ஒப்பற்ற இலக்கியவாணர் உள்ளங்களில் ஊஞ்சலிட்டுச் சீராட்டப்படும் மணித்தமிழ் மாமனிதர் சொல்வேந்தர் ஒளவை நடராசன் அவர்களின் அணிந்துரைகள் அடங்கிய நூல். “ஒளவையின் தமிழமுது” படிக்கப் படிக்கத் தெவிட்டாமல் இனிக்கிறது.
அறிவுச் செய்திகளைத் தாங்கிய அருமைப் பேழையாக இலங்குகிறது. இலக்கியத் தரம் மிக்க அணிந்துரைகளைத் தேர்ந்தெடுத்து அழகுறத் தொகுத்து வழங்கியிருக்கிறார் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஒளவை அருள்.
இலக்கியத்தில் பன்முகப் பெட்டகமாக விளங்கிப் பளிங்கொளி வீசிய பல்கலைத் துணைவேந்தர் ஒளவை நடராசன் அவர்கள் அவிரொளித் தமிழ் பொழியும் ஆகச்சிறந்த அருந்தமிழ் ஆர்வலர். அடுக்குச் சொற்களால் அருந்தமிழமுது சொரியும் நாவலர். அருந்தமிழ்ப் படைப்புகள் அனைத்தையும் பயின்று பயின்று அருங்கனியாய் முற்றியவர்; வகித்த பதவிகளிலெல்லாம் வெற்றிகளையே பற்றியவர். தானே ஒரு முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட பல்கலைக்கழகமாக நிலைத்தவர். தன்னிகரற்ற தனித்தன்மை கொண்டு தவறிலாத் தமிழியக்கமாகத் தழைத்தவர்.
சொல்வேந்தர் ஒளவை நடராசன் அவர்கள் அவையேறும்போது அரங்கமே ஆர்ப்பரிக்கும் நாட்கள் இன்றும் நினைவலைகளில் நிழலாடுகின்றன. அரங்க அமைதிக்குள் ஒலிபெருக்கியும் நெகிழும் வண்ணம் அன்று அவர் பொழிந்தவை இன்று நினைத்தாலும் செவிகளுக்குள் குழலூதுகின்றன. சுவை குன்றாத் தமிழ்மொழியில் சொற்பொழிவாற்றி வனப்பொடு வாழ்ந்தவர் சொல்வேந்தர். எந்த வகை அவையிலும் அவரே கோலோச்சும் தார்வேந்தர். சொல்வல்லர் என்று பேர்பெற்றுச் சொல்வல்லளாகத் திகழ்ந்தவர். அயன்மையான அரங்காயினும் - நயன்மைமிக்க நற்றமிழால் நலம் பரப்புபவர்.
செந்தமிழ் வேழமாய் மேடையில் நடந்து சென்று சிறப்புரை நிகழ்த்தும் அவரது சொற்பொழிவின் சொல்லாழம் கண்டு சொல்லேர் உழவர்களே சொக்குவதுண்டு. யானும் சொல்வேந்தரின் இனிய தமிழ்மலர்த் தேனைச் சுவைத்து மயங்கிய வண்டு. அமிழ்து பொழிவது போலும் தமிழ் பொழியும் அந்த மணித்துளிகள் அவையோரை மயக்கு நிலைக்குத் தள்ளுபவை. ஒவ்வொரு சொல்லும் கேட்போர் உள்ளத்தில் காவிரிக் கெண்டைகளாத் துள்ளுபவை.
சொல்வேந்தர் என்றும் திருவள்ளுவர் வலியுறுத்திய “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்” என்பதைக் கொள்கையாக வரித்தவர். எண்ணிய எண்ணியாங்கு எய்துவதையே நோக்கம் என்று நெஞ்சத்தில் தரித்தவர். வினைத் திட்பங்களுக்கேற்ற மனத்திட்பம் கொண்டவர். முயற்சிகளைத் திருவினையாக்கி வென்றவர்.
இவருக்கான செழிப்புமிக்க உடைமைகள் பலவாறாக இருந்த போதிலும் இவர் தனது தலையாய உடைமையாகக் கருதியது ஊக்கமுடைமையை. அவர் கவனம் சிதறாமல் எண்ணுவது அன்றாடம் தமிழ்வளர்ப்புக் கடமையை. அவரது ஊக்கமும் உலையா முயற்சியும் அவரை இலக்கிய உச்சத்தில் இருத்தியுள்ளன. உயிர்ப்பான சொற்பொழிவாற்றுவதில் ஒய்யார உயரத்தில் நிறுத்தியுள்ளன.
ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அறிவுத் தேடலுக்கான வேட்கையில் இவர் இளையவர்களை அணுகுவதற்கும் தயங்கியதில்லை. பிறரது இலக்கிய ஐயங்களுக்கு உடனுக்குடன் விளக்கங்கள் தந்து தந்து அவர் தளர்ந்ததுமில்லை. அவரே ஒரு இலக்கிய மேரு. அவரது தேடலின் தடத்தில் நானும் அவரது இலக்கியத் தீர்வுகளுக்காக அணுகப்பட்டதும் நான் பெற்ற பெரும்பேறு.
குணக்குன்றென விளங்கிய குறிஞ்சிப் புலவர் கபிலர் கூறியதுபோல் “நின்ற சொல்லர்; நீடு தோன்றினியர்” என்று போற்றப்பட்டவர். வாழ்வாங்கு வாழ்ந்து சென்ற வலிமையான வண்ணத்தமிழ்வாணர் என்று சாற்றப்பட்டவர். சொல்வேந்தர் ஒளவை நடராசன் அவர்கள் ஓர் ஆகச்சிறந்த அறிவுத் தொழிற்சாலை!
கவிதை, கதை, கட்டுரை, நாடகம், பண்ணிசை, ஓவியக்கலை என பலவகையிலும் மின்னிய கற்பனைச் சோலை. இலக்கணம் பிறழா இலக்கியம் போலும் வாழ்ந்த இனியவர். அவர்போலும் அழகியல் பொழிந்து நிற்கத் தக்கோர் இனியெவர்?.
கட்டு முல்லைகளை இட்டுத் தொடுத்த கதம்ப மாலைகளின் தொகுப்பாகத் திகழ்கிறது இந்நூல். சார்பு செய்து வாழுதல் பிணி, கோடாமையே சான்றோர்க்கு அணி என்ற தெய்வப்புலவர் கூற்றுக்கேற்ப நூலாசிரியர்களை மேம்படுத்தும் செம்மனத்தோடு சீர்தூக்கி அணிந்துரைகளை அள்ளி வழங்கியுள்ளார். நான் உணர்ந்தவரை, சிறந்த அணிந்துரை எழுதுவதற்கென்று இலக்கணம் வகுத்துள்ளார்.
அணிந்துரைகளில் இவர் கையாளும் முறையே ஒரு தனிப்பாங்கு. படைப்பாளர்களைத் தனது பனிமொழிகளால் பாராட்டி ஊக்கப்படுத்துவதற்கு இவர் நிகரற்றவர் என்பதற்கு இந்நூல் ஒரு தக்க சான்று. அணிந்துரைகளுக்கு முன்னோட்டமாக வழங்கப்பட்டுள்ள முன்னுரைகளே எண்ணற்ற அரிய செய்திகளைத் தருகின்றன. அவற்றிலேயே இவரது ஆளுமைமிக்க அணுகுமுறைகள் தெரிகின்றன. புலமைமிக்க புத்தகம் கிடைத்துவிட்டால் புத்தொளி தெறிக்கும் ஒரு புகழாரமே சூட்டி விடுவார். தன்னெதிரில் நூலாசிரியர் தோன்றிவிட்டால் ஒரு தமிழாரமே தந்து விடுவார்.
அணிந்துரைகளில் வெளிப்படும் செறிவான கருத்துகள் வாசகரை அறிவின்பம் பெற வைப்பவை. விழையும் விழுமிய பயன்களை நல்கி நெஞ்சத்தில் தைப்பவை. மொழிநலம் போற்றுவன, தமிழர் வரலாறுகளைச் சாற்றுவன, மூட எண்ணங்களைத் தூற்றுவன, திருக்குறள் உரைவளம் கூறுவன, காப்பிய எழில்வளம் குறிப்பன, இலக்கிய வளங்களை விலக்கிக் காட்டுவன, இலக்கணச் செழுமைகளை விரித்துச் சுட்டுவன எனப்பலத் திறனுரைகள். இடையிடையே இனிப்பவை, குறள் வரிகளால் சுட்டிக் காட்டப்படும் அறவுரைகள். சொல்வேந்தரின் அணிந்துரைகள் அத்தனையும் அமுதுரைகள்.
இந்த நூலில் உள்ள அணிந்துரைகளைப் படிக்கும்போது “இவருக்குத் தெரியாததுதான் என்ன?” என்று வியப்பால் விழிகள் விரிகின்றன. சங்க இலக்கியங்கள், இலக்கணங்கள், முடிமன்னர் வரலாறுகள், மொழி ஆய்வுகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருக்குறள், காப்பியங்கள், சமய நூல்கள், சிறுகதைகள், புதினங்கள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், உரைவீச்சுகள், நாடகங்கள், நாட்டுப்புறப் பாடல்கள், வழக்காற்றுக் கதைகள், நவீன இலக்கியங்கள், மருத்துவம் என இவர் அணிந்துரைகள் வழங்காத துறைகளே இல்லை.
ஒவ்வொன்றும் ஒரு நறுமண முல்லை. சொல்வேந்தரின் அறிவுப்பரப்புக்கு இல்லையொரு எல்லை. எத்தகைய நூலாயினும் அந்த நூலின் தன்மையை நுட்பமாக எடுத்துரைக்கும் திறம் இவர்க்குக் கைவந்த கலை. மனத்தை மயக்கும் இவரது மந்திரச் சொற்களுக்கு இல்லையொரு விலை.
நூலாசிரியர் சார்ந்த துறையையும் அணிந்துரைக்குள் வைத்துச் சொற்சிலம்பம் செய்யும் வித்தகம் பல இடங்களில் பளிச்சிடுகின்றன. கவிதை நூல்கள் எனில் அவற்றுள் விரவிய கலைநயச் சொற்கள், கற்பனைச் செழுமை, யாப்பமைதி, ஓசை நயங்கள், வடிவங்கள், படிமங்கள், தொடுப்பு என இவர் விளக்கும் பல்வேறு விழுமியங்கள் படிப்போர் நெஞ்சில் வெளிச்சமிடுகின்றன. மரபுக்கவிதைகள் எனில் அவற்றின் இலக்கண மாட்சியை எடுத்துக் காட்டுகிறார். புதுக்கவிதைகளில் உள்ள புத்தாக்கம், பொதுச்சிறப்புகள், சொற்செட்டுகள், கருத்து நறுக்குகள் எனக் கண்டெடுத்துப் பாராட்டிப் புதுமை கூட்டுகிறார்.
செந்தமிழுணர்வை ஊக்கும் செப்பமிகு சொல்லாட்சி, கவிதைகளின் கட்டமைப்பு, ஒவ்வொரு நூலாசிரியரின் கருத்தியலிலும் ஆழம் சென்று தன்னுடைய அறிவாற்றல் மிக்க எண்ணங்களைப் பதிவு செய்யும் பாங்கில் அவரது கவிதைப் புலமையை காண முடிகிறது. நூல்களில் பொதிந்த புதுமைகள், புலமை வளங்கள், கருத்துச் செறிவுகள், கற்பனை நயங்கள் என அனைத்தையும் கல்லியெடுத்துச் சொல்லியடிக்கிறார்.
நல்ல நூல்கள் கைவரப்பெற்றதில் நெகிழ்ந்து நவில்தொறும் நவில்தொறும் இன்பம் பொங்கி முகமலர்கிறார். நசை மிகுத்து அணிந்துரைகளில் ஆனந்த முரசடிக்கிறது இவரது எழுதுகோல். அறிந்தவர் அறியாதவர் என்று பாகுபாடின்றி நூலுக்கேற்றபடிச் சமன்சீர் செய்து திறனுரைப்பதில் இவரொரு துலாக்கோல். பகட்டான நூல்களுக்கும் பட்டாடை அணிவித்துப் புகழாரம் சூட்டி இனியவை கூறலில் இவருக்கு நிகர் இவரே. நுட்பமான நூல்களில் உள்ளவற்றை மனமுவந்து பாராட்டுவார் எனினும் இலக்கிய வரையறைகளுக்கு இம்மியும் ஒவ்வாத கருத்தோட்டங்களையும் கண்ணியமாக மறுத்துக் கூறும் மயிலிறகு வருடல்களையும் காண முடிகிறது.
