vanamaali 450பண்ணுதல், பண்படுத்தல் என்ற மூலங்களில் இருந்து புறப்பட்ட பண்பாடு என்ற சொல் பரந்து பட்ட பொருளுடன் பயன்படுத்தப்படுகிறது. பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, செல்நெறிகள், புரிந்துணர்வுகள், வாழ்வியல் வழிமுறைகள், அறிவாராய்ச்சி, கருத்துப் பரிமாற்றம், சமூகக் கட்டமைப்பு முறைகள் ஆகியவற்றைச் சுட்டுகிறது. மொழி, உணவு, இசை, தொழில் ஒழுங்குகள், கருவிகள், சமய நம்பிக்கைகள் போன்றவையும் பண்பாட்டுக்குள்ளாக அடங்கும். மேலும், நடையுடை, பழக்க வழக்கம், நோக்கம், எண்ணம் ஆகியனவும் பண்பாட்டில் அடங்குவன .

இந்நிலையில், மனிதப் பேரினத்தில் ஒரு குழு அல்லது இனம் தன் அளவில் உணர்ந்து வந்தவற்றையும், புறத்தே இருந்து கற்று அறிந்தவற்றையும் கொண்டு, தனக்கு ஏற்றாற்போல இசைவான வழிமுறைகளை அமைத்துப் பின்பற்றுவது அந்தக் குழுவின் அல்லது இனத்தின் பண்பாடு.

ஒரு குழு அல்லது இனத்தின் பண்பாட்டை மாற்றார் மறைப்பது, அழிப்பது, திரிப்பது, அதன் வாயிலாக அந்தச் சமூகத்தின் வளர்ச்சியை முடக்குவது என்பது பண்பாட்டு ஆக்கிரமிப்பு ஆகும். இந்த ஆக்கிரமிப்பு நயமான வடிவத்தில் செய்யப்படுவதுடன், இசைவாக அதிகாரம் செலுத்தி வருவதே பண்பாட்டு அரசியல் எனப்படும்.

இந்நிலையில், தமிழ் இனத்துக்கு உரிய பண்பாட்டை, அதன் விழுமியத்தை, சிதையாமல் காப்பாற்றும் பணியில் வெற்றி கண்டவர்தான் பேராசிரியர் நா.வானமாமலை. அவருடைய வாழ்க்கை, பணியைப் பற்றி எழுதப்பட்டுள்ள நூல் தான், பண்பாட்டுப் போராளி நா.வானமாமலை என்னும் நூல். நா.வானமாமலை அவர்களின் மாணவர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் இந்த நூலை எழுதியுள்ளார்.

‘நாங்குநேரியிலிருந்து கோர்பா வரை’ என்னும் தலைப்பிலான நூலின் முதல் இயல், நா.வா. அவர்களின் தோற்றம் முதல் மறைவு வரையிலான ஒரு சுருக்கக் குறிப்பை வாசகர்களுக்கு வழங்குகிறது.

தமிழ் வைணவர்களின் 108 புண்ணியத் தளங்களில் ஒன்றான நாங்குநேரி எனும் நகரில் நாங்குநேரி கிராம முன்சீப் ஆகப் பணி புரிந்து வந்த நாராயணத் தாதர் (தாதர் என்போர் வைணவக் கோயில்களின் பணிகளில் பிராமணர்களுக்கு உதவும் சாதியினர்; இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்.) என்பாருக்கு 07:12:1917 இல் மகனாகப் பிறந்தவர் நா.வானமாமலை.

திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இண்டர்மீடியெட் வகுப்பில் அறிவியலை விருப்பப் பாடமாக வானமாமலை எடுத்துப் படித்தார். இந்தக் கல்லூரி மாணவப் பருவத்தில்தான் நா.வா. பள்ளிக் கல்விக்கு அப்பால் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பல நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அவர் படித்த ஆங்கில நூல்கள் அவரது ஆங்கில மொழியறிவை மட்டுமன்றி, பல நாடுகளையும், அந்நாடுகளின் மனித மனங்கள், உறவுகள், பண்பாடுகள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள உதவின. அதன் விளைவாக, அவரது சிந்தனைவெளி விரிந்தது .

