்பதை உணர்ந்தேன். இன்றைய இளைஞர்கள் தூக்கத்தைத் துண்டித்துவிட்டுப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். பலர் பணம் சம்பாதிக்கும் மும்முரத்தில் உடற்பயிற்சி செய்வதில்லை. இவற்றையெல்லாம் உள்ளடக்கி மூளையைப் பற்றி எழுதத் தொடங்கினேன். முதல் வரைவு அறிவியல் படித்தவர்கள் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்கின்ற அளவிற்கு இறுக்கமாக இருந்தது. அதில் சில அனுபவங்களைக் கலந்து வாசிப்பை எளிமையாக்க தளர்த்தினேன். அதனால் சற்று விரிவாகி விட்டது. அதே நேரத்தில் ஒரு கட்டுரை நான்கு பக்கங் களுக்கு மிகாமல் பார்த்துக்கொண்டேன். வண்ணப் படங்களையும் இணைத்து வசீகரிக்கும்படி அச்சிடச் செய்தேன்.

உரையாடல் கலையை முன்னிட்டுப் பல நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. பேச்சு என்பது எத்தனை லட்சம் ஆண்டுகளாகப் பரிணாம வளர்ச்சி பெற்றது என்பதை அறிந்தால்தான் ஒவ்வொரு சொல்லையும் விழிப்புணர்வோடு பயன்படுத்த முடியும் என்பதை வலியுறுத்தும்பொருட்டு பறவைகள், விலங்குகள் போன்றவை தகவல் தொடர்பு செய்யும் விதத்தைக் கோடிட்டுக் காட்டினேன். ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக மேடைகளில் பேசி வருகிறேன். இந்தக் காலகட்டத்தில் மேடைப் பேச்சு அடைந்த மாற்றங்கள் வியப்புக்குரியவை. அவற்றையும் விளக்க நினைத்தேன். மின்னணு சாதன பயன்பாட்டால் தனிமனித உரையாடல் மிகவும் சுருங்கி விட்டது. எப்படிப் பேசுவது, எத்தகைய உடல்மொழியைக் கையாளுவது போன்ற வற்றையும் குறிப்பிட நினைத்தேன். அதனால் அது சற்று நீண்டுவிட்டது. ஊடக உரையாடல் குறித்து எழுதிச் சேர்க்கவேண்டிய பொறுப்பும் இப்போது இருக்கிறது. இன்னும் இரண்டு பதிப்புகளுக்குப் பிறகு அதுவும் இடம்பிடிக்கும். எந்த நூலையும் திட்டமிட்டு பெரிதாக வடிவமைப்பதில்லை. உள்ளடக்கத்திற்கேற்ப அவை வடிவு பெறுகின்றன.

கிரேக்கம், சீனம், தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியான இலக்கியப் படைப்புகள், சமூக அரசியல் நூல்கள், அறிவியல் தொழில்நுட்பம் கண்டு பிடிப்புகள், கலைகள் என்று விரிந்திடும் பன்முகப் பார்வையைத் தொகுத்து வகுத்து விரித்து எழுதுகின்ற உங்களுடைய எழுத்துத் தொழில்நுட்பம் பற்றிச் சொல்லுங்கள்.

தமிழ் இலக்கியத்தில் சின்ன வயதிலிருந்து ஈடுபாடு அதிகம். தத்துவம், உளவியல் போன்றவற்றை மேலோட்டமாக நான் வாசிப்பதுண்டு. என்னுடைய அலுவல்ரீதியான நண்பர் திரு. அசோக் வர்தன் ஷெட்டி அடிக்கடி ஷேக்ஸ்பியரைப் பற்றி கூறுவார். எனக்கு அப்போது மேக்பத்தும் தெரியாது, ஹேம்லட்டும் தெரியாது. எனவே, ஷேக்ஸ்பியரைப் படிக்க வேண்டும் எனத் தோன்றியது. அதற்காகவே, ஆங்கில நிறைகலைப் பட்டத்தில் இணைந்து அம்மொழி இலக்கியங்களில் சிலவற்றைக் கற்றுக் கொண்டேன். அப்போது ஷேக்ஸ்பியருடைய நாடகங்களை முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்தேன். என்னை வசீகரித்த இன்னோர் ஆளுமை கிறிஸ்டோபர் மார்லோ. அவரை ஷேக்ஸ்பியரே ‘போட்டிக் கவிஞர்’ என்று சிலாகித்தார். அற்ப ஆயுளில் செல்லாமல் இருந்திருந்தால் நமக்கு இன்னொரு மகத்தான இலக்கியவாதி கிடைத்திருப்பார். இவர்கள் படைப்புகளிலெல்லாம் நிறையக் குறியீடுகள் வரும். புனைவுகள் வரும். அவையெல்லாம் கிரேக்க மூலத்தையும், லத்தீன் மூலத்தையும் அடிப்படையாகக் கொண்டவை. டி.எஸ். எலியட்கூட தன்னுடைய ‘காக்டெய்ல் பார்ட்டி’ என்கிற நாடகத்தில் கிரேக்க நாடகமான அல்சஸ்டிஸ் என்ற யூரிப்பிடசின் படைப்பையே குறியீடாகப் பயன்படுத்தியிருப்பார்.

ஆங்கில இலக்கியத்தில் வரும் குறியீடுகளை நன்றாக அறிந்துகொள்ள கிரேக்கப் புனைவுகளையும், கிரேக்க இலக்கியங்களையும் வாசித்தே தீர வேண்டும் என்ற அடிப்படையில் அவற்றை நிறையப் படித்தேன்.

சீன இலக்கியத்தில் முதலில் எனக்கு அறிமுகமானது தாவோ டீச்சிங். சீனத்திற்குச் சென்றபோது நான் எந்த சீனப் பொருளையும் வாங்கவில்லை. யாங்சௌவில் இருக்கும் புத்தகக் கடையில் நுழைந்து ஒரு பக்கம் சீனத்திலும், மறுபக்கம் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்ட சீன ஞானம் தொடர்பான நூல்களையே வாங்கி வந்தேன்.

இந்த அனைத்தையும் நான் கூற வருகிற செய்திக்கு வாகாகப்பயன்படுத்தினால் வாசகர்களுக்குப் புதுஅனுபவமாக இருக்கும் என்று எண்ணினேன். அந்த வகையில் சற்று வழக்கமான பாதையிலிருந்து விலகிச் சென்று சுவைகூட்டும் முயற்சியை மேற்கொண்டேன். வாலாயமான கதைகளை விட்டுவிட்டுச் சற்று மாறுபட்ட கோணத்தில் செய்திகளைச் சேர்த்தால் அலுக்காமல் வாசகர்கள் பக்கங்களைப் புரட்டு வார்கள். இதைத் தவிர வேறு தொழில்நுட்பம் எதுவும் கிடையாது. நான் பேசுகிறபோதும், எழுதுகிறபோதும் சொல்ல வருகிற தகவலுக்கு ஏற்ப அந்த இலக்கியங்களி லிருந்து சம்பவங்கள் என் முன்னால் வந்து நிற்கின்றன. அவற்றை நான் கையாளுகிறேன். மற்றபடி பிரத்தியேகமாகத் தேடி அலைவதில்லை.

நீங்கள் எழுதுவதற்குத் தேர்ந்தெடுத்த நூலுக்கான தகவல்களைத் திரட்டுவதில் நீங்கள் எதிர்கொண்ட சிறப்பான அனுபவங்கள் என்ன?

‘போர்த்தொழில் பழகு’ என்று நூலை எழுத சன் பின்னுடைய புத்தகத்தையும், 36 போர் உத்திகள் என்ற புத்தகத்தையும் சீனத்தில் நேரடியாக வாங்கினேன். அதற்குப் பிறகு ‘இந்திய ராணுவ கலைக் களஞ்சியம்’ என்கிற பத்துத் தொகுதிக்கு மேல் உள்ள நூல்களை தலைமைச் செயலக நூலகத்தில் கண்டெடுத்தேன். கிளாஸ்விட்ஸ் எழுதிய புத்தகம் தருவிக்கப்பட்டது. இஸ்லாமியப் போர்கள் குறித்து பலரிடமும் தகவல்களையும் நூல்களையும் சேகரித்தேன். ராஜேந்திர சோழனின் கிழக்காசிய விஜயத்தைக் குறித்து கருத்தரங்கங்களில் வாசிக்கப்பட்ட ‘நாகப்பட்டனத்தி லிருந்து சொர்ணதீபம் வரை’ என்கிற நூலை நான்காயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். இப்படி நூல்களைத் திரட்டுவது பேரனுபவமாகத் திகழ்ந்தது. ஷேக்ஸ்பியரைப் பற்றி எழுத பேராசிரியர் செல்லப்பன் அவர்களைப் பல முறை நேரில் சந்தித்து நூல்களைப் பெற்று வந்திருக்கிறேன்.