புத்தகத்தின் தன்மைக்கேற்ப அணிந்துரையைப் பெருமளவு விரிக்காமல் சுருக்கமாகச் சிறப்பாகத் தந்து விடுவதில் இவருடைய மதியூகத்தை உணர முடிகிறது. நூலாசிரியரின் எழுத்துப் பெருமைகளை மட்டுமே சுற்றி வந்து முடிப்பதையும் காண முடிகிறது. நுண்ணிய நூல்பல கற்று நூல்களைப் படித்து நூலெழுதினாலும் உண்மை அறிவே மிகும் என்பதை வாசிப்போர் உணரும் வகையில் சுட்டிக் காட்டவும் அவர் தவறவில்லை.
மெச்சத்தகுந்த நூல்களின் அணிந்துரைகளில் நூலாசிரியரை மேலோங்க வாழ்த்தவும் இவர் தயங்கவில்லை. தகுதி சான்ற நூலாசிரியர்களை இவர் தலைமேல் தாங்கிப் போற்றவும் தவிர்க்கவில்லை. ஒவ்வொரு கருத்தியலை அலசும்போதும் பல அறிவுச் செல்வங்களை அள்ளித் தெளிக்கிறார். அறிவு சார்ந்த நூல்களில் அகம்பூத்துக் களிக்கிறார். கைக்கு வந்த நூலின் சிறப்பால் கரை கடந்த மகிழ்வில் இவர் திளைக்கும்போது வெளிப்படுத்தும் கவித்துவமான வரிகள் படிப்போரையும் நூல் வாசிப்புக்குள் நுழைய உந்துவன. படைப்பாளரை மேலும் படைக்க ஊக்குவன. ஒவ்வொரு வகைப்பாட்டின் நூலுக்கேற்ப தனது எழுதுகோலை மாற்றிக் கொள்வது கலை. இவரிடம் பெறும் பாராட்டுக்கு இல்லையொரு விலை.
பல்வேறு வரலாற்று நூல்கள், செவ்வியல் இலக்கியங்கள், மொழி வளர்ச்சி தொடர்பான நூல்களுக்கு கூரிய ஆய்வுநோக்கு மிக்க கருத்தோட்டங்களைப் பதிவு செய்திருப்பது அவரது படிப்பாற்றலையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நூலறிவு மிகுதியால் இவரை அறியாமலே தனது அறிவுக் குவைக்குள் இருக்கும் கருத்துகளை படரவிடுகிறார். பரந்துபட்ட பட்டறிவால் பல்சுவைக் கூற்றுகளால் பந்தலிடுகிறார். தூயநீர் போலும் துலக்கமான சொல்லமைப்புகள்; தேர்ந்த கைவினைஞரைப் போலும் துல்லியமான முன்வைப்புகள்.
மனத்துள் எண்ணினாலே மகிழும் உணர்வுதரும் மகிழம்பூப் போலும் வரிகள்; தாழம்பூப் போலும் தழைத்து மணக்கும் சொல்வார்ப்புகள். கடினமான இரும்பினைக் காய்ச்சித் தகடாகவும் அடிக்கலாம்; கம்பியாகவும் நீட்டலாம் என்ற அறிவியல் தேற்றத்திற்கேற்ப கடின இலக்கியங்களையும் இளக்கித் தருகிறார்.
தமிழுக்குரிய வரிவடிவ எழுத்துகள் வட்டெழுத்துகள் என்பதற்கு தனது விளக்கங்கள் வழி முடிபுகளை முன்வைத்திருப்பது சிறப்பு. தமிழ்மொழி வரலாற்றை உற்றுநோக்கி எழுத்து ஆராய்ச்சி செய்து பதிவு செய்துள்ள கட்டுரைக் குறிப்புகள் மொழி ஆய்வாளர்களுக்குப் பயன்தரக் கூடியவை.
புதியனவற்றை வரவேற்பதிலும் போற்றுவதிலும் அவர் எவ்வகையிலும் தயக்கம் காட்டியதில்லை என்பதற்கு ஓர் சான்று, எனது சிலப்பதிகார வார்ப்புரை நூலுக்கு அவர் தந்த அணிந்துரையில், “ இன்றைய வாசிப்புக்கேற்ப சிலம்புக்குத் தாங்கள் எளிய உரை கொணர்ந்திருப்பது கண்டு அகமகிழ்கிறேன் ” என்று குறிப்பிடுவதில் புதிய தலைமுறைக்கேற்ப தன்னை வடிவம் மாற்றிக் கொள்ளும் ஒப்பற்ற தன்மையைக் காண முடிகிறது.
