ஜேம்ஸ் மேனோர் இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட ஐடிஎஸ் என்ற ஆய்வு நிறுவனத்தின் உலகப் புகழ் பெற்ற பேராசிரியர். அவர் உலக வங்கிக்காக உலக நாடுகளில் அதிகாரப்பரவல் எப்படி நடைமுறைப்படுத்தப் படுகின்றன என்று ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டவர். அதேபோல் இந்தியாவிலும் இந்த அதிகாரப்பரவல் என்பது எப்படி புரிந்து கொள்ளப்பட்டது, நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றியும் ஆய்வுக் கட்டுரைகளை உலகத் தரத்தில் வெளியிட்டவர். உள்ளாட்சி அரசாங்கம், அதிகாரப்பரவல் என்ற கருத்தியலில் ஆய்வு செய்யும் அனைவரும் அறிந்த மிகப்பெரும் ஆராய்ச்சியாளர். இவர் “அதிகாரப்பரவல் மற்றும் கிராமிய மேம்பாட்டுக்கான அதிகாரப்படுத்துதல்” என்ற ஆங்கில நூலுக்கு ஒரு அணிந்துரை எழுதி இருந்தார். அதுதான் அந்த நூலை ஆய்வாளர்கள் அனைவரையும் வாசிக்க வைத்தது. ஆனால் அவர் யாரை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினரோ அவர்கள் படித்ததாக அல்லது அந்த நூலைப் பற்றி விவாதித்து பரிசீலனை நடந்ததாக நமக்குப் புலப்படவில்லை. அவர் எழுதிய அணிந்துரையில் நம் ஆய்வாளர்களைக் கடந்து அரசுத் தளத்தில் கொள்கை முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டும் என எண்ணி தன் கருத்தினைப் பதிவு செய்திருந்தார். இந்த நூல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்தியாவில் பௌண்டேஷன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இந்தப் புத்தகம் மிகப்பெரிய பொருள் செலவில் அதாவது 6 கோடி ரூபாய் அளவுக்கு செலவிட்டு இந்தியாவின் 17 மாநிலங்களில் 241 கிராமங்களில் 8659 குடும்பங்களில் திரட்டப்பட்ட புள்ளி விவரங்களை வைத்து தயாரிக்கப்பட்ட ஆய்வு அறிக்கையாகும். இந்த நூல் அதிகாரப்பரவலின் முக்கியத்துவம் பற்றியோ அல்லது அதிகாரப்பரவலால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்றோ, அல்லது அதிகாரப்பரவல் எதையும் சாதிக்க முடியாது என்றோ தத்துவார்த்த விளக்கங்களைக் கூறவில்லை. மாறாக அதிகாரப்பரவல் உருவாக்கிய தாக்கம் குடும்பத்தில் என்ன என்பதை எந்தவித புனைவும் இன்றி அடிப்படை புள்ளி விவரத்தின் பின்னணியில் விளக்கியிருப்பது அரசு தரப்பில் முடிவெடுக்கும் நிலையில், கொள்ளை உருவாக்கும் நிலையில் உள்ளோர் பெரிதும் பயன்படுத்தும் நோக்கத்தில் தயார் செய்யப்பட்ட அறிக்கை. இந்த அறிக்கையில் புள்ளி விவரத்தின் அடிப்படை மற்றும் முறைமையியல் இரண்டும் புதிதானவைகள். எவரும் உபயோகப்படுத்தாதவைகள். இவைகள்தான் இந்த அறிக்கையின் சிறப்புக்கள் என்று தன் அணிந்துரையில் ஜேம்ஸ் மேனோர் குறிப்பிட்டிருந்தார்.