வெளிநாட்டு நூல்கள் பலவற்றை ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் நூலகம் மூலம் மின் பிரதிகளாக என் சகோதரர் திருப்புகழ் பெற்றுத் தந்திருக்கிறார். சில நேரங்களில் ஒரே ஒரு பத்திக்காக புத்தகங்களைத் தேடி அலைந்ததுண்டு. நாம் எழுதுகிற தகவல் அபூர்வமானதாக இருந்தால்தான் வாசகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பதை நான் அறிவேன். சில நூல்கள் தற்செயலாகக் கண்ணுக்குப் படும். அவற்றைப் பல இடங்களில் தேடியிருப்போம். தேடாதபோது அவை கிடைக்கும். ‘தேடுவதை நிறுத்து, தேடியது கிடைக்கும்’ என்கிற சூஃபி வாசகம் நினைவுக்கு வரும். அரேபிய நாடுகளுக்குச் சென்றபோதும் புத்தகங் களையே நான் தேடுவேன். குவைத்தில் ‘மகிழ்ச்சித் தோட்டம்’ என்கிற அற்புதமான நூல் கிடைத்தது. அது குறுங்கதைகளை மேற்கோள் காட்ட மிகவும் பயன்பட்டது. சில நேரங்களில் உங்களிடமே நான் சில விவரங்களையும், சில நூல்களையும் கேட்டுப் பெற்றிருக்கிறேன். யாரெல்லாம் உங்களைப்போல அகண்ட வாசிப்பு உள்ளவர்களாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் எனக்கு அறிவின் அமுதசுரபிகளாகவே இருந்து வருகிறார்கள். புத்தகங்களைத் தேடுகிற பயணமே புனித யாத்திரையாகிவிடுவது உண்டு.

போர்த் தொழில் பழகு, வையத் தலைமை கொள், பத்தாயிரம் மைல் பயணம் என்று தமிழ்ச் சமூகத்தில் எப்படியாவது மாற்றத்தை உருவாக்கிட முயலுகின்ற உங்களுடைய எண்ணம் புலனாகிறது. சமூக மாற்றத்திற்காக எழுதுகின்ற அக்கறை உங்களுக்கு உருவானது எப்படி?

நான் சிறுவனாக இருந்தபோது சமூக அமைப்பு மிகவும் பின்தங்கியதாக இருந்தது. அப்பட்டமாக பல்லைத் துருத்திக்கொண்டிருக்கும் வறுமையை நான் கண்டிருக்கிறேன். அரசின் உதவி பெறும் பள்ளியில் படித்ததால் சாதாரணக் குடும்பங்களிலிருந்து பல மாணவர்கள் உடன் படிப்பார்கள். அவர்கள் உடைகளில்கூட கிழிசல்கள் இருக்கும். அந்தக் காட்சிகள் எல்லாம் என் ஆழ்மனத்தில் அபரிமிதமான தாக்கங்களை ஏற்படுத்தின. பணப் புழக்கம் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் காலை உணவு பழைய சாதம் மட்டுமே.

உங்களுக்கே தெரியும், 1980-களில் படைப்பாக்கத்தில் நிகழ்ந்த மிகப் பெரிய மாற்றம். அப்போது புதுக்கவிதைகள் சமூக மாற்றத்தையும், பொதுவுடைமைக் கருத்துகளையும் முன்வைத்து எழுதப்பட்டன. இளைஞர்கள் அவற்றைப் பெருவாரியாக வாசித்தார்கள். சமூகத்தில் ஒரு புரட்சி நிச்சயம் ஏற்பட்டுவிடும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு அரும்புவிடத் தொடங்கியது. பொதுவுடைமை நூல்களைக் கல்லூரிக் காலங்களில் விடியவிடிய நான் வாசிப்பேன். அந்த நூல்கள் ஏற்படுத்திய சமூக மாற்றம் எனக்குள் வேர்விட ஆரம்பித்தது. நான் பணிக்குச் சென்றபோது நேரில் கண்ட பல நிகழ்வுகள் செயலிலும் எழுத்திலும் நம்மால் இயன்ற மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனத் தூண்டின.

நான் பள்ளியில் படித்தபோது வறுமை சார்ந்த சூழலுக்கு நடுவே எங்கள் குடும்பம் நடுத்தர வசதி உள்ள ஒன்றாகத் திகழ்ந்தது. நான் ஏற்கெனவே சொல்லியபடி, ஏழ்மையின் காரணமாக மக்கள் படும் இன்னல்களை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தமிழ்நாட்டு இளைஞர்கள் போர்க்குணம் உடையவர்களாகவும், தொடர்ந்து முயலும் ஆற்றல் கொண்டவர்களாகவும் திகழ வேண்டும் என்று நான் எப்போதும் கருதி வந்திருக்கிறேன். சமூக மாற்றத்திற்கு எழுத்தில் மட்டும் அல்ல, என் பணியிலும் பல முன்னெடுப்புகளைச் செய்திருக்கிறேன். ஒரே கடிதத்தில் தண்டோராவைத் தடை செய்தது, தூய்மைப் பணியாளர்களுக்கு அலுவலகங்களில் தனி அறை ஒதுக்கியது போன்றவை அத்தகைய தாக்கங்களால்தான்.

இடைத் தரகர்கள் இல்லாமல் பயனாளிகளே வீடு கட்டும் பல முயற்சிகளை நான் மேற்கொண்டு அவை வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த முயற்சியை அங்கீகரித்து அதற்கான அரசாணையை அரசே வெளியிட்டது. சேதாரம் இல்லாமல் பயன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று களப்பணியாற்றும் காலங்களிலெல்லாம் நான் அதீத அக்கறை செலுத்தினேன். அந்த அக்கறையின் கசிவே என் எழுத்தாக ஓய்வு நேரத்தில் உருமாறியது. எனவே தொடக்கத் திலிருந்தே நான் கண்ட வியக்கத்தக்க சமூக மாற்றங்களை என் நூல்களில் பதிவுசெய்யத் தொடங்கினேன். என்னுடைய பயணங்களும் அதற்கொரு காரணமாக இருந்தன.

நீங்கள் எழுதிய இலக்கியத்தில் விருந்தோம்பல், நட்பெனும் நந்தவனம், தென்கிழக்குத் தென்றல் போன்ற நூல்களிலும் சமூகப் பிரச்சினைகளை முன்வைத்திடும் புத்தகங்களிலும் இலக்கியப் படைப்புகளுக்கு முன்னுரிமை தரப்பட்டுள்ளது. சமூகத்தில் இலக்கியத்தின் இடத்தை எப்படி அவதானிக்கிறீர்கள்?

இலக்கியமே சமூகத்தின் பிரதிபலிப்பாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. சிறிது மிகைப்படுத்தல் இருக்கலாம். ஆனால், முற்றிலும் புனைவு என்று புறந்தள்ளிவிட முடியாது. விருந்தோம்பல் அண்மைக் காலமாக மறைந்து வருகிறது. திருமணங்கள் மண்டபங் களோடு முடிந்து விடுகின்றன. அவை கடமைகளாகி விட்டன. ஒரு பூங்கொத்தோடும், புன்னகையோடும், புகைப்படத்தோடும் அவை விடைபெற்றுவிடுகின்றன. அதனால் விருந்தோம்பலைத் தொன்மையிலிருந்து தொட்டு அதன் மாண்பை எடுத்துச்சொல்ல வேண்டும் என்று எண்ணினேன். இன்று பல வீடுகளுக்குச் சென்றால் விருந்தோம்பவும் தெரியவில்லை, பரிமாறவும் தெரிய வில்லை. தயிர் சாதத்தை முதலில் வைக்கிறார்கள். வாழை இலையை எப்படிப் போடுவது என அவர்களுக்குத் தெரியாது. விருந்தோம்புவது சமுதாயத்தின் சான்றாண்மையைக் குறிப்பதாக நான் நினைக்கிறேன். நம் இலக்கியங்கள் விருந்தோம்பலைப் பண்பாட்டின் பதாகையாக உயர்த்திப் பிடிக்கின்றன. அவற்றையெல்லாம் எடுத்துச் சொல்வதன் மூலம் மீண்டும் விருந்தோம்பும் பண்பு துளிர்த்தெழும் என்கிற அவாவில்தான் அவற்றையெல்லாம் பதிவுசெய்ய முனைந்தேன்.

