சென்னைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.வீ.அரசுவின் எழுபதாம் ஆண்டு அகவை நிறைவையொட்டி ‘ஓர்மைத்தடம்’ என்கிற நூல் வெளியாகியுள்ளது. அவரிடம் பயின்ற மாணவர்கள் அவரை நேர்காணல் செய்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பேராசிரியர் கல்விப் புலத்தில் எப்படிப் பணியாற்ற வேண்டும் என்று இந்நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது. இந்நூலை முழுமையாக வாசிக்கிற ஒருவர், பேரா.அரசு என்பவர் கல்விப் புலத்தில் எப்படியானவராகத் திகழ்ந்தார்? அவரின் கல்விப்புலச் செயல்பாடுகள் எப்படியாக அமைந்தன? அவரிடம் பயின்ற மாணவர்களை அவர் எப்படியாக நெறிப்படுத்தியிருக்கிறார்? என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
சமூகநீதி, இடதுசாரி அரசியல் தேர்ச்சியுள்ள ஒருவர், பல்கலைக்கழகம் போன்ற உயராய்வு நிறுவனங்களில் தொடர்ச்சியாகக் குறிப்பிட்ட சில ஆண்டுகள் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்று, சமூகநீதி சார்ந்தும், சனநாயகத்தன்மையோடும் மாணவர்களை நடத்தியிருக்கிறார் என்பதையே இந்நூல் உணர்த்துகிறது. கட்டுக்கோப்பான அரசியல் தொலைநோக்குள்ள ஒருவராலேயே இப்படியாக இயங்க முடியும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.
சமூகநீதியும் சுயமரியாதையும்
ஏற்கெனவே தமிழ்நாட்டின் மாநில அளவில் சமூகநீதிக் கூறுகள் அனைத்து முனைகளிலும் வேரூன்றியுள்ளது என்ற போதும் பல்வேறு சமூகப் பின்புலத்துடன் இளங்கலைப் படிப்பை முடித்து சென்னை போன்ற பெருநகரத்தின் பல்கலைக்கழகத்திற்குள் முதுகலை பயில வரும் மாணவர்களின் சேர்க்கையை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கும், தன்னிடம் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்களை எப்படித் தேர்வுசெய்ய வேண்டும் என்பதற்கும் அவர் காட்டிய கூடுதல் கவனம் சமூகநீதிச் செயல்பாட்டுத் தளத்தில் அடையாளக்கல்லாக அமைந்திருக்கிறது.
பழைய குருகுல வர்ணாசிரம முறையியிலேயே இன்றைக்கும் பல ஆய்வு நிறுவனங்கள் இருக்கின்றன. அதன் நவீன வடிவமாகச் சாதியும் பணமும் இன்றைக்கு மாறியிருக்கின்றன. அதற்கு இந்த ஊழலில் ஊறி உப்பிய நிர்வாக அமைப்பு முறையும் காரணமாக இருக்கிறது. இதுகுறித்தும் ஊடிழைப் பாவாக இந்நூலில் பேசியிருக்கிறார். ஆய்வை நெறிப்படுத்துகிற நெறியாளர் தன்னுடைய சாதியைச் சார்ந்தவர்களை மட்டுமே சேர்ப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியினரைச் சேர்ப்பதில்லை என்றிருப்பது, பணத்திற்காக உதவித்தொகை பெறும் மாணவர்களை மட்டுமே சேர்ப்பது, பணம் கொடுத்தால் ஆய்வேட்டை ஒப்படைத்த பத்து நாளில் பொதுவாய்மொழித் தேர்வை நடத்துவது, ஆய்வேட்டை ஒப்படைத்துவிட்டுப் பணம் கொடுக்க முடியாது என்போருக்குச் சில ஆண்டுகள் கழித்தே பொதுவாய்மொழித் தேர்வை நடத்துவது என்கிற சூழலே இன்றைக்கு நிலவுகிறது.
