01. அரை நூற்றாண்டாக அரசு (state) பற்றிய ஆய்வுகள் காத்திரம் பெற்றுள்ளன.  1960-1970களில் மூன்றாம் உலகநாடுகள், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள், ஆக்கிரமிப்பினின்றும் விடுதலை பெற்றன.  இச்சூழலில் (USSR;USA) சோவியத் ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிஞர்கள் பிற அய்ரோப்பிய அறிஞர்களுடன் இணைந்து தொடக்கநிலை அரசு(early state) பற்றி ஒரு கருத்தரங்கு நிகழ்த்தினர். அதில், உலகின் வேறு வேறு நிலப்பரப்பியலில் உருவான அரசுகள் பற்றிய கட்டுரைகள் வாதிக்கப்பட்டன.  தொடக்கநிலை அரசின் சிறப்புக்கூறுகள் (salient features of early state) வரையறை செய்யப்பட்டன.  இவர்கள் கோட்பாட்டுருவாக்கத்தின் (theorisation) வழியே அரசு அமைப்புகளின் பல மாதிரி களை வகைப்படுத்தினர்.  அவர்கள், மூன்று வெவ்வேறு தொடக்கநிலை மாதிரி அரசுகளை (model states) அடையாளம் கண்டனர். அதன்படி அரசுகள் (precapitalistic industrialised states: industrialised states) முதலாளியத்திற்கு முந்திய தொழிற்சாலைமயப்படாத அரசு என்றும், நவீன தொழிற்சாலைமயப்பட்ட அரசு என்றும் இரண்டாக வகைப்படுத்தப்பட்டன.1

02. அரசு: அரசு பற்றிய கருத்தியல் 18 ஆம் நூற்றாண்டில் கருப்பெற்றது எனினும் அதனை 19 ஆம் நூற்றாண்டில் உருத்திரட்டி அதன் கூறுகளை அறிவியல் பூர்வமாக நிறுவியவர் கார்ல்மார்க்சும், பிரடெரிக் ஏங்கல்சும் (Karl Marx, Frederich Engels) ஆவர். அரசு பற்றி பல அறிஞர்கள் சிந்தனையாளர்கள் கருத்தளித்திருந்தாலும்  இவர்கள் இருவர் முன்மொழிந்த அரசு கூறுகள் உலகில் எழுந்த பல அரசு அமைப்புகளுக்கும் பொருந்தும்.  பிரடெரிக் ஏங்கல்ஸ் 1889 இல் தனிச் சொத்து, குடும்பம், அரசு என்ற நூலில் அரசின் சில கூறுகளை விளக்கியுள்ளார். அவரின் அரசு பற்றிய கோட்பாடு சுருக்கமாக : பலமும் அதிகாரமும் கொண்ட வர்க்கம் தம் சொத்துக்களைக் காப்பதற்கும், தனியாரின் சொத்துக்களைக் காப்பதற்கும் அரசினை உருவாக்கி   அதன்மூலம் வர்க்கப்பாகுபாட்டினை பாதுகாத்தது.  இப்படி வர்க்கச் சண்டைகளில் அரசு தோன்றியது.   

பலமும் அதிகாரமும் கொண்ட வர்க்கம் அடிமை வர்க்கத்தினை உருவாக்கி அவர்களின் உபரி உற்பத்தி யினை களவாடும். இவருடைய அரசு பற்றிய கோட் பாட்டில் படை, போர், முற்றுகை, ஆக்கிரமிப்பு போன்ற கருத்துகள் பிரதானமானவை.2 வேளாண்குடிகளுக்கும் அரசுக்கும் இடையிலான வேறுபாட்டினை கார்ல் மார்க்ஸ் காண்கிறார். அரசுக்கு நீர்ப்பாசனவசதிகளை பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டது என்றும்   கிராம சமுதாயங்களை சுரண்டுவதன் மூலம் அரசு தம் அதிகாரத்தினைத் தக்கவைத்துக் கொண்டது என்றும் இதுபோன்ற அரசுகள் வர்க்கங்களை உருவாக்கும் என்றும் கூறினார். கடவுளுக்கு இணையாக புனிதமாக்கப்பட்ட அரசர்கள் கிராமத்து உற்பத்தியாளர்களின்  விளைச்சலில் பங்கு (கடமை), பணம் (பொன்), உழைப்பு (வெட்டி, வேதனை) என்ற மூன்று வழிகளில் வருவாயினை எடுத்துக்கொண்டனர் என்றும் நீர்ப்பாசன வேலைகளை பராமரிப்பதற்கு வரிகளை (சோழர்காலம் பொறுத்து குலைவெட்டி, குரப்புவெட்டி எனலாம்) வசூலித்தனர் என்றும் அதனை அரசு நியாயப்படுத்தியது என்றும் கார்ல்மார்க்ஸ் அரசின் அதிகாரத்தினைக் கண்டறிந்தார்.3

03. கருத்தியல்: ஓர் அரசு உருவாவதற்கு ஒரு கருத்தியல் (ideology) தேவை. அக்கருத்தியல் ஆளும் வர்க்கத்தினரால் உருவாக்கப்படும். பண்டைத் தமிழகத்தில் கிறிஸ்து காலத்தினை ஒட்டி அரசினை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.   தமிழகத்தில் இம்முயற்சியினை மேற்கொண்டவர் செம்மொழிப் பாக்களில் குறிக்கப்பட்ட வேந்தர்கள். வரலாற்றில் இவர்களுக்கு முன்பிருந்து ஆண்டு வந்த சீறூர்மன்னர், குறுநிலமன்னர், முதுகுடிமன்னர் போன்ற வட்டார இனக்குழுத் தலைவர்கள் தங்கள் குடிகளுக்கானத்  தலைவர்களாக, அந்தந்த நிலவியல்பரப்பில் தங்களுக்கான உற்பத்தி அலகுகளைக்(productive units) கொண்டிருந்தனர்.   இவர்களின் (fertile productive units) வளமையான உற்பத்தி அலகுகளைக் கைப்பற்றவே இவர்களுடன் மூவேந்தர்கள் போரிட்டனர்.4 போருக்கு முதல் கட்டமாக வீரம், புகழ் என்ற கருத்தியல் வற்புறுத்தப் பட்டது.5  அடுத்தகட்டத்தில் இது சமய நம்பிக்கையாக மாறியது. வேந்தர்கள் வேள்விச்சடங்குகளை நடத்தி மக்களின் அங்கீகரிப்பினைப் பெற்றனர்.6 பாணர்களும் புலவர்களும் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இயங்கியதனை ஒரு தொடக்கநிலை அலுவல் அமைப்பு (archetypal official) எனலாம். பாணர்களுக்கும், புலவர் களுக்கும் கொடையளிக்கும் அரசமரபினை பின்னாட் களில் வைதீகம்/அவைதீகம் சார்ந்த கோயில் நிறுவனங் களுக்கு கொடை வழங்கப்பட்டதன் தொடர்ச்சி எனலாம்.7  நிறுவனமயப்பட்ட சமயங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றதால் அவற்றைப் போற்றவேண்டிய தேவை அரசு களுக்கு ஏற்பட்டது. அங்கு, தம் அங்கீகாரத்தினை மக்கள் ஏற்கவேண்டி அரசர்கள் தம் உருவங்களை செதுக்கி வைத்தனர்.    காஞ்சி கைலாசநாதர் கோயிலில் ஹிரண்யவர்மனின் மகன் நந்திவர்மன்பல்லவன் முடிசூடிக்கொள்ளும் காட்சி புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது.  அதன் கீழ் சிதைநிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.8  அதேபோன்று காஞ்சி வைகுந்த பெருமாள் கோயிலில் உள்ள புடைப்புச் சிற்பத்தில் புத்தவிகாரையின் பின்னணியில் அமைந்திருக்கும் ராஜ உருவம் பல்லவ புத்தவர்மன் என்று கருதப்படுகிறது.9  பிறகுவந்த சோழர் வம்சத்தின் அரசர்கள் தம் தம் உருவங்களை திருமேனி களாக கோயில்களில் நிறுவிக்கொண்டனர்; சிலர் தம் தம் பெயரில் கோயில் எழுப்பினர்.10 இதன் மூலம் தமிழகத்தின் அரசர்கள் தம்மை கடவுளர்களுக்கு இணையாக  மக்களிடம் அறிந்தேற்பினைப் பெற்றனர்.

