தமிழகப் பதிப்புலகத்திற்கென்று தனி வரலாறு உள்ளது. விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் எழுச்சியூட்டும் நூல்கள் ஏராளமாகப் பதிப்பிக்கப்பட்டன. பதிப்பகங்கள் என்று உருவெடுப்பதற்கு முன்பு தேசபக்தர்களாக விளங்கும் சிலர் புத்தகங்களை அச்சிட்டுக் கொண்டுவந்துள்ளனர். உலக அளவில் பல துறைகளில் எழுச்சியையும் புரட்சியையும் ஏற்படுத்திய பல நூல்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வரப்பட்டதால், தமிழ் மக்களிடையே உலகக் கண்ணோட்டம் வளர்ந்தது; உலக அரசியல் ஞானம் உதித்தது.
1935 வரை ஆங்கிலேய ஆட்சியின் அடக்குமுறை காரணமாக நாம் நினைக்கிற நூல்களை நாமே வெளியிடும் உரிமையற்றவர்களாக இருந்துள்ளோம். நூல்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற நிலை உருவான பின்னரும் வெளியான பல நூல்கள் ஆங்கிலேய அரசால் தடை செய்யப்பட்டன. அத்தகைய நூல்களை எழுதியவர்கள், மொழிபெயர்த்தவர்கள், பதிப்பித்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்ற பகத்சிங்கின் நூலை மொழிபெயர்த்ததற்காக ஜீவா ஆறுமாதக் காலச் சிறைத் தண்டனையைப் பெற்றது ஓர் உதாரணம். அந்நூலைப் பதிப்பித்த பெரியார் குடும்பத்தினர் மீதும் வழக்கு!
இத்தகைய இருண்ட சூழலைத் தாண்டி இந்திய விடுதலைக்குப் பின்னர் பதிப்புலகம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய பின்னர் தொடங்கப்பட்ட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு இது எழுபத்தைந்தாம் ஆண்டு.
1951 இல் என்.சி.பி.எச் தொடங்கப்பட்டது. இந்நிறுவனத்தைத் தொடங்க முதன் முதலில் சிந்தித்தவர்கள், விதை போட்டவர்கள், செயல்படுத்தியவர்கள், கருத்தாலும், கரத்தாலும் உழைத்தவர்கள், நேரடி – மறைமுகக் காரணமாக விளங்கியவர்கள், ஊக்கப்படுத்தியவர்கள் அனைவரையும் இந்த எழுபத்தைந்தாம் ஆண்டில் எண்ணிப் பார்த்து நன்றி சொல்ல வேண்டியது நமது கடமையாகும்.
தொடக்கம் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கான முக்கியத்துவம் தொடர்ச்சிக்கும் உண்டு. தொடங்கியவர்களின் உயரிய நோக்கங்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அவற்றிற்கு ஊறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல- அடுத்தடுத்த தலைமுறைகளின் கடமை; காலமாறுதலைக் கணக்கிலெடுத்துத் தேவைக்கேற்ற மாறுதல்களைச் செய்து அடிப்படை நோக்கங்களிலிருந்து விலகாமலும் அந்தந்தக் காலகட்டச் சவால்களைத் திறமையாக எதிர்கொண்டும் பதிப்பகத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்வது வழிவந்தோர் கடமையாகும்.
கடந்த கால வரலாற்றை நிகழ்காலத்தில் ஊன்றிப் படித்தால்தான் எதிர்கால வரலாற்றைப் படைக்க முடியும். வழிகள் தோறும் ஏற்பட்ட வலிகளை உளமார உணர்ந்தவர்கள் மட்டுமே அடுத்தடுத்து வழிகாட்டத் தகுதி பெற்றவர்கள் ஆகிறார்கள்.
என்.சி.பி.எச்.சின் எழுபத்தைந்தாம் ஆண்டை முன்னிட்டு, பதிப்புலகில் இப்பேரமைப்பின் வரலாற்று வழித்தடங்களை இந்நிறுவனம் தொடர்புள்ள அனைவரும் முழுமையாக உணர்வது முழுமுதல் தேவையாகும். அறிவது, தெரிவது, புரிவது என்பதோடு உணர்வது என்பது நான்காம் நிலை.
விரைவில் என்,சி.பி,எச்.சின் பவளவிழா சென்னையில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்த எழுச்சியுடன் நடைபெறவுள்ளது. அவ்விழா அர்த்த அடர்த்தி மிக்கதாக அமைக்கப்படவுள்ளது.
என்.சி.பி.எச்.சின் முக்கால் நூற்றாண்டு காலப் பதிப்புலகப் பங்களிப்பை ஆய்வு நோக்கிலும், வரலாற்றுப் பார்வையிலும் ஆவணப்படுத்தும் விதத்தில் பவளவிழாச் சிறப்பு மலரொன்று விழா மேடையில் வெளியிடப்படவுள்ளது.
சோவியத் யூனியனில் ஏற்பட்ட அரசியல் பின்னடைவு எத்தனையோ நாடுகளில் எத்தனையோ பின்னடைவுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்து விட்டது.
எண்ணற்ற தரமான தமிழ் நூல்களை மாஸ்கோவில் அரிதின் முயன்று அச்சடித்து மிகவும் மலிவு விலையில் தந்துவந்தனர். அவற்றைச் சிரமேற்கொண்டு தமிழ் மக்களிடையே எடுத்துச் செல்வதை என்.சி.பி.எச். கடமையாகக் கருதிச் செயல்பட்டு வந்தது. அரசியல் நூல்கள் மட்டுமல்ல அறிவியல் நூல்கள், இலக்கிய நூல்கள் சிறார் இலக்கியம், வரலாற்று நூல்கள் என வகைமைகள் பல; தமிழ்மொழியில் மட்டுமல்ல; இந்தியாவின் பிற மொழிகளிலும் மாஸ்கோ பதிப்பகங்கள் நூல்களை வெளியிட்டுத் தந்தன. ஏன்... உலகின் பல மொழிகளுக்கு இச்சேவையை மனங்குளிரச் செய்து வந்தன மாஸ்கோ பதிப்பகங்கள்.
சோவியத் நாட்டில் தமிழ்ப் பதிப்புகள் நின்ற பின்னர் என்.சி.பி.எச்சிற்குப் பின்னடைவு ஏற்படாமல் தடுத்தாற் கொண்டதோடு, அத்தகைய நூல்கள் பலவற்றை நம் மண்ணிலேயே அச்சிட்டு தனது வரலாற்றுக் கடமையை செவ்வனே நிறைவேற்றி, அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னோக்கிப் பயணித்தது என்.சி.பி.எச்.
கடந்தகால வரலாற்றைக் கற்பது மட்டுமல்லாமல், நிகழ்கால நிலை நிறுத்தலும், எதிர்கால ஏற்றமிகு வளர்ச்சியும் அதற்காகச் சிந்திப்பதும் செயல்படுதலும் பதிப்பகத்தின் முன்நிற்கும் முக்கியக் கடமையாகும்.
என்.சி.பி.எச். பவளவிழா ஒரு பதிப்பத்தின் நிகழ்ச்சி மட்டுமல்ல, எதிர்காலத் தமிழகத்தை ஏற்றமுறச் செய்ய ஒரு பதிப்பகம் தனது பங்களிப்பைப் பற்றி சமூக நோக்கோடு சேர்ந்து சிந்திக்கும் நன்நாளும் கூட!
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு