உரையாசிரியரும் தமிழறிஞருமான வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் வாழ்க்கையையும் பணிகளையும் பற்றிய நூல் ஒன்று வந்துள்ளது. "வை. மு. கிருஷ்ணமாச்சாரியாரின் உரைவளம்" எனும் இந்த நூலை எழுதியவர் முனைவர் வெ. இராஜேஸ்வரி, எம். ஏ., எம். பில்., பிஎச். டி.
இந்நூலில் உள்ள பெரும்பாலான தகவல்களை அவர் பிழைகள் நிறைந்ததாகவே எழுதியுள்ளார். ஏனென்றால் வை. மு. சடகோபராமானுசாச்சாரியார், சே. கிருஷ்ணமாச்சாரியார், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ஆகியவர்களின் கூட்டுச் செயல்பாட்டினால் உருவான பதிப்புகளைப் பற்றிய ஆய்வு என்பது 1898-இல் தொடங்கி 1970 வரையான காலம் வரை நீள்கின்றது. இந்த 72 வருடங்களில் இம்மூன்று பேராசிரியர்களும் இணைந்து தமிழ் நூல்களுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டனர்.
அத்துடன் வை. மு. கோவின் அண்ணன் முறையினரான தமிழறிஞர் வை. மு. சடகோபராமானுசாச்சாரியாரில் தொடங்கி, இவருடைய உறவினரான சே. கிருஷ்ணமாச்சாரியாருடன் இணைந்தும், இவ்விரு பேராசிரியர்களின் மறைவுக்குப் பின்னர் பதிப்பிக்கப்பட்ட நூல்களில் விடுபட்டுப்போன பகுதிகளை நிறைவு செய்து முடிப்பதாகவும், சில நூல்களை வை. மு. கோவே உரை எழுதி வெளியிடுவதாகவுமான வரலாற்றை உடையதாக இருக்கின்றது. இந்த அறிஞர்கள் மூவரும் இணைந்து செயல்பட்டு வெளியிட்ட நூல்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் பணிகளை ஆராய முற்பட வேண்டும். அவ்வாறான தேடலுடன் கூடிய ஆய்வுகள்தான் இந்த அறிஞரைப் பற்றியதான முழுமையான ஆராய்ச்சியாக அமையும். இவ்வாறான செய்திகளைக் கண்டுகொள்ளாமலும் கணக்கில் எடுக்காமலும் மனம்போனபடி முனைவர் வெ. இராஜேஸ்வரி, எம். ஏ., எம். பில்., பிஎச். டி. எழுதிய நூல்தான் “வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் உரைவளம்” ஆகும். இத்தகைய தவறான நூலை “தமிழ் வளர்ச்சித் துறை” சிறந்த நூல் என்று பாராட்டிப் பரிசும் வழங்கியிருக்கிறது என்பது வியப்பூட்டுகிறது.
இந்த நூலில் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரைக்கு விளக்கமாக எழுதப்பட்டுள்ள செய்திகளைப் பற்றிக் கூறுவதில் பெரும்பாலானவை பிழையானவை. தண்டியலங்காரத்தில் “பொதுவியல், பொருளணியியலுக்கு” வை. மு. கோ உரை எழுதிப் பதிப்பித்துள்ளார் என்ற செய்தி முழுவதும் பிழையானது.
இவரைப் போலவே “தொல்காப்பியம், சங்க இலக்கியம்; பதிப்பும் பதிப்பாளரும்” என்ற நூலில் பக்கம் 378-இல் “உ. வே. வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியர்” என்ற தலைப்பில் பு. பாலாஜி என்ற ஆய்வாளரும் பிழையாக எழுதுகிறார். இவரால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற நூல்களில் பலவும் வை. மு. சடகோபராமானுசாச்சாரியார், சே. கிருஷ்ணமாச்சாரியார் என்ற இரண்டு பேராசிரியர்களாலும் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டும் பதிப்பிக்கப்பட்டும் வந்துள்ளன. கம்பராமாயணத்தில் சில பகுதிகளும் வில்லிபாரதத்தில் சில பகுதிகளும் பத்துப்பாட்டில் ஏழு நூல்களும்தான் பேராசிரியர் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரால் உரை எழுதப்பட்டவை என்று உறுதியாகத் தெரிகின்றன. தண்டியலங்காரம், நன்னூல், நாலடியார், “பகவத்விஷயம் 10 தொகுதிகள்”, மதுரைக் கலம்பகம் போன்ற பல நூல்களுக்கு உரை எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டவர்கள் வை. மு. சடகோபராமானுசாச்சாரியார், சே. கிருஷ்ணமாச்சாரியார். பிற்காலங்களில் இவ்விரு பேராசிரியர்களின் மறைவுக்குப் பின்னால் இத்தகைய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்டவர்தான் பேராசிரியர் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் என்பது குறிப்பிடத்தக்கது.
வை. மு. கோவின் மறைவுக்குப் பின்னர், இவர்களுடைய நூல்களை மறுபதிப்பு செய்து வெளியிட்ட வை. மு. கோவின் மைந்தரான வை. மு. நரசிம்மன் அவர்களும் “உமா பதிப்பகத்தாரும்” மற்ற இரண்டு பேராசிரியர்களின் பெயர்களை நீக்கிவிட்டு உரையாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ளனர். பல்கலைக்கழகங்களில் ஆய்வுகளை நிகழ்த்திய ஆராய்ச்சியாளர்கள் மற்ற இரண்டு பேராசிரியர்களால் வெளியிடப்பட்ட நூல்களின் முந்தைய பதிப்புகளைக் கண்டு ஒப்பிட்டு ஆராயாமல் தங்களுடைய கருத்துகளை ஆய்வுகளாக வெளியிட்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகளால் பேராசிரியர் வை. மு. கோ பற்றிய ஆய்வுகள் பலவும் பிழைகள் நிரம்பியதாக உள்ளன.
சரி, இது எவ்வாறாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைபெற்றுவிட்ட ஆளுமைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிஞர்களைப் பற்றியும் அவர்களால் செய்து முடிக்கப்பட்ட ஆய்வுகளைப் பற்றியும் ஒரு தெளிவான வரலாற்றுரீதியான விளக்கத்தை நாம் தேட வேண்டும். அத்தகைய தேடலின் ஒரு பகுதியாக இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற உரையாசிரியரான வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் பணிகளைப் பற்றிச் சரியான தகவல்களுடன் கூடிய ஓர் ஆய்வை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்தக் காலகட்டத்துத் தமிழ்நூல் பதிப்புகளைப் பற்றி ஆராய்வதற்கு அக்காலத்தில் (கி. பி. 1870 – கி. பி. 1920) பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற பழந்தமிழ் நூல்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சங்க இலக்கியங்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் தொல்காப்பியப் பொருளதிகாரமும் ஏட்டுச்சுவடிகளிலிருந்து அச்சுவடிவம் பெற ஆரம்பித்தன. இதனால் அக்காலக்கட்டத்தில் தமிழ் ஆய்வில் ஈடுபாடு கொண்டிருந்த அறிஞர்களால் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படும் நூல்களாக இவைகள் இடம்பெற்றன. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்தக் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு வளர்ச்சியடைந்து வந்த கல்வி நிலையங்களிலும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலும் இந்நூல்களும் இவற்றிற்கு எழுதப்பட்டுள்ள பழமையான உரைகளுடன் மாணவர்கள் தேர்வுக்குப் படிப்பதற்கான பாடநூல்களாக இடம்பெற்றன. இத்தகைய பழமையான நூல்களுக்குப் பழங்காலத்திலேயே உரையாசிரியர்களால் எழுதப்பட்ட உரைகளும் இருந்தன. எடுத்துக்காட்டாக இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், நக்கீரர் போன்ற இலக்கண உரையாசிரியர்களையும் பரிமேலழகர், அடியார்க்குநல்லார், அரும்பத உரைகாரர், பெரியவாச்சான் பிள்ளை போன்ற புகழ்பெற்ற தமிழ் இலக்கிய உரையாசிரியர்களையும் குறிப்பிடலாம்.
அதே சமயத்தில் அந்தக் காலகட்டத்தில் இத்தகைய பழந்தமிழ் நூல்களையும் அந்நூல்களுக்கான புகழ்மிக்க உரைகளையும் மாணவர்களுக்குப் பாடமாக நடத்துவது அவ்வளவு எளிமையான செயலாக ஆசிரியர்களுக்கு இருக்கவில்லை. இவ்வாறாக அக்காலத்தில் நிலவி வந்த கல்விச் சூழ்நிலையைப் பற்றி உ. வே. சாமிநாத அய்யர் தன்னுடைய “என் சரித்திரம்” என்ற நூலின் பல இடங்களில் விளக்கமாகப் பேசுகின்றார். எடுத்துக்காட்டாக அந்த நூலின் பக். 731-இல் 1880-இல் நீதியரசர் சேலம் இராமசாமி முதலியாரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில், முதலியார் அவர்கள் தமிழின் பழமையான நூல்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்ட கேள்விக்குப் பதிலாக உ. வே. சா. எழுதுகிறார்: “தாங்கள் எந்த நூல்களைச் சொல்லுகிறீர்களென்று தெரியவில்லையே?” என்றேன். அவர் சொன்ன நூல்களை நான் படித்ததில்லை; என்னுடைய ஆசிரியரே படித்ததில்லை, புஸ்தகத்தைக் கூட நான் கண்ணால் பார்த்ததில்லை படிக்கவில்லை என்பதைப் பிரமாதமாகச் சொல்ல வந்துவிட்டாரே!’ என்ற நினைவோடு பெருமிதமும் சேர்ந்து கொண்டது. “புஸ்தகம்
ஆனால் 1870-லிருந்து உ. வே. சா., தன்னுடைய முதல் பதிப்பான சீவக சிந்தாமணி நூலை வெளியிட்ட 1887 வரையிலான 17 ஆண்டுகளில் நன்னூல் போன்ற இலக்கண நூல்களும் சிந்தாமணி, சிலப்பதிகாரம் போன்ற காப்பிய நூல்களிலிருந்து சில பகுதிகளும் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, ஏலாதி போன்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிலிருந்து பல பகுதிகளும் அன்று படித்து வந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாடநூல்களாக அமைக்கப்பட்டிருந்தன. இந்த நூல்களில் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதிய உரையுடன் கூட அதன் பதிப்பாசிரியர்கள், மாணவர்கள் எளிமையாகப் புரிந்து கொள்வதற்காகப் பரிமேலழகர் போன்ற பழமையான உரையாசிரியர்களின் உரைகளுக்குப் பலவிதமான விளக்கங்களையும் எழுதிச் சேர்த்துப் பதிப்பித்து வெளிவந்த நூல்களும் உண்டு.
