கருக்கு, சங்கதி, வன்மம், மனுஷி ஆகிய தமிழின் முக்கியமான நாவல்களை எழுதியவர் எழுத்தாளர் பாமா. தலித் மக்கள் வாழ்வியல், கிருஸ்தவத்தில் சாதி, குடும்ப அமைப்பு முறை, மாணவர்களின் கல்விநிலை போன்றவை குறித்த அவரது சிந்தனைகளை வெளிப்படுத்துகிறது இந்நேர்காணல்

2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் ‘அவ்வையார் விருது‘ பெறுவதற்காக சென்னை வந்திருந்த எழுத்தாளர் பாமா அவர்களை மாதவரத்திலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் சந்தித்தோம். இயல்பாகவும் தெளிவாகவும் அமைந்திருந்தது அவருடனான உரையாடல்.

நேர்காணல்: ஜி.சரவணன்

உங்களின் கருக்கு நாவல் வந்து இருபத்தைந்தாண்டுகளைக் கடந்து விட்டது. தற்போது விருட்சங்களாகும் விதைகள் நாவல் வெளிவந்திருக்கிறது. ஒரு படைப்பாளியாக இப்போது எப்படி உணர்கிறீர்கள்?

முதல்ல கருக்கு எழுதும்போது ஒரு எழுத்தாளரா அத புத்தகமா பப்ளிஷ் பண்ணனும் அப்டின்னு எழுதல. அது யதார்த்தமா நடந்த விஷயம். அப்ப கருக்குக்கு கிடைச்ச எதிர்ப்பு, வரவேற்பு ரெண்டையும் பாத்த பிறகு நிறைய பேர் சொன்னாங்க. பெண்களைப் பத்தி எழுதுங்க அப்டின்னு. அப்புறந்தான் சங்கதி எழுதுனேன். தொடர்ந்து வன்மம் எழுதுனேன். அப்ப இந்தியா டுடே இலக்கிய மலர் கொண்டுவந்தாங்க. அதுக்கு சிறுகதை கேட்டாங்க. அதுவரைக்கும் நான் சிறுகதை எழுதினதில்லை. அப்ப அண்ணாச்சின்னு ஒரு சிறுகதை எழுதினேன். அதுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்பதான் எனக்கு நாம சிறுகதையும் எழுதலாம் அப்டிங்கிற நம்பிக்கை வந்தது. அப்புறம் கவிதைகளும் எழுத ஆரம்பிச்சேன். ஒன்றிரண்டைத் தவிர அதை புத்தகமா போடல.

bama 921அந்த நேரத்துலதான் நான் எழுத்தாளர் என்பது நிறுவப்பட்டது. 2000இல் கருக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு வந்தது. மொழிபெயர்ப்புக்கு தேசிய அளவுல சர்வதேச அளவுல விருதுல்லாம் கிடைச்சது. ஆக மெல்ல மெல்ல நல்ல சரியான வளர்ச்சிதான். வளர்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் எதிர்ப்புகளும் ஒரு பக்கம் இருந்துச்சி. மொழி, நடை, கலாச்சாரம், வகைமைன்னு எதிர்ப்பு இருந்துச்சி. அப்புறம் இடையில கொஞ்சம் பிரேக். ஏன்னா சொந்த வாழ்க்கையில சில பிரச்சினைகள். தங்கச்சி இறந்தது, அப்பா, அம்மா இறந்ததுன்னுஞ் அப்புறம் தென் மாவட்டக் கலவரங்கள்ஞ் அதத்தான் வன்மம்ன்னு எழுதினேன்.

அப்புறம் மனுஷி வந்து கருக்கோட செகண்ட் பார்ட் மாதிரிதான். ஒரு பெண், தலித் பெண் தனியொரு மனுஷியாக சமுதாயத்தில் எப்படி வாழுறது? வாழ்வதற்கேற்ற ஒரு சூழல் இருக்குதா? அவங்கவங்க உணர்வுகளோட வாழ்ந்தால் அத எப்படியாவது தடுத்து நிறுத்திடணும், அழிச்சிடணுங்கிற ஒரு மனப்போக்குதான் இருந்துட்டுருக்கு.

அதுல ரொம்ப அடிபட்டேன் நான். அத ஒரு புதினமாத்தான் எழுதினேன். நிறைய பெண்களுக்கு அது பிடிச்சிருந்தது. வரவேற்பு இருந்தது. அது மொழிபெயர்க்கப்படாததால அவ்வளவா பரவலாக்கம் செய்யப்படல. ஆனா தனிப்பட்ட முறையில சில கல்லூரிகள்ல அத பயன்படுத்தினாங்க. அதோட ஆங்கில மொழிபெயர்ப்பு இப்பதான் ஆரம்பிக்கிறாங்க. இடையிடையே சுமார் அறுபது சிறுகதைகள் எழுதினேன். கடைசியில் ‘விருட்சங்களாகும் விதைகள்‘ எழுதினேன்.

33 வருசம் ஆசிரியர் பணியில் இருந்திருக்கிறேன். கடைசியா ஒரு இருபது இருபத்துமூணு வருசம் தொடக்கப் பள்ளியில இருந்தேன். அது செங்கல்பட்டு மாவட்டத்துல ஒரு கிராமம். இப்ப காஞ்சிபுரம் மாவட்டம். அந்தப் பகுதியில தலித் மக்கள் முதல் தலைமுறையில படிக்க வராங்க. இன்னமும் அந்த கிராமம் அப்படித்தான் இருக்கு. சரியான சாலை வசதி, பேருந்து வசதில்லாம் இல்ல. தேநீர் குடிக்கணும்னாகூட கடையெல்லாம் கிடையாது. அந்த ஊர்தான் கடைசி என்டு மாதிரி. அந்தப் பகுதியில மக்கள்ட்ட எந்த விழிப்புணர்வும் இல்ல. படிப்பும் இல்ல. நான் 95கள்ல போனேன். 2015ல அங்கதான் நான் பணிநிறைவு பெற்றேன்,. அந்தப் பள்ளிய நான் விரும்பி ஏற்றுகிட்டு போனேன். ஹையர் செகண்ட்ரியிலேருந்து பிரைமரிக்கு போனேன். அந்தப் பகுதி ரொம்ப பரிதாபமான நிலையில இருந்துச்சி.