04. வரலாற்றியல்: பண்டைய இந்தியாவில் அரசு பற்றி அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.11 வடக்கில் அர்த்தசாஸ்திரமும், தெற்கில் திருக்குறளும் அரசர்களுக்கு சில பரிந்துரைகளைத் தருகின்றன.12  இந்திய நிலப்பரப்பில் நவீனகாலத்திற்கு முந்தைய அரசுகளின் சிலகூறுகளை கல்வெட்டுகள் பதித்துள்ளன. தென்னிந்திய பின்னணியில் சோழர் அரசு பற்றி கருத்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   எனினும், இது கூடுதலாக ஆயப்படவேண்டிய ஒன்று.   தொடக்கத்தில் வரலாற்று அறிஞர்களும் தமிழறிஞர் களும் சோழர் ஆட்சி பற்றி ஆய்ந்தனர்.13 ஆனால், சோழர் அரசுகூறுகளை ஒரு முறையான கோட்பாட்டுடன் பொருத்திப்பார்த்து பர்டன் ஸ்டயின் (Burton Stein) ஆய்ந்தார்.14 இவராய்வின் நிறை குறைகளை பலரும் சுட்டினர். அண்மையில் பேராசிரியர் ஒய்.சுப்பராயலு சோழர் அரசு அறிஞர்கள் வகுத்தளித்த தொடக்ககால அரசின் சிலகூறுகளோடு பொருந்திப்போகின்றன என்று நிறுவியுள்ளார். அரசு அமைப்பிற்கும் நீர்ப்பாசனத்திற்கும் ஓரளவு தொடர்பு உண்டு என்றும் முன்மொழிந்துள்ளார்.15  கோட்பாட்டு ரீதியாக முதன்முதலில் அரசுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் இடையிலான உறவினை இணைத்து ஆய்ந்தவர் கார்ல் அகஸ்டஸ் விட்பாகல் (Karl Agustus Wittfogel) எனும் அறிஞர்.16  தொடர்ந்து ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன(RALH.Gunawardana) நீர்ப்பாசனத்தின் மீதான அரசின் அதிகாரத்தினை கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும் களஆய்வுகளின் அடிப் படையிலும் ஆய்ந்தார். கங்கைகொண்ட சோழபுரத்தின் அருகே சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பொன்னேரி என்ற நீர்ப்பாசனக் குளத்தின் குமிழி ஒன்றினை தொழில் நுட்பரீதியில் ஆய்ந்து படங்களுடன் ஆய்வுக்கட்டுரை களை வெளியிட்டார்.17 காவிரி பாயும் தஞ்சை வட்டாரத்தின் வேளாண்கூறுகளை நீர்ப்பாசனத்தின் பின்னணியில் கல்வெட்டுபடிப்பின் உதவியுடன் கள ஆய்வின்வழியே இளம் ஆய்வாளர் சி.என்.சுப்ரமணியம் (C.N.Subramaniam) ஆய்ந்தார்.18   அண்மையில் இளம் ஆய்வாளர் ந.கதிரவன், பேராசிரியர் ந.அதியமான் இருவரும் இணைந்து கல்வெட்டு, கள ஆய்வுகளின் அடிப்படையில் சோழர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வதி-வாய்க்கால்-கண்ணாறு நிலக்கிடப்பு  அமைப்பின் (layout) தொழில்நுட்பத்தினை ஆய்ந்துள்ளனர்.19 இருந்தாலும் நீர்ப்பாசனத்திற்கும் அரசுக்கும் இடை யிலான உறவினை மேலும் புரிந்துகொள்வதற்கு ஏதுவான சான்றுகளை கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தருகின்றன. எனவே, இங்கு சோழர் அரசு நீர்ப் பாசனத்தின் மேல் அல்லது நீர்மேலாண்மையின்மேல் செலுத்திய அதிகாரத்தினைப் புரிந்துகொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

05. ஆய்வுமுறை: சோழ அரசர்கள் செப்பேடுகளில் வெளியிட்ட ஆணைகள் முதன்மைச் சான்றுகளாகப் பகுக்கப்பட்டு அவர்கள் கொடையளித்த செய்திகள் இங்கு தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டன. வதி-வாய்க்கால்-கண்ணாறு பற்றிய செய்தித் திரட்டலுக்கு வரலாற்றாசிரியர்கள் வகுத்தளித்த சோழர் ஆட்சியின் நான்கு பிரதானகாலகட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.20   கண்ணாறுகளின் நிலப்பரப்பியல் கிடப்பினை அறிதற்கு குத்தாலம், திருவிந்தளூர், திருவீழிமிழலை போன்ற இடங்களில் மாதிரி கள ஆய்வுகளில் செய்திகள் திரட்டப்பட்டன.  அதில் வேளாண்குடிகளின் வழக்கில் கண்ணாறு என்ற சொல் இல்லை என்பதனை அறிய முடிந்தது. பதிலாக, கண்ணி என்ற சொல் பயன் பாட்டில் உள்ளது. அதாவது நீர்பாயும் வாய்க்காலில் இருந்து பக்கவாட்டில் கிளைப்பதால் இதனை கண்ணி என்று அழைப்பர் போலும். நெடுக்காக ஒன்றிலிருந்து பக்கவாட்டில் கிளைப்பதை கணு என்று சொல்லும் மரபு உண்டு.  கணுவிலிருந்து கண்ணி தோன்றியது எனலாம்.  புதுக்கோட்டை வட்டாரத்தில் பாத்திகட்டித் தோட்டப் பயிர்விளையும் நிலக்கிடப்பில் நீர்பாயும் குறுகிய வாய்க்கால் கண்ணிவாய்க்கால் என்றழைக்கப்படுகிறது.21