1868-இல் பி. ஏ. படிக்கும் மாணவர்களுக்கு “சீவக சிந்தாமணியின்” முதல் பாகமான “நாமகள் இலம்பகத்தை” புகழ்பெற்ற உரையாசிரியர் நச்சினார்க்கினியர் எழுதிய உரையுடன் பாடமாகப் பல்கலைக்கழகத்தினர் வைத்தனர். அந்த நூலை “ஹெச். பவார்” என்ற தமிழறிஞரான கிறிஸ்தவ பாதிரியார் பதிப்பிக்கின்றார். அந்த நூல் சமண சமயம் சார்ந்த சீவகனின் சரித்திரத்தைச் சொல்வதன் வாயிலாகச் சமண சமயத் தத்துவத்தை விளக்குவதற்காகப் பாடப்பட்டதாகும். எனவே அந்நூலின் பல பாடல்களில் சமண சமயக் கோட்பாடுகள் தொடர்பான பல செய்திகள் இடம்பெற்றிருந்தன. இத்தகைய சமயம் சார்ந்த செய்திகளைப் புரிந்து கொண்ட பின்னர்தான் மாணவர்கள் அந்த நூலைப் படித்துப் புரிந்து கொள்ள முடியும். எனவே இந்த நூலைப் படிப்பவர்களுக்கு வழிகாட்டியாகச் சமண சமயக் கோட்பாடுகள் தொடர்பான பல்வேறு தகவல்களை இதனைப் பதிப்பித்த ஆசிரியர் தன்னுடைய முன்னுரையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கமாக எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் நச்சினார்க்கினியர் உரையை ஆங்கிலத்தில் எளிமையாக மொழிபெயர்த்தும் தருகிறார்.
அத்துடனேயே நூலினுள்ளே உரையாசிரியர் எழுதிய பல நுட்பமான சொற்களுக்கான விளக்கங்களையும் கூறுகிறார். நூலின் இறுதியில் இரண்டு முக்கியமான பின் இணைப்புகள் உள்ளன. ஒன்று, நாமகள் இலம்பகத்தில் பயின்று வந்துள்ள அரிய தமிழ்ச் சொற்களின் அகராதியும் அச்சொற்களுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைத்து “இன்டெக்ஸ்” என்ற பெயரில் தந்துள்ளார். (இந்த நூல் வெளிவந்து 19 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரால் பதிப்பிக்கப்பட்ட சீவக சிந்தாமணி நூலில் நவீன காலத்துப் பதிப்பில் இடம்பெற வேண்டிய “அரும்பத அகராதி” என்ற “இன்டெக்ஸ்” போன்றவை இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இதற்கு 20 ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது ஹெச். பவார் வெளியிட்ட சிந்தாமணி நூலுக்கு 37 ஆண்டுகளுக்குப் பின்பு, 1907-இல் உ. வே. சா. வெளியிட்ட இரண்டாம் பதிப்பில்தான் ஆய்வாளருக்குப் பயன்படும்படியான “அரும்பத அகராதி” (இன்டெக்ஸ்) என்ற நவீன ஆய்வுப் பகுதி இடம்பெற்றுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.) இரண்டு, இந்த நூலின் பதிப்பாசிரியரான ஹெச். பவார் இந்த நூலைப் பற்றி ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஆராய்ச்சிக் குறிப்புகளிலும் ஆங்கிலச் சொற்களுக்கான “இன்டெக்ஸ்” இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நூல் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றதைத் தொடர்ந்து அடுத்து வந்த காலங்களில் காப்பியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை போன்ற பல நூல்கள் அன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பாடத்திட்டங்களில் இடம்பெற்றுள்ளன. அவ்வாறு அக்காலத்தில் இடம்பெற்றிருந்த சில நூல்களின் பட்டியலைப் பார்ப்போம்:
(1) 1872 நான்மணிக்கடிகை, பாரதவெண்பா (மெட்ரிக்குலேசன்)
(2) 1872, 1876, 1880 சிலப்பதிகாரம் அடியார்க்குநல்லார் உரையுடன்
(3) 1881 ஏலாதி (மெட்ரிக்குலேசன்)
(4) 1885 நாலடியாரும் கூர்மபுராணமும்
உ. வே. சாமிநாத அய்யர் பதிப்புகள் வெளிவருவதற்கு முன்பே பல தமிழ் நூல்கள் அன்றைய கல்லூரி, பள்ளி மாணவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தன. அப்படி இடம்பெற்ற நூல்களின் மூலமும் அதற்குப் பழமையான உரை இருந்தால் அந்த உரையும் பழைய உரை இல்லாவிட்டால் பதிப்பாசிரியர் எழுதிய புதிய உரையுடன் வெளியிடப்பட்டன. நான்மணிக்கடிகை, நாலடியார் போன்ற நூல்களில் ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்ந்து இடம்பெற்றிருந்தன. பின்வந்த காலங்களிலும் இவ்வாறு பாடமாக வைக்கப்பட்ட பல தமிழ் இலக்கிய நூல்களிலும் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
உ. வே. சாமிநாத அய்யர் 1887-இல் சீவக சிந்தாமணியை நச்சினார்க்கினியர் உரையுடனும், 1889-இல் பத்துப்பாட்டை நச்சினார்க்கினியர் உரையுடனும், 1892-இல் சிலப்பதிகாரத்தை அடியார்க்குநல்லார் உரையுடனும் அரும்பத உரையுடனும் வெளியிட்டார். 1894-இல் புறநானூற்றையும் அதற்குப் பழமையாக எழுதப்பட்டிருந்த உரையையும், 1895-இல் புறப்பொருள் வெண்பாமாலையையும் வெளியிட்டார் (அன்றைய நிலையில் இந்நூலுக்கு உரை எழுதியவர் சாமுண்டி தேவ நாயகர் என்பது உ. வே. சாவுக்குத் தெரியாமல் இருந்தது. இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் அடிக்குறிப்பாக இந்த நூலின் உரையாசிரியர் சாமுண்டி தேவ நாயகர் என்பதை அறிஞர் ரா. ராகவையங்கார் செந்தமிழ் பத்திரிகையில் எழுதியுள்ளார் என்று உ. வே. சா. குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் 1924-இல் வந்த மூன்றாம் பதிப்பில்கூட இந்த உரையாசிரியர் பெயர் இடம்பெறவில்லை. 1942-இல் வந்த ஐந்தாம் பதிப்பில்தான் இந்த உரையாசிரியர் பெயர் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது).