நட்பைப் பொறுத்தவரை, இனி வரும் காலங்களில் அது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரப்பாக நான் கருதுகிறேன். உறவு உதட்டோடு நின்றுவிடுகிறது. ஒப்புக்கு உறவு, உப்புக்கு நட்பு என்பதே உண்மை. அந்த நட்பு எவ்வளவு செறிவடைய வேண்டும் என்பதை உலக இலக்கியங்களிலிருந்து தேடிப்பிடித்து யதார்த்தத்தோடு கலந்து எழுதினேன்.

நல்ல நோக்கத்துடன் எழுதப்படுகிற இலக்கியம் நிச்சயம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எனக்கு நேர்ந்த அனுபவங்களின் அடிப்படையிலும், மாற்றங்களின் அடிப்படையிலும் நான் உறுதியாக நம்புகிறேன். சமூகம் இலக்கியத்தில் பிரதிபலிப்பதைப் போல இலக்கியமும் சமூகத்தில் பிரதிபலிக்கவே செய்யும். ஆனால், அதற்குச் சற்று நாள் பிடிக்கும்.

கல்லூரியில் வேளாண்மையைப் பாடமாகப் படித்த உங்களுக்கு இலக்கிய ஈடுபாடு எப்படி ஏற்பட்டது? ஆசான்கள் யாராவது இருக்கிறார்களா?

பள்ளிப் பருவத்திலிருந்தே பேச்சுப் போட்டிகளில் நானும், என் உடன்பிறந்தோரும் கலந்துகொள்வோம். பரிசுகள் பெற்று வருவோம். எங்கள் தந்தைதான் எப்படிப் பேச வேண்டும் என்றும், எந்த உடல்மொழியோடு பேச வேண்டும் என்றும் எங்களைப் பயிற்றுவித்தார். போட்டிகளில் பரிசுகளாகப் புத்தகங்களையே அப்போது தருவார்கள். காலாண்டு, அரையாண்டு விடுமுறைகளில் சக மாணவர்கள் சொந்தக்காரர்கள் வீடுகளுக்குச் சென்று விடுவார்கள். வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கும். பொழுது போக்க பரிசு பெற்ற புத்தகங்களையே வாசிப்போம். இரவு அரிக்கன் விளக்கின் வெளிச்சத்தில் என் மூத்த அக்காள் பைங்கிளி, உரக்க சிவகாமியின் சபதத்தை வாசிக்க, நாங்கள் வட்டமாக அமர்ந்து கேட்போம்.

கல்லூரிக்குச் சென்றபோது சுயமாக எழுதிப் பேசும் கட்டாயம். எனவே, வாசிப்பு அகலமானது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கவிதைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் அடிக்கடி நடக்கும். அதில் கலந்துகொண்டு பரிசுகள் பெறுவோம். எனவே, வாசித்தால்தான் பேச்சுப் போட்டிகளில் நன்றாகப் பேச முடியும் என்பதால் கிடைத்த நூல்களையெல்லாம் வாசிப்பேன். அது எனக்கான இடத்தைப் பெற்றுத்தர பேருதவியாக இருந்தது. கோவை மாநகரம் கல்விக் கூடங்களின் கூடாரமாக இருந்தது. அதனால் அங்கு அடிக்கடி கல்லூரிகளுக்கிடையே இலக்கியம் தொடர்பான போட்டிகள் நடக்கும். சிதம்பரம் பூங்காவில் மாதம் ஒரு முறை எழிலண்ணல் என்பவரால் கவியரங்கம் நடத்தப்படும். மாணவர்களெல்லாம் அதில் கலந்துகொண்டு கவிதை வாசிப்போம். எங்களுக்குள் கவிதைப் புத்தகங்கள் வாசிப்பதற்காகக் கை மாறும். பரிசு வாங்கிய இரவே இயேசு காவியத்தைப் படித்து முடிக்கும் அளவிற்கு கல்லூரியில் இருந்த ஆர்வம் இப்போதும் நெஞ்சில் மிச்சமிருக்கிறது. இலக்கியமே அப்போது எங்களை இணைத்த இழையாக இருந்தது.

என் கல்லூரியைத் தாண்டி எனக்கு இலக்கிய நண்பர்கள் வாய்த்தார்கள். இன்று அவர்கள் பல துறைகளில் மின்னுவதையும் பார்க்க முடிகிறது. இலக்கியத்தை வாழ்வின் அங்கமாகக் கருதியதால்தான் நான் ‘இலக்கியத்தில் வேளாண்மையும், விரிவாக்கத்தில் அதன் பங்களிப்பும்’ என்கிற தலைப்பில் முனைவர் ஆய்வு மேற்கொண்டேன். படிப்போடு இலக்கியத்தை நேசித்த எங்கள் சமகால நண்பர்கள் யாரும் காணாமல் போகவில்லை.

அவ்வுலகம், சாகாவரம், ஆத்தங்கரை ஓரம் போன்ற நாவல்களையும் சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதி, நூல்களாக வெளியிட்டு இருக்கிறீர்கள். அண்மைக் காலமாகக் கட்டுரை நூல்களைத் தொடர்ந்து எழுதுவதுபோல கவிதை, சிறுகதை, நாவல் போன்ற இலக்கியப் படைப்பாக்கத்தில் ஏன் அதிக அக்கறை காட்டவில்லை?

உங்கள் கேள்வி மிகவும் நியாயமானது. சில நேரங்களில் தொடர்ந்து கட்டுரைகளாகவே எழுதுகிறோமே

என்கிற குற்ற உணர்வு எனக்கு ஏற்படுவதுண்டு. ஆழ்ந்தும், பொறுமையாகவும் ஈடுபட்டால்தான் நாவலை எழுத முடியும். அதற்கு நிறைய மனத் தயாரிப்பும் தேவை. இரண்டு, மூன்று வரைவுகள் எழுத வேண்டும். அப்போதுதான் அது முழு வடிவம் பெறும். எனவே, மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டுதான் நான் அதில் ஈடுபட வேண்டும். என் பணி அனுபவங்களை வைத்து நாவல் ஒன்றுக்கான கதைக் கரு உள்ளது. விரைவில் அதை எழுதி முடிக்க வேண்டும்.

கம்பராமாயணம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற சமயம் சார்ந்த நூல்கள் குறித்து, தோய்வுடன் எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய இறை நம்பிக்கை எந்த வகைப்பட்டது?

என்னுடைய இறை நம்பிக்கை ஆன்மிகம் சார்ந்ததாக உள்ளது. நான் திருக்கோயில்களுக்கும் செல்வதுண்டு, புத்த மடாலயங்களுக்கும் செல்வதுண்டு. மசூரியின் புத்த மடாலயத்தில் அமர்ந்து தியானித்தது உண்டு. வேளாங்கண்ணிக்கும் நாகூருக்கும், துபாயில் உள்ள பெரும் மசூதிக்கும் சென்றதுண்டு. கம்ப ராமாயணத்தை சமூகக் கண்ணோட்டத்தோடும்,மேலாண்மை கண்ணோட்டத்தோடும் அணுகியிருக்கிறேன். அதைப்போலவே திருப்பாவையையும், திருவெம்பாவையையும் உச்சபட்ச ஆன்மிகத் தேடலாகவே நான் அவதானிக்கிறேன். ஜென் குறித்தும், சூஃபி குறித்தும் நான் நிறைய எழுதியிருக்கிறேன். இவற்றைத் தவிர, வாழ்வின் ஒவ்வொரு செயலையும் விழிப்புணர்வோடு செய்தால் அது வழிபாட்டுக்கு இணையானது என்பதை உணர்த்தும் ‘வாழ்க்கையே ஒரு வழிபாடு’ என்கிற நூலையும் எழுதியிருக்கிறேன். குருவுக்கும் சீடனுக்கும் இடையில் நடக்கும் உரையாடலைப் போல ஆன்மிகத் தேடலைக் குறித்த ‘சத்சங்கம்’ என்கிற ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறேன். அதில் ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு குறித்துகூட குறிப்பிட்டிருக் கிறேன். தரிசனம் என்கிற குறிப்பிட்ட நம்பிக்கை சாராத ஆன்மிகத் தீற்றலையும் முன்வைத்திருக்கிறேன். மதம் தாண்டிய மனிதநேயத்தையே என்னுடைய நூல்கள் தூக்கிப்பிடிக்கின்றன. ‘தென்கிழக்குத் தென்றல்’ என்பது ஜென், சூஃபியிசம், தாவோ ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்களைக் கொண்ட நூல். எந்தக் கரையிலிருந்து சுவைத்தாலும் நதி இனிக்கவே செய்கிறது.

இறைமையை நம்புவதிலிருந்து உணர்கிற இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதே என்னுடைய தேடலாக இருக்கிறது. சுவர்களில்லாத பரப்பு வெளியாகவே என்னுடைய நம்பிக்கை விரிகிறது.