06. நீள்தொடர்ச்சி: தென்னிந்திய, தமிழக வரலாற்றில் நீரின்மீதான மேலாண்மை வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே இயங்கி வந்துள்ளது போலும்.  இதனை நீராதரங்களின் அருகேயும் நீராதாரங் களின் உள்ளேயும் தொல்லியல் சின்னங்கள் அமைந்திருப் பதனைக் கொண்டு உறுதி செய்யலாம். இத்தொல்லியல் சின்னங்களின் அருகே காலத்தால் முந்திய குகைக் கோயில்களும் தொடர்ந்து கட்டுமானக்கோயில்களும் அமைந்திருப்பதனையும் காணலாம்.22 இப்படி, நீராதாரங்களின் அருகே தொடர்ந்து சமயம் சார்ந்த வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுவது ஒரு அறுபடாத பண்பாட்டின் தொடர்ச்சியாகும்.  அண்மையில் வீ.செல்வகுமார் இதுபோன்றதொரு தொடர்ச்சியினை காவிரிச்சமவெளியில் ஆய்ந்துள்ளார்.23  சோழர்அரசு இது போன்ற அறுபடாத தொடர்ச்சியின் விளைவாகவே நீராதாரங்களின் அருகேயிருந்த செங்கல் கோயில்களை கருங்கற்கோயில்களாகப் புதுப்பித்தனர். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (K.A.Nilakanta Sastri) சோழர்காலத்தில் செங்கல்தளத்தின்மேல் கட்டப்பட்ட கோயில்களை கவனத்திற்குத் தருகிறார்.24  அதற்கான சான்றுகளையும் தருகிறார். சோழ அரசர்கள் தங்கள் இருப்பினை கோயில்களில் நிகழ்த்தப்படும் சடங்குகள் வாயிலாக வெளிப்படுத்தினர். எனவே, காலமுறை சடங்குகள்(calendarical rituals) நிகழ்த்துவற்கான தளங்களாக கோயில் நிறுவனங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டன.   இவர்கள் தங்களை கடவுளர்களுக்கு இணையாகக் காட்டுவதற்கு முதலில் மாண்டுபோன அரசர்களுக்கு பள்ளிப்படை கோயில்களை உருவாக்கி அவர்களுக்கு ஒரு தெய்வத்தன்மையினை உருவாக்கினர்.25  அடுத்து தம் தம் பெயரிலேயே கோயில்களை உருவாக்கி அவற்றைப் பராமரித்தனர்.  இந்தியச்சமூகத்தில் அதனைச் சடங்குகள் மூலமே செய்ய இயலும்.  எனவே, இக் கோயில் நிறுவனங்களைப் போற்றிப் பாதுகாக்கவும், மேலாண்மை செய்வதற்கும், பிராமணர்களை குடிய மர்த்தி பராமரிக்க பிரமதேயங்களை உருவாக்கவேண்டி யிருந்தது.  இவர்களின் அன்றாட வாழ்வு குலையாமல் இருக்க விளைநிலக்கொடையும், அதற்குத்தேவையான நீர்ப்பாசனவசதியும் அதாவது நீருரிமையும் அந்நீரினைப் பெறுவதற்கான தொழில்நுட்ப உரிமையும் அரசாணைகள் மூலம் வழங்கப்பட்டன.   காவிரிச்சமவெளியில் அதனை சோழர்அரசு முதலில் செயலாக்கியது.  காவிரியாறு சங்க காலம் முதல் தொடர்ச்சியாக இலக்கியங்களில் பதியப் பட்டு வருகிறது.  தமிழக வரலாற்றில் நீருரிமையினை பிறரிடமிருந்து பிராமணர்களுக்கு முதலில் மாற்றித் தந்தது பல்லவர் என்றாலும்26 அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தியது சோழர் அரசாகும்.  இவ்வரச குடும்பத்தினர் ஏற்கனவே நிலவுரிமையினையும் நீர் உரிமையினையும் அனுபவித்து வந்தவர்களின் உரிமையினை மாற்றி/தவிர்த்து பிராமணர்களுக்கு கொடையளித்தனர்.   இவ்வுரிமை மாற்றம், வெவ்வேறு சொற்களில் அரசாணைகளாக வெளியிடப்பட்ட செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பதியப்பட்டு உள்ளன.

07. நீர்ப்பிணைப்பு: திடுப்பென ஓர் அரசர்/ஓர் அரசு, ஓர் இனக்குழுவினரின்/சமூகத்தின் உரிமையினைப் பறித்து பிறிதோர் இனக்குழுவிற்கு/சமூகத்திற்கு கொடை யளிக்க இயலாது.  அரசரின் அதற்கான அதிகாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு அரசவம்சத்திற்கு வரலாற்றுமதிப்பும் அதனை ஏற்கும் மக்களின் ஆதரவும் தேவை.  அதற்காக, சோழர்கள் தங்களின் மூதாதையர்களின் வரிசையில் கரிகாலனை அடையாளப்படுத்தி அவன் காவிரியாற்றுக்கு கரையமைத்தான் என்ற புனைவினை அன்பில் செப்பேட்டிலும் இலய்டன் செப்பேட்டிலும் பதிவு செய்தனர்.27  இதன்மூலம் காவிரியாற்றுக்கும், சோழர் அரசகுலத்திற்கும் ஒரு வரலாற்று நீர்ப்பிணைப்பு உருவாக்கப்படுகிறது.   இந் நீர்ப்பற்று, நீர்ப்பாசனமாகும்.  இவ்விடத்தில், கரிகாலனை தலைமைப்பாத்திரமாக வைத்து பாடப்பட்ட பட்டினப்பாலையில் குளம் தொட்டு வளம்பெருக்கி என்ற தொடரினை நினைவுகூர வேண்டும்.

