அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் 100 தொகுதிகளில்

அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு 100 தொகுதிகளில் 10 தொகுதிகள் இப்போது வெளியாகியுள்ளன. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்தத் தொகுதிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இம்மக்கள் பதிப்பின் அனைத்துத் தொகுதிகளும் இந்த ஆண்டு (2025) இறுதிக்குள் வெளியாகிவிடும்படி திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிப்பு தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் வெளியாகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இதற்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து அணிந்துரை ஒன்றையும் எழுதி வழிகாட்டியுள்ளார். மேலும், இத்தொகுதிகளின் தயாரிப்பை மேற்பார்வை செய்வதற்கான நெறியாள்கைக் குழுவினர் தொகுதிகளின் தமிழ் நடையையும் உள்ளடக்கத்தையும் சரிபார்த்தனர்; திருத்தங்களையும் மேம்பாடுகளையும் பரிந்துரைத்து வழிகாட்டினர்.ambedkar books 577இந்த மக்கள் பதிப்பு ஏற்கெனவே வெளியான அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்களின் தொகுப்புகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது? இதைப் புரிந்து கொள்ள அண்ணல் அம்பேத்கரின் அறிவுத்துறை பங்களிப்பைப் பற்றியும் அதன் தன்மை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

அம்பேத்கரின் அறிவுப்பணி

அம்பேத்கரின் அறிவுப் பணி, 1916 ஆம் ஆண்டு மே மாதம் அவர் அமெரிக்காவின் நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த மானிடவியல் கருத்தரங்கில் வாசித்து அளித்த இந்தியாவில் சாதிகள்: அவற்றின் இயங்கியல், தோற்றம் வளர்ச்சி என்ற ஆய்வுக் கட்டுரையில் இருந்து தொடங்குகிறது. அம்பேத்கர் தமது இளங்கலை படிப்பை மும்பையில் உள்ள எல்ஃபின்ஸ்டன் கல்லூரியில் முடித்துவிட்டு முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் பெறுவதற்கு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். முன்னதாக, கிழக்கிந்தியக் கம்பெனியின் நிருவாகமும் நிதித்துறையும், பண்டைக்கால இந்திய வணிகம் ஆகிய பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதியிருந்தார்

அவரது ஆய்வுப் பணி, 1956 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாள் அவர் இறந்ததற்கு முன்னிரவில் எழுதி முடித்த புத்தரும் அவரது தம்மமும் என்ற நூலோடு முடிவடைந்தது. இந்த 40 ஆண்டுகால அறிவுப் பணியில் அவர் பொருளாதாரம், சட்டம், இந்திய வரலாறு, பண்டைய இந்தியாவில் வர்க்கப் போராட்டம், இந்து மதத்தின் தத்துவம், சமகால சமூகவியல், அரசியல் என்று பல்துறைகளிலும் தமது ஆய்வுப் பங்களிப்பை வழங்கியிருந்தார்.

அம்பேத்கரின் அரசியல் போராட்டங்கள்

அவரது பொது அரசியல் வாழ்வு 1918 இல் சீர்திருத்தங்களுக்கான சௌத்பரோ குழுவில் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் உரிமைகளைக் கேட்பதற்கான அறிக்கை வழங்குவதில் இருந்து தொடங்கியது.

1.      அம்பேத்கர் 1920-களில் மகாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் தலித் மக்களின் குடிமை உரிமைகளுக்கான போராட்டங்களில் பங்கேற்றார். பொதுக் குளத்தில் தண்ணீர் குடிக்கும் உரிமை, பொதுப் பள்ளிகளில் தலித் மாணவர்கள் கல்வி கற்கும் உரிமை, கோயில்களில் நுழையும் உரிமை என இந்த குடிமை உரிமைகள் இயக்கம், 1960-களில் அமெரிக்க ஐக்கிய அரசுகளில் கருப்பின மக்களின் குடிமை உரிமைகளுக்காக மார்ட்டின் லூதர் கிங் நடத்திய குடிமை உரிமைகள் இயக்கத்துக்கு நிகரானது.