நீங்கள் எழுதியுள்ள நூல்கள் அரசியல், அறிவியல், மேலாண்மை, சமூகவியல், தகவல் தொடர்பு, சமயம், இலக்கியம், கலைகள், மெய்யியல் போன்ற பல்துறை சார்ந்ததாக இருக்கின்றன. இத்தகைய பன்முகப் பார்வை உங்களுக்குள் எப்படி உருவானது?

என் கல்விப் பின்புலம் ஒரு முக்கிய காரணம். அடிப்படையில் நான் அறிவியல் மாணவன். வேளாண்மை இளம் அறிவியல் படிப்பில் உளவியல், தகவல் பரிமாற்றம், தாவரவியல், விலங்கியல், வேதியியல் போன்ற பல பிரிவுகள் கற்றுத்தரப்படுகின்றன. எனவே, எல்லா வற்றையும் புரிந்துகொள்ளும் அடிப்படை ஆற்றலை அது வழங்கி வருகிறது. அந்த ஈடுபாட்டின் தொடர்ச்சியாகவே மேலாண்மை, இலக்கியம், உளவியல் ஆகியவற்றை முறையாகப் படித்தேன். முறையாகப் படிக்கும்போது சில கூடுதலான தகவல்களை நாம் பெற முடியும். உதாரணமாக, மேக்பத்தில் வருகிற போர்ட்டர் காட்சி எவ்வளவு முக்கியம் என்பதை முறையாகப் படிக்கும்போது அதிகம் உணர முடியும். சில நுட்பமான தகவல்கள் மேற்கோள் புத்தகங்களின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. நான் இலக்கியங்களை வாசிக்கும்போது ஒப்பிட்டு வாசிப்பேன். திருவள்ளுவரையும் ஷேக்ஸ்பியரையும் ஒப்பிடுகிறேன். டார்வினையும் கம்பரையும் ஒப்பிடுகிறேன். சன்சூவின் போர்க்கலையையும் ராமாயணத்தின் யுத்த காண்டத்தையும் தொடர்புபடுத்திப் பார்க்கிறேன். குறுந்தொகையில் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த பார்வையைப் பட்டியலிடுகிறேன். புறநானூற்றில் போர் முறைகள் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதியும் இருக்கிறேன். திருக்குறளில் மனிதவள மேலாண்மை குறித்த கட்டுரையை அமெரிக்காவில் நடந்த கருத்தரங்கத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறேன். எனவே, இலக்கியத்தை அறிவியல் பார்வையுடன் அணுகும் மனம் எனக்கு உண்டு. அது நான் கற்பதைச் செறிவாக்கியது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

கலைகளைப் பொறுத்தவரை அவற்றில் எனக்குப் பெரும் நாட்டம் உண்டு. ஆன்மிகத்தை அதிகம் துழாவும் அக்கறை கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ரூமி, இத்ரிஷ் ஷா, திச் நாட் ஹான், லாவோட்சு, சங்சூ போன்றவர்களை வாசிக்கும்போது ஏற்பட்டது. கல்லூரிக் காலங்களில் அதிகம் வாசித்தவை சோவியத் ரஷிய அரசு வெளியிட்ட முன்னேற்றப் பதிப்பகத்தின் வெளியீடுகளைத்தான். போட்டித் தேர்வுகளின்போது அரசியலமைப்பு, வரலாறு போன்றவற்றை அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு தலைப்பில் எழுதும்போது அது தொடர்பான ஆதியிலிருந்து தொடங்க வேண்டும் என்கின்ற ஒரு போக்கு எனக்குப் பிடித்திருந்தது. அதனால் பரிணாம வளர்ச்சியிலிருந்து எதையும் அணுகும் பக்குவம் ஏற்பட்டது. இவற்றிலெல்லாம் நிபுணத்துவம் இல்லையென்றாலும் ஆர்வமும் அக்கறையும் இருக்கின்றன என்பது உண்மை.

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பொருண்மையில் எழுதுகிறபோது சுவாரசியம் ஏற்படுகிறது. அது தொடர்பான தகவல்களைத் துழாவும் பரவசம் நிகழ்கிறது. மறுபடியும் மாணவனான மகிழ்ச்சி கூடுகிறது. அந்த சுகத்திற்காகவே பல வேறுபட்ட முயற்சிகளை மேற்கொள்கிறேன்.

ஏறக்குறைய 165-க்கும் கூடுதலான புத்தகங்களை எழுதியிருக்கிறீர்கள். அவை தமிழ்ச் சமுதாயத்தில் எந்த அளவுத் தாக்கம் ஏற்படுத்தியிருக்கின்றன?

என்னுடைய அத்தனை நூல்களையுமே ஆதியிலிருந்து அந்தம்வரை ஒன்றுவிடாமல் வாசித்திருக்கின்ற நீங்கள்தான் அந்தத் தாக்கத்தைச் சொல்ல வேண்டும். எழுதுவதோடு என் பணி முடிந்து விடுகிறது.

நீங்கள் எழுதியுள்ள பெரும்பாலான நூல்கள் இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையையும் செல்ல வேண்டிய திசைவழியையும் சுட்டுவதாகவும் உள்ளன. இன்று சுயமுன்னேற்ற நூல்கள் என்று எழுதி விற்பனையாகின்ற நூல்களை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

எனக்கு சுய முன்னேற்றத்தில் நம்பிக்கை இல்லை. அடுத்தவர்களை மேற்கோள் காட்டி அவரைப் பார், இவரைப் பார் என்று எழுதுவதில் எந்தப் பயனும் இல்லை. அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் கோட்பாடுகளையும்

தத்துவங்களையும் முன்னிறுத்தி நாம் மேற்கொள்ள வேண்டிய உத்திகளைக் குறிப்பிடுவது மட்டுமே நெடுநாள் எடுபடும். பலர் எந்த சொந்த அனுபவமும் இல்லாமல் கடன் வாங்கிய கருத்துகளையும் சம்பவங்களையும் வைத்து எழுதித் தள்ளுகிறார்கள். அதுபோல ஒரு நூலைக்கூட நான் எழுதியதில்லை. நான் தேர்வை அணுகும் முறையைப் பற்றி எழுதியிருக்கிறேன். அது நான் வெற்றிபெற்ற அனுபவங்களைச் சலித்துச் சலித்து சாட்சியாக நின்று பார்த்து எழுதியது. ‘படிப்பது சுகமே’ என்கிற நூலைப் பாராட்டி நீங்களே விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள். ஏனென்றால், அது அனுபவப் பிழிவு. வெற்றிபெற்ற அனைவரும் அதோடு தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.

அனுபவமில்லாத வழிகாட்டி நூல்கள் சலிப்பையே அளிப்பவை.

நான் எழுதுபவையெல்லாம் என்னுடைய அனுபவங் களையும், நான் நேரில் கண்டு அதிசயித்த சம்பவங்களைப் பற்றியும்தாம். அறிவுரைகளை நான் அடுக்குவது இல்லை. நாம் அடையாத ஒன்றைப் பற்றி எழுதினால் அது தக்கையாகத்தான் இருக்கும். நான் சில வழிகாட்டி நூல்களை எழுதியிருக்கிறேன். உதாரணமாக, குடிமைப் பணித் தேர்வுகளைப் பற்றி நான் எழுதிய நூல்கள் அந்தத் தேர்வுகளை எழுதி நான் வெற்றி பெற்றதால்தான். எழுதாமலேயே அப்படியொரு நூலை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. என்னை யாராவது கோடீஸ்வரராவது எப்படி என்று எழுதச் சொன்னால் தொலைதூரம் ஓடி விடுவேன். தெரியாததைப் பற்றி எழுத என் மனம் ஒருபோதும் சம்மதியாது. ஜெயகாந்தன் கூறியதைப்போல கண்டதைச் சொல்கிறேன். ஆனால், கண்டதையெல்லாம் சொல்லவில்லை. நான் எழுதுவதோடு நின்றுவிடாமல் இளைஞர்களிடம் பேசியும், பயிற்சி அளித்தும் வருகிறேன். அது மகிழ்ச்சிக்குரிய அனுபவமாகவே இருக்கிறது.

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு, கனவு காணுங்கள் போன்ற முழக்கங்களை முன்வைத்திடும் கார்ப்பரேட் சாமியார்களின் போதனைகள், ஒருவருக்கு வழிகாட்டுமா?