பொதுவாக இரண்டாம் உலகப் போருக்குப் பின் விடுதலை அடைந்த நாடுகள் வறுமை ஒழிப்பில் தீவிரம் காட்டின. பெரும் திட்டங்கள் தீட்டி, பெரும் தொகை ஒதுக்கீடு செய்தது அரசாங்கங்கள். ஆனால், அந்தத் திட்டங்கள் உருவாக்க வேண்டிய தாக்கங்களை உருவாக்கவில்லை. இதனை ஆய்வு செய்து பார்த்தபோது ஆய்வாளர்கள் ஒன்றைக் கண்டுபிடித்தனர். திட்டத்தில் குறையில்லை, நிதி ஒதுக்கீட்டிலும் குறையில்லை ஆனால் திட்டங்களை நடைமுறைப்படுத்திய விதத்தில் முறைமைகளில் பிரச்சினைகள் இருந்ததைக் கண்டுபிடித்து உலகுக்கு விளக்கினர் ஆய்வாளர்கள். இதற்கான தீர்வினையும் அவர்கள் பரிந்துரைத்திருந்தனர். அந்தத் தீர்வுதான் அதிகாரப்பரவலும், மக்கள் பங்கேற்பும். இந்த அதிகாரப்பகிர்வின் மூலமும் மக்கள் பங்கேற்பின் மூலமும், அரசுத் திட்டங்களை முறையாக யாருக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமோ கொண்டு சேர்த்துவிட முடியும் என்பதை தெளிவுபடுத்தியிருந்தனர். அதன் அடிப்படையில்தான் இந்த அதிகாரப்பரவலை 80க்கும் மேற்பட்ட நாடுகள் முன்னெடுத்து பல்வேறு முறைகளில் நடைமுறைப்படுத்தின. அதில் நம் நாடு அரசமைப்புச் சாசனத்தைத் திருத்தி பகுதி 9 மற்றும் 9Aயில் உள்ளாட்சியை அரசாங்கமாக உருவாக்கி செயல்பட வைத்தது. இது உலக அரங்கில் மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. காரணம் பாராளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் ஒட்டுமொத்தமாகவே 5000க்கும் குறைவான எண்ணிக்கையில்தான் மக்கள் பிரதிநிதிகள் செயல்பட்டு வந்தனர்.
இந்தச் சூழலில் தான் 30 லட்சத்திற்கும்மேல் மக்கள் பிரதிநிதிகள் உள்ளாட்சிக்குள் வரும்போது மிகப்பெரிய மாற்றம் சமூகத்திற்குள், அரசியலில், ஆளுகையில் நிர்வாகத்தில் ஏற்பட்டுவிடும் என்ற பெரும் எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இதன் அடிப்படையில்தான் கனடாவில் அரசாங்கத்தில் கொள்கை உருவாக்கும் செயல்பாடுகளுக்கு ஆய்வு செய்யும் ஐடிஆர்சி என்ற நிறுவனம் ஏறத்தாழ ஆறு கோடி ரூபாய் நிதியை என்சிஇஏஆர் (NCEAR) என்ற நிறுவனத்திற்கு வழங்கி, புதிய உள்ளாட்சியால் விளைந்தவைகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்ய உதவியது. இந்த ஆய்வு இந்தியாவில் செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே மிகப்பெரிய ஆய்வாகும். இதில் எது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்றால், அதிகாரப்பரவலுக்கும், அதிகாரப்படுத்துதலுக்கும் உள்ள உறவு அல்லது தொடர்பு, அதிகாரப்பரவலுக்கும், அதிகாரப்படுத்துதலுக்கும், மேம்பாட்டுக்கும் உள்ள தொடர்பினை ஆய்வு செய்தல். இதில் கிராமப்புற உள்ளாட்சிகளால் ஆளுகை எப்படி வலுப்பட்டுள்ளது, அடுத்து அது தரும் சேவைகளின் தரம் எப்படியுள்ளது, அடுத்து உள்ளாட்சி குடும்பங்களின் மேம்பாட்டுக்கு எந்த அளவு செயல்பட்டுள்ளது என்பதனை மையப்படுத்தி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆழமாக, சமூகம் மக்களாட்சிப்படுத்தப்படும் போது, எந்த அளவுக்கு இந்த அதிகாரப்பரவல் விளைவுகளை தரத்தில் உயர்த்துகிறது என்பதை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வை களத்தில் செய்ய ஒரு பெரிய ஆய்வுக்குழு உதவினாலும், இந்த ஆய்வு அறிக்கையை தயாரிக்க உலகளாவிய நிலையில் ஓர் ஆலோசனைக்குழு இருந்து வழிகாட்டினாலும், மூன்று நிபுணத்துவம் வாய்ந்த ஆளுமைகள்தான் தயார் செய்தனர். ஒருவர் இன்று ஐ.ஐ.எம் அகமதாபாத்தில் பணிபுரியும் பேராசிரியர் ஹரி.கே.நாகராஜ். இரண்டாமவர் உலக வங்கியில் பொருளாதார ஆலோசகராக செயல்பட்ட ஹான்ஸ் பிஸ்வாங்கர், மூன்றாமவர் 73வது சட்டதிருத்த மசோதாவை தயாரித்த முன்னாள் மத்திய அரசின் செயலர் எஸ்.எஸ்.