ஏன்னா நான் தென்பகுதியிலிருந்து வந்திருக்கேன். எனக்கு கிராமப்பகுதி வாழ்க்கை தெரியும். அங்க பள்ளிக்கூடம் நிரம்பி வழியும். இங்க பாத்திங்கன்னா போயி அவங்கள பிடிச்சிட்டு வரணும். கடலை எடுக்கிறாங்கன்னா நின்னுடுவாங்க. ஒரு கல்யாணம்ன்னா நின்னுக்கிடுவாங்க. மொட்டை போடுறதுன்னா நின்னுக்கிடுவாங்க. அவங்க வரவேமாட்டாங்க. நாம தேடிப் போயிப் போயி கொண்டுவரணும். அப்படி ஒரு நிலவரமா இருந்துச்சி. அப்ப இவங்களுக்குதான் நாம பணி செய்யணும்ன்னு வாலன்ட்டியராதான் நான் போனேன். அதுக்கப்புறம் நல்ல ஒரு மாற்றம் வந்தது. நான் போகும்போது மூன்றாசிரியர் பள்ளியா இருந்தது. அப்புறம் ஏழாசிரியர் பள்ளியா மாறுனது. ஒருகட்டத்துல 82 பிள்ளைங்க ஒரு செக்ஷன்ல இருந்தாங்க.

அந்த ஏரியாவும் நல்லாருக்கும். விருட்சங்களாகும் விதைகள்லகூட நான் எழுதியிருப்பேன். அது ரொம்ப இயற்கை சார்ந்த ஒரு இடம். இன்னிக்கும் அப்படிதான் இருக்கும். அதமாதிரி பிள்ளைங்க பல்லுயிர் மேல அன்பு உள்ள பல்லுயிர் மேல பரிச்சயம் உள்ள பரிவுள்ள குழந்தைகளாத்தான் அவங்க இருந்தாங்க. அந்தப் புத்தகம் எனக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமான புத்தகம். இன்றைய காலகட்டத்தில் அது ரொம்ப தேவைங்கற மாதிரியான புத்தகம். நேற்றுகூட முதலமைச்சர்கிட்ட விருது வாங்கினப்ப எல்லா புத்தகத்தோட இதயும் ஸ்பெசிபிக்கா கொடுத்தேன்.

இது எனக்கு ஏன் முக்கியமா படறதுன்னா அந்தப் பள்ளியில ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு ரொம்ப விரிஞ்சி போயி ரொம்ப அந்நியப்பட்டு போன ஒரு நிலைமை. இப்பமும் அப்படிதான் இருக்குது. குழந்தைகளோட உள்ளார்ந்த ஒரு உலகத்தை நாம பாக்கவே மாட்டேங்குறோம். புரிஞ்சிக்க மாட்டங்குறோம். அத வெளிக்கொணரணும். இந்தப் பயணம்ங்கிறது இதான்.

முதல்ல நீங்க கருக்கு நாவல் எழுதத் தொடங்கும்போது இந்த மொழி செல்லுபடியாகுமா என்று தோன்றியதா? திட்டமிட்டு இந்த மொழியில் எழுத வேண்டும் என்று எழுதினீர்களா? அல்லது இயல்பாக எழுத வந்ததா?

நான் இத புத்தகமா போடணும்ன்னு எழுதல. அந்தமாதிரி எந்த எண்ணங்களும் என்ட்ட இல்ல. இது நான் எனக்காக எழுதினது. கான்வென்ட்ல ஏழு வருசம் இருந்துட்டு வெளில வந்துட்டேன். வந்த பிறகு ரொம்ப இக்கட்டான ஒரு நேரம். சாப்பாட்டுக்கு வழியில்ல. இருக்க சரியான இடம் இல்ல. அப்ப எல்லாருமே எனக்கு அந்நியர்களாதான் தெரிஞ்சாங்க. ஆனா வாழணும்ன்னு இருக்கு. எப்படி வாழ்றதுன்னு தெரியல. அந்த ஒரு மனநிலையிலதான் இருந்தேன். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு எனக்கு வழி கிடையாது. ஒரு ரெண்டுங்கெட்டான் நிலமை. அந்த ஒரு சூழல்லதான் அப்ப எனது கடந்தகால நினைவு, வெறுமை, கான்வென்ட் லைப்ல கிடைத்த ஏமாற்றங்கள் எல்லாம் சேர்ந்து ரொம்ப பாடுபட்டேன். மன அழுத்தம் நிறைய இருந்தது. அப்ப எனக்கு ஆசுவாசமா இருக்கும் அப்டிங்கறதுக்காகத்தான் எழுதுனது. அதுனால இந்த மொழி அந்த மொழி அது வருமா வராதா என்ற எண்ணமே எனக்கு கிடையாது.

அப்படி எழுதியபோது என்னன்னா அன்கான்சியஸா அது நடந்தது. நகர்ப்புறங்களை எழுதும்போது கிளாசிக் தமிழ்ல எழுதியிருந்தேன். எங்க கிராமத்து வாழ்க்கைய எழுதும்போது மக்கள் மொழியிலேயே எழுதியிருந்தேன்.

அப்ப மார்க் பாதர்தான் பாத்துட்டு இது நல்லாருக்குது. இது எல்லாத்தயும் உங்க மக்கள் மொழியிலேயே எழுதியிருந்தா நல்லாருக்கும் என்று அவர் சஜஸ்ட் பண்ணதால எல்லாத்தையும் அப்புறம் மாத்தினேன். நான் புத்தகமா போடுறதுக்கு விரும்பல. ஏன்னா உண்மையான பேரு, பட்டப்பேருன்னு புனைவா நான் எழுதல. நம்மளத யாரு பாக்கப்போறா அப்புடின்னு எழுதுதனதுதான்.

ஆனா மார்க் பாதர்தான் இத கண்டிப்பா புத்தகமா போடணும்ன்னு சொன்னாரு. அவரையுமே எல்லாரும் டிஸ்கரேஜ்தான் பண்ணாங்க. இது என்ன மொழிநடை, இது என்ன வகைமை இதைப்போய் புத்தகமா போடுறீங்கன்னு. அப்ப பாதர்தான் முயற்சி எடுத்து ஒரு சின்ன பதிப்பகம் மூலமா கொண்டு வந்தாங்க. சின்ன புத்தகமா 12 ரூபான்னு போட்டோம். அங்கங்க சின்ன சலசலப்பு வந்தது. மெயின்ஸ்ட்ரீம் ரைட்டர்ஸ்ல்லாம் விமர்சனம் பண்ணாங்க. அந்த மொழிநடையை வச்சி அப்புறம் ஒரு ஒழுங்குமுறையே இல்ல, பழைமைய வச்சில்லாம் நிறைய பேசுனாங்க. ஆனா சில ரைட்டர்ஸ் வந்து அத ரொம்ப புகழ்ந்தாங்க.

