Vairamuthu 255“சீலக் கவிக்குலத்தீர்
சிறு குயில் நான் பாடுகிறேன்
ஆலயத்து வாசலிலே
அமாவாசை நிலவானேன்“

48 வருடங்களுக்கு முன்பு கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கவிதை வரி பள்ளத்திலிருந்து மேடேருவது என்பது ஊர்ந்தும். நடந்தும், ஓடியும், பறந்தும் செல்லலாம்.

அந்தந்த வேகத்திற்கேற்ப வாழ்க்கை அமையும் என்கிற தன்முனைப்பு தத்துவத்தை கற்றுத்தருவது தான் கவிப்பேரரசு வைரமுத்துவின் வாழ்க்கைச் சூத்திரம்.

1980 ல் முதல் பாட்டில் ‘ஒரு பொன்மாலை பொழுது’ என்று எழுத எவ்வளவு அக்கரை எடுத்துக் கொண்டாரோ அதே அக்கரையில் இன்றும் சுதி மாறாத சுறுசுறுப்புடன் திரைகளைத்து ஆகச்சிறந்த பாடல்களை இன்னும் யாத்துக் கொண்டு இருப்பவராக திகழ்கிறார்.

7 முறை தேசிய விருது என்பதெல்லாம் தேநீர் குடித்த பொழுதுகளை கடப்பது போல சர்வ சாதாரணமாக கடந்து போய் எழுத்துப்பணி இருப்பில் பழையபடி கடும் உழைப்பில் பயணிக்கும் வாழ்வியலைக் கொண்டவராகவே கவிஞர் வைரமுத்து விளங்குகிறார்.

சிறு வயதிலேயே தன் சொந்தஊரில் கள்ளிக்காட்டில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்த போது அந்த மாடுகள் நுனிப்புல் மேய்ந்துக் கொண்டு இருக்கும் போது புத்தகத்தோடு போய் தமிழின் வேர் வரை மேய்ந்தவன் நான் என கூறும் கவிஞர் வைரமுத்துவின் 20 வயதுக்குள் எழுதிய கவிதைகளை மட்டும் சிந்திப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

1970-73 வரையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை தமிழ் மாணவனாக தன் மாமா மோகன் உதவியுடன் சென்னையிலே வாழ்க்கையை தொடங்கினார். 20 வயதிற்குள்ளாகவே “வைகறை மேகங்கள்” என்ற தொகுப்பிலுள்ள கவிதைகளையும் “என் பழைய பனை ஓலைகள்” என்ற தொகுப்பிலுள்ள கவிதைகளையும் எழுதி முடித்துள்ளார்.

இதில் என்ன சிறப்பென்றால் அனைத்து கவிதைகளும் மரபு கவிதைகளால் ஆனது. அறுசீர் கழிநெடிலடி, ஆசிரியப்பா, விருத்தப்பா, கலிப்பா,வெண்பா போன்ற பா வடிவங்களில் சிறு வயதிலேயே இலக்கிய கம்பை சுற்றுபவராகத் தெரிகிறார்.

கவிஞன் எழுத தொடங்கும் போதே ஞானியைப்போல் எழுதுவது அரிதான ஒன்றாகும். குழந்தைகளைப்பற்றி காலாகாலமாக கவிதைகள் வந்திருந்தாலும் இளைஞன் வைரமுத்துவின் வரி மெய்சிலிர்க்க வைக்கிறது.

“தசை பள்ளத்து சாம்பல் தத்துவம்
இசை வெள்ளத்தால் எழுதிய சித்திரம்”

என்று பேசுவது வயதுக்கு மீறிய அடர் சிந்தனையாகும். அந்த கவிதையுடைய இறுதிவரி ஒரு குழந்தையின் பிறப்பு மரணத்தின் சேமிப்பு கணக்கில் ஒன்று கூடுவதாக அதிர்ச்சியூட்டும்.

