தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர்கள் என்னும் முதன்மைத் தலைப்பும் இலக்கியம், இதழ்கள், பதிப்பகம் என வழங்கப்பட்டிருந்த துணைத் தலைப்பும்தான் இப்புத்தகத்தை உடனடியாக வாசிக்கத் தூண்டின. பொருளடக்கத்தில் முப்பத்தொன்று தமிழ்ச் சான்றோர்களின் பட்டியல் காணப்பட்டது. வீரமாமுனிவர், கால்டுவெல், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர், புதுமைப்பித்தன், கல்கி போன்றோர் அனைவரும் தெரிந்தவர்களாக இருந்தனர். அப்பட்டியலின் இடையிடையே காணப்பட்ட ஈஸ்வர சந்திர வித்தியாசாகர், பேராசிரியர் பி.என்.சீனிவாசாச்சாரியார், இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை, மோசூர் கந்தசாமி முதலியார், அரிராம் சேட், அப்பா நா.அருணாசலம், மேகலிங்கம் சுப்பிரமணியன் போன்ற பெயர்கள் அனைத்தும் இதுவரை அறியாத பெயர்களாக இருந்தன. அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தாலேயே ஒரே மூச்சில் இப்புத்தகத்தைப் படித்து முடித்தேன்.
கால்டுவெல் அவர்களைப் பற்றிய கட்டுரை அவருடைய மொழியார்வத்தை முன்வைப்பதிலிருந்து தொடங்குகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் சமயப் பணிக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கால்டுவெல் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கிரேக்கம், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். இந்தியாவுக்கு கப்பலில் வரும் வழியில் சமஸ்கிருத மொழியைக் கற்றுக் கொண்டார். சென்னைக்கு வந்து சேர்ந்ததும் தமிழ்ப் புலவராக இருந்த துருவர் என்பவருடைய இல்லத்தில் தங்கி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டார்.
அதற்குப் பிறகும் அவருடைய ஆர்வம் ஓயவில்லை. அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதற்காகவே சென்னையிலிருந்து நடைப்பயணமாகவே மாயூரம், தரங்கம்பாடி, கும்பகோணம், தஞ்சாவூர் வரைக்கும் சென்றார். சில நாட்கள் அங்கே தங்கியிருந்துவிட்டு, பிறகு நீலகிரிக்குச் சென்று, அங்கிருந்து கோவை வழியாக மதுரையை அடைந்தார். செல்லும் இடங்களில் பல நேரங்களில் அவருக்கு சரியான தங்குமிடம் அமையவில்லை. சில சமயங்களில் சத்திரங்களில் இடம் கிடைக்கும். சில சமயங்களில் இடம் கிடைக்காது. அவருக்கு உணவும் இருப்பிடமும் கொடுக்க பொதுமக்களின் மனத்தில் ஒருவித தயக்கமும் இருந்தது. பல நேரங்களில் மாட்டுத் தொழுவங்களில் தங்கி ஓய்வெடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார். இறுதியாக இடையன்குடி என்னும் ஊரில் நிலையாகத் தங்கி சமயப் பணியைத் தொடங்கினார். காயல் என்னும் இடத்தில் குடில் அமைத்து தமிழாய்வுகளை மேற்கொண்டார்.
கிறித்துவ வழிபாட்டுக்காக தியான மாலை என்னும் நூலை எழுதினார். பதினோராண்டு கால உழைப்புக்குப் பிறகு, பவர் என்பவருடன் இணைந்து எளிய முறையில் பைபிள் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அரசின் உதவியோடு அகழ்வாராய்ச்சி செய்து, அந்த இடத்தில்தான் மண்ணுக்கடியில் கொற்கைத் துறைமுகம் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்து தெரிவித்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை எழுதினார். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பணி புரிந்த கால்டுவெல் 77 வயது வரைக்கும் தமிழகத்திலேயே வாழ்ந்து கொடைக்கானலில் மறைந்தார்.