2.      1920-களின் கடைசியிலும் 1930-களிலும் எதிர்கால இந்தியாவின் ஜனநாயகத்தைக் கட்டமைக்கும் பணியில் சைமன் ஆணையத்தின் முன்பும் வட்டமேசை மாநாடுகளிலும் அறிக்கைகள் வழங்கினார், உரையாற்றினார், சாட்சியம் கொடுத்தார்.

3.      காலனிய ஆட்சியின் போது பம்பாய் சட்ட மன்ற உறுப்பினராகவும் அரசப் பிரதிநிதி அவையில் தொழிலாளர் உறுப்பினராகவும் (அமைச்சர்) சுதந்திர இந்தியாவுக்கான அரசியல் சட்ட அவையில் வரைவுக்குழு தலைவராகவும் இந்திய நாடாளுமன்றத்தில் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும் பதவி விலகிய பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணி புரிந்தார்.

அம்பேத்கரின் தொடக்ககால வாழ்க்கை

அம்பேத்கர் பிறந்தது மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மகர் என்ற சாதியில். மகர் மக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். தீண்டப்படாதோராக நடத்தப்படும் பிரிவினர். பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் படையில் சேர்வதன் மூலம் தீண்டாமை என்ற சமூகச் சிறையில் இருந்து ஓரளவு விடுதலை பெற்றனர், மகர் மக்கள். இராணுவத்தில் சேர்ந்து கல்வி கற்கவும் போர் புரியவும் வாய்ப்புகளைப் பெற்றனர். அம்பேத்கரின் தந்தை 1893இல் பிரித்தானிய இராணுவத்தில் சுபேதார்-மேஜராக பணியாற்றியவர்.

கல்வியறிவு பெற்ற குடும்பச் சூழலில் வளர்ந்த அம்பேத்கர், மகாராஷ்டிராவில் பொதுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். பள்ளியில் பிற மாணவர்களிடம் இருந்து தனியே, தரையில் கோணிப்பையை விரித்து உட்காரும்படி வைக்கப்பட்டார். அவருக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமென்றால் அதற்கென வைக்கப்பட்டிருக்கும் பானையில் இருந்து சாதி இந்து மாணவர் யாராவது தண்ணீரை எடுத்து ஊற்றினால்தான் குடிக்க முடியும்.

அதன் பின்னர், மும்பை எல்பின்ஸ்டன் கல்லூரியில் தமது பட்டப்படிப்பை நிறைவுசெய்தார். கல்வி உதவித் தொகை பெற்று அமெரிக்க ஐக்கிய அரசுகளின் நியூயார்க் மாநகரிலும் (கொலம்பியாப் பல்கலைக் கழகம்) இலண்டன் மாநகரிலும் (லண்டன் பொருளாதாரப் பள்ளி) பொருளாதாரமும் சமூகவியலும் சட்டமும் படித்து இரண்டு முனைவர் பட்டங்களும், சட்டத்துறையில் பாரிஸ்டர் பட்டமும் (கிரேஸ் இன், லண்டன்) பெற்றார்.

மேற்படிப்பு முடித்து இந்தியா திரும்பிய பிறகு, மேற்படிப்புக்கு நிதி உதவி செய்த பரோடா மன்னரின் அரசில் ஊழியராக பணியாற்றச் சென்ற போது தங்குவதற்கு இடம் கூட கிடைக்காமல் அல்லலுற்றார். தங்கியிருந்த இடத்தில் இருந்து வன்முறை மிரட்டல்கள் மூலம் துரத்தப்பட்டார்.

இந்தப் பின்புலத்தில், இந்தியச் சமூகத்தின் ஜனநாயகத்துக்கு எதிரான கட்டமைப்புகளான சாதி, படிநிலை ஏற்றத்தாழ்வு, இவற்றின் விளைவான தீண்டாமை, அகமண முறை ஆகியவற்றை எதிர்த்து வீழ்த்தவும் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் அடிப்படையிலான ஜனநாயக சமூகத்தை நிறுவுவதற்காகவும் போராடியதாக அம்பேத்கரின் அரசியல் வாழ்க்கை அமைந்திருந்தது.