சிலப்பதிகார கதைத் தலைவி கண்ணகியைக் காப்பிய புலவன் உட்பட சுவைஞர்கள் யாரும் போற்றி பாராட்டுவதையே தொன்று தொட்டு நிகழ்ந்து வந்த கதை. கண்ணகி காப்பியப் பாத்திரத்தில் இருக்கிற பெண்ணிய பிற்போக்குத் தனத்தை சாடுகிற ஒரு நீள் கவிதையை வைகறை மேகத்தில் ஒரு குறுங்காவியமாகவே எழுதியிருப்பார்.

ஒரு பண்பாட்டு மனோபாவத்தை கட்டமைக்கிற ஆர்வம் இளைஞன் வைரமுத்துக்கு இருந்தாலொழிய இப்படியெல்லாம் எழுதமுடியாது. அதனால் தான் தன் முதல் நூலான ‘வைகறை மேகங்கள்’ என்ற கவிதைத் தொகுப்பு படிக்கிற காலத்திலேயே பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டது.

இயற்கையின் மீது பேரார்வம் மேலிடும் போக்கு கவிதையில் தெரிகிறது.

“சித்திரப்பூக்கள் செம்பலா ஈக்கள்
நித்தில வீதியில் நிலவுக்கன்னி
அறுத்துப்போட்ட ஆரச்சிதறல்
வறுமை வானம் வடித்த கண்ணீர்
எந்த கண்ணகி எதை உடைத்தாளோ
இந்த பரல்கள் எப்படி வந்தன”

என்று எழுத்தில் தேர்ந்த கவிஞனைப் போல் இளங்கவிஞன் வைரமுத்து எழுதுகிறார்.

பெரும்பாலான கவிதையில் காதல் கவிதைகளாக இருக்கின்றன. அந்தந்த வயதின் உணர்ச்சியை அப்படியே பதிவுசெய்யும் பொருட்டு கவிதைகளாக மலர்ந்திருக்கின்றன.

“உச்சிமுதல் பாதம் வரை அச்சடித்த முத்தத்தில்
கச்சழகில் சரிபாதி பதியும்- இந்த
சச்சரவைக் கண்டு வெட்கிப் பச்சைமுகில் ஆடைகொண்டு
தன்விழியை மூடிவிடும் மதியும்”

என்று காதலின் நுட்பமான ஒரு பண்பாட்டு அசைவை ஒரு ஒளிப்பட காரனைப்போல இளங்கவி வைரமுத்து பதிவு செய்திருக்கிறார். காதல் உணர்ச்சி இயல்பாகவே மேலோங்கும் பதின்பருவத்தில் என்றாலும் காதல் விழுமியத்தை இலக்கியத் தரத்தின் அச்சரத்தோடு வெளிப்படுத்துவது மிகவும் சுவைக்கத் தக்கனவாய் உள்ளது.

“வெண்பா நீ எந்தன் மூச்சை
முச்சீராய் கொண்டே நீ முடிவாய்”

“உருபுக்கும் மயக்கம் உண்டு உன்றன்
முதிராத உறுப்புக்கும் மயக்கம் உண்டு”

“ஆகுபெயர் போல் எனக்கே
ஆகிவிட்டாய்”

அடிபிறழா வஞ்சிப்பா நீதான் கண்ணே”

தமிழின் இலக்கணக் கூறுகளை காதலோடு பொருத்தி காதல் கவி யாத்ததை கவிதைத் தொழிற்படலின் செய்நேர்த்தி என்றே புரிந்துக் கொள்ளலாம். இன்னும் சீர், அசை, தொடை, வினைத்தொகை, தொகை விகுதி, உயிர்மெய் என இலக்கண கூறுகள் காதல் உணர்ச்சிக்குப் பொருந்தி நிற்பதுபோல் இலக்கணக் காதலைப் பாடுகிறார்.

