madhivendan 350

தனித்தமிழ் இலக்கிய வரலாற்றினில் மறைமலையடிகள், மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் முதலியோர் குறிப்பிடத் தக்கவர்களாவர். இதனை வேறுவிதமாகச் சொன்னால்,  ‘தனித்தமிழ்’ எனும் மாளிகைக்கு அடிகோலியவர்  மறை மலையடிகள்; கட்டடம் எழுப்பியவர் மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்; அதற்குக் கூரை வேய்ந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் எனலாம். தனித்தமிழ் என்பதெல்லாம் இப்பொழுது நடைமுறைக்கு ஒத்து வருமா? என்று சிந்தித்தும் பேசியும் வருவோர் பலர். இந்தச் சூழ்நிலையில்  “பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்களின் யாப்பமைதி” என்னும் தலைப்பிலான

ஜெ. மதிவேந்தன் அவர்களின் ஆய்வேடு நூலாக்கம் பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சிக்குரியதும் தேவையானது மாகும். தனித்தமிழ் இயக்கக் கொள்கைகளாகத் தனித்தமிழ் மொழி, தனித்தமிழ் இனம், தனித்தமிழ் நாடு என்பனவற்றைத் தம் வாழ்நாளெல்லாம் முழங்கியும் எழுதியும் வந்தவர். ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்;  எல்லாம் தமிழ்’ என்னும் உயர்ந்த நோக்கத்துடன் திகழ்ந்து செயலாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

“எந்தவொரு அறச்செயலும் தன்னிலிருந்தே தொடங்க வேண்டும்” என்னும் உயரிய நோக்கத்தோடு துரை.மாணிக்கம் என்னும் தம் இயற்பெயரைப் ‘பெருஞ்சித்திரன்’ என்று மாற்றிக் கொண்டார். அத்துடன் நில்லாமல் கமலம் என்னும் தம் துணைவியார் பெயரையும் தாமரையம்மாள் என்று தனித்தமிழில் மாற்றினார்.  தம் குழந்தைகளுக்கும் (பொற்கொடி, பூங்குன்றன், தேன் மொழி, செந்தாழை, பொழிலன், பிறைநுதல்) இனிக்கும் தமிழில் தனித்தமிழ்ப் பெயர்களைச் சூட்டினார். தான் ஒரு நல்ல தமிழ்மகனென்று தமிழுலகுக்கு உணர்த்தினார்.

ஐயை, கொய்யாக்கனி, கனிச்சாறு, பாச்சோறு, பாவியக்கொத்து முதலிய முப்பத்தைந்து படைப்பு களைப் படைத்துத் தம் இலக்கிய ஆளுமையைத் தமிழ் கூறும் நல்லுலகத்தில் நிலைநாட்டினார். இவர் படைப்புகளைப் பயின்றோர் தமிழ் உணர்வும் ஊக்கமும் பெற்றனர். தமிழுக்கும் தமிழினத்துக்கும் பகைவர்களுக்கு இவர் பாடிய அறம் பாடல் என்பது கவனிக்கத்தக்கது. அப் பாடலில் உள்ளதுபோன்றே ‘அறத்தால்’ அழிந்தொழிந்தனர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரைப் பற்றிய ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வுநிலைகளில் ஏற்கனவே ஆய்வுகள் நூலாக்கம் பெற்றுள்ளன. இவற்றுள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் ஆய்வியல் நிறைஞர் (2014) நிலையில் ஜெ.மதிவேந்தன் அவர்கள் மேற்கொண்ட “பாவலரேறு பெருஞ் சித்திரனார் பாடல்களின் யாப்பமைதி” என்னும் ஆய்வு நெய்தல் பதிப்பக வெளியீடாக (2016) வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நூலுக்குப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் அருமைத் திருமகனார் முனைவர் மா. பூங்குன்றன் அவர்கள் அளித்துள்ள அணிந்துரையும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறையின் பேராசிரியர் முனைவர் கோ.பழனி அவர்களின் மதிப்புரையும் முனைவர் க.செந்தில்ராஜா அவர்களின் வாழ்த்துரையும் இந்த நூலைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் பான்மையில் அமைந்துள்ளன.

முன்னுரை, முடிவுரையுடன் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை வரலாற்றில் பாவலரேறு பெருஞ் சித்திரனாரின் பங்களிப்பினையும் அவர்தம் யாப்பு வடிவங்களையும் பா, பாவினம், இனவினம் சார்ந்த செய்திகளையும் தொடை நலன்களான மோனை, எதுகை, முரண், இயைபு, அந்தாதி ஆகியவற்றைப் பற்றியும் தொடை விகற்பங்களையும் எளிமையான நடையில், ஏராளமான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி யுள்ளார் நூலாசிரியர். தனித்தமிழ் உணர்வாளர்களும் பாவலரேறுவின் பற்றாளர்களுக்கும் தமிழ்க்கவிதையின் பால் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் ஏற்ற நூலாக இந்த நூல் அமைகிறது.

ஒவ்வொரு இயலின் இறுதியிலும் அளிக்கப் பட்டுள்ள மதிப்பீடுகளும் முடிவுரையும் மேலாய்வுக் களங்களும் எதிர்கால ஆய்வாளர்களுக்குத் தெளி

வினைத் தந்து, வழிகாட்டியாகவும் அமையும். நூலின் பின்னிணைப்புகள் நூலாசிரியரின் அரிய உழைப்பினை எடுத்துக்காட்டுகிறது.

செந்தமிழ்க்கே  அவர்பிறந்தார்;

                செந்தமிழ்க்கே  வாழ்ந்தார்;

செந்தமிழ்க்கே  மூச்சுயிர்த்தார்;

                செந்தமிழ்க்கே  பேசிச்

செந்தமிழ்க்கே  அவருழைத்தார்;

                செந்தமிழாய்  நின்றார்

என்னும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு நூலின் பாடலடிகளையே பாவலரேறுக்குப் பொருத்த மான - சுருக்கமான அறிமுகமாக அமைத்துப் பெருஞ் சித்திரனாரின் பாக்களை நற்றமிழர் யாவரும் நாளும் ஓதி, அவர் வழிநடந்து, அவர்தம் படைப்புகளை ஆய்ந்து பயன் பெறுவோமாக! அதற்கு, இத்தடத்தில் பயணம் செய்யும் மதிவேந்தன் போன்ற ஆய்வாளர்களின் முயற்சி மேலும் தொடருதல் வேண்டும். தமிழ் ஆய்வுலகிற்கு இப்பயணம் பல சிறப்புகளைத் தேடித் தரும் என்பது திண்ணம்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்களின் யாப்பமைதி

ஜெ. மதிவேந்தன்

வெளியீடு : நெய்தல் பதிப்பகம்

எண்.5, தங்கவேலு வைத்தியர் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005

தொடர்புக்கு : 044-2848 3860

விலை : `130/-

Pin It