பிரபஞ்சன், சுஜாதா, சுபமங்களா ஆசிரியர் கோமல் சுவாமிநாதன் இவங்கள்ளாம் நல்ல ஒரு ரிவ்யூ கொடுத்தாங்க. அதுக்கப்புறம் கொஞ்சம் பரவலாக்கப்பட்டது.

அப்புறம் அசோகமித்திரனாலதான் இது ஆங்கிலத்துக்குப் போனது. மினி கிருஷ்ணன்ன்னு அவங்க எடிட்டர். அவங்க அப்ப நார்த் இன்டியால இருந்தாங்க. அப்ப தலித் புத்தகங்கள ஆங்கிலத்துல கொண்டு வர்றதுக்கு ஒரு புராஜக்ட் கிடைச்சிருக்குன்னு சொன்னப்ப இவரு கருக்குன்னு ஒண்ணு வந்திருக்கு. நல்லாருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. வித்தியாசமாதான் இருக்குன்னு சஜஸ்ட் பண்ணிதான் அவங்க எடுத்தாங்க.

அப்ப லட்சுமி ஹோம்ஸ்ட்ராங்ன்னு நல்ல ஒரு டிரான்ஸ்லேட்டர் கிடைச்சாங்க. அப்புறம் அது கிராஸ்வேர்ட் அவார்டெல்லாம் வாங்குனுச்சி.

கருக்கு நாவல் காலகட்டத்து சாதிய ஒடுக்குமுறைய நம்மளால புரிஞ்சிக்க முடியுது. ஆனா முப்பது வருசம் கழிச்சி நீங்க சம்பாதிக்க ஆரம்பிச்சி தன்னிறைவு பெற்ற பிறகும்கூட வீடு தரமுடியாது போன்ற சாதிய ஒடுக்குமுறை என்பதை எப்படிப் புரிந்து கொள்வது?

அதாவது எத்தன வருசம் ஆனாலும் ஜாதி ஒழியலல்ல. ஜாதி இருக்கிறவரை இந்த நிலைமை நீடிச்சிட்டுதான் இருக்கும். வேங்கைவயல் நிகழ்ச்சிய எடுத்துக்கங்க, இப்ப நடக்குறதுதானே. நாம நெனச்சிகூட பாக்காதமாதிரி இன்னும் கோரமா நடக்கும். அந்த காலத்துல வன்முறைகள் நடந்தாலுமே இப்ப இவ்வளவு குரூரமா இருக்கு. வளரும் தலைமுறைகள்ட்டகூட ஜாதிவெறி அதிகமா இருக்கு. இது நாம எதிர்பார்க்காத ஒண்ணு. அதனால வளந்திருக்கா மாறிருக்கான்னா கொஞ்சம் மாறியிருக்கு. தலித் மக்கள்ட்ட ஒரு எழுச்சி வந்திருக்கு.

அம்பேத்கர் நூற்றாண்டு கொண்டாடின காலத்துல அரசியல் ரீதியா எழுச்சி இருந்துச்சி. இலக்கிய ரீதியா எழுச்சி இருந்தது. சமூக எழுச்சியும் இருந்துது. அதனால கல்வியோட முக்கியத்துவம் தலித் மக்களுக்கு புரிய ஆரம்பிச்சிது. பாடுபட்டாலும் படிக்கணும். நம்மள விடுதலைப்படுத்திக்கணும். போராட்டத்தின் மூலமா நாம விடுபடணும். அதனால அடிச்சா திருப்பி அடிக்கக்கூடிய மனபலம் உடல்ரீதியா இல்லாட்டாலும் பொருளாதாரம் இல்லாட்டாலும் திருப்பி அடிக்கணும் அப்படிங்கிற நிலமை வந்துருக்கு. அடி வாங்குறவன் எவ்வளவு காலம் அடி வாங்கிகிட்டே இருப்பான்? ஆதிக்க சாதிக்காரங்கள சார்ந்து வாழக்கூடாதுங்குற தெளிவு வந்துருக்கு. அது நடந்துருக்கு.

ஆதிக்கசாதிக்காரங்க விவசாயத்தப் பொறுத்தவரையில நிலங்கள பூரா பணப்பயிரா மாத்தி யாருகிட்டயாவது ஒப்படைச்சிடறாங்க. தென்னந்தோப்பு, மாந்தோப்பு, கொய்யா தோப்பு இப்புடி பயிர் பண்றாங்க. உணவுப் பயிர் ரொம்பவும் குறைஞ்சிருச்சி. தலித் மக்கள் நெற்பயிர் விவசாயத்தில் கைதேர்ந்த நிபுணர்கள். இப்ப அந்த வேலை இல்லை. ஏன்னா நிலமும் இல்லை. அதனால விவசாயத்த நம்பி இல்லாம சாலை போடுறது, கொளுத்து வேலை, பிளம்பர் வேலைன்னு எல்லாம் சிதறிட்டாங்க. கஷ்டப்பட்டாவது பிள்ளைகள படிக்க வக்கிறாங்க.

மாற்றங்கள் இருக்குது. ஆனாலும் தீண்டாமை இன்னைக்கும் இருக்குது. வடிவங்கள் மாறியிருக்கு. அதுக்கு கருத்தியல் ரீதியான போராட்டம், கலாச்சார ரீதியான போராட்டம் என்ற முறையில் நடந்துகிட்டேதான் இருக்கு.

தனித்து வாழ நேரும் ஒரு தலித் அல்லாத பெண்ணுக்கும் தலித் பெண்ணுக்குமான சிக்கல்களில் உள்ள அடிப்படை வேறுபாடுகள் என்னென்னன்னு சொல்ல முடியுமா?

பொதுவாக பெண்ணுன்னாலே ஒரு வலியும் வேதனையும் இருக்கு. நம்ம சமுதாயத்தப் பொருத்தவரையில பெண் அப்டின்னாலே கல்யாணம் பண்ணியிருக்கணும். அவ பொறந்தவுடனே சொல்றது ஒரு ஆணுக்கு நல்ல மனைவியா, ஒரு குடும்பத்துக்கு நல்ல ஒரு பெண்ணா இருக்கணும்ங்கறதுதான். அப்படி சொல்லிதான் பொம்பள புள்ளய வளப்பாங்க. வீட்டில பாத்தாலே தெரியும். வீடு பெருக்கறது, பாத்திரம் கழுவறது இதெல்லாம் பொம்பள புள்ள வேல. ஆம்பள பசங்களுக்கு வேலைகளே இருக்காது. விளையாட்டு பொருள்கள்லகூட வித்தியாசம் இருக்கும்.