மீனாட்சி சுந்தரம். இந்த மூவரும்தான் இந்த அறிக்கையை தயார் செய்தனர். இதில் இரண்டாமவர் மறைந்துவிட்டார். தயார் செய்த அறிக்கையை அறிஞர்களின் பார்வைக்குக் கொண்டு வந்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டு அறிக்கையை செப்பனிட ஒரு சர்வதேச கருத்தரங்கை நடத்தினர். அந்த அறிக்கை இறுதியில் நூல் வடிவமானது. அதை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்டது 2015ஆம் ஆண்டு. அந்த நூல் உலகத்தின் பார்வையை ஈர்த்தது. ஆனால், உள்ளூரில் நம் உயர் அதிகாரிகள் எவரும் ஏறு கொண்டு பார்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
இந்த அறிக்கைக்கு முன்பே மத்திய அரசாங்கம் மாநில அரசுகள் எந்த அளவுக்கு அதிகாரப்பரவலை அரசமைப்புச் சாசனத்தின் பின்புலத்தில் செய்துள்ளன என்பதை “அதிகாரப்பரவல் அறிக்கை” என்ற தலைப்பில் 2016ஆம் ஆண்டுவரை வெளியிட்டு வந்தது. அதன் பிறகு 2024-25 இந்த ஆண்டுதான் கொண்டு வந்துள்ளது. இந்த அறிக்கைகள் ஒரு மையக் கருத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. எல்லா மாநிலங்களும் உள்ளாட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதிகாரப் பரவலை முன்னெடுக்கவில்லை. பல்வேறு நிலைகளில்தான் அதிகாரப்பரவல் நடைபெறுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது. இருந்தபோதிலும் கேரளா வழிகாட்டும் மாநிலமாக திகழ்வதை அந்த அறிக்கைகள் சுட்டுகின்றன. மாநில அரசுகள் பெரிய ஆர்வத்தை அதிகாரப் பரவலுக்கு காட்டவில்லை என்பதை படம் பிடித்துக்காட்டி வந்தன இந்த மத்திய அரசின் ஆய்வு அறிக்கைகள். 2015/16ஆம் ஆண்டு டாட்டி இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயன்ஸ் என்ற உயர் கல்வி நிறுவனம் மத்திய அரசுக்காக தயாரித்த அதிகாரப்பரவல் அறிக்கைக்கு நான் தலைமை தாங்கியபோதுதான் எவ்வாறு மாநில அரசுகள் உண்மையான அதிகாரப் பரவலுக்கு மாற்றாக உள்ளாட்சிகளை ஒரு முகவையாக செயல்பட வைக்க எண்ணி செயல்படுகின்றன என்பதை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. இதில் தேசிய கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
வெளிநாட்டு நிதி உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை, உள்ளாட்சிகள் என்ன தாக்கத்தை அதன் சேவைகளிலும், குடும்பங்களிலும், உருவாக்கின? பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து பதவிக்கு வந்த பெண்களால் விளைந்தவைகள் என்னென்ன? ஆளுகையின் தரம் என்ன? கடைக்கோடி மனிதர்களின் தேவைகளை எப்படி பூர்த்தி செய்துள்ளன? என்பனவற்றை மையப்படுத்தி அந்த ஆய்வில் விடை கண்டனர்.
இந்த அறிக்கையில் உலக நாடுகளில் நடைபெற்று வரும் அதிகாரப் பரவல் செயல்பாடுகளிலிருந்து இந்தியா எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள முடியும் என்று கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது ஒரு சிறப்பான அம்சம். என்னென்ன சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் என்னென்ன சீர்திருத்தங்களை தற்போது முன்னெடுக்க வேண்டும் என்பவற்றைச் சுட்டிக் காட்டியுள்ளது இந்த அறிக்கை.
இந்த அறிக்கை அதிகாரப் பரவலுக்கும், மக்களை அதிகாரப்படுத்துவதற்கும், மக்களின் மேம்பாட்டிற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இந்த அதிகாரப்பரவல் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதைப் படம் பிடித்துக் காண்பிக்கிறது. அதேபோல் அடித்தளத்தில் உள்ள ஆட்சிக் கட்டமைப்பு திறனற்று செயல்படுவதையும் சுட்டிக்காட்டுகின்றது. இருந்தபோதும் இந்த புதிய உள்ளாட்சிகள் பல தாக்கங்களை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் விளக்குகிறது.