“முற்றெதுகைப் போலிருக்கும் மோகப் பாட்டே
கற்றவர்கள் சொன்னார்கள் தம்பி நல்ல
காரிகையைப் புரட்டிப்பார்”

என சிலேடையில் தமிழ்ப் பெருமையும் காதல் உணர்ச்சியும் ஒரே மையப்புள்ளியில் நிறுத்தி கவிதையை பிரமாண்டப்படுத்துகிறார் கவிஞர்.

கட்டுரைத் தொகுப்பு, கவிதைப்புதினம்,புதினம், தன்வரலாறு, மொழிபெயர்ப்பு, பயணநூல், சிறுகதைத் தொகுப்பு, தன் முனைப்புக் கட்டுரை நூல்கள், திரைப்பாடல் எழுதிய அனுபவக் குறிப்பு நூல், கவிதையில் வரலாற்று நூல், திரைப்பாடல் தொகுப்பு என தமிழின் பன்முக வடிவ நூல்களாக 35 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியவர் கவிஞர் வைரமுத்து இளம் பருவத்திலேயே சமூகத்தின் ஓட்டையை, அவலத்தை சரியாக தவறாமல் குறிப்பிடுகிறார்.

"போக்கிடம் இழந்து புழு மண் புரளும்
சாக்கடை நதிகள் சங்கமிக்கின்ற
பாலைவனமே பாவத்தழும்பே
ஓலைக்கிடங்கே ஓவியப்பிழையே"

என்று சேரியை வருணனை செய்து குமுற முடிகிறது இளங்கவிஞனால்.

"அந்த மெழுகுவர்த்தி அணைந்து விடட்டும்" என்ற கவிதையில்
"பகலுரங்கும் ஓரிரவில் பனிமென்மைப் பஞ்சணையில்
அகல்விளக்கின் வெளிச்சத்தில் அவள் ஆவி துடிக்கிறது"

என்று தொடங்கும் கவிதையில் விலைமாதர்களின் கண்ணீர் வாழ்வு குறித்து பேசுகிறது கவிதை

ஆண்களைக் குற்றஞ்சாட்டி பெண்ணிய ஏந்தல் உணர்வில் அவர்களுக்கான ஜீவாதார நிழல் பரப்பும் கருணை கவிதை முழுக்க நிரம்பி இருப்பதைப் பார்க்கலாம்

"சந்தனக் காற் கட்டிலிலே சந்தனத்தேன் மணம் பொழிந்த
மந்திரப்பூ விழியடியில் மரண நிழல் படிகிறது"

என்று இருபது வயதிற்கு முன்பே எழுத முடியுமா என்பது பெருவியப்புடன் சிந்திக்க வேண்டியுள்ளது. விருதுகள் கவிஞர் வைரமுத்துவின் விலாசம் தேடி அலைவதற்கு காரணம் எழுத்து வல்லமையில் சிறு வயதிலிருந்தே எழுதிக் கொண்டிருப்பதால் வீரிய வடிவம் பெற்று தன் படைப்புகள் யாவும் வல்லமை பெற்றவைகளாக மாறுகின்றன.

இதனால் விருதுகள் வீடுதேடி வருவதை பெரும்பாலான தமிழ் சூழல் படைப்பாளிகள் மனக்குழப்பம் அடைந்து தெளிவற்று குழம்பி பலகீனம் அடைகிறார்கள். உழைப்பின் நீண்ட நெடிய மைல் கல்லை தாண்டி வந்து பயணிப்பவர்கள் முன்னால் இது தவிர்க்க முடியாததாகி நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறது.

தேசப்பற்றில் இளைஞர் வைரமுத்துவின் கருத்துப் போக்கு நோக்கத்தக்கது. 1971இல் இந்தியா பாகிஸ்தான் போர் நடந்த போது இந்திய ஒன்றியத்திற்கான வீர உசுப்பலை தன் கவிதைக் குரலாய் வெளிப்படுத்துகிறார்

"அரக்கரைப் போரில் வீழ்த்தி
அன்னவர் நரம்பெடுத்து
சரஞ்சரமாக்கி நல்ல
சங்கிலி செய்து கட்டித்
தரதரவென்றிழுத்து
தாயகம் கொண்டுவந்தே
அரங்கினில் நிறுத்த வேண்டும்
அகதிகள் சிரிக்க வேண்டும்"

என வெகுண்டெழுந்த உணர்ச்சியில் கவிதை பாடுகிறார் இளங்கலை இலக்கியம் படிக்கும் மாணவர் வைரமுத்து.