நா.வா. இரசாயனத்தை விருப்பப்பாடமாக எடுத்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

நா.வா.வின் கல்லூரிக் கல்விக் காலம் தமிழ் மண்ணில் இந்திய விடுதலை இயக்கம் வலிமையாகத் தடம் பதித்த காலம். மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களிடையே காங்கிரசின் தாக்கம் பரவத் தொடங்கியிருந்தது. இதனால், நா.வா.வின் மனத்தில் விடுதலை உணர்வு அழுத்தமாகப் பதிந்தது . திருநெல்வேலி வாழ்க்கை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் புலமையை உருவாக்கியது என்றால், மதுரை கல்லூரி வாழ்க்கை தேசிய உணர்வை அவருள் விதைத்தது.

பின்னர், நா.வா. சென்னையில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து, பட்டம் பெற்றார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சிக் கழகப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்வாறே நாங்குநேரி, கோவில்பட்டி, தென்காசி ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளில் அவர் பணியாற்றினார்.

ஆசிரியராகப் பணிபுரிந்த போதுதான் தேசிய இயக்கச் சிந்தனையிலிருந்து பொதுவுடைமைச் சிந்தனைக்கு அவர் ஈர்க்கப்பட்டார்.

இவ்வாறாக, பொதுவுடைமைச் சிந்தனையாளராக வளர்ந்த பேராசிரியர் நா.வா. தன் முயற்சியில் தனிப்பயிற்சிக் கல்வி நிலையத்தை நடத்தியது, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் (1968) கலந்து கொண்டது, ஆய்வுப் பணிகள் செய்தது எனச் சென்று, இறுதியில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்பா என்னும் ஊரில் 02, பிப்ரவரி, 1980 அன்று அவர் அமரர் ஆனது வரையிலான நிகழ்ச்சிகளைக் கொண்டு, இந்த முதல் இயலை நிறைவு செய்துள்ளார், நூலாசிரியர்.

அடுத்து, நெல்லை ஆய்வுக் குழு என்று தொடங்கும் இரண்டாவது இயல் பேராசிரியர் நா.வா. அவர்களின் முக்கிய பணிகளுள் ஒன்றான நெல்லை ஆய்வுக் குழு தொடக்கப் பணிகளைப் பற்றியது.

முற்போக்குச் சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் எழுத்தாளர் குழு ஒன்றை உருவாக்க நா.வா. விரும்பினார் . பிறந்த நாள் கொண்டாடும் பழக்கமே இல்லாத அவர் 1967, டிசம்பர் ஏழாம் நாளில் - அதாவது, தமது ஐம்பதாவது பிறந்த நாளன்று அவரது மேற்படி விருப்பத்தை நிறைவேற்றினார். எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த நண்பர்களையும், தோழர்களையும் அழைத்தார்.

அதன்படி, முதன்முறையாக, அவரது வீட்டு மாடியில் 07-12-1967 அன்று ஏறத்தாழ பத்து நண்பர்கள் வரை கூடிய கூட்டம்தான் பின்னாளில் ‘நெல்லை ஆய்வுக்குழு’ என்று பெரும் பெயர் பெற்றது.

1968-ஆம் ஆண்டு சி.சு.செல்லப்பா வெளியிட்ட ‘புதுக்குரல்கள்’ என்ற கவிதைத் தொகுப்பை மையமாகக் கொண்டு ‘புதுக்கவிதைகளின் உள்ளடக்கம்’ என்ற தலைப்பில் ஆய்வுக்குழுவில் ஆய்வுக் கட்டுரை ஒன்றைப் படித்தார்.

அதில், அவர், “இவர்களது சோக ஓலங்களும், நம்பிக்கை வறட்சி ஒப்பாரியும், சாவுக் காதல் கீதங்களும், வாழ்க்கை மறுப்புப் பாடல்களும், நல்வாழ்வுக்காக நம்பிக்கையோடு போராடும் மக்களுக்குச் சிறிதும் தேவையற்றவை. இவர்களுடைய புதுக்கவிதைகளில் புதுமையுமில்லை; கவிதைத்தன்மையுமில்லை; புரட்சியுமில்லை. இது வாழ்க்கைக்குப் பயந்து சாவை விரும்பும் பலவீன மனிதர்களது கூக்குரல்தான்” என்று குறிப்பிட்டிருந்தார்.