இப்படியான சூழலில், உயர்கல்வி நிறுவனங்களில் அதுவும் ஆய்வுச் சூழலில் மாணவர்களை எப்படி அவர்களது சுயமரியாதையை உணரச் செய்வது?, அந்த அடைவோடு அவர்களை ஆய்வு அடிப்படையில் இயங்கவைக்க எப்படிச் சூழலை வடிவமைப்பது?, சமூக விஞ்ஞான அடிப்படையிலும் வரலாற்று ஓர்மையோடும் விமர்சனப்பூர்வமாக எப்படிப் பதிப்பு, தொகுப்பு சார்ந்து ஆர்வங்கொள்ள வைப்பது? என்பதிலெல்லாம் மிகுந்த அக்கறைகாட்டியவராக விளங்கியிருக்கிறார். முதுகலை முதலாண்டு மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடமெடுக்கத் தொலைநோக்கோடு தயாரிப்பதில் தொடங்கி அவருடைய கல்விப்புலச் செயல்பாடுகள் ஒவ்வொன்றுமே அடுத்த தலைமுறைப் பேராசிரியர்களுக்கான ‘ஓர்மைத்தடமாக’ இருக்கின்றன.
தமிழ்ச் சமூக வரலாறே தமிழ்க் கல்வி
யார் யாரெல்லாம் படிக்கும் வாய்ப்பை இன்றியமையாது பெற வேண்டும்?, அவர்கள் எவ்வெவற்றை, எந்தக் கண்ணோட்டத்திலிருந்து படிக்க வேண்டும்? என்கிற ஓர்மையோடு காத்திரமான பாடத்திட்டத்தை உருவாக்குவதிலும் தலையீடு செய்திருக்கிறார். அதில், தமிழ் இலக்கியப் பாடத்திட்டம் என்பது வெறும் மனப்பாடக் கல்வியாக அமைந்துவிட்டால் அது இறந்த காலத்தின் நீட்சியே ஆகும்; அதை ஒரு கால, இடப் பரிமாணத்தில் பொருத்தி அமைக்க வேண்டும் என மெனக்கெட்டிருக்கிறார். பேராசிரியர் ந.சஞ்சீவி, பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் ஆகியோரின் முன்னெடுப்புகளை உள்வாங்கி, பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடன் சேர்ந்து தமிழ் இலக்கிய, இலக்கண மரபு, தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, ஊடக வரலாறு எனப் பன்முகத்தன்மையோடு தமிழ்ச் சமூக வரலாற்றின் ‘யாதுமாகி நிற்கும்’ தமிழியல் கல்வியாகப் புதுப்பிக்க முனைந்து பாடுபட்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, புலம்பெயர் இலக்கியத்தையும், தமிழ்ஒளியின் படைப்புகளையும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திற்குள் கொண்டுவந்ததில் பேரா.அரசுவின் பங்கு முக்கியமானது.
பேரா.அரசு உருவாக்கிய பல்கலைக்கழகப் பாடத்திட்டமும், பேரா.சுதந்திரமுத்து, பேரா.மருதூர் அரங்கராசன் ஆகியோரோடு இணைந்து தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்காக உருவாக்கிய முதுநிலைத் தமிழியல் பாடத்திட்டமும் இந்நூலில் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்க்கல்வி சார்ந்த பாடத்திட்டம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இவை அமைந்துள்ளன. தமிழ் இலக்கியங்களோடு மொழியியல், மானிடவியல், நாட்டார் வழக்காற்றியல், தொல்லியல், சுவடியியல், கல்வெட்டியல் எனப் பல்வேறு புலங்களை இணைத்து கலப்புப் புல ஆய்வு நோக்கில் அமைத்திருக்கிறார். பொதுவாக தமிழியல் ஆய்வு என்பது பல்வேறு புலங்களையும் இணைக்கிறபோதே செழித்து வளரும் என்பதை இன்றைக்குப் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். வெவ்வேறு புலங்களையும் பட்டயப் படிப்பாக அறிமுகம் செய்து முதுகலை பயில்கிற அதே