வெற்றுக் கனவுகளை விற்றுக்கொண்டிருப்பதால் பலனில்லை. ஒருவருடைய சாத்தியக்கூறுகள் என்ன, ஆற்றல் என்ன, தகுதி என்ன என்பவற்றை அறிந்து அதற்கேற்றவாறு வழிகாட்டுவதே பொருத்தமாக இருக்கும். வண்ண வண்ணக் கனவுகளைக் காண்பதால் மட்டும் பயனிருக்காது. கடின உழைப்புக்கு நம்மைத் தயாரிப்பதும், வெற்றி அடைவதற்கான படிகளைக் கற்றுத்தருவதும் முக்கியம். அப்துல் கலாம் அறிவுறுத்தினால் அது அனுபவத்தின் அடிப்படை. ஆனால், எல்லோரும் அதையே திருப்பிச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் கனவுக்காகவே சிலர் தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.

உங்களுடைய எழுத்துகளை வாசிக்கும்போது இடைவிடாமல் எழுதுவதற்கான மனநிலையை எப்படித் தக்க வைத்துக் கொள்கிறீர்கள் என்று கேள்வி தோன்றுகின்றது. அது எப்படி சாத்தியம்?

எழுதுவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் தொடக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது என் ஆசிரியர்கள் வீட்டுப் பாடம் இரண்டு முறை எழுதச் சொன்னால், நான் நான்கு முறை எழுதிக் கொண்டுபோய்க் காட்டுவேன். எழுதுவது எனக்கு சலிப்பாக இருந்ததில்லை. எழுதுவதன் மூலம் படிப்பது ஆழப்படும் என்பதை அனுபவத்தின் மூலம் நான் அறிந்திருக்கிறேன்.

தினமும் ஏதேனும் ஒன்றை எழுதவோ, பேசவோ செய்யாவிட்டால் திருப்தி அடைவதில்லை. ஒருவகையில் அது உண்பதைப்போல ஓர் அங்கமாக ஆகிவிட்டது என்றே தோன்றுகிறது. அதேநேரத்தில், என் ஒட்டுமொத்த நேரத்தையும் உறிஞ்சிக் கொள்கிற பணிகளில் நான் இருக்கும்போது எதையும் எழுதுவதில்லை. சாராட்சியராக இருந்தபோதோ, கூடுதல் ஆட்சியராக இருந்தபோதோ, மாவட்ட ஆட்சியராக இருந்தபோதோ தலைமைச் செயலாளராகவோ ஒரு துணுக்கைக்கூட நான் எழுதவில்லை. ஓய்வு நேரமே இல்லாத அளவிற்கு களப்பணிகளிலேயே காலம் செல்லும். நம் கண்முன்னே தரமான சாலை அமைக்கப்படும்போதும், அழகாக பூங்கா உருவாகும் போதும், வெகு நாட்கள் மனை இல்லாமல் இருந்தவர்களுக்குப் பட்டா வழங்கும்போதும் அழகான கவிதையை எழுதி முடித்த திருப்தி தென்படும். தலைமைச் செயலாளராக இருக்கும்போது மாவட்ட ஆட்சியர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை மாலையில் கைப்பட கடிதம் எழுதினேன். சில நேரங்களில் செய்கிற பணி நமக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியைத் தந்து விடுகிறது. நல்ல விளைவுகளையே நோக்கமாகக் கொண்டு செயல்படுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன என்றே தோன்றுகிறது. அவற்றில் எழுத்தும் ஒன்று. நேரடியாகக் களத்தில் பணியாற்றுவது இயலாதபோதெல்லாம் எழுத்தின் மடியிலேயே இளைப்பாற வேண்டியிருக்கிறது.

எழுத்தின் வழியாக நீங்கள் தனிமனிதர்களிடம் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை நேரடியாகக் கேட்டிருப்பீர்கள். அந்த அனுபவங்கள் பற்றி...

நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியதைப்போல எண்ணற்றோர் பயன் பெற்றதாகப் பின்னூட்டம் அளித்திருக்கிறார்கள். தனலட்சுமி என்கிற ஒரு வாசகி. அவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’ நூலைப் படித்த பிறகு ஏற்பட்ட உந்துதலால் பல பட்டங்கள் பெற்றதோடு சட்டமும் படித்து இப்போது வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு வாசகர், ‘சாகாவரம்’ படித்து மரண பயம் போனதாகத் தெரிவித்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. இன்னும் சிலர் பல்வேறு தலைப்புகளைக் கொடுத்து எழுதச் சொல்வதும் உண்டு. எழுத்தின் மூலமாக மட்டும் அல்லாமல் கல்லூரிக் காலங்கள் என்று தொலைக் காட்சியில் நான் பேசிய உரைகள் பல இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் நேரடியாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தப் பின்னூட்டங்களின்போது என் எழுத்துகள் வியர்த்தமாகி விடவில்லை என்கின்ற பெருமிதம் ஏற்படுவதுண்டு.

சிறந்த படைப்பு என்று ஒரு நூலை நீங்கள் எந்தக் கோணத்தில் மதிப்பிடுகிறீர்கள்?

சிறந்த படைப்பை எழுத்தாளர் தீர்மானிக்க முடியாது. வாசகர்கள்தாம் தீர்மானிக்கிறார்கள். நாம் வெகுவாக எதிர்பார்த்த நூல் அதிகம் படிக்கப்படாமலும் போவது உண்டு. என்னைப் பொறுத்தவரை எழுதி முடித்த பத்து

ஆண்டுகளுக்குப் பிறகு வாசித்தால் நமக்கு அலுப்புத் தட்டாத வகையில் நாம் எழுதியிருந்தால் அதை நல்ல படைப்பு என்று கூறலாம். ஆகச்சிறந்த படைப்பை எப்போதாவது எழுதிவிட மாட்டோமா என்கிற எதிர் பார்ப்பில்தான் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன்.

சமூகத்தைத் தனது எழுத்தின்மூலம் விமர்சித்து, நெறிப்படுத்திட முயலுகின்ற எழுத்தாளர், சராசரி மனிதனைவிட உன்னதமானவரா?

சராசரி என்கிற ஒன்று யதார்த்தத்தில் இல்லை என்பதே உண்மை. யாருமே சராசரி அல்ல. ஏதேனும் ஒருவிதத்தில் அவர்கள் மேன்மையானவர்களாகவே இருக்கிறார்கள். நெறிப்படுத்துவது இலக்கியத்தின் நோக்கமல்ல என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இலக்கை நோக்கித்தான் இலக்கியம் இயங்க வேண்டும் என்பவர்களும் உண்டு. கலை வடிவம் சிதையாமல் எழுதப்படுகிற படைப்புகளே என்றும் கொண்டாடப்படுகின்றன. ‘படைப்பாளி படைப்பைவிட மேன்மையானவராக இருக்க வேண்டும்’ என்று மார்க்ஸ் குறிப்பிட்டார். கார்க்கி ‘என் படைப்புகளை விட நான் மேன்மையானவனாகக் கருதப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்’ என்று சொன்னார். மேன்மையான மனிதர் களிடமிருந்தே மேன்மையான படைப்புகள் தோன்றும். நேரடியாக அறிவுறுத்தாமல் இழையோடிய உன்னதங்களுடன் எழுதப்படுகிற நூல்கள் இதயத்தில் சவ்வூடு பரவுவதைப் போலவும், காற்றில் சாம்பிராணிப் புகை தவழ்வதைப் போலவும் மௌனமாக ரசவாதத்தை ஏற்படுத்திவிடுகின்றன. எழுதுபவனும் எழுத்தோடு மேன்மையடைகிறான்.

கடந்த முப்பது ஆண்டுகளாகப் பல்வேறு இலக்கிய ஆளுமைகளுடன் பழகி, நெருக்கமான தொடர்புடன் செயல்பட்டிருக் கிறீர்கள். அவர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட முக்கியமான அனுபவங்களைச் சொல்லலாமா?