கிராமப்புறங்களில் மக்கள் தொகைப் பெருக்கம் வேகம் குறைகிறது, குடும்பத்திலுள்ளவர்களின் எண்ணிக்கை குறைகிறது, அதேபோல் விவசாயம் செய்யும் விவசாயியின் நில அளவு குறைகிறது, தனிமனித வருமானம் கூடுகிறது, விவசாயம் தவிர்த்து, சுயதொழில் செய்து வருமானம் பெறுவது உயர்கிறது, கிராமங்களில் வசதிகள் குறிப்பாக கட்டுமான வசதிகள் கூடியிருக்கின்றன, அதிக எண்ணிக்கையில் அரசுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, மக்களுக்குச் செய்யும் சேவையின் எண்ணிக்கை கூடியிருக்கின்றன, அவைகளின் தரமும் கூடியிருக்கின்றன, கூலி உயர்ந்துள்ளது, பெண்களின் கூலி அதிகரித்துள்ளது, விவசாய நிலத்தின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது, ஆளுகையைப் பொறுத்தவரையில் கிராமசபை அதிக எண்ணிக்கையில் கூட்டப்படுகின்றது, அதிக எண்ணிக்கையில் கிராமசபைக்கு உறுப்பினர்கள் வருகின்றார்கள், பெண்கள் தலைமையேற்று நடத்துகின்ற கிராமசபையில் விவாதங்கள் நடைபெறுகின்றன, பெண்கள் பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன. தலித்துக்கள் பிரச்சினைகள் விவாதிக்கப்படுகின்றன போன்ற தாக்கங்களை இந்த அறிக்கை படம் பிடித்துக் காண்பித்துள்ளது.
இவ்வளவு அதிகாரப் பற்றாக்குறை நிதிப் பற்றாக்குறை இருந்தும் முடிவு எடுப்பதில் திறனுடன் செயல்படுகின்றன உள்ளாட்சி அமைப்புக்கள் என்றும், பஞ்சாயத்துக்கள் குறைந்த நிதியை தண்ணீருக்கும், சுகாதாரத்திற்கும், கல்விக்கும் செலவழித்தபோதும் விளைவுகள் என்பது அலுவலர்கள் நடத்திய நிர்வாக காலத்தில் இருந்ததைவிட சிறப்பாக இருந்துள்ளது என்பதையும் இந்த அறிக்கை படம் பிடித்துக் காண்பிக்கிறது. அடுத்து தனிநபர் செலவு கல்வியில், சுகாதாரத்தில், தண்ணீரில் குறைந்துள்ளது என்பதையும் எடுத்துக் காட்டுகிறது.
பொதுமக்களுக்குத் தேவையான செய்திகள் அரசுத் திட்டங்கள் சம்பந்தமான தகவல்கள் கிராமசபையில் நிறைய பரிமாறப்படுகின்றன. பெண்கள் தலைமை வகிக்கின்ற பஞ்சாயத்துக்களில் நிர்வாக நெறிமுறை பின்பற்றப்படுவது ஒரு சிறப்பு என்பதையும் ஆய்வு கூறுகின்றது. இந்த ஆய்வு அறிக்கை புதிய உள்ளாட்சியின் திறன் எவ்வளவு இருக்கின்றது, அதைப் பயன்படுத்துவதன் மூலம் எவ்வளவு நற்செயல்களை சமுதாயத்திற்குக் குறிப்பாக விளிம்பு நிலை மக்களுக்குக் கொண்டுவர முடியும் என்பதை எடுத்துக் காண்பித்து பல்வேறு விதமான பரிந்துரைகளையும் செய்துள்ளது. இந்த அறிக்கை நூலாக வந்த ஆண்டு 2015.