சமய நூல்களுக்குத் தந்துள்ள அணிந்துரைகளிலும் இவரது ஆழமான சமய நோக்குகளை முன்வைக்கிறார். பல்வேறு ஆளுமைகளின் கருத்தோட்டங்களிலிருந்து மேற்கோள்களைத் தந்து அணிந்துரைகளுக்கு வலிமை சேர்க்கிறார். இறைவன் திருவடியைப் புகழவரும் சொல்வேந்தர், பதம் என்ற சொல்லின் வேர்ச்சொல், கிளைச்சொற்கள் என்று விரிந்து விளக்கிச் செல்வதில் நூலுக்கு வலு சேர்ந்து விடுகிறது.
ஒப்பில்லா உரைவேந்தரின் அரும்புதல்வனாக உரைநூல்களில் உள்ள அனைத்து உரை நலங்களையும் உவந்து முன்வைத்திருப்பதில் தான் கற்றவை யாவும் யாவருக்கும் பயன்தர வேண்டுமெனும் வேட்கையைக் காட்டுகிறார். புதிய உரைநூல்களுக்கும் பண்டைய உரையாசிரியர்களான நச்சினார்க்கினியர், அடியார்க்கு நல்லார், அரும்பத உரையாசிரியர், ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்றோரின் விளக்கங்களையும் சுட்டி நூலுக்கு மேலும் சிறப்புக் கூட்டுகிறார்.
ஒவ்வொரு நூலிலும் உள்ள சிறப்பியல்புகளை இலக்கியச் சான்றுகளோடும் விளக்கங்களோடும் எடுத்துக்காட்டி நூலாசிரியரையும் மனமுவந்து பாராட்டுவதில் அவரது இனிய பண்பினைப் பார்க்க முடிகிறது. உதாரணமாக, சிலப்பதிகார உரைநூலுக்கு அணிந்துரை வழங்குகையில் உரைகளின் சிறப்பை விரித்துரைப்பதோடு காப்பியத்தின் பெருமை, பெயர்க்காரணம், காப்பிய நுட்பங்கள், கண்ணகி, கோவலன் உள்ளிட்ட கதைமாந்தர்களின் குணநலன்கள், அருமைமிகு செம்மொழியான தமிழ்மொழியின் ஆளுமை என அனைத்தைச் சுற்றியும் பயணித்து வழங்குவது இவரிடம் மட்டுமே காணக்கூடிய தனித்தன்மை எனலாம்.
நூல் ஒன்றன் பொருண்மையில் ஆய்வுரைக் குறிப்புகள் வழங்கும் அதே வேளையில் தான் பிற இலக்கியங்களில் பனுவல்களில் கற்றறிந்த பொருத்தமான குறிப்புகளைக் கொணர்ந்து பொருத்திக் காட்டுவதில் கைதேர்ந்தவராகத் தனது அறிவாற்றலுக்குப் பெருமை சேர்க்கிறார். அணிந்துரைகளைச் சொற்றொடர்கள் தொகுப்பாகக் கருத வைக்காமல் அவை தேடற்கரிய கருத்துச் செறிவுகள் அடங்கிய கருவூலமாக்கித் தந்து அணிந்துரைகளுக்கே அலங்காரம் செய்கிறார்.
பழந்தமிழ் இலக்கியங்களில் இவருக்கிருக்கும் பேராண்மை, தற்கால இலக்கியங்களிலும் இவர் கொண்டிருக்கும் மேலாண்மை, தமிழக வரலாறு மட்டுமன்றி உலக வரலாற்றில் கொண்டிருக்கும் ஆழமான அறிவாற்றல் அனைத்தும் வியக்க வைக்கின்றன. அயல்நாடுகளுக்குக் கலஞ்செலுத்தி வென்ற சேரமன்னர்களின் வரலாற்றைச் செம்மையோடு விளங்க வைப்பதிலாகட்டும் அரபு நாட்டு வணிகத் தொடர்புகளை ஆய்ந்து கூறுவதிலாகட்டும் சொவேந்தரின் வலுவான இலக்கியச் செறிவுகள் சிலிர்க்க வைக்கின்றன.