பொருள் பொதிந்த கவிதை ஆக்கம் முதற் தொகுப்பு இரண்டாம் தொகுப்பிலேயே அமைவது எல்லா புகழ்பெற்ற கவிஞர்களுக்கும் வாய்ப்பதில்லை.

தன் முன்னோடிக் கவிஞனான மகாகவி பாரதியை உள்ளூர உணர்ந்து போற்றி கொண்டாடுகிறார் கவிஞர். கவிராஜன் கதை என்ற வரலாற்று கவிதை நூல் ஆக்கம் என்பது மாணவப் பருவத்திலேயே கிளர்ந்துள்ளது என்பது தெரிய வருகிறது.

அவலச்சுவையைப் பாடி இழப்பின் சுவையை இலக்கியமாக்குவது சங்க காலத்திலிருந்து தொடர்ந்து வருகிற தமிழ் மரபாகும் உலக இலக்கியங்களில் கையறுநிலை கவிதைகளுக்கு தனித்த இடம் உண்டு.

அறிஞர் அண்ணா இறந்தபோது எழுதிய இரங்கற்பாவை இன்று படித்தாலும் துயரம் சொட்டுகிறது.

"கல்லறை வாசலே கதவுகள் திறநீ
பல்லவன் மேனியைப் பார்க்கப்போகிறேன்
ஒரு முறை அன்னவன் உருவம் பார்த்த பின்
குருடனாகவும் கோடி சம்மதம்
கண்டதும் அண்ணனின் காலடிப் பூவில்
என்னையே மாலையாய் இடப்போகின்றேன்"

என்று நான்கடி இமயம் என்ற தலைப்பில் இளைஞர் வைரமுத்து உயிர் உருகப் பாடுகிறார்

விடுதலை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மறைவு குறித்து தமிழில் நிறைய இரங்கற்பா எழுந்தது. கவியரசர்கண்ணதாசன் கூட சாவே உனக்கு ஒருநாள் சாவு வராதா எனக் கதறியிருப்பார்.

நமது மாணவக்கவி வைரமுத்து 14.11.1973 அன்று நேருவின் 85 ஆம் ஆண்டு பிறந்த நாளில் நடந்த அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான கவிதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற கவிதையாக தேர்வு பெற்றது.

படிக்கிற காலத்திலேயே 70 க்கும் மேற்பட்ட முதற்பரிசுகளை பெற்றிருக்கிறார் வைரமுத்து என்பது குறிப்பிடத்தக்கது. நேரு பற்றிய அந்த இரங்கல் கவிதையில்

"அழிந்ததம்மா கவி வானம் அதனால் நாங்கள்
அதனின்று உதிர்ந்து விட்ட விண்மீன். ஆனோம்
விழி விளக்கை கண்ணீரால் அணைத்தோம் நாங்கள்
விரல்களையே இழந்துவிட்ட நகங்கள். ஆனோம்"

என்று பாடுகிறார்.

மகாகவி பாரதியைப் பற்றி கவிப் பேரரசு வைரமுத்து இப்படிச் சொல்வார்

"கவிதை போல கவிதை எழுதி தன்னை கவிஞன் என்று சொல்லச் சொல்பவன் அல்ல பாரதி கவிஞனாகப் பிறந்ததனால் கவிதை எழுதியவன் பாரதி" இந்த சொல் கவிபேரரசு வைரமுத்து அவர்களுக்கும் மெத்தப் பொருந்தும்.

- முனைவர் அகவி