1903-இல் ஐங்குறுநூறும் அந்நூலுக்கு எழுதப்பட்ட பழைய குறிப்புரையும், 1904-இல் பதிற்றுப்பத்தும் அதற்கான பழைய உரையும் உ. வே. சா. வெளியிட்டார். 1887 தொடங்கி 1904 முடிய 17 வருடங்களில் உ. வே. சா. அதுவரையில் அச்சிடப்படாத அரிய பழமையான தமிழ் நூல்களில் எட்டு நூல்களைப் பதிப்பித்துவிட்டார். இந்த நூல்கள் உ. வே. சாவால் அச்சில் வெளியிடப்பட்ட ஒரு சில ஆண்டுகளிலேயே அவ்வாறு அச்சில் வந்த நூல்களின் பல பகுதிகள் 19-ஆம் நூற்றாண்டில் (1896-இலிருந்து) பள்ளி, கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டன. அவற்றுள்:
- சீவக சிந்தாமணி (கோவிந்தையார் இலம்பகம்)
- பத்துப்பாட்டு (மலைபடுகடாம், பொருநராற்றுப்படை, முல்லைப்பாட்டு, சிறுபாணாற்றுப்படை)
- சிலப்பதிகாரம் (நாடுகாண்காதை, கொலைக்களக்காதை, புறஞ்சேரியிருத்தக்காதை)
- புறநானூறு (புறநானூறு பாடல்கள் 101–125, 200–266)
- புறப்பொருள் வெண்பாமாலை (வெட்சிப்படலம் முதல் காஞ்சிப்படலம் முடிய)
ஆகிய ஐந்து நூல்களின் பாடத்திட்டத்திற்கான பகுதிகளை மட்டும் தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத அய்யர் தனித்தனியாக வெளியிட்டு அத்தகைய பாடத்திட்ட நூல்களுக்கு முன்பு, தான் பதிப்பித்த நூல்களில் இடம்பெற்ற செய்திகளுக்கும் கூடுதலாகப் பல குறிப்புகளைச் சேர்த்திருந்தார். இக்குறிப்புகள் மாணவர்கள் அந்நூல்களைக் குழப்பமின்றி விளக்கமாகப் புரிந்து கொள்வதற்குப் பக்கத் துணையாக இடம்பெற்றது. 1892-இல் சிலப்பதிகாரம் அரும்பதவுரையுடனும் அடியார்க்குநல்லார் உரையுடனும் உ. வே. சாமிநாத அய்யரால் வெளியிடப்பட்டது.
பல ஆண்டுகள் சென்ற பின்பு சிந்தாமணி, பத்துப்பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற நூல்களை மறுபதிப்புகளாக உ. வே. சா. மீண்டும் வெளியிட்டார். பாடத்திட்டப் புத்தகங்களில் மாணவர்களின் புரிதலுக்காக எழுதப்பட்டிருந்த குறிப்புகளைப் பின் வந்த மறுபதிப்புகளில் இணைத்து வெளியிட்டார். இதனால் முதல் பதிப்பில் 945 பக்கங்களில் வெளிவந்த சீவக சிந்தாமணி மூன்றாம் பதிப்பில் 810 பக்கங்கள் கூடுதலாகி 1755 பக்கங்களில் வெளிவந்துள்ளது. முதல் பதிப்பில் 435 பக்கங்களில் வெளிவந்த பத்துப்பாட்டு மூன்றாம் பதிப்பில் 500 பக்கங்கள் கூடுதலாகி 935 பக்கங்களில் வெளிவந்துள்ளது. முதல் பதிப்பில் 641 பக்கங்களில் வெளிவந்த சிலப்பதிகாரம் மூன்றாம் பதிப்பில் 136 பக்கங்கள் கூடுதலாகி 777 பக்கங்களில் வெளிவந்துள்ளது. முதல் பதிப்பில் 487 பக்கங்களில் வெளிவந்த புறநானூறு 304 பக்கங்கள் கூடுதலாகி மூன்றாம் பதிப்பில் 791 பக்கங்களில் வெளிவந்துள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த பதிப்புகளில் அதிகரிக்கப்பட்ட பக்கங்களில் உள்ள செய்திகளில் பெரும்பாலானவை பாடத்திட்டப் பதிப்புகளில் மாணவர்களுக்குப் புரியும்படியான விளக்கங்களும் அடுத்தடுத்த காலங்களில் அந்தந்த நூல்களுக்கு உ. வே. சாவுக்குக் கிடைத்த கூடுதல் தரவுகளும்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