நூலாசிரியரின் கூற்றுப்படி, புதுக்கவிதை என்ற புதிய இலக்கிய வகைமை மீது நா.வா. பகைமை பாராட்டவில்லை. இவ்வாறு, ஒரு புதுக்கவிதைத் தொகுப்பின் உள்ளடக்கத்தை எதிர்த்த அவர் பின்னர் கவிஞர் மீராவின் “கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள்” என்ற புதுக்கவிதை நூலைப் பாராட்டி நெல்லை ஆய்வுக் குழுவில் கட்டுரை படித்ததாகவும், இந்நூலில் கூறியுள்ளார் .

ஆக, மார்க்சிய இலக்கியங் களைத் தெளிவாகக் கற்றுத் தேர்ந்து, பொதுவுடைமை இயக்கத்துடன் தம்மை இணைத்துக்கொண்ட பேரா. நா.வா. 1960-கள் தொடங்கி, தொடர்ந்து, புதுக்கவிதைகள் தமிழ் கூறும் நல்லுலகில் ஆற்ற வேண்டிய பணி என்ன என்பதைத் தெளிவாக வலியுறுத்தி வந்தார். அதற்கு, தாம் நிறுவிய நெல்லை ஆய்வுக் குழுவை மிகத் துல்லியமாகப் பயன்படுத்தினார் .

எந்த இலக்கணத்தை, எந்த அழகியலைத் தழுவி நிற்கும் கவிதை என்றாலும், அந்தக் கவிதை முற்போக்குக் கொள்கைப் பிரசாரத்துக்குதான் பயன்படுத்தப்பட வேண்டும்; ‘கலை கலைக்காகவே’ என்ற சொல்லாடலை மழுங்கச் செய்ய வேண்டும் என்பதில் பேரா. நா.வா. மிக முனைப்புடன் செயல்பட்டார்.

‘ஞ்மிக எளிமையான அமைப்பாக நெல்லை ஆய்வுக் குழு செயல்பட்டு வந்தது. சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் வாழ்ந்து வந்த அறிவுத் தாகம் கொண்டோரை ஒன்றாக இணைத்து, பல்துறை அறிவு சார்ந்த செய்திகளைக் குறித்து அறிந்துகொள்ளச் செய்ததுடன், அவை குறித்து விவாதிக்கவும், எழுதவும் தூண்டினார்’ என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ள வரிகளின் மூலம் பேராசிரியரின் ‘நெல்லை ஆய்வுக்குழு’ பணியை நாம் ஒருவாறாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

1968 தொடங்கி 1979 வரை பன்னிரண்டு ஆண்டுகள் செயல்பட்டு வந்த ‘நெல்லை ஆய்வுக்குழு’ பல புதிய ஆய்வாளர்களையும், ஆழமான வாசிப்பார்வம் கொண்டவர்களையும் உருவாக்கியுள்ளது. பல்கலைக்கழகம் போன்றதோர் அமைப்பு செய்ய வேண்டிய இந்த மகத்தான பணியை பேரா.நா.வா. தனியரு மனிதனாகச் செய்து நிறைத்தது, தமிழ் மண்ணுக்கு அவர் செய்த செந்தொண்டு.

நெல்லை ஆய்வுக்குழுவில் படிக்கப்பட்ட பல நல்ல கட்டுரைகளை அச்சில் வெளியிடும் வாய்ப்பு இல்லாமல் போனது, நா.வா.வின் மனத்தில் பெரு நெருடலாக அமர்ந்து விட்டது.

அந்த நெருடலின் விளைவு தான் ‘ஆராய்ச்சி’ என்ற பெயரில் காலாண்டு இதழ் 1969 ஜூலையில் வெளியானது.

ஆராய்ச்சி இதழில் வெளியான பயன்மிகு கட்டுரைகள் அந்த இதழோடு முடங்கி விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி, கட்டுரைகளைத் தொகுத்து நூல்களாக வெளியிட்டார் நா.வா. அவ்வாறு வெளிவந்த நூல்களுள் ‘தமிழர் பண்பாடும் தத்துவமும்’ (1973), ‘பழங்கதைகளும் பழமொழிகளும்’ (1980) ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை.