கால எல்லைக்குள் ஒன்றிரண்டு பட்டயப் படிப்புகளையும் முடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் இலக்கிய - இலக்கணங்களை வரலாற்றுச் சட்டகத்துக்குள் வைத்து அணுகுதல், ஒப்பாய்வை அடிப்படையாகக் கொள்ளுதல், மெய்யியல் மரபுகளை அவற்றோடு இணைத்தல், சமூகப் பண்பாட்டு வரலாற்றை வரம்பெல்லையாகக் கொண்டு பயிலுதல் - களம்புகுதல் - கோட்பாட்டாக்கம் செய்ய முயலுதல் ஆகிய நோக்கில் ஒரு கற்கைக்கொத்தாக அந்தக் கல்விக்களம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தொல்காப்பிய ஆராய்ச்சியை நிகழ்கால நோக்கில் எப்படி நீட்டிப்பது? அதன் தொடர்ச்சியை வரலாறாக எப்படிப் புரிந்துகொள்வது? செவ்வியல் வரையறையில் அதன் சமகாலத் தேவை என்ன? மொழியியல், மெய்யியலில் அதன் பங்கு என்ன? ஓர் இலக்கியக் கோட்பாடாக அதை எப்படிப் படிப்பது? மானிடவியல், சமூகவியல் நோக்கில் அதை எப்படிப் பொருள்கோடல் செய்வது என்கிற பன்முகநோக்கில் அவரால் தொல்காப்பியப் பாடம் உருவாக்கப்பட்டதும், அதற்குப் பழமைவாதத் தமிழ்ப் பேராசிரியர்கள் எப்படி எதிர்வினையாற்றினர் என்பதும், கல்விப்புலத்தில் தமிழ்க் கல்வியின் நிலையை விண்டுரைப்பதாகவே அமைந்துள்ளது.
பார்வையை விசாலமாக்கியவர்
வகுப்பறைகளுக்கு அப்பால் மாணவர்களின் படைப்பாக்கத் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் ஒவ்வொரு மாதமும் ‘மேடை’ என்கிற நிகழ்வை நடத்தி, அதில் மாணவர்கள் அனைவரின் பங்கேற்பையும் உறுதிசெய்கின்றனர். இதனால் மேடை அச்சம் நீக்கப்பட்டு, கேள்விகளை எழுப்புமாற்றலும், எதிர்கொள்ளும் உரையாடல் திறனும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை ஒவ்வொரு பொது, ஆய்வு நூலகங்களுக்கும் அழைத்துச் சென்று நூலகப் பயன்பாடு குறித்தும், எந்தெந்த அரிய நூல்கள், இதழ்கள் எந்தெந்த நூலகங்களில் இருக்கின்றன என்பது குறித்தும் அறிமுகப்படுத்தி நூலகப் பயன்பாட்டை அறிமுகம் செய்திருக்கிறார். நீட்சியாக, திருவல்லிக்கேணி பழைய புத்தகக் கடைகளில் வரும் அரிய நூல்களை வாங்குவதில் அவருக்கும் அவருடைய மாணவர்களுக்கும் இடையேயான போட்டி, பல்கலைக்கழக நூலகங்களிலிருந்து நூல்களை ‘எடுத்துச்’ சென்று அவரவர் வீடுகளில் நூலகம் அமைத்தல், பேராசிரியர்கள் அதைக் கண்டுபிடித்து நூல்களைத் திரும்பப் பெற்றல் போன்றவை மாணவர்களிடையே அவர் உருவாக்கிய புத்தக ஆர்வத்தை வெளிப்படுத்துபவையாக அமைந்துள்ளன. இந்த முன்னெடுப்பே அவருடைய மாணவர்களையும் அவரவர் வீடுகளில் நூலகம் அமைக்கும் வேட்கை கொள்ள வைத்துள்ளது. இதில் அக்கம் பக்கமாக வளர்ந்து கொண்டிருந்த சென்னைப் புத்தகக் காட்சி மிகப்பெரும் பங்கு வகித்திருக்கிறது என்பதையும் இந்நூல் உணர்த்துகிறது.
அதேபோல ‘கங்கு’ எனும் பெயரில் வெளியூர் பயணத் திட்டமிடல்களை மாணவர்களை வைத்தே ஒருங்கிணைத்து, அவர்களைக் களம்புகுந்து சிந்திக்கும் வகையில் ஒழுங்கு செய்திருக்கிறார். அதில் அந்தமான் பயணத்தை முடித்துத் திரும்பி வரும்போது அவர் செய்த செயல் என்பது பெரும் வியப்பைத் தருவதாக அமைந்துள்ளது.