என்.சீனிவாசாச்சாரியார் என்னும் அறிஞரின் வாழ்க்கை வரலாறு பல திருப்பங்களைக் கொண்டதாக இருக்கிறது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கடல்மங்கலம் என்னும் கிராமத்தில் அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்தார். வறுமையின் காரணமாக அவருடைய பெற்றோர் மைலாப்பூரில் வசித்து வந்த நரசிம்மாச்சாரியாருக்கு தத்து கொடுத்து விடுகின்றனர். சென்னையிலேயே ஒரு பள்ளியில் மெட்ரிகுலேஷன் படிப்பை முடித்துவிட்டு ஆசிரியர் பணியை மேற்கொள்கிறார் சீனிவாசாச்சாரியார். திருமணமும் செய்துகொண்டு குடும்பவாழ்வில் ஈடுபட்டார். அக்காலத்தில் எழுத்தாளரான ராஜம் ஐயர் அவருடைய நண்பர். விவேகானந்தரின் சொற்பொழிவுகளைக் கேட்டு ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு வேலையையும் குடும்பத்தையும் துறந்து திருக்கழுக்குன்றத்தில் துறவியாகத் திரியத் தொடங்கினார் சீனிவாசாச்சாரியார். இதை அறிந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தா அவரைச் சந்தித்து மீண்டும் இல்லறத்தின்பால் திசை திருப்பினார். கல்லூரியில் சேர்ந்து தத்துவத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, கேரளத்திலும் சென்னையிலும் கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றினார் சீனிவாசாச்சாரியார்.
பேராசிரியர் பணிக்கு நிகரான சிரத்தையோடு அவர் இன்னொரு பணியிலும் ஈடுபட்டிருந்தார். அதுவே அவரை பிற பேராசிரியர்களிடமிருந்து வேறுபடுத்தி தனித்துவம் கொண்டவராக சமூகத்தின் முன் நிலைநிறுத்தியது. பேராசிரியர் சாதிமத வேறுபாடுகளைப் பெரிதாகக் கருதாதவர் . அவர் வாழ்ந்த மைலாப்பூர் பகுதியில் யாராவது இறந்து விட்டால், சவ அடக்கத்துக்கு அவர்தான் முதல் ஆளாக நிற்பார். அனாதைப் பிணங்களைத் தோளில் சுமந்துசென்று மயானத்தில் தகனம் செய்வார். தம் வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட அனாதைப் பிணங்களை சீனிவாசாச்சாரியார் தகனம் செய்தார். ஊர் மக்கள் அவருடைய தொண்டுணர்ச்சியைப் பாராட்டி ‘மைலாப்பூர் காந்தி’ என்னும் பட்டப்பெயருடன் அழைக்கத் தொடங்கினர்.
விவேகானந்தரின் தூண்டுதலால் தொடங்கப்பட்ட வேதாந்தகேசரி என்னும் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று தத்துவம் சார்ந்த ஏராளமான கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். மைலாப்பூரிலேயே ஓர் ஆசிரமத்தை நிறுவி, அதையே தன் தங்குமிடமாகவும் நூலகமாகவும் வைத்துக் கொண்டார் பேராசிரியர். ஒருமுறை லேடி சிவசாமி மகளிர் உயர்நிலைப்பள்ளியை விரிவுபடுத்துவதற்காக நிலம் தேவைப்பட்டபோது, பேராசிரியர் தன் ஆசிரமம் அமைந்திருந்த இடத்தை அன்பளிப்பாக வழங்கி விட்டார். பிறகு தன் நூலகத்தையும் ராமகிருஷ்ண மடத்துக்குக் கொடுத்து விட்டார். தாம் எழுதி வெளிவந்த புத்தக விற்பனை உரிமையையும் மடத்துக்கே வழங்கி விட்டார்.