பெண் வீட்டில் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாது. வீட்டுச்சூழல்லயே ஆண் பெண்ணுன்னு பிரிச்சிடுவாங்க. பெண் என்பவள் குதிரைக்கு கடிவாளம் கட்டினா மாதிரி கணவன், குடும்பம் என்று அப்படியேதான் கொண்டு போவாங்க. இதுல தலித்துன்னாலும் சரி தலித் இல்லன்னாலும் சரி எல்லா பெண்ணுக்கும் ஒண்ணுதான். இது ஆணாதிக்க சமுதாயம், அதிலும் உயர்ஜாதி ஆணாதிக்க சமூகம்.

தலித் பெண், தலித் அல்லாத பெண் என்பதில் தலித் பெண்ணுக்கு கூடுதல் சுமை என்னன்னா ஜாதி அடையாளம். இந்த ஜாதி அடையாளம் இருந்தாலே அங்க மதிப்பு இல்ல. அங்க மனித உயிர் அப்படிங்கறது அடிபட்டுப் போகும். அதாவது இவள என்ன வேணாலும் பண்ணலாம். பெண் என்றாலே என்னவும் பண்ணலாம். தலித் பெண் என்றால் எந்தப் பாதுகாப்பும் கிடையாது. இது பாலியல் ரீதியானது மட்டுமில்லை. கேவலமாக நடத்துவது, அசிங்கமாக பேசுவது எல்லாம் செய்வார்கள்.

தன்னிச்சி வாழும்போது சாபக்கேடு என்னன்னா இருபத்தஞ்சி வயசு தாண்டிட்டாலே நம்மள கேக்காமலேயே திருமதின்னு போட்டுருவாங்க. நான் திருமதி இல்லன்னு சொன்னா ஒரு வினோத உயிரப் பாக்குறமாறி பாப்பாங்க. கல்யாணம் ஆகாதது ஒரு குற்றம் மாதிரி பாப்பாங்க. அப்பன்னா விடோவா அப்டின்னு கேப்பாங்க.

மனுவுல சொன்னமாதிரி ஒரு தகப்பனுக்கு சொந்தமான சிறுமி, இல்லன்னா ஒரு ஆணுக்கு சொந்தமான மனைவி, இல்லன்னா ஒரு மகனுக்கு சொந்தமான அம்மா இப்படித்தான் அடையாளம் பண்ணுவாங்க.

இது இல்லாதவங்கள்லாம் மனிதப் பிறவிகளே கிடையாது. அவங்க மனப்பதிவுல இப்படித்தான் இருக்கும்.

தலித் பெண்களைப் பொருத்தமட்டில் ஒரு ஆணைச் சார்ந்துதான் வாழணும்ங்கற நிலை ரொம்பக் குறைவு. ஆண் இருந்தாலும் இல்லாட்டிலுமே ஒரு பெண்ணால் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ளமுடியும். நிறைய தலித் குடும்பங்கள் பெண்களாலதான் நடக்குது,.

தனித்து வாழும் பெண்கள்ன்னா நான் மனுஷியில எழுதினமாதிரி நாம இயல்பா இயங்கமுடியாது. நாம ஆசப்பட்டாகூட நல்லா டிரஸ் பண்ணலாம், பூ வைக்கலாம்ன்னு செய்யமுடியாது. எங்க போனாலும் தனியாவா? தனியாவா? என்ற வார்த்தை தொடர்ந்துகிட்டே இருக்கும். காய்கறி வாங்குகிறபோது கொஞ்சம் கூடுதலாக வாங்கிவிட்டால்கூட ஒருத்திக்கு எதுக்கு இவ்வளவுன்னு கேப்பாங்க. கேரக்டர தப்பா பேசுவாங்க. வீட்டுக்கு யாராவது வந்தா எப்ப வந்தாங்க, யாரு வந்தாங்க, ஏன் வந்தாங்கம்பாங்க. முள்ளு மேல நிக்கிறமாதிரிதான். அதையெல்லாம் மீறிதான் நிக்கப் பழகிக்கணும்.

தலித் அல்லாதவர்களுக்கு கூடுதலா ஜாதி அந்தஸ்து இருக்கு. அவர்கள் தலித்துகளைவிட பொருளாதாரத்தில் கொஞ்சம் மேம்பட்டவர்களாக இருப்பார்கள். அதை வைத்து காப்பாற்றிக்கொள்ளலாம். தலித்துகள் என்பவர்களுக்கு நிராயுதபாணியான நிலைமைதான்.

கிறித்தவத்தைத் தழுவிய பிறகு தலித்துகள் சாதியற்றவர்களாக ஆகிவிட்டார்கள் என்ற அரசின் முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரசுக்கு சாதி இருக்குன்னு தெரியும். தலித்தாக இருந்து கிறித்தவத்துக்கு மாறுகிறவர்கள் எஸ்சியிலிருந்து பிசியாக மாறுகிறார்கள். ஆனா அவங்களோட வாழ்க்கை மாறல. பொருளாதாரம் மாறல. இருக்குற சமூகச்சூழல் மாறல. எதுவுமே மாறல. மதம் மட்டும்தான் மாறியிருக்கு. மதம் மாறினதால வாழ்க்கைல என்ன மாறிட்டாங்க? ஆனா இட ஒதுக்கீடு குடுக்கறது கிடையாது.

அதாவது ஒரு பறையர் கிருஸ்தவரா இருந்தாலும் கிருஸ்தவப் பறையராதானே இருக்காரு. பள்ளர் கிருஸ்தவர், அருந்ததியர் கிருஸ்தவர். வெள்ளாள கிருஸ்தவர் அப்படிதான் இருக்கு.

கிருஸ்தவத்துல ஜாதி ஒட்டு இருக்கு. ஜாதி மறையல. தலித்துகள் ஏன் கிருஸ்தவத்துக்கு மாறினாங்கன்னா இந்த அவமானத்திலிருந்து தப்பிப்பதற்காகத்தான். இந்து கோயில்கள்ல வுடமாட்டறாங்க. தீண்டாமை இருக்குது. வேலை வாங்கிட்டு சரியான கூலி குடுக்கமாட்டுறாங்க. நம்மள ஈனப்பிறவின்னு சொல்றாங்க. மாட்டுக்கறி திங்கறவங்கன்னு சொல்றாங்க.