இளநிலை எழுத்தாளர்களும், மூத்த எழுத்தாளர்களும் ‘ஆராய்ச்சி’ இதழ்களில் கட்டுரைகளை எழுதி வந்தனர்; முற்போக்கு இலக்கியத் தளம் விரிந்தது. அந்தத் தளத்தில் பயிற்சி பெற்றோர் ஏராளமானோர்.

அடுத்து, ‘தமிழக நாட்டார் வழக்காற்றியலின் தந்தை’ என்றோர் இயல் இடம்பெற்றுள்ளது . மொழிபெயர்ப்பு, வரலாற்றாய்வு, இலக்கியத் திறனாய்வு, அறிவியல் நூலாக்கம், தத்துவம் எனப் பல்துறைகளுக்கு நா.வா. பணியாற்றினாலும், நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு அவர் அளித்த பங்களிப்பு ஈடு இணை அற்றது.

1960- இல் வெளிவந்த ‘தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்’, 1961-இல் வெளியான ‘தமிழர் நாட்டுப்பாடல்கள்’ ஆகியவையும் பேரா.நா.வா.வின் நாட்டார் வழக்காற்றுச் செம்பணியை நமக்கு என்றென்றும் நினைவூட்டக்கூடியவை.

1961 முதல் 1972 வரை, கட்டபொம்மன் கதைப்பாடல் (1961), வீணாதி வீணன் கதை (1967), வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் (1971), முத்துப்பட்டன் கதை (1971), காத்தவராயன் கதைப்பாடல்(1971), கட்டபொம்மு கூத்து (1972), கான்சாகிபு சண்டை (1972), ஐவர் ராசாக்கள் கதை (1972)  ஆகிய கதைப்பாடல்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

இவற்றுள், கட்டபொம்மன் கதைப்பாடலின் (1961) முன்னுரையில் வரலாற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்று பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“சரித்திரம் வீரர்களால் ஆக்கப்படுகிறது என்று சிலர் கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் கற்பனையில் சரித்திர வீரர்களைச் சந்தர்ப்பத்துக்கும் சூழ்நிலைக்கும் அப்பாற்பட்டவர்களாகக் கருதுகிறார்கள். இருவருடைய கற்பனைகள் ஒன்று போலிரா. ஆகவே, ஒருவர் யாரை வீரனாகக் கருதுகிறரோ அவனே மற்றவருக்குக் கோழையாகத் தோன்றலாம். ஆகவே, இருவரும் தங்கள் தங்கள் வீரருக்காகக் கச்சை வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடத் தொடங்குகின்றனர். சரித்திரத்தை இம்முறையிலெல்லாம் பார்ப்பது முழு உண்மையைக் காண்பதாகாது.”

“சரித்திரத்தையும், சரித்திர நிகழ்ச்சிகளையும், சரித்திர வீரர்களையும் சரியான முறையில் பார்ப்பதற்குச் சரித்திரக் காலகட்டத்தையும், அப்பொழுது இருந்த சமூக அமைப்பையும், அச்சமூகத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களின் தொடர்புகளையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.”

காத்தவராயன் கதைப்பாடல் (1971) நூலுக்கான முன்னுரையில்,

“நாட்டுப்பாடல் கதைகளைப் படிக்கும்போது, நாட்டுப் பாமர மக்கள் கண்ணோட்டத்தில் யாரைக் கதைத் தலைவர், தலைவியராகக் கொள்ளுவார்கள் என்பதை மனத்தில் கொண்டு, அவர்களது விடுதலை ஆர்வத்தையும் மனத்தில் கொண்டு கதைக் கருவினைப் பிரித்தறிய வேண்டும். பாமர மக்களின் சிந்தனைகளை அடிமைப்படுத்தும் முயற்சிகளை எடுத்துக்காட்ட வேண்டும். ஆராய்ச்சியாளர்கள் முயன்றால் கதைப்பாடல்களில் நாட்டு மக்கள் படைப்பான பகுதியையும், அதற்கு முரணான இடைச்செருகல்களையும் எளிதில் அறியலாம்”

என்று பேராசிரியர் நா.வா. எடுத்தியம்புகிறார்.