தமிழ்ச் சான்றோர்கள் வரிசையில் எழுத்தாளர் விந்தன் அவர்களுக்கும் இடமளித்திருக்கிறார் நூலாசிரியர். விந்தன் விளம்பரங்களை வெறுத்தவர். கடைசிவரை தனியாக ஒரு புகைப்படம் கூட எடுத்துக் கொள்ளாதவர். எப்போதும் முரட்டுக் கதரணிந்திருப்பவர். புராணத்தத்துவங்கள் அனைத்தும் சரியானவையே என்னும் பார்வையை நிலைநாட்டும் வகையில் இராஜாஜி அவர்கள் பஜகோவிந்தம் என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியபோது, படிப்பவர்கள் சிந்திக்கும் வகையில் பசிகோவிந்தம் என்னும் தலைப்பில் வேகவேகமாக எழுதி ஒரு நூலை வெளியிட்டார் விந்தன்.
இளமையில் பள்ளிப்படிப்பை முடிக்கக்கூட வசதியற்ற சூழலின் விளைவாக பகலில் பொற்கொல்லப்பட்டறையில் வேலை செய்தபடி, இரவு நேரங்களில் இலவசப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றார் விந்தன். அவருக்கு ஓவியக் கலையில் ஆழ்ந்த திறமை இருந்தது. அந்தத் திறமை ஜெமினி ஸ்டுடியோவில் விளம்பரப்பிரிவில் ஒரு வேலையை அவருக்குப் பெற்றுத் தந்தது. பிறகு அச்சகத்தொழிலாளியாக மாறினார் விந்தன். முதலில் தமிழரசு அச்சகத்தில் வேலை செய்தார். பிறகு ஆனந்தபோதினி பத்திரிகைக்கு இடம் மாறினார். அந்த அனுபவத்தோடு ஆனந்தவிகடன் இதழில் வேலைக்குச் சேர்ந்தார். கல்கி இதழ் தொடங்கியபோது, அவ்விதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார் விந்தன்.
விஜி என்னும் புனைபெயரும் கோவிந்தன் என்னும் இயற்பெயரும் கொண்டிருந்த அவருக்கு கல்கி அவர்களே விந்தன் என்னும் பெயரைச் சூட்டினார். பாலும் பாவையும் என்னும் நாவலையும் பல நல்ல சிறுகதைகளையும் எழுதிய விந்தன், பிற்காலத்தில் திரைத்துறைக்குச் சென்று கதைப்பிரிவில் பணிபுரிந்தார். சில படங்களுக்கு வசனமும் பாடல்களும் எழுதினார். தன் சொந்தப் பணத்தை முதலீடாகப் போட்டு மனிதன் என்னும் பத்திரிகையைத் தொடங்கி சிறிது காலம் நடத்தினார். ஏராளமான பொருளிழப்பின் காரணமாக மனமுடைந்திருந்த அவருக்கு சாவி இன்னொரு புதிய வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து நிலைத்து நிற்க உதவியாக இருந்தார்.
வரதராஜனின் கட்டுரை வரிசையில் உள்ள இன்னொரு முக்கியமான பெயர் வ.ராமசாமி. கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வந்தே மாதரம் என முழக்கமிட்டதற்காக கல்லூரி முதல்வரால் தண்டிக்கப்பட்டவர் அவர். சிறு வயதிலேயே பழைய நடைமுறை, பழக்க வழக்கங்களை உதறிவிட்டு புதிய பாதையில் நடக்கத் தொடங்கி விட்டார் வ.ரா. ஒருமுறை அவர் வாழ்ந்த பகுதியில் ஒருவர் இறந்து விட்டார். அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். ஆயினும் அவருடைய பிணத்தை பிறருடன் இணைந்து சுடுகாடு வரைக்கும் வ.ரா.வும் சுமந்து சென்றார். பிராமணர்கள் வசிக்கும் தெரு வழியாக அந்த இறுதி ஊர்வலத்தை அவர் வழிநடத்தி வந்தார். அதனால் அக்கிரகாரத்தில் வசிக்கும் பிற பிராமணர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. வ.ரா. கூறிய நியாயங்கள் எதுவும் அந்த இடத்தில் எடுபடவில்லை. பிற பிராமணர்களால் அவர் உடனடியாக சாதி நீக்கம் செய்யப்பட்டார். பிறரைப்போல சொல் வேறு, செயல் வேறாக இல்லாமல் தான் சொல்வதைத் தானே கடைப்பிடிக்கும் குணம் கொண்ட வ.ரா. சாதியின் அடையாளச்சின்னமாக விளங்கிய பூணூலை அறுத்தெறிந்தார்.