தமிழ்த்தேசிய நவீன நாடக மரபு
தமிழ்க்கல்வி பயில்வோர் வெறும் இலக்கியக் கல்வியோடு நின்றுவிடக் கூடாது என்பதில் மிகுந்த முனைப்புக் காட்டிய பேரா.வீ.அரசு, ‘திரைவெளி’ என்கிற திரையிடல் நிகழ்வையும் நடத்தி, அதையொட்டி உரையாடல் மேற்கொள்ளவும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறார். அப்படியான பல்துறைத் தேடலில் நவீன நாடக மரபு சார்ந்து ஆர்வமுள்ள மாணவர்களை உருவாக்கியது மிக முக்கியமானதாக இருக்கிறது. தீவுத்திடலில் நடைபெற்ற கூத்துப்பட்டறை நிகழ்வுகள், கூத்துகள் பற்றி அன்றைக்குச் சிற்றிதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், பேரா.சிவத்தம்பி வாயிலான இளைய பத்மநாதனின் அறிமுகம் போன்றவையே தமிழ் மரபு ஓர்மையுடன் கூடிய நவீன நாடகங்களை நோக்கி பேரா.அரசுவை மடைமாற்றியிருக்கின்றன. தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கூத்துகளும், தென்மாவட்டங்களில் நாடகங்களும் விளிம்புநிலை மக்கள் பண்பாட்டில் இன்றைக்கும் விரவிப்பரவி இருக்கின்றன. அதிலும் வடமாவட்டங்களைச் சார்ந்த கிராமப்புற மாணவர்களே சென்னைப் பல்கலையில் அதிகம் பயின்றதால் இலக்கியத்துறைக்குள் நிகழ்த்துக் கலை மரபு சார்ந்த நவீன நாடக முன்னெடுப்புகளும், அதையொட்டி கூத்து பற்றிய கல்வியியல் ஆய்வுகளும் தீவிரப்பட்டுள்ளன.
இந்நூலில் பேரா.வீ.அரசு, ‘‘பத்தண்ணா (இளைய பத்மநாதன்) இல்லாவிட்டால் மங்கை இல்லை. மங்கை இல்லாவிட்டால் இன்குலாப் நாடகம் இல்லை. இன்குலாப் நாடகங்களை இவர் செய்யாவிட்டால் இன்குலாப் ஒரு நாடகக்காரராக அறியப்படுவதற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும்’’ (ப.246) என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், ‘‘தமிழ்நாட்டுச் சூழலில் நான் ஒரு நாடகக்காரன் என்பது மங்கை மூலமாகவே வெளியில் தெரிந்தது. இல்லாவிட்டால் யாரும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள். என்னைக் கவிஞன், கவிஞன் என்றே சொல்கிறார்கள். எனக்குச் சிறுவயதிலிருந்தே மிக ஆர்வமுடைய துறையாக நாடகத்துறையே இருந்தது’’ (ப.246) என்று மக்கள் கவிஞர் இன்குலாப் அடிக்கடிச் சொன்னதாக பேரா.அரசு குறிப்பிட்டிருக்கிறார். கவிஞர் இன்குலாப் அவர்களின் நாடகங்களோடு, நாடகம் - கூத்து - கானா பாடல்கள் என அவரும் பேரா.அ.மங்கை அவர்களும் இணைந்து நடத்திய அனைத்துச் செயல்பாடுகளுமே சமூக அக்கறையுடன் அமைந்திருக்கின்றன.
கருவி நூல் பல உருவாகக் காரணமானவர்
பேராசிரியர்களுக்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தொளிப் பயிற்சிகளுக்கு மாணவர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார். தமிழ் இதழ்கள், 19, 20ஆம் நூற்றாண்டுத் தமிழியல், 10 - 20ஆம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாறு, ஆவணங்கள், செம்மொழித் தமிழ் ஆகிய பொருண்மைகளில் நடத்தப்பட்ட புத்தொளிப் பயிற்சிகளுக்கான கையேடுகளையும் மாணவர்களே வைத்தே உருவாக்கியிருக்கிறார்.