08. ஆலயமும் ஆணையும்: அரசர்கள் ஆணைகளை வழங்கியபோது அவர்கள் அமைந்திருந்த இடங்கள் முக்கியமாகக் கருதப்படவேண்டியன. உத்தமச் சோழனின் கோனேரிராஜபுரத்தின் கல்வெட்டின்படி (983) அரசன் கடம்பூரின் வடக்குப்பிச்சன்கோயில் விட்டவீட்டினுள்ளால் முன்பிற் கூடத்தில் இருந்தபோது ஆணையிட்டுள்ளான்.  முதலாம் குலோத்துங்கன் முன்பு காணியுடையாரை குடிநீக்கி பவுத்தவிகாரைகளுக்கு பள்ளிச்சந்தங்களை வழங்கி ஆணையிடுகையில் அவன் அரசியுடன் அயிரத்தளியான ஆகவமல்ல குலகால புரத்து கோயிலின் உள்ளால் திருமஞ்சனசாலையில் பள்ளிபீடம் காலிங்கராஜனில் அமர்ந்திருந்தான்.  இதனால், கோயில் வளாகம் அதிகார/அரசு வளாக மாகவும் செயற்பட்டது எனலாம் அல்லது கடவுளை முன்னிறுத்தி அரசனின் செயல் இயங்கியது எனலாம்.    கடவுளர்களின் இயங்குதளத்தினை(functional area) அரசன் பயன்படுத்தினான் என்றும் கூறலாம்.  

09. மாளிகையும் மன்னரும்: மேலே சொல்லப் பட்டதற்கு மாறாக,  முதலாம் இராஜராஜன் தஞ்சைப் பெரியகோயிலுக்கு சோழராட்சிக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஊர்களில் இருந்து வரவேண்டிய நெல், பொன், காசு போன்றவை அளிக்கப்படுவதற்கு ஓர் ஆணையிட்டபோது அவன் தஞ்சாவூர் பெரிய செண்டுவாயில் சித்திரகூடத்து தெற்கில் கல்லூரியில் எழுந்தருளி இருந்தான் என்கிறது சாசனம் (1009).   பெரிய இலய்டன் செப்பேட்டு ஆணையில் (1006) இவன் தஞ்சாவூர் புறம்பாடி மாளிகை ராஜஸ்ரயனில் தெற்கில் மண்டபத்து நாம் இருக்க என்று தம்மை விளித்துக்கொள்கிறான். இச்செயல் இவனின் அரச இயக்கம் கோயிலில் இருந்து அரச கூடத்திற்கு மாறி யிருந்ததனைக் குறிக்கிறது.   முதலாம் இராஜேந்திரனின் ஆணை (1019) கரந்தைச் செப்பேடுகளாக உருவாக்கப் படுகையில் அவன் இருப்பினை அவன் குரலில் சொல் வதானால் நாம் பெரும்பற்றப்புலியூரில் விட்டவீட்டின் உள்ளாலை மாளிகையின் கீழைமண்டபம் இராஜேந்திர சோழன் பிரம்மாதிராஜனில் நாம் உண்ணாவிருந்து என்று அமைகிறது. இவனே பிறிதொருமுறை (1018) நிலக் கொடைக்காக ஆணையிடுகையில் முடிகொண்ட சோழ புரத்து நம்வீட்டினுள்ளால் கருமாளிகை மதுராந்தக தேவனில் தெற்கில் மறைவிடத்து இருந்து என்று தம் இருப்பினையும் இயக்கத்தினையும் வெளிப்படுத்தி யுள்ளான். அண்மையில் வெளியிடப்பட்ட திருவிந்தளூர் செப்பேடு வாய்மொழி ஆணையாக வெளியிடப்பட்ட போது அரசன் முடிகொண்டசோழபுரத்து இராஜ ராஜனில் நம்வீடு ராஜேந்திரசோழனில் கீழைசோபனத்து விஜயேந்திரகாலிங்கராஜனில் நாம் இருக்க என்று தம் இருப்பினை வெளிப்படுத்துகிறான்.

மேற்சொல்லப்பட்டவற்றின்மூலம் சோழர் அரசு நன்கு வலுப்பெற்ற காலத்தில் அரசர்கள் தம் தம் அலுவல் செயற்பாட்டினை கோயில் வளாகங்களிலிருந்து வீடுகளுக்கும் மாளிகைகளுக்கும் மாற்றிக்கொண்டனர் என்று அறியலாம். இது, சோழர்அரசு இயக்கத்தில் எற்பட்ட மாற்றம்.