சென்ற ஆண்டு 2024இல் உலக வங்கி ஆய்வுக்குழு ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. “இரண்டரை லட்சம் மக்களாட்சி” என்ற தலைப்பில். இந்த அறிக்கை இந்திய கிராமங்களில் புதிய உள்ளாட்சி என்பது எப்படி செயல்படுகின்றது என்பதை ஆய்வு செய்த அறிக்கைகளையெல்லாம் தொகுத்து வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்னும் ஒருபடி மேல் சென்று 2015இல் வெளியான நூலில் எவைகள் எல்லாம் சாதனைகளாகப் பார்க்கப்பட்டதோ, அவைகளெல்லாம் அடையக்கூடிய லட்சியமாக இருக்கின்றது. அந்தச் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம்தான் இருக்கின்றன. அது மட்டுமல்ல, மாநில அரசாங்கங்கள் ஆர்வம் காட்டாத சூழலிலும் இந்த உள்ளாட்சியின் செயல்பாடுகள் என்பது சிறப்பாகவே இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அது மட்டுமல்ல மைய மாநில உறவுகளை ஆய்வு செய்த குழுவாக இருக்கட்டும், அல்லது இரண்டாவது நிர்வாக சீர்திருத்த ஆணையம் உள்ளாட்சிக்காக தயாரித்த அறிக்கையாக இருந்தாலும் அனைத்தும் கூறிய சீர்திருத்தங்களை மத்திய மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தினாலே மிகப் பெரிய மாற்றங்களை கிராமப் பகுதிகளில் கொண்டுவர முடியும். அது மட்டுமல்ல, 2.50 லட்சம் குடியரசுகளை உருவாக்க முடியும் என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது இந்த உலக வங்கி அறிக்கை. இருந்தும் நம் மைய மாநில அரசுகள் ஏன் செய்ய மறுக்கின்றன என்பதை ஆழ்ந்து சிந்திக்கும்போது நமக்கு கண்முன் வந்து நிற்பது 1964இல் ஜெயபிரகாஷ் நாராயணன் பஞ்சாயத்துத் தலைவர்கள் மாநாட்டில் கூறிய செய்திதான். அவர் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டார் “இன்றைய ஆட்சியாளர்கள் மக்களுக்கு அதிகாரம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் மக்களை மேய்க்கத்தான் ஆசைப்படுகிறார்கள். மக்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று எண்ணுவோர் போராடித்தான் பெற வேண்டும். மக்கள் எழுச்சி பெற்று போராடாமல் அது நடைபெறாது. மனுக் கொடுத்து அதிகாரம் கிடைக்காது. எனவே மக்களை அறிவார்ந்தவர்களாக மாற்றி போராடித்தான் மக்களுக்கான அதிகாரத்தைப் பெறவேண்டும்” என்றார்.
இதே கருத்தைத்தான் கேரளாவில் கண்ணனூரில் நடந்த உள்ளாட்சிக்கான சர்வதேச கருத்தரங்கில் வலுயுறுத்தினேன். இன்று நம் தலைமைக்கு மக்களை அதிகாரப்படுத்தும் கடப்பாடு கிடையாது. எனவே பொதுமக்கள் தங்களுக்கான அதிகாரத்தை எடுக்க அரசமைப்புச் சாசனத்தில் தந்த உரிமைகளையும், சட்டங்கள் வழியாகத் தந்த உரிமைகளையும் ஆயுதங்களாக்கி போராடினால் தான் மட்டுமே கிடைக்கும், மனுக் கொடுத்து பெற முடியாது என்ற கருத்தை முன்வைத்தேன். அனைவருக்கும் தெரியும் உள்ளாட்சியின் மகத்துவம். யாருக்கும் மனமில்லை அதை வலுப்படுத்த. காரணம் அவர்கள் இன்று அனுபவிக்கும் சுகத்தை இழக்க வேண்டி இருக்கும் என்பதால். இதுதான் இன்றைய எதார்த்தமான உண்மை. இந்த இடத்தில் நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். சீனாவில் கிராமப்புற மேம்பாட்டுக்காக ஒதுக்கும் நிதியில் 42% நேரடியாக உள்ளாட்சிக்குத் தந்து செலவிட வைக்கிறது. ஊழல் நடந்தால் அவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அரசமைப்புச் சாசனத்தைத் திருத்தி உள்ளாட்சிகள் உருவாக்கப்படவில்லை. ஒரு அரசாணை மூலம் உருவாக்கப்பட்டதுதான் சீன உள்ளாட்சிகள். அங்கு ஒரு அரசியல் கடப்பாடு இருக்கிறது ஆகையால் நடைபெறுகிறது.
அதேபோல் கேரளாவில் எப்படி இந்த அதிகாரப்பரவல் இந்தியாவுக்கே வழிகாட்டும் நிலையில் இயங்குகிறது. அதற்குக் காரணம் அங்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து மக்களை அதிகாரப்படுத்துவதில் முனைப்புக் காட்டுகின்றனர். அந்த நிலை எல்லா மாநிலங்களுக்கும் வரவேண்டும். அதற்கு ஒரு மக்கள் இயக்கம் கீழிருந்து கட்டமைக்கப்படல் வேண்டும், அதுதான் இன்றைய தேவையும் கூட.
- க. பழனித்துரை, பேராசிரியர், காந்திகிராமிய பல்கலைக்கழக ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் ஆராய்ச்சி இருக்கைத் தலைவர் (ஓய்வு)