அம்பேத்கரின் ஆய்வுப் பணித் தொகுப்பு

-       அம்பேத்கரின் அரசியல் பொருளாதாரத் துறை ஆய்வேடுகள் 1. இந்தியாவில் சாதிகள்: அவற்றின் இயங்கியல், தோற்றம் வளர்ச்சி (1916) 2. இந்தியாவில் சிறுநிலவுடைமைகள் – அவற்றின் தீர்வுகள் (1918) 3. பேரரசு நிதியின் மாகாண பரவலாக்கத்தின் பரிணாமம் (1925) 4. இந்திய ரூபாய் பற்றிய சிக்கல்: அதன் தோற்றம் - தீர்வு (1923) 5. திரு ரஸ்ஸல் – சமூகத்தின் மீள்கட்டமைப்பு (1918)

-       உரைகளின் நூல் வடிவம் 1. சாதியை அழித்தொழித்தல் (1936) 2. இரானடே, காந்தி, ஜின்னா (1943) 3. கூட்டாட்சி – சுதந்திரம் (1939) 4. காந்தி – தீண்டப்படாதோர் விடுதலை (1943)

-       இந்திய சமூகம் பற்றிய வரலாற்று ஆய்வு நூல்கள் 1. பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை (1940) 2. சூத்திரர்கள் யார்? அவர்கள் எவ்வாறு இந்தோ ஆரிய சமூகத்தின் நான்காவது வருணம் ஆயினர்? (1946) 3. தீண்டப்படாதோர்: அவர்கள் யார்? அவர்கள் ஏன் தீண்டப்படாதோர் ஆயினர்? (1948)

-       இந்திய அரசியல், சமூகம் 1. காந்தியும் காங்கிரசும் தீண்டப்படாதோருக்கு செய்தது என்ன? (1945) 2. மொழிவாரி மாநிலங்கள் பற்றி 3. புத்தர் – அவரது தம்மம் (1956)

-       ஆணையங்கள் (சௌத்பரோ குழு, சைமன் ஆணையம், வட்டமேசை மாநாடுகள்) முன்பு அளித்த அறிக்கைகளும் பம்பாய் சட்டமன்ற, நாடாளுமன்ற (இந்து சட்டத் தொகுப்பு), அரசப் பிரதிநிதி அவை (தொழிலாளர் உறுப்பினர்), அரசியல் அமைப்பு அவை பதிவுகளும்

-       அம்பேத்கர் நடத்திய மூக்நாயக், பகிஷ்கிரித் பாரத், சமதா, ஜனதா, பிரபுத்த பாரத் முதலான பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளும் அவரது பல்வேறு உரைகளின் பதிவுகளும் அவரைப் பற்றி பிற ஆங்கில, மராத்தி பத்திரிகைகளில் வெளியான செய்திகளும்

-       கையெழுத்துப் படிகளாக 1. இந்து மதத்தின் தத்துவம் 2. பண்டைய இந்தியா: புரட்சி – எதிர்ப்புரட்சி 3. இந்தியா – பொதுவுடைமைக்கான முன்தேவை 4. புத்தரா கார்ல் மார்க்சா 5. தீண்டப்படாதோர்: இந்தியச் சேரிகளின் குழந்தைகள் 6. தீண்டப்படாதோர் – தீண்டாமை: அரசியல், சமூகம், மதம் தொடர்பான கட்டுரைகள்

அம்பேத்கரும் இந்திய அறிவுத்துறையும்

இந்திய சமூகத்தில் உழைக்கும் மக்களான தீண்டப்படாதோருக்கு எதிரான சமூகச் சுரண்டலும் பெரும்பான்மை இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, சொத்துடைமை, சமூக உரிமைகள் மறுப்பும் அம்பேத்கரின் ஜனநாயகத்துக்கான போராட்டத்தின் முதன்மை தாக்குதல் இலக்காக இருந்தது. அவர் இந்து சமூகத்தின் நால்வருண படிநிலைக் கட்டமைப்பையும் படிநிலை ஏற்றத்தாழ்வு என்ற கருத்தாக்கத்தையும் இந்து மதத்தின் தத்துவத்தையும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கினார். அதற்காக, இந்து வேதங்கள், சாஸ்திரங்கள் முதலான புனித நூல்களில் இருந்து ஏராளமான ஆதாரங்களைத் திரட்டினார். இந்து சமூக அமைப்பு அநீதியானது, முன்னேற்றத்துக்குத் தடையானது என்று நிறுவினர்.