மேற்கண்ட இரண்டு முன்னுரைகளிலும் கூறியுள்ள முறைகளைத் தாமும் பின்பற்றி, பிறரும் பின்பற்ற வேண்டும் என்று ஆற்றுப்படுத்தினார் .

“நா.வா. தமிழக நாட்டார் வழக்காற்றியலின் தந்தை என்று அழைக்கப்படுவதர்கு அடிப்படைக் காரணம், இத்துறையில் இவருக்கு முன்னரும், இவரது சம காலத்திலும் பணியாற்றிய அறிஞர்கள் பின்பற்றி வந்த அணுகுமுறையிலிருந்து வேறுபாடான ஓர் அணுகுமுறையை இவர் மேற்கொண்டது தான். ரசனை அணுகுமுறையிலிருந்து விலகி, சமூகவியல் வரலாற்றுப் பார்வையில் நாட்டார் வழக்காற்றுத் தரவுகளை ஆராயும் அணுகுமுறையை அவர் தொடங்கி வைத்தார். நாட்டார் பாடல்கள், கதைகள் என்பனவற்றுடன் நின்று விடாமல் நாட்டார் வழக்காறுகளின் பல்வேறு வகைமைகளைக் குறித்தும் ஆராய்வதன் அவசியத்தை உணர்த்தி வந்தார். தமிழ்நாட்டின் உண்மையான சமூக வரலாறு எழுதுவதற்கான தரவுகள் நாட்டார் வழக்காறுகளில் புதைந்து கிடப்பதைச் சுட்டிக்காட்டினார்”

என்று இந்நூலில் குறிப்பிட்டுள்ளார், நூலாசிரியர்.

நா.வா. எழுதிய ‘Studies in Tamil Folk Literature’ என்னும் நூல் இந்தியாவின் நாட்டார் வழக்காறு, நாட்டார் இலக்கியம் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கியப் பங்களிப்பாக உள்ளது. இந்த நூலுக்கு 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு கிடைத்தது.

இவ்வாறு நாட்டார் வழக்காற்றியலிலும், பிற முற்போக்கு இலக்கியப் பணிகளிலும் செம்மையாகப் பணியாற்றிய பேராசிரியர் நா. வானமாமலை அவர்களின் மாண்பைப் பற்றி, அவரது 60-ஆவது ஆண்டு பிறந்த நாள் வேளையில் கம்யூனிஸ்ட் மூத்த தோழர் ப.மாணிக்கம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

“கம்யூனிஸ்ட் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு முறையான கல்வியைத் தரவும் அவர் தயங்கியதில்லை. பல கம்யூனிஸ்ட் ஊழியர்கள், தங்கள் பிள்ளைகளைச் சரிவர கவனிக்க முடியாது கடந்த காலத்தில் செயல்பட்டுள்ளனர். அச்சந்தர்ப்பங்களில் அவர்களது பிள்ளைகளுக்குக் கல்வி தந்து தேர்வில் வெற்றி பெற உதவியுள்ளார். கட்சி ஊழியர்களின் பிள்ளைகளின் மீதும் அவர் காட்டிய அக்கறை மிகச் சிறந்த கம்யூனிஸ்ட் பண்பு ஆகும். கம்யூனிஸ்ட் ஊழியர்களின் குடும்பங்களுக்கும் அவரால் முடிந்த போதெல்லாம் உதவியுள்ளார்.”

மொத்தத்தில், தமிழகப் பண்பாட்டு வேர்களைக் கண்டறிந்து, அவற்றைச் செழிக்கச் செய்த மாமனிதன் நா.வானமாமலையின் பண்பு நலன்களும், அவரால் தமிழ்ச் சமூகம் படிப்படியாகப் பெற்ற செம்பலன்களும் மிக எளிமையாக இந்த நூலில் பதியப்பெற்றுள்ளன.

பாண்பாட்டுப் போராளி நா.வானமாமலை
ஆ.சிவப்பிரமணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
சென்னை.
விலை.70/-

Pin It