கிருஸ்தவ மதத்துல அப்படி இல்ல. சர்ச்சுக்கு எல்லாரும் போகலாம். எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து மாட்டுக்கறி சாப்பிடலாம். எல்லாரையும் மதிக்கிறான். உட்கார வச்சி பேசுறான். இயேசு சொன்னதெல்லாம் எல்லாரையும் நேசிங்க, அன்பு செய்யுங்க. எல்லாரும் சமம் அப்டின்னு சொல்றாங்க. எல்லாம் நல்ல மதிப்பீடுகள்தான். அத கேக்கும்போது நம்பி மாறிப் போறோம். ஆனா அங்க அப்படி இல்ல.

ஆனா கிருஸ்தவத்துல ஒரு வாய்ப்பு என்னன்னா நாம கேள்வி கேட்கலாம். கிருஸ்து என்ன சொன்னாரு? நீ ஏன் என்ன இப்படி நடத்துற? நான் இங்கதான் இருப்பேன்னு உரிமை கோரலாம். கிருஸ்தவத்துக்கு போனதுனால தலித் பெண்கள் ஜாக்கெட் போடமுடிஞ்சிச்சி. பொதுவெளியில நடமாட முடிஞ்சது. கோயில்கள்ல உள்ள

போகமுடிஞ்சது. அப்பகூட டவுசர் கோவில் பானா கோவில் எல்லாம் கட்டி இவங்க தனியா இவங்க தனியா என்றுகூட இருந்திருக்கிறது.

மிஷனரிகள் சமத்துவத்ததான் போதிச்சாங்க. இங்க உள்ளவங்கதான் சாதிய சேத்துகிட்டாங்க. ஆனா இப்ப தலித் கிருஸ்தவ விடுதலை இயக்கம் அப்படின்னுல்லாம் வந்திருக்கு. ஒரு மாற்றம் வந்துருக்குது.

சரி, கிறித்தவத்தைத் தழுவினாலும் தலித்துகள் மீதான சாதி முத்திரை தொடர்கிறது என்பதை கருக்கு நாவலில் வெளிப்படுத்தியிருந்தீர்கள். இந்த முப்பதாண்டுகளில் நிலைமை மாறியிருக்கிறதா?

கொஞ்சம் மாறியிருக்கு. மாறிருக்குதுன்னா ஜாதிகள்லாம் இருக்குது. நாம முன்னேறும்போது அவங்களால தடுத்து நிறுத்த முடியல. வெளிப்படையா இல்லாம ரொம்ப ஏதாவது நுட்பமா செய்யமுடியுமான்னு பாக்குறாங்க. தமிழகத்தைப் பொருத்தவரையில் 60 சதத்திற்கும் மேல் தலித்துகள்தான் கிருஸ்தவர்கள். மெஜாரிட்டி. ஆனா மைனாரிட்டியாக இருக்கிற நான் தலித்துகள்தான் அதிகாரப் பதவிகளில் இருப்பார்கள். இன்னமும் அது இருக்கத்தான் செய்யுது. அதிகாரமெல்லாம் ஆதிக்க சாதி கிருஸ்தவர்களிடம்தான் இருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்க்கப்போனால் எவ்வளவோ பரவாயில்லை, கொஞ்சம் மாற்றம் வந்திருக்கிறது என்று சொல்லலாம்.

பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கெதிரான அரசின் சட்டங்களைப் பற்றிக் கூறுங்களேன்

சட்டங்கள் போதுமானவையாக இருக்கின்றன. அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல்கள் உள்ளன. சிக்கல்ன்னா என்ன வேணும்ன்னு பண்றாங்க. கிரமப்புறங்கள்ல பெண்களுக்கு அதுபற்றிய போதுமான புரிதல் இல்ல. அப்படியே போனாலுமே அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்களை அவ்வளவாக பொருட்படுத்துவதில்லை. சட்டத்தை வளைச்சி திரிச்சிதான் செய்வாங்க. சட்டங்களெல்லாம் இருக்கு. ஆனால் அதனால பெரிய பயன் ஒண்ணுமில்ல.

ஒடுக்குறவன்கிட்டயே கம்பக் கொடுத்து காப்பாத்துன்னா திரம்பத்திரும்ப அடிக்கத்தானே செய்வான். போக்சோ சட்டம் தினந்தினம் செய்தி வந்துகிட்டுதான் இருக்கு. என்ன பண்றது? இந்த நாட்டுல பொறந்ததுதான் தப்பு. சட்டமெல்லாம் சரிதான் அதை நல்லா நடைமுறைப்படுத்துனாலே போதும்.

கன்னியாஸ்திரியாகி அடித்தள மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற உங்கள் நிறைவேறாத எண்ணம் தற்போது ஈடேறியதாக சொல்ல முடியுமா?

முழுமையா நிறைவேறாட்டியும் கான்வென்ட்ல இருந்ததவிட நிறைய நடந்துருக்கு. அங்க இருந்திருந்தா நான் ஒரு எழுத்தாளர் அப்டின்னு அறிமுகம் ஆகியிருக்கமாட்டேன். நேரிடையா இல்லாட்டியும் என்னோட எழுத்து பரந்துபட்ட அளவில் போய்ச் சேர்ந்திருக்கிறது. அதன் தாக்கம் நிறைய பேருக்கு இந்த சமூகத்தைப் புரிந்துகொள்ள உதவிருக்கு. இந்த சமுதாயத்துக்கு நம்மோட பங்களிப்பு என்னவா இருக்கணும்? எப்படி வாழணும்? அப்படிங்கறதையெல்லாம் யோசிக்க வச்சிருக்கு. அதுல எனக்கு திருப்தியா இருக்கு. நாம என்ன நெனச்சி எழுதுனமோ அது சரியா நிறைவேறியிருக்கு.

தலித்திய பெண்ணியம் என்கிற வகைமை ஒரு பேசுபொருளானதற்குக் காரணமாயிருந்தவர்களில் நீங்களும் ஒருவர். அதைப் பற்றி விளக்குங்களேன்...

முதல்ல எனக்கே இந்த இஸம் பத்தியெல்லாம் ஓர்மை இல்லை. கருக்கு எழுதின பிறகு சங்கதி எழுதனப்பதான் தலித் பெண்கள்ட்ட இருக்கிற சக்தி அந்தப் பெண்ணியம்ங்கறது வித்தியாசமா இருக்குதுன்னு எனக்கு புரிஞ்சது.

பொத்தாம் பொதுவாக ஆணாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பெண், ஆணுக்குப் பெண் சமம் இப்படியான கோட்பாடுகள்தான் நிறைய பேசுறாங்க. பாரதி கண்ட புதுமைப்பெண் என்று வீராவேசமான வசனம்ல்லாம் பேசிட்டிருக்கிற கூட்டங்கள் இருக்குது. அவங்க நடுத்தட்டு வர்க்கப் பெண்கள் பத்தி கவலப்படறதே கிடையாது. அடித்தட்டு மக்களின் வலிகளைக் கண்டுகொள்வதில்லை.