இந்தியாவில் அறிவுத்துறையை தமது முற்றுரிமையாக ஆக்கிக் கொண்ட சலுகை பெற்ற உயர்நிலைப் பிரிவினர், தமது சமூக மேலாதிக்கத்துக்கு சவால் விடும் அம்பேத்கரின் பணிகளை பகைமையுடன் எதிர்கொண்டது இயல்பானதே. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் (மேல்நிலை சாதி இந்துக்கள்) ஆதிக்கம் செலுத்திய இந்தியப் பத்திரிகை உலகமும் பதிப்புலகமும் அம்பேத்கரின் எழுத்துகளை புறக்கணித்தன, கடுமையாகத் தாக்கி எழுதின; தீண்டப்படாதோரின் குடிமை உரிமைகளுக்கான போராட்டம், அரசியல் பிரதிநிதித்துவத்துக்கான போராட்டம் இரண்டையும் தேசநலனுக்கு எதிரானவை என்று கொச்சைப்படுத்தின, அவதூறு செய்தன.

தம் வாழ்நாள் முழுவதும் ஊடக உலகமும் அறிவுலகமும் ஒத்துழைக்காத சூழலிலேயே அம்பேத்கர் தனது அரசியல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். கோடிக்கணக்கான தீண்டப்படாத, சுரண்டப்படும் மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது.

இது அவரது இறப்புக்குப் பின்னும் தொடர்ந்தது.

அம்பேத்கரின் கையெழுத்துப் படிகள் வெளிச்சம் கண்ட வரலாறு

அம்பேத்கர் வெளியிட்ட நூல்களும், அவரது அறிக்கைகளும், நாடாளுமன்ற சட்டமன்ற செயல்பாடுகளும் நீண்ட காலம் தொகுத்து வெளியிடப்படாமலே இருந்தன. இன்னும் குறிப்பாக, அண்ணல் அம்பேத்கர் கையெழுத்துப் படிகளாக விட்டுச் சென்ற நூல்கள் அவரது இறப்புக்குப் பின் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு இருட்டறையில் பெட்டிகளில் அடைபட்டிருந்தன.

அம்பேத்கரின் மறைவுக்குப் பின் அவரது கையெழுத்துப் படிகளும் பிற ஆவணங்களும் டெல்லி உயர்நீதிமன்றத்தின் காப்பாளரால் கைவசப்படுத்தப்பட்டன. அது பின்னர், மகாராஷ்டிரா அரசாங்கத்தின் தலைமை நிருவாகியின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது முதல், டாக்டர் அம்பேத்கரின் வெளியிடப்படாத கையெழுத்துப் படிகள் அடங்கிய பெட்டிகள், தலைமை நிருவாகியின் பாதுகாப்பில் இருந்தன.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு, 1976ஆம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த திரு ஜே.பி பன்சோட் என்ற வழக்கறிஞர் "டாக்டர் அம்பேத்கரின் வெளியிடப்படாத எழுத்துகளை வெளியிட எனக்கு அனுமதி தாருங்கள், அல்லது அவற்றைப் பதிப்பிக்கும்படி அரசாங்கத்துக்கு ஆணையிடுங்கள்" என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் வழக்குத் தொடுத்தார்.

1978 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசாங்கம் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆதார ஆவணங்கள் பதிப்புக் குழுவை (Dr Babasaheb Ambedkar Source Material Publication Committee) அமைத்தது. அதற்கு சிறப்புப் பணி அலுவலராக திரு வசந்த் மூன் நியமிக்கப்பட்டார். அம்பேத்கரின் கையெழுத்துப் படிகள் 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் நாள் திரு வசந்த் மூன் வசம் ஒப்படைக்கப்பட்டன.

அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் – ஆங்கிலத்தில் 17 தொகுதிகளில், தமிழில் 37 தொகுதிகளில்

Dr. Babasaheb Ambedkar Writings and Speeches என்ற தொகுப்பில் 1979 ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் வெளியான முதல் தொகுதியில் (சாதி பற்றி, மொழிவாரி மாநிலங்கள் பற்றி, வீரரும் வீர வழிபாடும், அரசியல் சட்ட சீர்திருத்தங்கள், பொருளாதார சிக்கல்கள் பற்றி என ஐந்து பகுதிகளில் 12 கட்டுரைகள்) தொடங்கி 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் நாள் வெளியான 17வது தொகுதியின் மூன்று நூல்கள் என ஏறத்தாழ 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்டன.

தமிழில் அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி அம்பேத்கர் பவுண்டேஷன் சார்பாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இந்த 17 தொகுதிகளையும் மொழிபெயர்த்து பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு என்ற பெயரில் 37 தொகுதிகளாக ஏப்ரல், 1993 தொடங்கி ஆகஸ்ட், 2005 வரை 12 ஆண்டுகளாக வெளியிட்டது.

மேலே சொன்ன ஆங்கிலத்தில் 17 தொகுதிகளின் அல்லது தமிழில் 37 தொகுதிகளின் பொருளடக்கப் பட்டியலைப் பார்த்தால், அம்பேத்கரின் எழுத்துகளும் பேச்சுகளும் தொகுக்கப்பட்டது அவை உருவாக்கப்பட்ட காலவரிசைப்படியோ அல்லது தலைப்புகளின் அடிப்படையிலோ இல்லை என்பது தெளிவாகிறது.

இக்கால அரசியலுக்கு அம்பேத்கரின் ஆக்கங்கள்

அம்பேத்கரின் எழுத்துகளும் பேச்சுகளும் என்ற தொகுப்பை ஆங்கிலத்திலோ தமிழிலோ வாசிக்கும் வாசகர்களுக்கு, அம்பேத்கரின் எழுத்துகளில் இருந்தே அவரது அரசியல், கருத்தியல் பற்றிய முழுமையான பார்வை கிடைப்பது அரிது.

1980-களுக்குப் பிறகு அம்பேத்கரின் ஆக்கங்கள் ஆங்கிலத்தில் வெளியான பிறகு அம்பேத்கர் ஆய்வுகள் பெருகத் தொடங்கின. கல்விப் புலத்தில் இருந்த பல ஆய்வாளர்கள் அம்பேத்கரின் அரசியல், வரலாற்றியல், கருத்தியல் பற்றிய பகுப்பாய்வுகளையும் தொகுப்பாய்வுகளையும் மேற்கொள்ளத் தொடங்கினர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த புதிய நூல்கள் வரத் தொடங்கின. இவற்றைத் தேடிப்படித்து அம்பேத்கர் பற்றி இந்த அறிஞர்களின் கண்ணோட்டத்தை அறிந்து கொள்ளலாம். இவற்றில் பல தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது தமிழ் வாசகர்களுக்குக் கூடுதல் தடையாக உள்ளது.

பொதுவாக, அம்பேத்கரின் சிலைகளே கம்பிக் கூட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை தொடர்கிறது; அம்பேத்கரை சட்ட மாமேதை என்று பகுதியளவு அடையாளத்துக்குள் சுருக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன. இந்நிலையில், சாதியை அழித்தொழிப்பது தொடங்கி இந்திய அரசியல் சட்டம் வரை, இந்திய ரூபாய் பற்றிய சிக்கல் தொடங்கி புத்தரும் அவரது தம்மமும் வரை அம்பேத்கரின் அரசியலையும் கருத்தியலையும் முழுமையாகப் பயில்வதற்கு ஏதுவான அவரது ஆக்கங்களின் தொகுப்பு ஒன்று தேவைப்படுகிறது. அந்த முயற்சிதான் தமிழ்நாடு அரசின் ஆணையின்படி தமிழ் வளர்ச்சித் துறை வெளியிடும் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பு 100 தொகுதிகளில்.