நூலின் தொன்மைக்கேற்ப தனது மொழிநடையிலும் மாற்றம் காண்பித்து எழுதுவது இவரது மற்றொரு சிறப்பு. பழந்தமிழ் நூல்களின் தன்மைக்கேற்ப செவ்வியல் நடையிலும் தற்காலத்துப் புதுநடை நூல்களுக்குத் தற்கால வழக்கிலும் எழுதுவது இவரது மதியூகத்துக்குச் சான்று. ஒவ்வொரு அணிந்துரையிலும் நூலின் உள்ளடக்கத்துக்கேற்ப கூரிய அறிவாற்றலோடு இவர் புகுத்தும் குறிப்புகள் மற்றும் கருத்துகள் இவருக்குத் தெரியாதவை என்பவை எதுவுமே இல்லை என்ற வியப்பை ஏற்படுத்துகிறது.
மு.வ., சி.பா., வாகீச கலாநிதி கி.வா.ஜ போன்ற அறிஞர்கள் மட்டுமன்றிச் சமகால இலக்கியவாணர்கள் மீதான பாராட்டுக் குறிப்புகளில் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளைக் குறிப்பிட்டு அன்னாரது பெருமைகளை உயர்த்திக் காட்டிப் பதிவு செய்வதில் அவரது சான்றாண்மை ஒளிர்கிறது. பெருந்தன்மை மிளிர்கிறது.
ஒளவை நடராசன் அவர்கள் ஆயிரம் பணிகளுக்கிடையில் அணிந்துரைகள் எழுதி எழுதிக் கை சிவந்தவர். கலைச்சொற்கள் தருவதில் தலை சிறந்தவர். காணும் இலக்கியங்களில் எல்லாம் களிப்போடு கால் பதித்தவர். படைப்பாளர் இளையோரே ஆயினும் பக்குவம் கண்டு மதித்தவர். அகவை மிகுந்தாலும் அடங்காப் பசியால் அளவில்லா இலக்கியங்களை அள்ளி விழுங்கியவர். நாடி வந்தவர்களின் அணிந்துரைகளுக்கு கிள்ளி வழங்குபவர்கள் இடையில் இவர் அருள் கொண்டு அள்ளி வழங்கியவர். இவருடையவை எளிய உரைநடை என்பதால் எவ்வளவு படித்தாலும் அகத்துள் செறிக்கிறது. இளமைப் பருவத்தில் தனது காதலில் அவர் கொண்டிருந்த களவு பற்றிக் கூறுகையில் நகைப்பு தெறிக்கிறது.
ஒளவை நடராசன் அவர்கள் ஒன்னார் இல்லாத உயர் தமிழ் வேந்தர். தண்ணார் தமிழ் வளர்த்த தகைமையாளர். தெள்ளு தமிழ்த் தென்னகம் கண்ட தெள்ளிய இலக்கியத் திருமாமணி. இவரது இனிய செவ்வுரைக் காலம் வருமா இனி ? சொல்வேந்தரின் ஒளவை நடராசன் அவர்களின் பன்முக ஆற்றலை பறைசாற்றும் பளிங்குப் பெட்டகம் இந்நூல்.
சொல்வேந்தர் ஒளவை நடராசன் அவர்களின் புதல்வர் முனைவர் ஒளவை அருள் அவர்கள், கருத்துக் கருவூலமாகவும் காலக் கண்ணாடியாகவும் திகழும் இத்தகையதொரு செழுமையான நூலை அழகுற உருவாக்கி அருந்தமிழ் உலகுக்கு அளித்துள்ளமைக்காகப் பாராட்டுக்குரியவர்.
அத்தனைப் படைப்புகளையும் அதி கவனத்தோடு திரட்டி, வடிவமைத்து நூலாக்கி அரும்பணியாகிய இப்பெரும்பணியைச் செய்திருக்கும் மேனாள் துணைவேந்தர் பத்மஸ்ரீ ஒளவை நடராசன் அவர்களின் தனிச்செயலர் பொன்னேரி பிரதாப் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
- கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு, தலைவர், உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம், சங்க இலக்கிய உரையாசிரியர்