ஒரு பெண்ணோட மாண்புக்கும் ஒரு மனுஷிங்கிற நிலைமைக்கும் அவ இந்த உலகத்துல இருக்கவே லாயக்கு இல்லாத ஒரு உயிர் என்று அடிப்படையே நசுக்கப்படும்போது அதப்பத்திப் பேசறதுக்கு சமூக அந்தஸ்து இல்ல. சமூக வெளியில சுதந்திரமா வந்து நடமாடமுடியல. புழங்கமுடியல. எல்லா வகையிலயும் ஓரங்கட்டி இருட்டடிக்கப்பட்ட அந்தப் பெண்ணோட மனநிலை. அவளுக்கென்ன விடுதலை? அப்டிங்கறதப் பத்தி யோசிக்கறதில்லை.

அதேசமயம் அந்தப் பெண்கள்ட்ட எப்படிப்பட்ட ஒரு கலகலப்பான வாழ்க்கை முறை, உழைப்பு, அவங்க எப்படி வாழ்க்கைய சுவாரசியமா கொண்டு போறாங்க? அந்த மாதிரியான விஷயங்களயும் யாரும் வெளிய கொண்டு வர்றதில்ல.

சங்கதி நாவல்ல போராட்ட குணமுள்ள பெண்களத்தான் நிறைய எழுதினேன். நான் பாத்த, ரசிச்ச, கேள்விப்பட்ட பெண்கள் அவங்க.

ஆயுதம் வச்சிப் போராடிதான் இவங்கள எதிர்க்கணுமுன்னு இல்ல. நமக்கான உறுதி வெளியில இருந்து இல்ல, நம்மகிட்டயே இருக்கு. உழைக்கிறதே அந்தப் பெண்களுக்கு ஒரு உல்லாசமான வேலை. பாட்டு பாடிகிட்டு கதை சொல்லிகிட்டு நாட்டுப்புற கதைகளை பேசிகிட்டு இருப்பாங்க.

யாருமே வந்து இவ்வளவு வேலை இருக்கேன்னு முனங்கிகிட்டோ கஷ்டப்பட்டுகிட்டோ வேல செய்யறதில்ல. அப்படியே பழகிப் பண்ணுவாங்க. சிரிப்பாங்க. விளையாடுவாங்க. வலிகளை, சுமைகளை லேசாக எடுத்துப்பாங்க.

வாழ்றது கஷடப்படுறதுக்கு இல்ல. நொந்து நூலாகிப் போய் உட்காருவது கிடையாது வாழ்க்கை. சந்தோஷமா இருக்கறது. சுதந்திரமா இருக்கிறது அப்படிங்கறத தத்துவார்த்த ரீதியில இல்லாம வாழ்க்கை அனுபவத்தில் தெரிஞ்சிக்கிறாங்க. இன்னக்கி இவ்வளவுதான் இருக்குன்னா கூழைக் காய்ச்சி குடிச்சிட்டு சந்தோஷமா படுத்துத் தூங்குறாங்க. இன்னிக்கு நிறைய இருக்குன்னா கறியுஞ் சோறுமா நல்லா சாப்பிடுவாங்க.

இன்னிக்கி நான் சந்தோஷமா இருக்கணும். என்ட்ட இருக்கு, அவங்ககிட்ட இல்ல, அவங்களுக்கு கொஞ்சம் கொடுப்போம். நீங்க இன்னிக்கும் எந்த தெருவுக்கும் போங்க இருக்கறத தாராளமா குடுப்பாங்க. நல்ல ஒரு விருந்தோம்பல், மனிதநேயத்தை பரப்புதல். இதெல்லாம் அவங்களுக்கு தெரிஞ்சிதான் செய்யிறாங்கன்னு நான் சொல்லமாட்மேன். இது அவுங்களுக்குள்ளேயே இருக்குற உள்ளுணர்வு.

ஆக இந்தப் பெண்ணியம்தான் நுகர்வு கலாச்சாரம், மனித உறவுகள் மடிந்துபோவது, குடும்பம் சிதைந்துபோதல் போன்ற இந்த காலகட்டத்தில் இது ஒரு முக்கியமான தேவைன்னு எனக்கு தோணுது. அதுதான் மனிதத்தை இன்னமும் உயிர்ப்போட வச்சிருக்கு.

இவங்கள்ட்ட இருக்கிற சுதந்திரமும் மனநிலையும் பணக்காரங்கள்ட்ட இருக்காது. அந்த நிலை இன்னும் தூக்கலாக ஆண்கள்ட்டன்னுகூட சொல்லமாட்டேன் தலித் பெண்கள்ட்ட, இருக்குது. மனிதத்தை நேசிச்சி மலர வைக்கிறாங்க அவங்க. இதத்தான் நான் தலித் பெண்ணியம்ன்னு சொல்றன்.

தமிழகத்தில் தற்போதைய குடும்ப அமைப்பு முறை பற்றி...

மரபுரீதியான குடும்ப அமைப்பு மாறிகிட்டிருக்கு. முன்ன கூட்டுக்குடும்பங்கள் நிறைய இருந்தது. அதிலயும் குறைகளும் இருந்தது. நிறைகளும் இருந்தது. இப்ப தனிக்குடித்தனம். இதிலயும் குறைகள் இருக்கு. நிறைகள் இருக்கு. ஆனா இதுதான் பெஸ்ட் இதுதான் பெஸ்ட்ன்னுல்லாம் சொல்லமுடியாது. காலத்தின் மாற்றத்திற்கேற்ப எல்லாமே மாறிக்கொண்டிருக்கிறது, என்னென்ன சந்தர்ப்பத்தில் யார் யாருக்கு என்னென்ன அவசியமாக இருக்கிறதோ அதைத் தீர்மானம் பண்ணிக்கொள்ளவேண்டும்.

ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டுமென்றால் முதியவர்களை புறந்தள்ளுகிற மனநிலை அதிகம் வந்திருக்கு. அது வரவேற்கப்படக்கூடிய விஷயமல்ல. நகரங்களில் குழந்தைகள் குழந்தைகளாகவே இல்லை. கமாடிட்டியாக இருக்கிறார்கள். பையன் ஒரு போன். பொண்ணு ஒரு போன். அவங்க உலகமே அதுலதான் இருக்கு. ஸ்கூலப் பாத்தீங்கன்னா கொடுமையா இருக்குது. பேக்டரி மாதிரி இருக்குது. குழந்தைமைங்கறதே இல்லாமப் போச்சு. ஆனா கிராமத்தில் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். விளையாடுறாங்க. ஓடுறாங்க. அங்க இடமிருக்குது. ஓரளவுக்கு தாத்தா பாட்டி உறவுகள மதிக்கிறாங்க.