அம்பேத்கர் ஆக்கங்கள் – மக்கள் பதிப்பு

இந்தத் தொகுப்பில், அம்பேத்கரின் ஆக்கங்கள் 13 பெருந்தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை சாதியம், இந்து மதம், பௌத்தம், காந்தியம், பொருளாதாரம், குடிமைச் சமூகம் (மாநிலங்கள், சட்டம், அரசியல் உரையாடல்), காலனிய அரசியல், காலனிய அரசு, இந்திய அரசியல் அமைப்பு அவை, இந்து சட்டத் தொகுப்பு, இந்திய அரசு, வாழ்க்கை வரலாறு. ஒவ்வொரு பெருந்தலைப்பின் கீழும் அம்பேத்கரின் ஆக்கங்கள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் படிக்கும் வாசகர், அம்பேத்கர் எதை (படிநிலை ஏற்றத்தாழ்வு, சாதி, தீண்டாமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி மறுப்பு, சொத்துரிமை மறுப்பு) எதிர்த்துப் போராடினாரோ அதன் மீதான விமர்சனங்களை தொடர்ச்சியுடனும் தொகுப்புடனும் அறிந்து கொள்ளலாம். கூடவே, இந்த சமூகக் கட்டமைப்புக்கு மாற்றாக அரசியல் தளத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க நடத்திய போராட்டங்களையும் அவற்றின் கருத்தியல் அடித்தளங்களையும் அதற்காக உருவாக்கப்பட்ட ஜனநாயக நிறுவனங்களையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அண்ணல் அம்பேத்கர் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி எழுதியவை, அவர் நடத்திய பத்திரிகைகள், நிறுவிய கல்லூரிகள், அறக்கட்டளைகள், அரசியல் கட்சிகள் இவற்றைப் பற்றி அக்கால பத்திரிகைகளிலும் அறிக்கைகளிலும் வெளியான தகவல்கள் ஆங்கிலத் தொகுதிகள் 17-01, 02, 03 ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன (தமிழ் தொகுதிகள் 35, 36, 37). கூடவே, மராத்தியில் தொகுக்கப்பட்டு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கூடுதல் மூன்று தொகுதிகளை (38, 39, 40)யும் பொருத்தமான தலைப்புகளின் கீழ் இணைத்துள்ளோம்.

சமூக மாற்றத்துக்காக பாடுபட்ட ஆளுமைகளின் ஆக்கங்களை இந்த வகையில் தொகுக்கும் திட்டத்தை உருவாக்கியவர் நெறியாள்கைக் குழு உறுப்பினராகவும் பதிப்புக் குழுவின் முதன்மைப் பதிப்பாசிரியராகவும் பணியாற்றும் பேராசிரியர் வீ. அரசு அவர்கள். அவர் ஏற்கெனவே பொதுவுடைமை இயக்கத் தலைவர் தோழர் ஜீவாவின் ஆக்கங்களையும் சென்னை லௌகீக சங்கத்தின் ஆவணங்களையும் இவ்வாறு தொகுத்துள்ளார். மேலும், இப்போது கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகள், காவியங்கள், சிறுகதைகள், நாடகங்கள், சிறார்பாடல்கள், ஆய்வுகள், கட்டுரைகள், தன்வரலாறு ஆகியவற்றையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

இவற்றோடு கூட

-       ஒவ்வொரு பெருந்தலைப்பிலும் இடம் பெறும் ஆக்கங்கள் பற்றி தோழர் எழுதிய அறிமுகக் கட்டுரை ஒன்று அப்பெருந்தலைப்பின் முதல் தொகுதியில் இடம் பெறுகிறது. இவை, குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய ஒரு தொகுப்பான பார்வையை வாசகருக்கு வழங்குகின்றன.

-       அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கையின் முதன்மையான செயல்களை எளிய முறையில் வாசகருக்குக் கடத்தும் வகையில் அவர் எழுதிய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இந்தத் தொகுதிகளில் இடம்பெறுகின்றன.

        இந்தப் பணியில் பேராசிரியர் வீ. அரசு உள்ளிட்டு எட்டு பேர் கொண்ட பதிப்புக்குழு ஈடுபட்டது. மேலே சொன்ன பணிகள் அனைத்தையும் கூராய்வு செய்து மேம்படுத்துவது, அம்பேத்கரின் ஆக்கங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை சரிபார்த்து மேம்படுத்துவது ஆகியவற்றை பதிப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டாகத் திட்டமிட்டு செய்தனர்.