ஒரு பேராசிரியர் தன் மாணவர்களை ஆய்விதழ் நடத்தப் பயிற்றுவித்து, அதில் அவர்களையே எழுதவும் வைத்துக் ‘கட்டியம், உயராய்வு, மாற்றுவெளி (15 சிறப்பிதழ்கள்)’ போன்ற இதழ்களை நடத்தியிருக்கிறார். பதிப்பு நூல்களையும் தொகுப்பு நூல்களையும் வெளிக்கொண்டுவரத் தன் மாணவர்களை ஆற்றுப்படுத்தி வெளிக்கொண்டும் வந்திருக்கிறார். கங்கு, மாற்று வரிசை நூல்கள், நெய்தல், முல்லை, மருதம், குறிஞ்சி, பாலை, வெட்சி, கரந்தை, வஞ்சி போன்ற தொகுப்பு நூல்கள் அனைத்தும் பேரா.அரசுவின் மேற்பார்வையிலேயே வெளிவந்திருக்கின்றன. இவை அனைத்தும் இன்றைக்கு உயராய்வு நிறுவனங்களில் சடங்காகச் செய்யப்படும் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்புகளைப் போலானவையல்ல. மாறாக, அனைத்துமே கருத்தியல் செறிவுள்ள காத்திரமான ஆய்வுப் பணிகள். இந்த இதழ்கள், நூல்கள் அனைத்துமே பிற ஆய்வுகளுக்கான கருவி நூல்களாகத் திகழ்கின்றன.
பேரா.அரசு அவர்கள் தன் இருப்பிடத்தில் உருவாக்கியிருக்கிற ‘கல்மரம்’ நூலகத்தை நேரில் பார்க்கிற ஒருவருக்குக் கண்டிப்பாக மனித செயலாற்றல் குறித்த வியப்பும் மலைப்பும் மேலிடும். அங்கிருக்கும் நூல்கள், இதழ்கள் அனைத்தும் ஒரு தனிமனிதருடைய ஐம்பது ஆண்டுகாலச் சேகரிப்புகள் ஆகும். ஆய்வாளர்கள் பயன்படுத்த வேண்டிய நூலகம். அரிய பல சேகரிப்புகளை உள்ளடக்கிய நூலகமாகவும் அமைந்துள்ளது. இந்நூலில் அந்த நூலகம் உருவான பின்புலம் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நூலகத்தில் உள்ள சேகரிப்புகளின் முக்கியத்துவத்தை உணர்த்த அது மட்டுமே போதுமானதாக இல்லை.
வரலாறெழுதியலாக மாற்றியவர்
இவற்றிற்கு அப்பால் பேரா.அரசுவின் ஆக்கங்கள் குறித்து மட்டுமே தனியாக ஒரு நூல் கொண்டுவர வேண்டும். ஏனெனில் அவருடைய ஆக்கங்கள் அனைத்துமே மார்க்சிய, பெரியாரியப் பார்வையில் வரலாற்று நிலையில் மிகத் தெளிவான அவைதீகத் தடத்தில் அமைந்தவை. பதிப்பு, தொகுப்பு, தனிநூல்கள் என ஒவ்வொன்றையும் அப்படிச் சுட்டமுடியும். அவை அனைத்துமே மிகக் கடுமையான உழைப்பைக் கோருபவை. தத்துவ விவேசினி, ஜனசக்தி தலையங்கம் என இதழ்த் தொகுப்புகள், அத்திப்பாக்கம் வெங்கடாசலனார், வ.உ.சி., ப.ஜீவானந்தம், மயிலை சீனி.வேங்கடசாமி, தமிழ்ஒளி எனத் தனிநபர் ஆக்கங்களின் தொகுப்புகள், புதுமைப்பித்தன், விந்தன் முழுத் தொகுப்புகள், இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதை நூறு என நவீன இலக்கியத் தொகுப்புகள், அச்சுப் பண்பாட்டில் அவர் வைத்த மாற்றுப்பார்வை, சிற்றிதழ் மரபின் சநாதனத்தைத் தோலுரித்த சிறுபத்திரிகை அரசியல், 19 - 20ஆம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூக வரலாறு சார்ந்து அவருடைய ‘குறுநூல்கள்’ முன்வைக்கும் எடுகோள்கள் என அவருடைய ஆய்வுப் பணிகள் குறித்து இந்நூலில் ஆங்காங்கே பேசப்பட்டாலும் பேரா.சதீஷ், தெ.மதுசூதனன் மற்றும் சீ.காண்டீபன் ஆகியோரின் இரண்டு நேர்காணல்களைத் தவிர்த்து வேறு எங்கும் அதுகுறித்து விரிவாகப் பேசப்படவில்லை என்றே தோன்றுகிறது.