அதன் பிறகு காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு புதுச்சேரிக்குச் சென்றுவிட்டார். தேசபக்தி, பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம் ஆகிய தளங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு உழைத்தார். வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால் ஆறுமாத காலம் சிறைத் தண்டனை அனுபவித்தார். இலங்கையில் வீரகேசரி இதழில் அவர் பணிபுரிந்தபோது, அங்கு சந்திக்க நேர்ந்த ஒரு பஞ்சாபிப் பெண்ணை மணந்து கொண்டார். பாரதியார் பாடல்களை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர்களில் அவரும் ஒருவர்.
தமிழ்ச் சான்றோர்கள் வரிசையில் இடம் பெற்றிருப்பவர்களில் குறிப்பிடத்தக்க இன்னொரு சாதனையாளர் மேகலிங்கம் சுப்பிரமணியன். அவருடைய சாதனை பதிப்பகத் துறை சார்ந்தது. இளம்பிள்ளைவாத நோயால் இரு கால்களும் செயலிழந்த நிலையிலும் தம் அறிவாலும் உழைப்பாலும் உயர்ந்து, இந்தியாவின் முன்னணிப் பதிப்பகங்களில் ஒன்றான நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் செயலாளராகப் பணியாற்றினார். அவர் பள்ளியில் படிக்கத் தொடங்கிய காலத்தில் அவருடைய வீட்டிலிருந்து பள்ளி வரைக்கும் அவரை முதுகில் சுமந்து சென்ற நண்பர்களின் உதவியால்தான் அவர் தன் பள்ளிப்படிப்பை முடித்தார். அவருடைய அன்புக்கும் பேச்சுத் திறமைக்கும் மாணவர்களிடமிருந்து கிடைத்த வெகுமதி அது.
தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரியில் வணிகவியல் படிப்பை முடித்த நிலையில் அவருக்கு சென்னையில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் 120 ரூபாய் சம்பளத்தில் எழுத்தராகப் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தன் உழைப்பு, நேர்மை, திறமை ஆகியவற்றின் காரணமாக பதவிநிலையில் மெல்ல மெல்ல உயர்ந்து பொதுமேலாளரானார். பணிமாற்றலின் காரணமாக உத்தரப் பிரதேசத்திலும் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். புத்தக விற்பனை சார்ந்த ஒரு பயிற்சிக்காக ரஷ்யாவுக்கும் சென்று திரும்பினார். உடற்குறையை ஒரு பொருட்டாக நினைக்காமல் உழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு முன்னோடியாக வாழ்ந்த அவருக்கு இந்திய அரசு மிகச் சிறந்த பணியாளர் என்னும் விருதை அளித்து கௌரவித்தது. கடைசிவரைக்கும் தன் ஊதியத்தில் ஒரு பகுதியை உடற்குறையுற்றோர் கல்வி மையங்களுக்கு அன்பளிப்பாக அளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
வரதராஜனின் கட்டுரைகள் சுருக்கமானவை என்றபோதும் மிக முக்கியமானவை. ஒருவகையில் அச்சான்றோர்களுக்கு அவர் எழுப்பிய நினைவுச் சின்னங்கள் என்றும் சொல்லலாம். இச்சான்றோர்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழைபவர்கள், மேலதிகமான தகவல்களுக்காக தேடிச் செல்லும் வகையில் ஒரு வழிகாட்டி நூலாகவும் இது அமைந்திருக்கிறது.
(தமிழ்த் தொண்டாற்றிய சான்றோர்கள் - வரதராஜன், தாமரை பப்ளிகேஷன்ஸ், அம்பத்தூர், சென்னை- 600098)
- பாவண்ணன்