10. உரிமை மாற்றம்: நிலஉரிமை, நீர்உரிமை மாற்றத்தினை பல்லவர் செப்பேடுகள் முன்பெற்றாரை மாற்றி என்று குறிக்க சோழர்களின் அன்பில் செப்பேடுகள் காராண்மை மீயாட்சி உள்ளடங்க குடிநீக்கி28 என்று குறிக்கிறது.  முதலாம் இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு காணியுடையாரை மாற்றி  குடிநீக்கி  என்று குறிக்கிறது.  உத்தமசோழனின் கல்வெட்டு முன்புடை யாரை மாற்றி குடிநீக்கி என்று குறிக்கிறது.  திருவாலங் காட்டுச் செப்பேடு முன்புடையாரையும் பழம் பேரையும் தவிர்த்து என்று சுட்டுகிறது. அண்மையில் கிடைத்த திருவிந்தளூர் செப்பேடு முன்காணி உடையாரை மாற்றிக் குடிநீக்கி காராண்மை மீயாட்சியும் மிகுதிக் குறைமை உள்ளடங்க வெள்ளான் வகையில் முதல் யாண்டு முப்பத்து மூன்றாவது பாசானம் முதல் தவிர்ந்து என்று விளக்குகிறது. இச்செப்பேட்டில் வழங்கப்பட்ட கொடை 44 வெள்ளானூர்களிலுள்ளவரின் குடிஉரிமை பறிக்கப்பட்ட நிலமாகும். அரசாணையினை ஆவணப் படுத்துகையில் 44 ஊர்களில் ஒரு சில ஊர்களின் பிரதிநிதிகள் மட்டுமே கையெழுத்திட்டு உள்ளனர் என்பதனை தம் ஆய்வில் பேரா.எ.சுப்பராயலு சுட்டியுள்ளார்.  இது, வேளாண்குடிகளுக்கு எதிரான அரசு ஒடுக்குதல் எனலாம்.  முதலாம் குலோத்துங்கனின் சிறிய இலெய்டன் செப்பேடு பவுத்தவிகாரைகளுக்கான பள்ளிச்சந்தங்களை கொடையளிக்கையில் முன்காணி யுடையாரை தவிர்த்து குடிநீக்கி வழங்கியதனைச் சுட்டுகிறது. இப்படி உரிமை மாற்றிக் கொடையளிக்கப் பட்ட  பெரும்பாலான ஊர்கள் வேளாண்குடிகளுக்குச் சொந்தமான வெள்ளான்வகை ஊர்களாகும்.   இவர்கள் முன்பு அனுபவித்து வந்த காராண்மை மீயாட்சி என்பன நிலவுரிமை, நீருரிமை, நிலத்தின்மீது பயிரிடும்உரிமை, நீர்ப்பாசனத் தொழில்நுட்ப உரிமை ஆகும்.  இவ்வத்தனை உரிமைகளையும் அனுபவித்து வந்த ஓர் இனக்குழுவிட மிருந்து/சமூகத்திடமிருந்து பறித்து பிறிதொரு இனக் குழுவிடம்/சமூகத்திடம் வழங்கும் அதிகாரத்தினை அரசர்கள் பெற்றிருந்தனர் என்பது நிலவுரிமையின் மீதும், நீர்ப்பாசனத்தின்மீதும் அரசர்கள் தலையிடும் அதிகாரம் பெற்றிருந்தனர் என்பதாகும்.  இக்கொடை களில் பரம்பரை பரம்பரையாக நிலத்தின்மீதான உரிமை பெற்றவர், அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை.   ஆனால் நிலத்தின்மேல் உரிமையிழந்தனர். அதனால், அவர்கள் தானாக பயிர்செய்ய முடியாது. கொடை பெற்றோரின் கண்காணிப்பின்கீழ் இயங்கவேண்டும்.  அதாவது நிலத்தில் உழைக்கலாம்; உரிமைகோர இயலாது.   இவ்வுரிமை மாற்றத்தினை அரசர் தனித்து செயலாற்றவில்லை. வட்டாரத்தலைவர்கள், நாட்டார், நகரத்தார், ஊரார் என்று பல உள்ளூராட்சி மன்றங் களுடனும் அலுவலர்களுடனும் இணைந்து செயலாற்றி யுள்ளார். காட்டாக, பல்லவன்-முத்தரையன் என்ற வட்டாரத்தலைவன் அரசனை நிலக்கொடைக்கு ஆணையிட வேண்டுமென்று வேண்டிக்கொண்டதா லேயே அநிருத்தனான-பிரம்மாதிராஜன் என்ற பிராமணத் தலைவனின் விண்ணப்பத்தினை ஏற்று அரசன் ஆணை யிட்டான் என்பது அன்பில் செப்பேட்டின் கூற்று. அதே போன்று முதலாம் இராஜேந்திரன் இராஜேந்திரசோழன் பிரம்மாதிராஜன் என்ற பிராமணமந்திரியின் வேண்டு கோளுக்கு இணங்க ஐம்பத்தொரு (51) ஊர்களை ஒன்றிணைத்து திருபுவனமகாதேவி-சதுர்வேதிமங்கலம் என்ற பிரமதேயத்தினை உருவாக்கினான்.   திருவாலங் காட்டுச் செப்பேட்டின்படி(1018) மகாதேவபிடாரன் என்பவன் அரசனிடம் சொன்னதால் (தேவதானம் இடவேணுமென்று மகாதேவபிடாரன் நமக்குச் சொன்னமையில் என்ற அரசனின் கூற்று கவனிக்கத்தக்கது) நிலம் கொடையளிக்கப்பட்டது.    இது அரசர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையிலான உள்ளுறவாகும் (inter-relationship) இந்தியச் சமூகப்படிநிலையில் சொல்வதானால் சத்திரியர்களுக்கும்,பிராமணர்களுக்கும் இடையிலான உள்ளுறவு எனலாம்; மானிடவியலின்படி இதனை சமயக்குழுவினர்க்கும், போர்க்குலத்தவர்க்கும் இடையிலான உள்ளுறவு எனலாம். ஆனால், இவர் களுக்கு இடையில் சிக்கியது வேளாண்குடிகளே. அரசர்களுக்கு இச்செயலாக்கத்தில் துணையாக வேளாண்குடிகளில் இருந்து எழுந்த கிழவன், மூவேந்த வேளான் போன்ற பட்டம் கொண்டவர்களும், முத்தரையன், பல்லவரையன் பட்டம் கொண்ட போர்க்குலத்து குரிசில் தலைவர்களும் இயங்கியுள்ளனர்.  சத்திரியருக்கும் பிராமணருக்கும் உள்ள நெருக்கமான அரசியல் உறவு திருவிந்தளூர் செப்பேடுகளின் நுண்ணாய்வில் அறியலாம்.  இச்செப்பேட்டின் ஓம்படைக்கிளவி சத்திரியரைக்கொல்வது பாவம் என்று எச்சரிக்கிறது.29  முதலாம் இராஜராஜன் சத்திரிய சிகாமணிவளநாடு என்றொரு ஆட்சிப்பிரிவினை உருவாக்கினான் என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.  இவ்வளநாட்டின் எல்லைகளாக வடக்கில் அரிசிலாறும் தெற்கில் கடுவாய் ஆறும் கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளன.30 இப்படி, சத்திரியரின் ஆட்சிப்பிரிவு நீரினால் கட்டிக் காக்கப்பட்டுள்ளது.

ஆனால்,முதலாம் இராஜராஜன் (1014) பிராமணர் தலையீடு இன்றி சோழர் அரசின் ஆட்சிக்கு உட்பட்ட வெவ்வேறு மண்டலங்களில் தெரிவு செய்யப்பட்ட ஊர்களில் இருந்து நெல்விளைச்சலில் குறிப்பிட்ட பங்கும், பொன்னும், காசும் தஞ்சை பெரியகோயிலுக்கு வழங்கிட ஆணையிட்டான். இவ்வாணையில் கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட நிலங்களுக்கான நீரினை வழங்குதலில் குளமுங்கரையும் என்ற தொடரும், புறவூர்களுக்குப் பாயப்போன வாய்க்கால்களும் என்ற தொடரும் மிக முக்கியமானவை.31

11. நிலக்கொடையும் நீர்க்கொடையும்: அரசர்கள் நிலவுரிமை, நீருரிமை, நீர்ப்பாசனத்தின் மேல் மேலாண்மை கொண்டிருந்தனர் என்பதனை அரசாணை களான செப்பேடுகளில் பதியப்பட்ட நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் சார்ந்த சிலசொற்களால் அறிய இயலும். அவை கொடைபெற்றோர் நீருரிமை, நீர் பாய்ச்சிக் கொள்ளும் உரிமை பற்றிப் பேசும் பகுதிகளில் பதியப்பட்டுள்ளன.  

அவை : தலைவாய், வாய்த்தலை, குலை, வதி, வாய்க்கால், உட்சிறுவாய்க்கால், வாய்க்காலே உற்று, திரிவிலே உற்று, குலையுற்று, நடுவுற்று, குறங்கறுத்துப் போன, புறவூர்களுக்குப்போன வாய்க்கால், குற்றேத்தம், ஓடை பலமுடக்கு முடக்கிக் கிடந்தவாறே, தூம்பு, மடை போன்றவை.