19-ஆம் நூற்றாண்டின் தமிழ்நூல் பதிப்புகளைப் பற்றித் திருக்குறளை மொழிபெயர்த்துப் பதிப்பித்தவர்களான எல்லீஸ், ட்ரூ பாதிரியார், ஜி. யூ. போப், சார்லஸ் கிரால், ஹெச். பவார் போன்றவர்கள் தமிழில் ஏட்டுச்சுவடிகளாக இருந்த நூல்களை அச்சு வடிவத்துக்குக் கொண்டு வந்தனர். அப்படி அவர்களால் தமிழில் அச்சிடப்பட்ட நூல்கள் என்பன அன்று ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் வெளியிடப்பட்ட நூல்களின் நவீன வடிவத்தில் அமைக்கப்பட்டு வெளிவந்தன. இந்த வகையான நவீன நூல் வெளியீட்டு முறையை அவர்களிடமிருந்து செம்மையாகக் கற்றுக் கொண்டவர் உ. வே. சா. என்பதை அவருடைய பதிப்புகள் நமக்கு நன்கு விளக்குகின்றன. உ. வே. சா.வின் இத்தகைய பதிப்பும் பாடத்திட்டமும் பற்றிய நுட்பங்களை வை. மு. சடகோபராமானுசாச்சாரியார், சே. கிருஷ்ணமாச்சாரியார், வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் போன்ற ஆசிரியர்கள் முழுமையாகப் பின்பற்றித் தங்களுடைய தமிழ்ப் பதிப்புகளையும் பாடநூல்களையும் வெளியிட்டனர்.
இந்த மூன்று பேராசிரியர்களும் தனித்தனியாகவும் இணைந்தும் சிறிதும் பெரிதுமாக 50-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை வெளியிட்டிருக்கின்றனர். 1898-இல் தொடங்கி 1956 வரை சுமார் 58 வருடங்கள் இவர்களுடைய நூல்கள் வெளிவந்தன. 1957-க்குப் பின் சுமார் 1970 வரை வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் மகன் வை. மு. நரசிம்மன் அவர்களால் முன்னர் அம்மூன்று பேராசிரியர்களாலும் வெளியிடப்பட்ட பல நூல்கள் மறுபதிப்பாக வெளியிடப்பட்டன. அப்படி வெளியிட்டபோது இம்மூவரில் உண்மையான உரையாசிரியர் யார்? அல்லது இம்மூவரும் இணைந்து எழுதி வெளியிட்ட நூல்களா? என்பதைப் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லாமல் வெளியிட்டுவிட்டார். இதனால் ஒருவர் எழுதிய உரைக்குறிப்புகளை மற்றவர்கள் எழுதியது என்று பிழையாகப் பலரும் கருதி வந்தனர். இத்தகைய ஒரு குழப்ப நிலை இன்றும் தமிழாய்வு உலகில் நிலவி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப் பலரும் தவறாகக் கருதுவதற்குக் காரணங்களை இனங்கண்டு விளக்கிச் சரியான சான்றுகளால் யார் யார் எந்தெந்த நூல்களை வெளியிட்டார்கள் என்பதையும் ஒரு நூலிலேயே ஒவ்வொருவருடைய பங்களிப்பும் எவ்வளவு என்பதையும் இந்த ஆய்வில் சான்றுகளுடன் விளக்குகின்றேன். இத்தகைய ஆய்விற்கு வேறு வகையான தரவுகளைப் பெற முடியவில்லை. ஆனால் 1903-லிருந்து 1964 வரையிலான 60 ஆண்டுகளில் இம்மூவராலும் வெளியிடப்பட்ட நூல்களில் இடம்பெற்றுள்ள “நூல் விளம்பரப் பட்டியல்”களில் இருந்து சான்றுகளைத் தருகின்றேன்.