அரசுத் துறையில் பணியாற்றியதால் பெருமளவில் இலக்கிய ஆளுமைகளை சந்தித்துப் பழகும் வாய்ப்புகள் எனக்கு ஏற்படவில்லை. அவ்வப்போது நிகழ்ந்த அகஸ்தமான சந்திப்புகள்தாம் அவை. ஜெயகாந்தனுடன் மடத்தில் சந்தித்து பல முறை பேசியிருக்கிறேன். நான் வினவியதும் இலக்கிய மலருக்கும், கோட்டம் முதல் குமரி வரை மலருக்கும் கட்டுரைகள் தந்தார். காஞ்சியில் அவரை அழைத்து சுதந்தரப் பொன் விழாவிற்கு பேசச் செய்தேன். பெரும் கூட்டம் கூடியது. என் இல்லத்திற்கு வந்திருக்கிறார். அவர் மூலம் சிவகாசியின் ராஜசபை, மோத்தி ராஜகோபால் போன்றவர்கள் நெருக்கமானார்கள். அப்துல் ரகுமான் நல்ல பழக்கம். பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பேசியிருக்கிறோம். கி.ரா. தொலைபேசியில் பல முறை தொடர்பு கொண்டு உரையாற்றியிருக்கிறார். சுந்தர ராமசாமியை நாகர்கோயிலில் அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ஒரு முறை அவரும் கோயம்பேடில் நான் குடியிருந்தபோது வீட்டிற்கு வந்திருக்கிறார். கவிஞர் சிற்பியோடு பல முறை நெருங்கி உரையாடியிருக்கிறேன். அவருடைய விழாவிற்கும் சென்றிருக்கிறேன். ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வெளியீட்டின் போது அவர்தான் திறனாய்வு மேற்கொண்டார். ஜே.கே.வின் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கே.எஸ்.சுப்பிரமணியன் உன்னதமான மனிதர். சிறுமை அவருடைய நிழலைக்கூட அண்ட அவர் அனுமதித்ததில்லை. பல மாலைப்பொழுதுகளில் அவருடன் அமர்ந்து அவருடைய நினைவுகளைத் தேநீரோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

சா.கந்தசாமி நன்கு பரிச்சயமானவர். இலக்கியம் குறித்த அவருடைய கருத்துகளை அவர் என்னோடு பகிர்ந்ததுண்டு. அவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் கணையாழியின் ஆசிரியர் ம.ராசேந்திரன். மிகப் பெரிய தமிழறிஞர். எதையும் நுட்பமாகப் பார்க்கக்கூடியவர். கவிஞர் ஞானக்கூத்தன் அதிகப் பழக்கம் இல்லாவிட்டாலும் இனிய சந்திப்புகளைத் தந்தவர். இந்திரா பார்த்தசாரதியும் அப்படித்தான். திலகவதியும், சிவகாமியும் பணி நிமித்தமாக மட்டும் இல்லாமல் இலக்கியரீதியாகவும் நான் அடிக்கடி சந்தித்த ஆளுமைகள். அவர்களோடு அமர்ந்து பல சமூக நிகழ்வுகளைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறியிருக்கிறேன். கலாப்ரியா சென்னை வரும்போதெல்லாம் என்னை மறக்காமல் சந்திப்பார். எழுத்தாளர் செயப்பிரகாசம் மூலம் எனக்கு அறிமுகம். மாலன், மேத்தா, வைரமுத்து, இந்துமதி, சிவசங்கரி, தமிழச்சி தங்கபாண்டியன், பழனி பாரதி, விவேகா போன்றவர்கள் அடிக்கடி தொடர்பில் இருப்பவர்கள். கவிஞர் அறிவுமதி நல்ல நண்பர். நிறைய சந்தித்திருக்கிறோம். நிறையப் பேசியுமிருக்கிறோம்.

எஸ். ராமகிருஷ்ணன் என்னுடைய நூல் வெளியீட்டு விழாக்களுக்குத் தவறாமல் வருபவர். அவருடைய உரைகளை நான் பணியாற்றிய நிறுவனங்களில் பயன்படுத்தி யிருக்கிறேன். மனுஷ்யபுத்திரன் என்னுடைய அவ்வுலகம், நின்னினும் நல்லன் நூல்களைப் பதிப்பித்தவர். ஆத்மார்த்தி அண்மையில் பழக்கமானவராக இருந்தாலும் என் நூல்களை ஆழமாக வாசித்து விமர்சனங்களை முன்வைப்பவர். சாரு நிவேதிதா எப்போதும் தொடர்பில் இருக்கும் நல்ல நண்பர். அ. மார்க்ஸ் நன்றாகப் பழக்கமான நான் மதிக்கும் இன்னோர் இலக்கிய ஆளுமை. எஸ்.வி. ராஜதுரையின் படைப்புகளைப் பற்றி நான் அவருக்கு விருது வழங்கப்பட்ட விழாவில் பேசியதால் அவரும் நெருக்கமாக இருக்கிறார். உங்களோடு என்னுடைய தொடர்பு இருபது ஆண்டுகளாக இருக்கிறது. இப்போது நினைத்தாலும் நாம் நெல்லைக்கு ஒன்றாகப் பயணம் செய்தது, நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசியது போன்றவை நினைவில் தித்திக்கின்றன.

இன்று தனிமனிதரீதியில் சமூக, குடும்ப மதிப்பீடுகளின் வீழ்ச்சி ஒருபுறமும் ஊழலில் தோய்ந்த அரசியல் மேலாதிக்கம் இன்னொரு புறமும் நிலவுகின்ற சூழலில் அறம் இருக்கின்றதா?

அடுத்தவர்களிடம் அறம் இருக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். வெற்றிகள் மட்டுமே சிலாகிக்கப்படுகிற உலகில் அற உணர்வோடு திகழ்வதை விட குறுக்கு வழிகளில் சாதிப்பதே புத்திக்கூர்மை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. தனிப்பட்ட முறையில் அறத்தை அனைவரும் நேசிக்கிறார்கள். அறம் வெற்றிபெற வேண்டும் என்றுகூட விரும்புகிறார்கள். ஆனால், அதை அவர்கள் தங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்க அதிகம் விரும்புவதில்லை. அற உணர்வோடு இருப்பவர்கள் அரிதாக இருந்தாலும் அவர்களைச் சமூகம் காலம் தாழ்த்தியாவது நேசிக்கிறது. வாழும் காலத்தில் நிராகரிக்கப்பட்ட சிலர் தற்சமயம் கொண்டாடப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அனைவரும் என்றேனும் ஒரு நாள் அறம் வெல்லும் என்கிற அடிப்படையிலேயே வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள்.

உங்களுடைய எழுத்துகளின் பின்புலத்தில் பொதிந்திருக்கிற அறம் உங்களுக்குள் விளைவிக்கின்ற மாற்றங்கள் என்ன?

என் அரசுப் பணியில் தொடக்கத்திலிருந்தே அறத்தின் வழி ஒழுக அனைத்து வகைகளிலும் முயன்றிருக்கிறேன். அது நலிந்தோர் பக்கமே சாயும் துலாக்கோலாக இருந்திருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையிலும் அதன் தாக்கம் அதிகம். ஓய்வுக்குப் பிறகும் என் சமூகப் பணிகளில் அறம் சார்ந்த செயல்களே தூக்கலாக இருக்கின்றன.

நீங்கள் இதுவரை எழுதிய நூல்களில் முக்கியமான மாஸ்டர் பீஸ் என்று எவற்றைக் கருதுகிறீர்கள்?

அப்படிப்பட்ட ஒன்றை எழுதிவிட மாட்டோமா என்கிற அவாவில்தான் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

அண்மையில் நீங்கள் எழுதிய ‘என்ன பேசுவது எப்படிப் பேசுவது’ நூல் விரிவான தளத்தில் முன்வைத்துள்ள பல்வேறு விஷயங்கள் காத்திரமான பேச்சுகளை உருவாக்கும் வல்லமையுடையன. அந்த நூல் எழுதுவதற்கான திட்டமிடல் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேடைப் பேச்சுகள் பொழுதுபோக்காக இருந்த காலம் ஒன்று இருந்தது. விழா என்றால் பேச்சரங்கங்களே அவற்றில் முக்கிய இடம் பிடிக்கும். அவற்றைக் கேட்டு நீங்கள், நான் போன்றோர் வளர்ந்தோம். பள்ளிகளில் மாதந்தோறும் ஏதேனும் மாவட்ட அளவில் பேச்சுப் போட்டி நடக்கும், கல்லூரிகளில் கவியரங்கங்களும், கட்டுரைப் போட்டிகளும், பேச்சுப் போட்டிகளும் அடிக்கடி நடக்கும் நிகழ்வுகள். அண்மைக் காலமாக படிப்பு மட்டுமே பிரதானம் என்கிற எண்ணம் பெற்றோருக்கு வந்துவிட்டது. அவர்களின் வேட்கையை நிறைவேற்றுவது மட்டுமே முக்கியம் என்று கல்விக்கூடங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. சில நிகழ்வுகளில் மாணவர்கள் பேசுவதைக் கேட்க முடிகிறது. ஆனால் அவை தரமாக இல்லை. பெரும்பாலும் பேச்சுத் தமிழே மேடைத் தமிழாகிவிட்டது. தூய தமிழில் உரையாற்றவே முடியாதோ என்று தோன்றுகிறது. தனிப்பட்ட முறையிலும் உரையாடல் சுருங்கிவிட்டது. இளைஞர்கள் குறுஞ்செய்தியை அனுப்புவதில் காட்டுகிற ஆர்வத்தை விவாதிப்பதிலும், கலந்துரையாடுவதிலும் செலுத்துவதில்லை. மாணவர்களின் உடல்மொழியும் ஏற்றதாக இல்லை. கைப்பேசியில் பேசும்போதுகூட குறைந்தபட்ச நெறிகளோடு பேசத் தெரியவில்லை. நம்மிடம் வழிகாட்டுதல் தேடி வருகிறவர்களின் அணுகுமுறையும் சரியாக இல்லை. எனவே, உரையாடல் கலையைப் பற்றி விரிவான நூல் எழுத வேண்டும் என்று தோன்றியது.

மனிதன் மட்டும்தான் உணவையும், இனவிருத்தியையும் தாண்டி தகவல் பரிமாறுகிறவன். பூச்சிகளிலிருந்து யானைகள் வரை எப்படித் தகவல் பரிமாறுகின்றன என்பது சுவையான செய்தி. சிம்பன்சிகளிடமிருந்து மனிதன் 1.4 சதவிகிதம் மரபுக்கூறுகளோடு வேறுபட்டாலும் அவன் அடைந்திருக்கும் மாற்றம் வியக்கத்தக்கது. பேசுவது மானுடத்திற்குக் கிடைத்த மகத்தான வரம். அதை உணர்த்துவதற்குத் தகவல் பரிமாற்ற வரலாற்றை எழுதுவது கட்டாயம் என்று நினைத்தேன். இன்று தனிமனித உறவுகள் சுருங்கி வருகின்றன. இளைஞர்கள் மிடுக்குப்பேசிகளை அதிகம் பயன்படுத்துவதால் உள்முகம் திரும்பிய தன்னோக்கிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு சுய விவரக் குறிப்பைக்கூட சரியாக எழுதத் தெரியவில்லை. இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு அண்மைக்கால வளர்ச்சிகளைக் கருத்தில் இருத்தி நூலை வடிவமைக்க நினைத்தேன். மேடைப் பேச்சும் இன்று மலிந்து விட்டது. நாகரிகம் இன்றி பேசுகிறார்கள். ஒருமையில் அழைக்கிறார்கள். சவால் விடுகிறார்கள். பட்டி மண்டபம் என்கிற அழகிய வடிவம் நகைச்சுவை அரங்கமாகிவிட்டது. இவையெல்லாம் நெடிய பாரம்பரியம் கொண்டவை. அனைத்தையும் உள்ளடக்கி எழுத எண்ணினேன். அதற்காகப் பல தமிழ்ப் புத்தகங்களையும், ஆங்கில நூல்களையும் திரட்டினேன். இலக்கியங்கள் எவ்வாறு தகவல் பரிமாற்றத்தை அணுகுகின்றன என்பதையும் குறிப்பிட விரும்பினேன். அவற்றிற்கான தரவுகளையும் சேகரித்தேன். மூன்று மாத அவகாசத்தில் இதை எழுதினேன். நிறைவாக வந்திருக்கிறதா என்று உங்களிடம் அனுப்பி யிருந்தேன். இதற்காகத் தகவல் பரிமாற்றம் தொடர்பாக வெளிவந்த அனைத்து நூல்களையும் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தான் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

அரசுப் பணியில் இருந்தபோது தமிழரசு பத்திரிகை இலக்கிய மலரைச் சிறப்பாக வெளியிட்ட பெருமை உங்களுக்கு உண்டு. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அவருடைய செயலாளராகச் செயல்பட்டிருக்கிறீர்கள். கலைஞரின் கலை இலக்கியம் பற்றிய அனுபவங்களைப் பற்றி...

அரசுக்கு நல்ல இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பணியும் இருக்கிறது என்று நான் நினைத்திருந்த காலம் அது. கலைஞர் இதுபோன்ற முயற்சிகளுக்கு எப்போதுமே ஊக்கம் அளிப்பவர். தமிழரசு இலக்கிய மலர் கொண்டு வருவது பலருக்கும் வியப்பாக இருந்தது. எல்லா இலக்கிய ஆளுமைகளிடமும் நானே தொலைபேசியில் தொடர்புகொண்டு படைப்புகளைக் கேட்டேன். சுந்தர ராமசாமி மறுத்துவிட்டார். ஜெயமோகன், கி.ரா. போன்றவர்கள் எழுதினார்கள். அதில் ஓவியங்களை வெளியிட்டு விளம்பரதாரர்கள் பெயர்களை அவற்றின் கீழ் போட்டு மற்ற மலர்கள்போல இல்லாமல் பார்த்துக் கொண்டோம். அந்த மலர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திருவள்ளுவர் சிற்பத்தைக் கன்னியாகுமரியில் திறக்கும்போது ‘கோட்டம் முதல் குமரி வரை’ என்கிற பெயரில் திருக்குறள் தொடர்பான மலர் ஒன்றை கொண்டு வந்தோம். அந்தப் பொறுப்பும் என்னிடமே ஒப்படைக்கப்பட்டது. அதிலும் பல இலக்கிய ஆளுமைகளிடம் கவிதைகளும் கட்டுரைகளும் வாங்கி வெளியிட்டோம். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

கன்னியாகுமரி விழாவிற்காகத் திருக்குறள் குறித்த ஓவியக் கண்காட்சி நடத்த முடிவு செய்தோம். கலை விமர்சகர் இந்திரன்தான் அதை ஒருங்கிணைத்தார். அந்தக் கண்காட்சியில் இடம்பெற்ற ஒவ்வோர் ஓவியத்தையும் கலைஞர் பார்வையிட்டு ஒப்புதல் கொடுத்ததோடு சில திருத்தங்களையும் சொன்னார்.

சென்னை சங்கமம் நடந்தபோது மிகவும் மகிழ்ந்து நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நல வாரியம் அமைக்க அவர் உடனடியாக ஒப்புதல் தந்தார்.

பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு விழாவில் அவர் காட்டிய அக்கறை அலாதியானது. ஆயிரம் பேர் ஆடுகிற சாதனை ஆட்டத்திற்குத் தேவையான அத்துனை வசதிகளையும் செய்து தரும்படி ஆணை பிறப்பித்தார். கலை நிகழ்ச்சிகளை இறுதி வரை அமர்ந்து பார்த்தார். அப்போது நடந்த கலை-பண்பாட்டுக் கண்காட்சியை மூன்று மணி நேரத்திற்கு மேல் பார்த்து ரசித்தார்.

கலைஞரைப் பொறுத்தவரை, எதுவும் கலை நயத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர். ஓர் அழைப்பிதழைக்கூட வித்தியாசமாக அமைத்தால் வியந்து பாராட்டுவார். வாழைத் திருவிழாவின் அழைப்பிதழை வாழை இலைபோல வடிவமைத்திருந்தோம். அதைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அவரை விழாக்கள் தொடர்பாகச் சந்திப்பது மிகவும் எளிது. அவரோடு விவாதிக்க முடியும். நாம் சொல்வது சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்வார்.

மாமல்லபுரத்தில் செம்மொழி சிற்பப் பூங்காவை நிறுவினோம். அதைப் பற்றிய மடிப்பேட்டை அவரிடம் கொடுத்தபோது ஒவ்வொரு சிற்பத்தையும் உன்னிப்பாகப் பார்த்தார்.

திரைப்பட விருதுகளுக்கு நினைவுப் பரிசுகளைக்கூட 1996ஆம் ஆண்டு மாற்றியமைத்து அவரிடம் ஒப்புதல் வாங்கினோம். அப்போது நான் செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர். எந்த மாற்றத்தையும் அவர் விரும்புவார். ஏற்கெனவே இருந்ததே நீடிக்கட்டும் என நினைத்ததில்லை. அவருடைய சமூகக் கனவுதான் சமத்துவபுரம், உழவர் சந்தை போன்றவை. அவையும் கலை உணர்வை அடிப்படையாகக் கொண்டவையே.

மின்னணு ஊடகம் இல்லாத காலத்தில் ‘அரசுச் செய்தி’ என்கிற சுவரொட்டியை நாங்கள் அவரிடம் காட்டியபோது உடனடியாக ஒப்புதல் தந்தார். அதே நேரத்தில் எவ்வளவு செலவாகும் என்பதை எப்போதும் கேட்டுத் தெரிந்து கொள்வார். விளம்பரங்களைக்கூட ஏனோதானோவென்று வெளியிடாமல் நேர்த்தியாக வெளியிட வேண்டும் என்று விரும்புவார். கவிதை நயத்தோடு விளம்பரம் இருந்தால் பொது மக்களுக்குப் புரிகிற வாசகமாக இருந்தால் மட்டுமே ஒத்துக்கொள்வார். மே தின விளம்பரம் ஒன்றுக்கு ‘வியர்வைத் துளிகளுக்கு விழா எடுப்போம்’ என்கிற வாசகத்துடன் நாங்கள் கொண்டு சென்றபோது ‘உழைப்பாளிகளுக்கு இது புரியுமா?’ என்று நிராகரித்து விட்டார். எத்தனை நெருக்கடியிலும் கலை-பண்பாட்டுத் துறையை அவர் வசமே வைத்திருந்தார். சில கோப்புகளில் அவர் கைப்பட எழுதிய கலை நயத்தோடு கூடிய குறிப்புகளைக் காணலாம்.