தலைவாய், வாய்த்தலை இரண்டும் ஆற்றிலிருந்து நீரினை வாய்காலுக்குத் திருப்பும் தொழில்நுட்ப அமைப்பு. குலை என்பது இன்றைய தடுப்பணை போன்று ஆற்றின் / வாய்க்காலின் குறுக்கே தற்காலிகமாக இடப்பட்ட குட்டையான நீளச்சுவர் எனலாம்.  இதன்மூலம் நீரின் போக்கினைத் திருப்பமுடியும்.  திரிவிலே என்பது வாய்க்காலின் போக்கு திரும்பும் இடமாகும்.  ஓடை பலமுடக்கு முடக்கி தான்கிடந்த வாறே என்ற தொடர் பல திருப்பங்களைக் கொண்ட வாய்க்காலைச் சுட்டும்.   நீண்ட வாய்க்கால் ஓரிடத்தில் பிறிதொரு வாய்க்காலுடன் நெடுக்காகச் சேருமானால் அது நடுவுற்று எனப்படும்.

இந்நீர்ப்பாசன அமைப்புகளே நீராதாரங்களினின்றும் நீர் எத்திசையில் போகவேண்டும் என்பதனை நிர்ண யிப்பன.  இவையே நீரினை விளைநிலங்களுக்குத் திசை திருப்பும் கட்டங்களாகும்/பள்ளங்களாகும். கொடை யளிக்கப்பட்ட ஊரிலிருந்து/நிலத்திலிருந்து பிற ஊர்களுக்கோ/நிலத்திற்கோ அல்லது பிறநிலத்திலிருந்து/ஊரிலிருந்து கொடையளிக்கப்பட்ட ஊருக்கோ/நிலத்திற்கோ நீரோட்டம் திசை திருப்பப்படும் இடங் களை அச்சொற்கள் சுட்டுவன. இத்தொழில்நுட்பம் சார்ந்த நிலக்கட்டங்களை கொடையளிப்பதன் மூலம் அரசதிகாரம் நீரினைப்போன்று பரவி விரிந்தது எனலாம்.    கொடைபெற்றவர் தவிர இவ்வுரிமையினை அந்நியர் செய்தால் அவர்கள் அரசரால் தண்டிக்கப்படுவர் என்று பல்லவர் செப்பேடு மிரட்டுகிறது.  இதனையே சோழர்அரசும் பின்பற்றியது எனலாம்.

கொடையளிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய நீர் வழங்கப்படுகையில் அந்நிலம் இயற்கையாகவே பெற்றுள்ள நீராதாரங்களான வாய்க்கால், குளம், ஆறு, ஏரிகள் மட்டுமின்றி அவ்வூர் அமைந்துள்ள நாட்டிற்குப் பொதுவான நீராதாரங்களில் இருந்தும் நீர் வழங்கப் பட்டுள்ளது. இதனை கரந்தைச் செப்பேடு நாட்டுப் பொது திரிபுவனமாதேவி ஏரி (வரி:37) என்று சுட்டுகிறது. ஆற்றிலிருந்து வாய்க்காலுக்கு நீர்திரும்பும் தலைவாய்மீதான ஆளுமையினையும் அரசு பெற்றிருந்தது என்பதனை மும்முடிச்சோழப்பேராற்றிலே தலை கொண்டு தெற்குநோக்கி பள்ளகுடிக்கு நீர்பாயப்போன வாய்க்கால் (வரி:522-523) என்று அரசாணையில் சுட்டப்பட்டுள்ளது. தலைகொண்டு என்பது ஆற்றில் புதிதாக  தலைவாய் ஒன்றினை அதாவது ஆற்றிலிருந்து நீரினை வாய்க்காலிற்குத் திருப்பும் மதகு/மடை என்பதனை உருவாக்கிக்கொள்ளும் உரிமை என்று பொருள். புறவூர்களில் இருந்து கொடையளிக்கப்பட்ட நிலத்திற்குப் பாயும் வாய்க்கால் புறவூர்நிலத்தாறே போந்து இவ்வூர் நிலத்திற்கு நீர்பாயும் வாய்க்கால் என்று சுட்டப்படுகிறது (வரி:934-936), இவ்வூர்நிலத்தை ஊடறுத்து புறவூர்களுக்கு நீர்பாயும் வாய்க்கால்கள்,  இப்படி ஊர்களிடையேயான நீர்பகிர்விற்கும் அரசாணையின் பரிந்துரை உண்டு என்பது நீருரிமையில் அரசின் தலையீட்டினைச் சுட்டும்.  இது அரசின் பரவலான அதிகாரத்தினை வெளிப்படுத்துகிறது.  