-       ஆக்கங்களின் தமிழ் மொழிநடை இக்காலப் பொருத்தமுடையதாக ஆக்கப்பட்டுள்ளது.

-       மணிப்பிரவாளச் சொற்களும் பிற மொழிச் சொற்களும் இன்றைக்குப் புழக்கத்தில் உள்ள சொற்களாக மாற்றப்பட்டுள்ளன.

-       சிக்கலான வாக்கியங்களும் பத்திகளும் பிரித்து எளிமைப்படுத்தப்பட்டுள்ளன.

-       தொகுதிகளில் இடம் பெறும் ஆளுமைகள், இடங்கள், கருத்துகள் பற்றிய குறிப்புகள் கலைச்சொல் அகராதியாக சேர்க்கப்பட்டுள்ளன.

-       ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படும் விதமாக தொகுதியில் இடம் பெறும் சொற்களின் பக்க எண்களைப் பட்டியலிடும் சுட்டி ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகுதிகளின் அட்டைப் படமாக ஓவியர் மருது அவர்கள் வரைந்த அண்ணல் அம்பேத்கரின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் கோட்டோவியம் இடம் பெறுகிறது. தொகுதிகளின் உள்ளடக்கத்துக்கும் அட்டைக்கும் சிறந்ததொரு வடிவமைப்பை தோழர் பா. ஜீவமணி உருவாக்கித் தந்துள்ளார்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட அம்பேத்கரின் 100 தொகுதிகளையும் வாசிக்கும் ஒரு தமிழ் இளைஞர், அம்பேத்கரின் அரசியலையும் கருத்தியலையும் எளிதாக உள்வாங்கிக் கொண்டு அதனை விமர்சன அடிப்படையில் வளர்த்தெடுப்பது சாத்தியமாகும்.

100 தொகுதிகள் 2025 இல்

முதலில் வெளியாகியுள்ள 10 தொகுதிகளில் சாதியம் பற்றிய 7 தொகுதிகளும் இந்து மதம் பற்றிய 3 தொகுதிகளும் வெளியாகியுள்ளன.

அடுத்து சாதியம் என்ற பெருந்தலைப்பில் எஞ்சிய இரண்டு தொகுதிகளும் இந்து மதம் என்ற தலைப்பில் எஞ்சிய மூன்று தொகுதிகளும் பௌத்தம், காந்தியம், பொருளாதாரம், குடிமைச் சமூகம், காலனிய அரசியல் என்ற தலைப்புகளிலான தொகுதிகளும் வெளியாகின்றன. இறுதியாக, காலனிய அரசு, அரசியல் அமைப்பு அவை, இந்துச் சட்டத் தொகுப்பு, இந்திய அரசு, வாழ்க்கை வரலாறு ஆகிய 5 பெருந்தலைப்புகளில் தொகுதிகள் வெளிவரவுள்ளன.

இந்தியாவில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை மறுக்கும் இந்து மதத் தத்துவத்தின் அடிப்படையிலான சமூகக் கட்டமைப்பைத் தகர்க்க வேண்டும் என்பது அண்ணல் அம்பேத்கரின் முதல் செய்தி. அவரது இரண்டாவது செய்தி அவ்வாறு தகர்க்கப்படும் சமூகக் கட்டமைப்புக்கு இணையாக ஜனநாயக சமூகம் நிலைநாட்டப்பட வேண்டும் என்பது.

இந்த நோக்கத்துக்கான கருத்தியல் ஆயுதங்களை அம்பேத்கரின் ஆக்கங்கள் நமக்குத் தருகின்றன. இந்த மக்கள் தொகுப்பை வாங்கிப் படித்து சமூகத்தை ஜனநாயகப்படுத்துவதற்கான கருத்தியல் வல்லமையை தமிழ்நாட்டு இளைஞர்கள் கைவரப் பெறுவார்கள்; அம்பேத்கரின் கருத்தியலை இன்றைய அரசியல் சமூகச் சிக்கல்களுடன் இணைக்கும் புதிய ஆய்வுகளை முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

மா. சிவகுமார், அம்பேத்கர் மக்கள் பதிப்புக் குழுவின் இணைப் பதிப்பாசிரியர்