இன்னொன்னு விவாகரத்துகள். அத தப்புன்னும் சொல்லமாட்டேன். இருக்கட்டும் அப்டின்னும் சொல்லமுடியல என்னால. ஏன்னா பிடிக்காத ஒருத்தன்கூட வருசம் பூரா மல்லுகட்டி சாவறதவிட வெளில வந்துர்றது நல்லது. இன்னொன்னு சின்னச்சின்ன காரணத்துக்கெல்லாம் ஒரு புரிதல் இல்லாம ஒரு கவுன்சிலிங் இல்லாம பிரிஞ்சிக்கிறதும் தேவையில்லாத ஒண்ணு.

குடும்பங்கிற அமைப்பு சொத்துக்காகவோ நகைக்காகவோ இல்ல. அதனால குடும்பம் குடும்பம்ன்னு மரபுரீதியா இழுத்து பிடிச்சிட்டு வாழ்றது தேவையில்லை. ஏன்னா குடும்பங்கறது சந்தோஷமா வாழ்றது. சுதந்திரமா வாழ்றது. அது கணவனானாலும் மனைவியானாலும் அவங்கவங்களுக்குன்னு ஒரு வெளி இருக்கு. அந்த சுதந்தரத்த கொடுக்கறது இல்ல. இருக்குது. இருக்கறத அனுமதிக்கணும். சில பெண்களும்கூட அர்ரகண்ட்டா ஆண்கள அடக்கி வச்சிருக்காங்க. அப்படி இருக்கக்கூடாது. நீ மனுசன். நான் மனுஷி. கசப்பு வரலாம். அவங்கவங்களுக்குன்னு தனி எண்ணங்கள், தனி உணர்வுன்னு நிறைய இருக்கு.

சேந்து வாழணும்ன்னா அட்ஜஸ்மென்ட்தான் இருக்கணும். விட்டுக்கொடுத்தல் இருக்கணும். என்னப் பொருத்தவரையில கல்யாணம் பண்ணாலும் பண்ணாட்டாலும் மகிழ்ச்சியா இருக்கணும். சுதந்திரமா இருக்கணும். ஏன்னா வாழ்க்கை ஒரு வாழ்க்கைதான்.

ஆமாம், இதையொட்டி ஒரு கேள்வி. கணவனைப் பிரிந்து ‘சிங்கிள் மதர்‘ என்ற குடும்ப அமைப்பு ஒன்று உருவாகியிருக்கிறதே, அதைப் பற்றி...

உலகம் பூராவும் அப்படி நிறைய இருக்காங்க. கணவனை விட்டு பிள்ளைக்காக, பிள்ளைக்காகன்னு போறாங்க. அந்தப் பிள்ளைக்கு முழுமையான ஆளுமைத்திறன் வளரணும். அப்படி இல்லாத பட்சத்தில் அது எதுக்குன்னு ஒரு கேள்வி வருது. சின்னப்பிள்ளைகளை நாம கட்டாயப்படுத்தி உறவுகளை நேசிக்க வைக்கவே முடியாது. அதாவது அது குழந்தைக்கு கஷ்டம். அம்மா வந்து ஒரு காலகட்டம் வரைக்கும் சப்போர்ட் பண்ணுவாங்க. ஏன் பண்றாங்கன்னா இந்த சமுதாயம் அப்படி. ஏத்துக்குறதில்ல. எப்படி சிங்கிள் வுமன ஏத்துக்கறதில்லையோ அதே மாதிரி சிங்கிள் மதரை ஏத்துக்கறதில்ல. ஸ்கூல் அட்மிஷனுக்குப் போனா அம்மா மட்டுந்தான் என்கிறபோது அந்த அம்மாவையும் ஏத்துக்கமாட்டாங்க. அந்தப் பையனுக்கும் கொடுக்கவேண்டிய ஸ்பேஸ குடுக்கமாட்டாங்க. இப்பிடி ஒரு அவலநிலை இருக்குது. அதனால சிங்கிள் மதர் வைராக்கியமா என்னால முடியும்ன்னு தைரியமா இருந்தாகூட சமுதாயம் வந்து ஒவ்வொரு நாளும் பலவீனப்படுத்திகிட்டே இருக்கு. அதனால அவங்க நொந்துபோறாங்க.

இப்ப என்னையே எடுத்துக்கங்க. நான் தண்ணி பிடிக்க வரிசையில நின்னாகூட நீ தனியாதான இருக்க, உனக்கென்ன அவசரம்ன்னுதான் கேப்பாங்க. நீ வாழத் தகுதியில்லாதவள்னு சொல்லிகிட்டே இருப்பாங்க. ரொம்ப கஷ்டம்.

ஒண்ணு அந்தப் பொண்ணுக்கு பேமிலி பேக்ரவுண்ட், சொந்தபந்தங்கள், நண்பர்கள் அப்புடி யாராவது உதவியா இருந்தாதான் உண்டு. இல்லன்னா அந்தப் பொண்ண, அந்தப் பிள்ளைய வாழமுடியாத பண்றதுக்கு நிறைய நிர்பந்தங்கள பண்ணுவாங்க. ஆனாலும் இருக்குது. அதப்படி நிறைய பேர் வாழ்ந்துகிட்டும் இருக்காங்க. இத வரவேற்கணும். தனி மனுஷியாக இருக்குறது அவங்க பண்ண தப்பு கிடையாது. அவன் விட்டுட்டு போனான்னா என்ன பண்ணமுடியும்? அவன் பின்னாலேயே ஓடணுமா? இந்த சமுதாயம் எந்தமாதிரி இத எதிர்கொள்ளணும்? இப்படி டார்ச்சர் பண்றது ரொம்ப ரொம்ப மோசமான விஷயம்.

ஆனா கிராமத்துல இதல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல. தனி மனுஷியா பிள்ளைகளை படிக்க வச்சி ஆளாக்கிருக்கான்னு அவள பாராட்டுவாங்க.

கல்விப்புல அனுபவத்தை ‘விருட்சங்களாகும் விதைகள்‘ நாவலில் எழுதியிருந்தீர்கள். மேலும் வேறென்ன எழுதியுள்ளீர்கள் அல்லது எழுதப் போகிறீர்கள்?

நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கேன். கல்வி சார்ந்து அந்தப் பிள்ளைகளை வைத்து உண்மைச் சம்பவங்களை எழுதியிருக்கேன். எழுதணும்ன்னா நிறைய எழுதலாம். என்னோட விருட்சங்களாகும் விதைகள் நிறைய போகணும்ன்னு நினைக்கிறேன். மத்த புத்தகங்களல்லாம் பத்தி நினைக்கமாட்டேன். டீச்சர்ல்லாம் இத வாசிக்கணும்.

பிள்ளைகளோட உளவியல், கலாச்சார பின்னணி இதல்லாம் தெரிஞ்சிக்கணும். ஒவ்வொரு குழந்தையோட மனசும் ஒரு பெரிய உலகமா இருக்கு. அந்தக் குழந்தைகளோட உலகத்தைப் பத்தி நாம கவலப்படறதே இல்ல. நம்மளோட அனுபவத்த இதுதான்னு அவங்கள்ட்ட திணிக்கதான் பாக்குறோம். அவங்களுக்கான ஆசைகள், கனவுகள் நிறைய இருக்கு. அவஙக முகத்துலேருந்தே அத நாம பாக்கலாம். அதுக்கு கைடு பண்ணணும். திணிக்கக்கூடாது. இதனால எப்படி வளருணுமோ அப்படி வளராம வேறமாதிரி போயிடுது. ரொம்ப கஷ்டமா இருக்கு.

தாங்களாகவே துணிந்து சுயேச்சையான வாழ்க்கைப் பயணம் உங்களுடையது. இதில் மனநிறைவுடையதாக உணர்கிறீர்களா?

அப்கோர்ஸ், ஆமாம். தவறான நிலைப்பாடாக ஒருநாளும் நான் நினைத்ததில்லை. முப்பத்தஞ்சி வருசத்துக்கு மேல ஆவுது. நிறைய அடிபட்டிருக்கேன். குடும்பத்துனால, ஜாதியினால, வறுமையினால நிறைய பாத்துருக்கேன். ஆனா நாம தனியா இருக்கோம் அப்டின்னு நினைக்கல.

ஆனா என்ன நெனச்சிருக்கேன்னா ஏதாவது அரசு அலுவலகங்களுக்கு போனா கணவன் இல்லன்னா அப்பா இல்லன்னா தம்பின்னு எதாவது உறவு கேட்டுத் துளைக்கிறப்போ எனக்கு கோவம் வரும். எதுக்கு ஒரு ஆண் துணை இருந்தாத்தான் அனுமதின்னு அரசு அதிகாரிகள் பண்றது, அலட்சியமா பாக்குறது இதல்லாம் பாத்தா கோவம் வரும்.

எலக்ஷன் டூட்டி போடுவாங்க. எங்கங்கயோ தேடிக் கண்டுபிடிச்சி போகணும். வேல முடிஞ்சி . நடுராத்திரியில மத்தவங்களல்லாம் யாராவது வந்து கூட்டிட்டு போவாங்க. நான் தனியா நிப்பேன். மனுஷியிலகூட இதப்பத்தி எழுதியிருக்கேன்.

தனியா இருக்கறத பத்தி கவலப்பட்டதில்ல. ஆனா சில நேரங்கள்ல பேருந்துல ஜன்னலோரம் உக்காந்திருந்தா நீங்க தனியாத்தானே இருக்கீங்க அங்க போங்கன்னு சொல்ற நேரத்துல கோபப்பட்டு சண்டை போட்டிருக்கேன். மத்தபடி வேறெதுவும் நெனச்சதுல்ல. ஹேப்பிதான்.

தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் தனித்திருக்க வேண்டிய முடிவை எடுக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது...

அப்படி நிறைய பேர் என்னைப் பார்த்து முடிவெடுத்திருக்கிறார்கள். அவங்க அப்பா அம்மா வந்து உன்னையப் பாத்து கல்யாணம் வேண்டாங்கிறான்னு சொல்லுவாங்க.. எங்களுக்கு புடிச்சவன்னு இல்ல, உனக்குப் புடிச்சங்கள கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுவாங்க.

அப்ப உனக்கு அந்த பையன புடிச்சிருந்தா பண்ணு, உங்க அப்பா அம்மாவுக்கு பிடிச்சவனா இருந்தா பண்ணாதன்னு சொல்லுவேன். அதேபோல சிஸ்டரா போறேன்னு சொன்னா போகாதன்னுதான் சொல்லுவேன்.

உனக்கு அந்த பையன புடிச்சிருக்கு, அவனுக்கு உன்னய புடிச்சிருக்குன்னா தாராளமா கல்யாணம் பண்ணுன்னுதான் சொல்லுவேன். என்னய பாத்துட்டுல்லாம் இருக்காத. இது ரொம்ப கஷ்டமான வாழ்க்கை. நான் வேலை செஞ்சேன். நானே சம்பாதிச்சேன். என்னய பாத்து நீங்க மாத்திக்கக்கூடாது. அது கஷ்டம்,

சிஸ்டரா வந்தவங்க கேட்டாங்க. நாங்க விட்டுட்டு வெளிய வர்றோம்ன்னு. வெளிய வர்றதுன்னா ஒரு வேலையோட வெளிய வா. சாப்பாட்டுக்கு வழி வேணும் அப்டிதான் சொல்லி அனுப்புனேன்.

இதுல இருக்குற சாதக பாதகங்களை சொல்லிவிடுவேன்,.. தானாக நிற்கக்கூடிய வசதி வாய்ப்புகள் வந்தால் பரவாயில்லை. யாரையும் சாராமல் இருக்கக்கூடிய வழியை உண்டாக்கிக்கொள்ளவேண்டும். உறவினர்கள் நண்பர்கள் ஒத்துழைப்பு வேண்டும்.

ஆனால் நிறைய பேர் அப்படி தனியாக இருக்கிறார்கள். கிராமப்புறத்தில் ஒரு மாதிரியாக இருக்கிறது. நகர்ப்புறத்தில் ஒரு மாதிரியாக இருக்கிறது. சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு வாழமுடியும். இப்பல்லாம் வாழ்க்கை ரொம்ப ஈசிங்க.

இருக்க இடம், சாப்பாடு, இயற்கையோட இயைந்த வாழ்க்கை. மலைகள், வானம், பறவைகள் இதோட உறவுகள் வச்சிகிட்டம்ன்னா ரொம்ப எளிமையா வாழ்க்கைய கடந்து போகலாம்.

என் அனுபவத்துல வாழ்க்கை அழகானது, எளிமையானது. நல்லா வாழலாம். கெடுத்துக்கறது நாமதான்.