ஏனெனில், கல்விப்புலம் சார்ந்து மட்டுமே விளக்கும் வகையில் பெரும்பாலான நேர்காணல்கள் அமைந்துள்ளன. பேரா.அரசு அவர்களின் ஆய்வுப் பணிகளை எடுத்துரைக்க அவை மட்டுமே போதுமானதாக அமையவில்லை. இடதுசாரிப் பின்னணியிலும் திராவிட இயக்கப் பின்னணியிலும் அவர் தொகுத்த நூல்கள் ஒவ்வொன்றும் ஆய்வுக்களங்களுக்கான சாளரங்களை அகலத் திறந்துவிட்டவை எனலாம். பேரா.சிவத்தம்பியின் ‘தமிழ்ப் பண்பாட்டின் மீள்கண்டுபிடிப்பு’ கட்டுரை மிகச் சிறியதுதான். ஆனால் பேரா.வீ.அரசு அதன் ஒவ்வொரு கூறையும் பிற்காலத்தில் வரலாறெழுதியலாக மாற்றியவர். எனவே இதைப் பற்றி தனியாகவே எழுதலாம்.
குறையைத் தீர்த்த பேரா.வீ.அரசு
குறிப்பாக, ‘தெ.பொ.மீ., வையாபுரிப்பிள்ளை, கைலாசபதி ஆகியோர் குறித்த பேரா.அரசுவின் எழுத்துகள் எவ்வித விமர்சனங்களுமின்றி இருக்கின்றன’ என்று எண்ணியதுண்டு. இந்நூலில், ‘‘வையாபுரிப்பிள்ளையும், தெ.பொ.மீ.யும் தமிழ்ச் சமூகத்தில் வைதீகம், பார்ப்பனியம் என்று சொல்லக்கூடிய கருத்தியல் மனத்தொகுப்பிலிருந்து உருவாகி வளர்ந்து வருகிறார்கள். சமசுகிருதம், தமிழ் என்கிற இரண்டு மரபையும் ஒருநிலையில் பார்க்கவேண்டும் என்கிற தன்மையே இவர்களுக்குள் இருந்தது. சில இடங்களில் தமிழை உயர்த்திப் பேசுவார்கள், அவர்கள் அடிப்படையில் வைதீக மரபுகளைக் கொண்டாடுபவர்களாகவும் இருந்திருக்கலாம். குறிப்பாக தெ.பொ.மீ. அப்படி இருக்கலாம். வையாபுரிப்பிள்ளைகூட அந்த மரபுகளை மறுக்கவில்லை. பக்தி இலக்கிய ஆழ்வார்கள், நாயன்மார்கள், தாயுமானவர் இப்படி வருகிற ஆட்களையெல்லாம் அவர்கள் கிரிட்டிகலாகப் பார்க்கவில்லை. சமசுகிருதத்துக்குள் வரக்கூடிய அந்த மரபையும் தமிழில் இருக்கக்கூடிய மரபையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள். இந்த மரபு அவர்கள் பேராசிரியர்களாகச் செயல்படுகிற காலங்களில், அவர்களின் மரபிலேயே இருக்கிறது’’ (ப.254) என்று விளக்கி அவரே அந்தக் குறையைத் தீர்த்து வைத்திருக்கிறார். ஆறுமுகநாவலர், சி.வை.தா., உ.வே.சா., குறித்த பார்வையையும் மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறார்.