(1) நன்னூல் – 1898
(2) தண்டியலங்காரம் பொருளணியியல் – 1901
(3) சிலப்பதிகாரம் காடுகாண்காதை – 1906
(4) அஷ்டப்பிரபந்தம் – 1906-க்கு முன்பு
(5) மதுரைக்கலம்பகம் – 1906-க்கு முன்பு
(6) கம்பராமாயணம் பாலகாண்டம் சில பகுதிகள் – 1906-க்கு முன்பு
(7) கம்பராமாயணம் அயோத்தியா காண்டம் சில பகுதிகள் – 1906-க்கு முன்பு
(8) கம்பராமாயணம் ஆரண்ய காண்டம் முழுமையும் – 1906-க்கு முன்பு
(9) கம்பராமாயணம் சுந்தரகாண்டம் சில பகுதிகள் – 1906-க்கு முன்பு
(10) கம்பராமாயணம் யுத்தகாண்டம் சில பகுதிகள் – 1906-க்கு முன்பு
(11) பாகவதம் சில பகுதிகள் – 1906-க்கு முன்பு
(12) சிலப்பதிகாரம் காடுகாண்காதை – 1906-க்கு முன்பு
(13) வில்லிபுத்தூரார் பாரதம் பல பகுதிகள் – 1906-க்கு முன்பு
(14) சூளாமணி முதல் மூன்று சருக்கங்கள் – 1906-க்கு முன்பு
(15) தண்டியலங்காரம் – 1901
(16) திருக்குறள், நாலடியார் சிற்சில பகுதிகள் – 1909
(17) முதுமொழிக்காஞ்சி – 1909
(18) நாலாயிர திவ்வியப்பிரபந்தம் – 1924
(19) திருப்பாவை வியாக்யானம் – 1924
(20) திருப்பாவை வியாக்யானம் உரை – 1924
(21) கம்பராமாயணம் கிட்கிந்தா காண்டம் உரையுடன் – 1924
(22) ஆச்சார்யஹ்ருதயம் – 1924
(23) நாலடியார் உரையுடன் – 1924
(24) ஐந்திணையெழுபது உரையுடன் – 1928
(25) சோழமண்டல சதகம் பாடப்பட்டோர் வரலாற்றுடன் – 1928
(26) புறத்திரட்டு முதற்பகுதி – 1928
(27) கம்பராமாயணம் முழுமையும் – 1935
(28) சிலப்பதிகாரம் அடைக்கலக்காதை உரை – 1935
(29) தொல்காப்பியச் சொல்லதிகாரக் குறிப்பு – 1935
(30) பகவத் விஷயம் 10 தொகுதிகள் – 1935
(31) திருக்குறள் அறத்துப்பால் – 1937
(32) திருக்குறள் பொருட்பால் – 1938
(33) திருக்குறள் பொருட்பால், காமத்துப்பால் – 1938
(34) தண்டியலங்காரம் முழுமையும் – 1964
(35) சிலப்பதிகாரம் (காட்சிக்காதை, நாடுகாண்காதை) – 1964
(36) மணிமேகலை (பாத்திரம்பெற்ற காதை, மலர்வனம்புக் காதை) – 1964
தண்டியலங்காரம் பற்றி:
1901-இல் அணி இலக்கண நூலாகிய “தண்டியலங்காரத்தில்” “பொருள் அணியியல்” மட்டும் அன்றைய பி. ஏ. மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நூலை கி. பி. 1857-இல் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் என்பவர் சுப்ரமணிய தேசிகர் எழுதியுள்ள பழைய உரையுடன் வெளியிட்டு இருந்தார். அந்தப் பழைய உரையானது கல்வியாளர்களால் மட்டும் புரிந்து கொள்ளும் வகையில் கடினமாக இருந்தது. அதனால் அன்றைய மாணவர்களுக்கு இந்த நூலையும் இதன் பழைய உரையையும் புரிந்து கொண்டு பாடம் நடத்துவது ஆசிரியர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.
1857-இல் சந்திரசேகர கவிராஜ பண்டிதர் வெளியிட்ட அச்சுப்படியையும் பல்வேறு இடங்களில் தான் தேடித் தொகுத்த ஏட்டுச்சுவடிகளையும் துணையாகக் கொண்டு வை. மு. சடகோபராமானுசாச்சாரியார் தண்டியலங்காரத்தையும் மூலத்தையும் அதற்கு எழுதப்பட்டிருந்த பழைய உரையையும் செம்மையாக ஆராய்ந்தார். அதன் விளைவாக அந்நூலின் “மூலம்” செம்மைப்படுத்தப்பட்டது. அத்துடன் அந்தப் பழைய உரையை மாணவர்கள் எளிதில் விளங்கி கொள்வதற்கான குறிப்புகளையும் எழுதி இணைத்தார். 1901-இல் பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் ஆகிய மூன்று இயல்களில் ஒன்றை மட்டும் அதாவது அன்று பி. ஏ. பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த பொருளணியியலை மட்டுமே வெளியிட்டார். பொதுவணியியல் தனி நூலாக வெளியிடப்பட்டதை 1909-இல் மதுரைக்கலம்பகம் நூலில் உள்ள விளம்பரம் தெரிவிக்கின்றது. ஆனால் 1901-இல் வந்த பதிப்பை நேரில் பார்த்து ஆராயும் தகுதியற்றவர்கள் இதுபற்றி மனம்போனபடி தவறாக எழுதுகின்றனர். எடுத்துக்காட்டாக 1920-இல் ஆறுமுகம் சேர்வை வெளியிட்ட தண்டியலங்காரத்திலும் 1967-இல் பேராசிரியர் கு. சுந்தரமூர்த்தி வெளியிட்ட தண்டியலங்காரத்திலும் 1901-லேயே வை. மு. சடகோபராமானுசாச்சாரியாரால் பொதுவணியியலும் பொருளணியியலும் வெளியிடப்பட்டதாகக் குறிப்புகளை எழுதியுள்ளனர். அதேநேரத்தில் 'வை. மு. கோ. உரைத்திறன்' என்ற நூலை எழுதிய முனைவர் வெ. இராஜேஸ்வரி, எம். ஏ., எம். பில்., பிஎச். டி. அவர்கள் ஒருபடி மேலே போய் 1901-இல் இந்நூலை வெளியிட்டவர் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் என்று உளறிக் கொட்டுகிறார். இவ்வாறு பல பிழைகள் நிறைந்துள்ள இந்த நூலுக்குத் தமிழக அரசின் “தமிழ் வளர்ச்சித் துறை” “சிறந்த நூல்” என்று பரிசளித்துப் பாராட்டிப் பரவசப்பட்டுள்ளது.
1901-இல் பொதுவணியியலுக்குத் தான் எழுதிய முகவுரையில் இந்நூலை இயற்றியவர் அம்பிகாபதியின் மகன் தண்டி என்பார் என்று கூறுகின்றார். இந்தக் கூற்றுக்கு ஆதரவாகப் பழைய ஏடுகளில் இருந்த ஒரு சிறப்புப் பாயிரச் செய்யுளையும் எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். இந்த அம்பிகாபதி என்பவர் கம்பரின் மகனா என்பது பற்றி எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை. கூடுதலாகத் தமிழ்மொழியில் அலங்கார நூல்கள் எந்தெந்தக் காலத்திலிருந்து உருவாகி வந்தன என்ற வரலாற்றுக் குறிப்புகளைத் தருகின்றார். அவ்வாறு தரும் போது வடமொழியில் வெளிவந்த அலங்கார நூல்கள் பலவற்றை ஒப்பிட்டுக் குறிப்பிடுகின்றார். அவ்வாறு வடமொழியில் வெளியிடப்பட்ட நூல்களில் “காவ்யாதர்சம்” என்ற அணி இலக்கண நூல் குறிப்பிடத்தக்கது. இந்த வடமொழி நூலை எழுதியவர் “தண்டி” என்றும் அந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்த தண்டியலங்காரம் என்பதையும் விளக்குகின்றார். இதில் சடகோபராமானுசாச்சாரியாரால் எழுதப்பட்டுள்ள முன்னுரையின் அமைப்பும், அந்த நூலில் அவரால் எழுதப்பட்டுள்ள பழைய உரைக்கான விளக்கக் குறிப்புகளும் அதற்கு முன் உ. வே. சாமிநாத அய்யரால் வெளியிடப்பட்ட பாடநூல்களான சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், புறநானூறு போன்றவற்றில் உள்ள ஆய்வுக் குறிப்புகளை ஒத்திருப்பதைக் காணலாம்.
திருக்குறள் உரைவிளக்கம் பற்றி:
இன்றைய கல்விச் சூழலில் வை. மு. கோ. உரை என்று பலராலும் பாராட்டப்படும் நூல்களில் திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரைக்கான விளக்கமும் கம்பராமாயண உரையும் ஆய்வாளர்கள் பலராலும் பாராட்டிப் பேசப்படுவதாக உள்ளன. திருக்குறளுக்குப் பரிமேலழகர் எழுதியுள்ள உரைக்கான விளக்கத்தை அறத்துப்பாலுக்கு மட்டும் 1937-இல் நூலாக வெளியிட்டனர். 1938-இல் பொருட்பால், காமத்துப்பால் ஆகிய இரண்டையும் இணைத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளனர். பின்னர் 1946-இல் பொருட்பால், காமத்துப்பாலும், 1949-இல் அறத்துப்பாலும், 1955-இல் பொருட்பால், காமத்துப்பாலும், 1965-இல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகிய மூன்றும் இணைந்ததாகவும் வெளியிடப்பட்டுள்ளன.
திருக்குறள் பரிமேலழகர் உரை முழுமைக்கும் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார் உரை விளக்கம் எழுதியுள்ளதாக இன்று பலரும் தவறாகக் கருதி வருகின்றனர். இதற்கான காரணம் 1937-லிருந்து 1965 வரை வெளியிடப்பட்ட பதிப்புகளில் 1937-இல் வெளியிடப்பட்ட அறத்துப்பாலில் மட்டும் அதன் குறிப்புரை ஆசிரியர் வை. மு. சடகோபராமானுசாச்சாரியார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “பார்வையிட்டவர் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியார்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வந்த பதிப்புகளில் 1949-இல் வெளியிடப்பட்ட திருக்குறள் அறத்துப்பாலில் மட்டுமே வை. மு. சடகோபராமானுசாச்சாரியார் பெயர் இடம்பெற்றுள்ளது. மற்ற பதிப்புகளில் எல்லாம் வை. மு. கோ. பெயர் மட்டுமே இடம்பெற்று வெளியிடப்பட்டுள்ளது. அதனால் திருக்குறள் முழுமைக்குமான குறிப்புரை ஆசிரியர் வை. மு. கோ. தான் என்று பலரும் தவறாகக் கருதும் நிலை ஏற்பட்டது. അതേ நேரத்தில் வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரால் எழுதப்பட்ட முன்னுரையில் 102 அதிகாரங்களுக்குச் சடகோபராமானுசாச்சாரியார் குறிப்புரை எழுதியதாகவும், மீதமுள்ள 31 அதிகாரங்களுக்குத் தான் குறிப்புரை எழுதியதாகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னுரையை ஆய்வாளர்கள் எப்படிப் படிக்காமல் விட்டனர் என்பது வியப்பாக உள்ளது.
1937 பதிப்பில் பதிப்பாசிரியர் வை. மு. கோ. எழுதும் முன்னுரையில் கூறியுள்ளதைக் கவனிக்க வேண்டும். அடுத்து 1938-இல் பொருட்பாலையும் காமத்துப்பாலையும் வெளியிடும் போது தான் எழுதிய பதிப்புரையில் அவர் மிகத் தெளிவாகக் கூறுகின்றார். 133 அதிகாரங்கள் உள்ள திருக்குறளில் 99 அதிகாரங்களுக்குத் தன்னுடைய அண்ணன் முறையினரான சடகோபராமானுசாச்சாரியார் உரை எழுதியிருப்பதையும் (இந்தப் பகுதிகள் மட்டும்தான் அந்தக் காலத்தில் மாணவர்களுக்குப் பாடமாக இருந்தன. அந்தப் பாடப்பகுதிகளுக்கு மட்டுமே சடகோபராமானுசாச்சாரியார் உரை விளக்கம் எழுதினார்) மீதமுள்ள பகுதிகளைப் பதிப்பாசிரியராகிய தன்னால் விளக்கவுரை எழுதப்பட்டு முழுமை பெறச் செய்து வெளியிட்டதாகவும் கூறுகின்றார்.
1937-இல் வெளிவந்த திருக்குறள் அறத்துப்பால் பதிப்பின் முதல் பக்கத்தில் பரிமேலழகர் உரைக்குக் குறிப்புரை வரைந்தவர் “வை. மு. சடகோபராமானுசாச்சாரியார் ஸ்வாமிகள் இயற்றிய குறிப்புரையுடன்” என்றும் “வை. மு. கிருஷ்ணமாச்சாரியாரால் பார்வையிடப்பெற்று” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1938-இல் வெளிவந்த பொருட்பால், காமத்துப்பால் இணைந்த பதிப்பில் முதல் பக்கத்தின் நடுவில் “குறிப்புரையுடன்” என்று வெறுமனே எழுதப்பட்டு, நூலை வெளியிட்டவர் வை. மு. கிருஷ்ணமாச்சாரியார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
1965-இல் திருக்குறள் மூன்று இயல்களும் சேர்த்து ஒன்றாக வெளியிடப்பட்ட பதிப்பில் சடகோபராமானுசாச்சாரியாரின் பெயரைத் தூக்கிவிட்டுப் பரிமேலழகர் உரைக்கு முழுமையாகக் குறிப்புரை எழுதியவர் வை. மு. கோ. மட்டுமே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் உமா பதிப்பகம் வெளியிட்ட மறுபதிப்பிலும் வை. மு. கோ. பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால் திருக்குறளில் 41 அதிகாரங்களுக்கு மட்டும் உரை எழுதிய வை. மு. கோவே நூல் முழுமைக்கும் குறிப்புரை வரைந்தவராகப் பலரும் கருதும் நிலை ஏற்பட்டது.
இதுமட்டுமன்றி வை. மு. சடகோபராமானுசாச்சாரியாரால் எழுதப்பட்ட பரிமேலழகர் உரைக்கான விளக்கத்தை அந்தக் காலத்தில் புகழ்பெற்றிருந்த பல தமிழ் அறிஞர்கள் பாராட்டியிருக்கின்றனர். அத்தகைய தமிழ் அறிஞர்களில் ஒருவரான வேங்கடராஜுலு ரெட்டியார் தன்னிடம் கூறியதாக வை. மு. கோ. எழுதுகின்றார்.
இந்தப் பகுதியை முறையாகப் படிக்காமல் வை. மு. கோ. பற்றி, “வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் உரைவளம்” என்ற பெயரில் ஒரு குப்பை நூலை எழுதிய வெ. இராஜேஸ்வரி அம்மையார் அந்நூலின் பெரும்பாலான இடங்களில் தவறாகவே எழுதிச் செல்கிறார். அவற்றில் அந்த அம்மையார் கூறும் செய்திகளில் மிகவும் நகைச்சுவையானது: “திருக்குறள் அறத்துப்பால் மூலமும் பரிமேலழகர் உரையும் என்ற நூல் ‘வேங்கடராயலு ரெட்டி’யாரால் எழுதப்பட்டு, (இப்படி ஒரு நூலை வேங்கடராயலு ரெட்டியார் எழுதவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது) வை. மு. கோவால் பார்வையிடப்பட்டு வெளியிடப்பட்டது” என்று முழுமையும் தவறாக உளறியதுடன் நில்லாமல், வை. மு. கோவின் பெருந்தன்மையைப் பாராட்டுவதாக நினைத்து “தன்காலத்து உரையாசிரியர்கள் (வேங்கடராஜுலு ரெட்டியார் போன்றவர்கள்) நூல் எழுதிப் பதிப்பிக்க மிகவும் உதவியுள்ளார்” என்று பரவசமாகத் தன் நூலின் பக்கம் 44, 45-இல் பதிவிடுகின்றார்.
இதேபோன்று வை. மு. சடகோபராமானுசாச்சாரியாரால் தண்டியலங்காரத்திற்கு எழுதப்பட்ட உரை விளக்கத்தை முனைவர் வெ. இராஜேஸ்வரி, எம். ஏ., எம். பில்., பிஎச். டி. அவர்கள் (வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரியாரின் பதிப்புகளைப் பற்றி ஆய்வு செய்தவர்?) தன் ஆய்வு நூலில் “தண்டியலங்காரத்தில் பொதுவியல், பொருளணியியலுக்கும் உரை எழுதிப் பதிப்பித்தவர் வை. மு. கோ.” என்று கூசாமல் தவறாக உளறிக்கொட்டுகிறார்.
இப்படிப் பிழைகள் மலிந்த நூலைப் பற்றி, “இந்நூலுள் ஒவ்வோர் இயலும் ஒவ்வொரு முனைவர்பட்டத்துக்குக் கட்டியம் கூறி நிற்பது. அவ்வளவு அழுத்தம் திருத்தமாகவும், உறைபொதி வடிவாகவும் தன் ஆய்வைப் பதிவு செய்திருக்கிறார்” என முனைவர் V. கிருஷ்ணன் என்பவர் உச்சிமீது வைத்துப் பாராட்டி மகிழ்கிறார் என்றால், தமிழாய்வு எந்தத் திசைவழியில் செல்கிறது என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.
- பொ.வேல்சாமி