அரசுப் பணியிலிருந்தபோது நீங்கள் செய்த முக்கியமான கலை, இலக்கியப் பணிகளைப் பற்றிச் சொல்லுங்கள்.

1997ஆம் ஆண்டு தமிழரசு சார்பில் இலக்கிய மலர் ஒன்று கொண்டுவந்தோம். திருக்குறள் பற்றிய அரிய பெட்டகமாகத் தமிழகத்தின் முன்னோடி எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளைக் கொண்டு 2000ஆம் ஆண்டு ‘கோட்டம் முதல் குமரி வரை’ என்கிற மலரைக் கொண்டு வந்தேன்.

குமரி முனையில் திருவள்ளுவரின் சிற்பம் நிறுவுவது இழுவையில் இருந்தது. உண்மை நிலவரத்தைக் கோப்பில் எழுதி, முதலமைச்சரிடம் தேதி கேட்டு, நிதித் துறை செயலரையும் அழைத்துக் கூட்டம் நடத்தி, பெருந் தொகையை அவ்வப்போது விடுவிப்பதை உறுதி செய்து, கூட்ட நடவடிக்கைகளைக் கோப்பில் என் கைப்பட எழுதி ஆணை பெற்றோம். அதுவே குமரி முனையில் வள்ளுவர் சிற்பம் விரைவில் வடிவமைக்கப் பெற வழிவகுத்தது.

தமிழ்நாட்டின் தலை சிறந்த ஓவியர்களைக் கொண்டு ‘வண்ணங்களில் தமிழ்நாடு’ என்கிற காப்பி மேசை புத்தகத்தைக் கொண்டு வந்தோம். அதில் தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்கள், பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவை மருது, மாருதி, வீரசந்தானம், மணியம் செல்வன், மனோகர் போன்றவர்களால் தீட்டப்பட்டன. ராஜாஜி மண்டபத்தில் ஒரு நாள் நடந்த ஓவியர்கள் பட்டறையில் அவை உருவாக்கம் பெற்றன.

சுற்றுலாத் துறையில் நான் பணியாற்றும்போது அத்துறைக்காக ஒரு கருத்துப் பாடல் எழுதி இசை அமைக்கப்பட்டது. இன்றும் அழைப்பு ஒலியாகச் சுற்றுலாத் துறை அலுவலர்கள் கைப்பேசியில் அது ஒலித்துக் கொண்டிருக்கிறது.

மாமல்லபுரத்தில் நடக்கின்ற நாட்டிய விழாவை இந்திய நாட்டிய விழாவாக உயர்த்தினோம். அதில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த நாட்டியக் கலைஞர்கள் பரிமாற்ற முறையில் வந்து பங்கு பெற்றார்கள். ஒரு மாதம் தொடர்ந்து நடக்கும் வகையில் அந்த நாட்டிய விழாவை வடிவமைத்தோம். அதில் தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் சம வாய்ப்புகள் கொடுத்தோம். செவ்வியல் கலைஞர்களுக்குக் கொடுக்கும் அதே ஊதியம் அவர்களுக்கும் அளிக்கப்பட்டது.

முதல் நாள் நிகழ்ச்சியாகக் கலை-பண்பாட்டுப் பயணம் என்னும் பெயரில் திருக்குறளில் தொடங்கி பாரதிதாசன்வரை தமிழ் இலக்கியத்தில் இருக்கிற பாடல்களையும், நாட்டுப்புற நடனங்களையும் உள்ளடக்கிய கதம்ப நாட்டியத்தை உருவாக்கினோம். அது இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்களால் இசையமைக்கப்பட்டது. அதன் வடிவாக்கமும் பாடல்களும் என்னால் எழுதப்பட்டன. ‘வசையால் நிரம்பும் உலகத்தை இசையால் நிரம்பச் செய்திடுவோம்’ என்ற பாடலோடு அந்த நிகழ்ச்சி முடியும்.

நான் செயலாளராக இருந்தபோதுதான் சித்திரச் சந்தையை நடத்தினேன். தீவுத்திடலில் நடந்த பொருட் காட்சியில் கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் விரும்பியவர்களுக்கு அவர்கள் ஓவியத்தை வரைந்து தந்தார்கள். அத்துறையில் இருக்கும்போது, கலை வடிவங்களைச் சுற்றுலாப் பயணிகள் சிதைக்காமல் இருக்க ‘சிற்பங்களைச் சிதைக்கலாமா’ என்கிற விழிப்புணர்வு முகாம் நடத்தினேன். சுற்றுலாப் பயணிகளைக் கண்ணியமாக நடத்த ‘விருந்தினர் போற்றுதும் விருந்தினர் போற்றுதும்’ என்கிற தொடர் நிகழ்ச்சியை நடத்தினேன்.

அப்போதுதான் நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. சென்னை சங்கமம் நடத்தப்பட்டது. நாட்டுப்புறக் கலைகள் புத்துயிர் பெற்றன. மாவட்டந்தோறும் சென்று நாட்டுப்புறக் கலைஞர்களை நல வாரியத்தில் இணைத்தேன். மதுரையில் தெருவோரத் திருவிழா நடத்தினோம். சென்னையில் இருக்கும் பூங்காக்களில் சுழற்சி முறையில் இசை-நாட்டுப்புற நிகழ்ச்சிகளைப் ‘பூங்காவில் பூங்காற்று’ என்கிற பெயரில் நடத்தினோம்.

தஞ்சைப் பெரிய கோயிலில் நடந்த ஆயிரமாவது ஆண்டு விழாவிலும் பல கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தினோம். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு மாதம் நாட்டுப்புறக் கலை விழா நடத்தப்பட்டது.

அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கருத்துப் பாடலை எழுதினேன். அதற்கு மதன்பாப் இசையமைத்தார். தலைமைச் செயலாளராக இருக்கும் போது அயலகத் தமிழர் நாளுக்காகக் கருத்துப் பாடல் எழுதினேன். அதைப்போலவே அன்பான அணுகுமுறை என்கிற காவலர் பயிற்சிக்கும் கருத்துப் பாடல் எழுதினேன்.

செஸ் ஒலிம்பியாட்டின்போது தொடக்க நாள் நிகழ்ச்சியிலும், நிறைவு நாள் நிகழ்ச்சியிலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் இடம்பெற்ற தமிழ் மண் நிகழ்வுக்குக் கருத்துரு வழங்கியதும் நிறைவைத் தந்தது.

இவையெல்லாம் நினைவில் இருக்கிற சில நிகழ்வுகள்.

நீங்கள் இதுவரை கடந்துவந்த எழுத்தும் பேச்சும் சேர்ந்த பாதையும் செயல்பாடுகளும் திருப்தி அளிக்கின்றனவா?

இதுவரை என் செயல்பாடுகள் ஒரு வரையறையில் தான் இருந்தன. அரசு அலுவலர் என்பதால் நடத்தை விதிகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டே எழுத்தும் பேச்சும் இருந்தன. தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்றும், சுய முன்னேற்ற எழுத்தாளர் என்றும் குத்தப்பட்ட முத்திரைகளிலிருந்து நான் வெளியே வர வேண்டும். அரசுப் பணியில் இருந்தபோது கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் மட்டுமே பேசி வந்தேன். அதனால் பெருமளவில் இலக்கியம், சமூகம் குறித்துப் பேச முடியவில்லை. இதழ்களைத் தாண்டி எழுதவும், பேசவும் நான் முற்பட வேண்டியதாக இருக்கிறது. குறிப்பிட்ட சமூகப் பணியைச் செய்வதற்காக இயங்கவேண்டியதாகவும் இருக்கிறது. எனவே, நான் இதுவரை ஒற்றையடிப் பாதையிலேயே பயணம் செய்திருக்கிறேன்.

உங்களுடைய எழுத்துப் பணி, மேடைப் பேச்சு குறித்து உங்களுடைய குடும்பத்தினரின் அபிப்ராயம் என்னவாக இருக்கிறது?

நான் அதிக நேரம் அவர்களோடு இருக்க முடியவில்லையே என்ற சூழல் இருந்தாலும், அதைத் தாண்டி என் பணிகளின் முக்கியத்துவம் கருதி அதில் குறுக்கீடு செய்யாமல் சுதந்தரமாக இயங்குவதற்கு அவர்கள் தரும் ஒத்துழைப்பே மௌனமான அபிப்ராயமும் அங்கீகாரமும் ஆகும்.

சந்திப்பு: ந.முருகேசபாண்டியன்

Pin It