திராவிட இயக்கங்களின் போதாமை
இந்நூலில், ‘‘கடந்த பத்து ஆண்டுகளில் பெரியார் குறித்த மதிப்பீடுகள் மாறியுள்ளன. அவரை இடதுசாரிக் கண்ணோட்டத்தில் பார்க்கும் கோணம் முக்கியத் தேவையாகும். திராவிட இயக்கம் அப்படிச் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்’’ (ப.273) என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல ‘‘திராவிட இயக்கங்கள் இன்னும் கருத்தியல் ரீதியாக வலுவாக வேண்டும். சமூகநீதி என்கிற இடஒதுக்கீடு போன்ற நிலைப்பாடுகளில் திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் முக்கியமானவை. ஆனால், இவை மட்டுமே போதுமானதல்ல. தமிழக அரசியலில் பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர் போன்றோர் ஏற்படுத்திய தாக்கங்கள் முக்கியமானவை. அரசியல் கருத்தாக்கங்களை மாணவர்களிடம் கொண்டுசெல்வதில் இன்றைய திராவிட இயக்கங்கள் பின்தங்கியே உள்ளன. இதுவே வளாகங்களில் மாணவர்கள் அரசியல் போதாமையுடன் இருக்கக் காரணம்’’ (பக்.273 - 274) என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய மதவாத பாசிச சூழலில் கல்விச் செயல்பாட்டில் இக்கருத்துகள் மிக முக்கியமான எடுகோள்களாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிவை ஆகும்.
பேரா.பழநியப்பன் அவர்கள், ‘‘நான் அரசு அய்யாவின் நேரடி மாணவன் கிடையாது. ஆனால் அவருடைய பேச்சைக் கேட்ட பிறகே என்னுடைய ஒட்டுமொத்தப் பார்வையும் மாறியது’’ என்று அடிக்கடிக் குறிப்பிடுவார். இப்படியான பல்வேறு மாற்றங்களைப் பலரிடம் உருவாக்கிய பேரா.அரசுவின் ஆய்வுத் தொடர்ச்சியை அவரே தொடரவும் செய்கிறார். இன்னபிற ஆய்வாளர்களும் தொடரவே செய்கிறார்கள். ஆனால் அதில் அவருக்கிருந்த / இருக்கும் அரசியல் ஓர்மை ஒப்படைப்பு உணர்வு (Commitment) அவரது அடுத்த ஆய்வுத் தலைமுறையிலும் தொடர்கிறதா என்பது மிகப்பெரிய ஒரு கேள்விக்குறியாகும். ஏனெனில் அவர் எந்த இடத்திலும் தான் கொண்ட கொள்கைக்கு மாறாகச் செயல்படாமல் வளர்ந்து கொண்டே செல்பவர். அவருடைய அகமும் புறமுமான அனைத்துச் செயல்பாடுகளையும் அரசியல் ஓர்மையுடனேயே கட்டமைத்திருக்கிறார். இயக்கவாதத்தன்மையின் ஊட்டத்தோடு கல்விப்புலத்தையும் ஆய்வுப் புலத்தையும் ஒருசேர அணுகியிருக்கிறார். அப்படியான பேரா.அரசு அவர்களின் ஒரு பகுதியை இந்நூல் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறது. அவரது ஒட்டுமொத்தத்தையும் புரிந்துகொள்ள, அவரோடு பழகிய, அவரால் வளாகத்துக்கு வெளியே ஆய்வுப் பயன்பெற்ற, அரசியல் தெளிவுபெற்ற பல்வேறு கலை, இலக்கிய, அரசியல் ஆளுமைகளால் எழுதப்பெற்ற ஒரு தொகுப்பு நூல் வெளிவர வேண்டும் என்கிற எண்ணத்தை இந்நூல் மேலோங்கச் செய்கிறது..
ஓர்மைத்தடம் | பேரா.வீ.அரசு: ஆசிரியம் - ஆய்வு - உரையாடல்கள் | தொகுப்பும் பதிப்பும்: அ.மங்கை
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ.500/-
- இரா.மோகனவசந்தன், முனைவர் பட்ட ஆய்வாளர், மாநிலக் கல்லூரி, சென்னை.