காவிரிபாயும் சோழநாட்டில் தொன்று தொட்டு வாய்க்கால்முறை நீர்ப்பாசனம் பயன்பாட்டில் உள்ளது.  இது குளத்துமுறை நீர்ப்பாசனம், கிணற்றுமுறை நீர்ப்பாசனத்தினின்றும் தொழில்நுட்பரீதியில் வேறானது.    சமவெளிமுழுக்க சதுரம்-சதுரமாக அல்லது கட்டம்- கட்டமாக அமைந்துள்ள விளைநிலங்களுக்கு இடையே குறுக்கும்-நெடுக்குமாக அமைந்துள்ள வாய்க்கால்கள் வழியே நீர் விளைநிலங்களுக்குப் பாய்கிறது.   ஆற்றி லிருந்து தலைவாய், மதகு /மடைகள் வழியே பெரு வாய்க்கால், சிறுவாய்க்கால், உட்சிறுவாய்க்கால், கண்ணாறு என்று நுண்ணிய அளவில் நிலக்கிடப்பியலுக்கு ஏற்ப வரிசையாக அமைந்துள்ள இவ்வமைப்பு  இறுதியில் சீராக விளைநிலத்திற்குக் கொண்டுசேர்க்கிறது.    இதில்  அரசின் பங்கு என்ன என்று அறிய வேண்டும்.    அதற்காக, அரசாணை செப்பேடுகளில் நீர் உரிமை பற்றிப்பேசும் பகுதிகள் மிகவும் பயனுள்ளவை. ஆணை களிடையேயான ஒப்பியல் பார்வை தனி ஆய்விற்கு உட்பட்டது. அரசாணைகளில் நீர் உரிமை பற்றிய பத்தி பெரும்பாலும் இந்நிலத்துக்கு நீர்க்கீய்ந்தவாறு என்று தொடரும். அதாவது நிலத்திற்கு வழங்கப்பட்ட போதுமான நீர் இவ்வாறு குறிக்கப்படுகிறது.  அப்போது மான நீரினை வாய்க்கால் வழியே பெற்றுக் கொள்ளலாம்.   அதற்காக அவ்வாய்க்காலினை ஆழப்படுத்தி (குத்தி)  நீரினைப் பாய்ச்சிக்கொள்ளலாம். இந்நீர், ஆற்றி லிருந்தோ, ஏரிகளிலிருந்தோ, குளத்திலிருந்தோ தலைவாய், மடை, மதகுகள் வழியே நீரீந்தும் வாய்க் காலினை அடையும்.  தலைவாய், மதகு/மடை போன்ற அமைப்புகளை இயக்குவதற்கு/பாதுகாப்பதற்கு தலை வாயர், ஏரிவாயர், தலைவாய்ச்சான்றார் இருந்தனர் என்று அறியமுடிகிறது. அளிக்கப்பட்ட நீர் குறை படாமல் இருக்க கொடைபெற்றோர் தவிர பிறர் (அந்நியர்/அன்னியர்) நீரீந்தும் வாய்க்காலை குறுக்கே வெட்டி நீர்பெறுவது மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று பிறர் சிறுஅளவிலான ஏற்றம் வைத்தும், கூடைகள் கொண்டும் நீர் இறைக்கவும் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. சில அரசாணைகள் இப்படிப் பட்ட வாய்க்காலில் இருந்து மேனடை/மேநடை நீரினை அதாவது நீரோட்டம் வாய்க்கால்வழிந்து ஓடும் போதும், கீழ்நடை நீரினை அதாவது நீரோட்டம் குறைவாக உள்ளபோதும் கொடை பெற்றவர்கள் நீர்பாய்ச்சிக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. அன்னீர் (அந்நீர்?) அடைச்சுப் பாய்ச்சிக்கொள்ளும் உரிமையும் வழங்கப் பட்டது. அதாவது நீர் வற்றும் காலங்களில் கிடைக் கின்ற நீரினை தேக்கிவைத்துப் பயன்படுத்தும் உரிமை.   சில கொடைகளில் ஆற்றிலிருந்து புதிதாக வாய்க்கால் வெட்டிக் கொள்ளவும் உரிமைகள் தரப்பட்டன.   புதிதாக வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டது. ஆற்றுநீர் வீணாகாமல் விளைச்சலுக்கு திசைதிருப்பப்பட்டது என்று பொருள். இப்படி ஆறு தொடங்கி சதுர கட்டங்களாக அமைந்திருக்கும் விளைநிலங்களுக்கு நீர்சேரும் வரைக்குமான நுட்பமான நிலக்கிடப்பியலே வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் என்ற அமைப்பாகும்.  இதுபோன்ற பாசனத் தொழில்நுட்ப அமைப்பு நெல் விளைச்சலுக்கென்றே பிரத்யேகமான அமைப்பாகச் சொல்வர். அதனால்தான் பெரும்பாலும் நெல்லரிசி யினை பிரதான உணவாக உண்ணும் பிராமணர்களுக்கு கொடையளிக்கப்பட்ட நிலம் பற்றிய கல்வெட்டு விவரணைகளில் மட்டும் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன போலும். இக்கருத்தின் மீதான பேரா.ந.அதியமானின் மீள்பார்வை தரப்படுகிறது.*  நீர்போகும் இந்த அமைப்பில் அரசின் நேரடித் தலையீட்டினை அறியமுடியவில்லை.    அதனை அறிந்தால் இக்கட்டுரை முழுமையடையலாம்.  அனைத்து அரசாணைகளிலும்  வழங்கப்பட்ட நீர் உரிமைகள் ஒரே மாதிரியாக (stமீக்ஷீமீஷீ tஹ்ஜீமீ) குறிக்கப் பட்டுள்ளன.   அம் மாதிரி பின்னிணைப்பில் தரப்பட்டு உள்ளது.

12. சோழமண்டலத்தில் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம்: சோழமண்டலத்தில் நீரினைச் சிக்கனமாகவும் விரையமின்றியும் பயிர்விளைச்சலுக்குப் பயன்படுத்த சோழர்காலத்திய வேளாண்குடிகள் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் எனும் நீர்ப்பாசன ஒழுங்குமுறையினை நிலத்தின் சரிவுத்தன்மைக்கேற்ப உருவாக்கியுள்ளனர். நிலத்தின் (gradient) சரிவுத் தன்மையும், புவியீர்ப்பும் (gravitation) நீரோட்டத்தினை இயக்கும் காரணிகளாக அமைகின்றன.  இதில் வாய்க்கால் பெரும்பாலும் கிழக்கு-மேற்காக நீரோடும் அமைப்பு; வதி வடக்கு-தெற்காக நீரோடும் அமைப்பு.  இவற்றில் வதி சில இடங்களில் நிலத்தின் மேட்டுச் சரிவுத்தன்மைக்கு ஏற்ப வாய்க்காலாகவும் இயங்கி யதனை அண்மையில் ஆய்ந்துள்ளனர்.32  எனவே, வதி நீரோடும் வாய்க்காலாகவும்-வடிகாலாகவும் (supply-cumdrainage- canal) இயங்கியதனை அறிய முடிகிறது.  இவ்வமைப்பு பற்றி கல்வெட்டுக் குறிப்புகள் பெரும் பாலும் சோழர் ஆட்சியின் மையப்பகுதியில் கிடைப் பதால் இதன் மீதான சோழரின் ஆளுமையினை அறிய வேண்டி கல்வெட்டில் கிடைத்த இவ்வமைப்பின் பதிவுகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டன.   இவற்றின் சராசரி விழுக்காட்டுப் (frequency) பதிவிற்கும் அரசிற்கும் இடையிலான ஊடாட்டம் அறியப்பட்டது.

சோழராட்சியில் தமிழகம் முழுக்க நான்கு காலகட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 524 வாய்க்கால்கள் கல்வெட்டுகளில் பதியப்பட்டுள்ளன.33   சோழர்காலத்தில் வாய்க்கால்கள் பற்றி தனியே  ஆய்வு செய்யப்பட்டுள்ளதால் அவற்றின் காலப்பகுப்பாய்வும் தொழில்நுட்பம் பற்றிய விவரணையும் தவிர்க்கப் படுகிறது.  முதல் காலகட்டத்திலிருந்து மூன்றாம் கால கட்டம் வரைக்கும் வாய்க்கால்களின் எண்ணிக்கை கூடிச்செல்கிறது. இப்போக்கு சோழர் அரசின் வேளாண் பெருக்கத்தினைக் காட்டும். வாய்க்கால் வெட்டுவதில் அரசின் நேரடித்தலையீடு இல்லை என்று சொல்வதற் கில்லை. மேற்சொன்னது போன்று இலெய்டன் செப்பேட்டில் உள்ள முதல் இராஜராஜனின் ஆணையின் படி புதிதாக ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. அவ்வாய்க்காலுக்கு இராஜராஜனின் பெயரே இடப் பட்டுள்ளது.    அரசர்களின் பெயர்களில் நான்கு கால கட்டத்திற்கும் சேர்த்து சோழமண்டலத்தில் மட்டும் 101 வாய்க்கால்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன.    இங்கும் முதல் காலகட்டம் முதல் நான்காம் கால கட்டம் வரை (850-1279) வாய்க்கால்களின் எண்ணிக்கை கூடிச்செல்கிறது. இதனை நீர்ப்பாசனத்தின்மீதான அரசின் இறுக்கமான ஆளுமை எனலாம்.    மொத்தமாக 48 வாய்க்கால்கள் ஊர்களின் பெயரால் இயங்கியுள்ளன.   முதலில் ஊர்வாய்க்கால்கள் அதிகமாகக் குறிக்கப்பட்டு அடுத்தடுத்து குறைவது உள்ளூர் ஆட்சிமன்றங்களின் ஆளுமை குறைந்ததனைக் காட்டும்.   இதனை அரசின் மேலாண்மை அதிகரித்ததாகக் கருதலாம். முதலாம் இராஜராஜனால் உருவாக்கப்பட்ட வளநாடு அமைப்பு இதற்குக் காரணமாகலாம். வட்டாரத் தலைவர்களின் அரசியலை சமாளித்து அவர்களை பலமிழக்கச் செய்வதற்கு இராஜராஜன் இத்திட்டத்தினை  அறிமுகப் படுத்தினான் என்பர்.34 அரசாணைகளின் நிலக்கொடை களில் ஊர்வாய்க்கால்கள் பற்றிய குறிப்புகள் அரசரின் ஆளுமையாகும்.

12:1.வதி: சோழமண்டலத்தில் மொத்தமாக 278 வாய்க்கால்கள் பயன்பட்டிருக்க 166 வதிகளே (47%) நீர்ப்பாசனப் பயன்பாட்டில் இயங்கியுள்ளன. முதலிரண்டு காலகட்டங்களில் சொற்பமாகி, பிறகாலகட்டங்களில் அதிகரித்திருப்பது வேளாண்பெருக்கத்தினைக் காட்டு வதாகவும் ஆட்சியின் உறுதிப்பாடு அதிகரித்ததாகவும் கருதலாம். அரசர்களின் பெயராலும் அவர்களின் பட்டப் பெயரோடும் சேர்த்து வதிகள் குறிக்கப்பட்டுள்ளன.35   ஊர்களின் பெயரால் வதிகள் குறிக்கப்பட்டிருப்பதால் நீர்வடிகால் பணிகளை ஊராரே செய்திருப்பர் எனலாம்.  வதிகளின் பெயர்கள் குறித்த புள்ளிவிவர பகுப்பாய்வில் மூன்றாம், நான்காம் காலகட்டங்களில் கடவுளரின் பெயர்கள் குறைந்து அரச குடும்பத்தினரின் பெயர்கள் அதிகரிப்பதனை ஆட்சியரின் மேலாண்மை எனக் கருதலாம்.

12:2. கண்ணாறு: தமிழகத்தின் நீர்ப்பாசனத்தொழில் நுட்பத்தில் கண்ணாறு மிக முக்கியமான கட்டமைப் பாகும். சோழமண்டலத்தில் மொத்தமாக 166 கண்ணாறு கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. வாய்க்கால்களின் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 44% ஆகும். இவை சோழராட்சியின் மையப்பகுதியிலேயே கிடைக்கின்றன. வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் பற்றி உத்தரமேரூர் கல்வெட்டுகளின் அடிப்படையில் ஒய்.சுப்பராயலு ஆய்ந்துள்ளார்.36  கிடைக்கின்ற நீரினை கடல்நோக்கித் திரும்பாமல் தேக்கிவைத்து வளமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும், சரிவான நிலப்பரப்பில் நீரோட்டத்தின் வேகத்தினை சமநிலைப்படுத்தவும் குறுக்கும்-நெடுக்குமான வதி-வாய்க்கால்-கண்ணாறு அமைப்பு பயன்பட்டிருக்க வேண்டும். இவ்வமைப்பு பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் பிரமதேய ஊர் கல்வெட்டுகளிலேயே கிடைக்கின்றன. ஆனால், வேளாண்குடிகளின் வெள்ளான்வகை ஊர்களே கொடையளிக்கப்பட்டு பிரமதேயங்களாயின என்று அரசாணைகள் விளக்குவதால் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் என்ற விலைநிலங்களுக்கான பாசனக்கட்டமைப்பு பிராமணர் குடியமர்த்தப்படுவதற்கு முன்பே வழக்கில் இருந்தது என்பதனை மேலும் உறுதிப் படுத்த சான்றுகள் தேவை.  இருந்தபோதும் வேளாண் ஊர்களில் நீர்ப்பாசன மேலாண்மையினை உள்ளூர்க் காரர்களே செய்திருப்பர்.   

12:3. ஏரிஅரையர்கள்: கரந்தைச் செப்பேட்டில் கொடையளிக்கப்பட்ட திரிபுவனமாதேவி சதிர்வேதி மங்கலத்திற்கு நீர்தரும் நீராதாரங்களில் ஒன்று திருபுவனமாதேவி பேரேரி.   இவ்வேரி ஏரிஅரையர்கள் என்ற குழுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கருதலாம்.  கொடையளிக்கப்பட்ட பாசனஏரி நீர்வழங்கும் தூம்புடன் சேர்த்து வழங்கப்பட்டதனை திருபுவனமா தேவிப் பேரேரி வடகரை வெட்டித்தூம்பு என்றும், தூம்பின் மேலருகே என்றும் (வரி:729) கரந்தைச் செப்பேடு தருகிறது.  திருவாலங்காட்டுச் செப்பேட்டின் படி கங்கனேரித்தூம்பினின்றும் பாய்ந்த மேட்டு வாய்க்காலேயுற்று மேற்கினின்றுமிக்கால் மென்னடை நீர் பாயப்பெறுவதாக என்று குறிப்பிடுகிறது. எனவே, நீருரிமை என்பது ஏரியிலிருந்தும் வாய்க்காலிலிருந்தும் நீரினைத் திருப்பிவிடும் நீர்ப்பாசனத்தொழில் நுட்பத் தினையும் சேர்த்தே என்று பொருள்கொள்ளவேண்டும். ஏரிகளைப் போன்று தலைவாய்களை தலைவாயர், தலைவாய்ச்சான்றோர் போன்ற குழுவினர் இயக்கினர்  எனலாம். எனவே, சோழர் அரசு நீருரிமையிலும் நீர்ப்பாசனத்திலும் ஆளுமை கொண்டிருந்தாலும் அதனை செயலாக்கியவர்கள் உள்ளூரில் இயங்கிய குழுவினர் என்று அறியமுடிகிறது. இவர்களுக்கு (ஏரி அரையர்கள், தலைவாயர், தலைவாய்ச்சான்றோர்) அரசர்கள் நேரடியாக ஆணையிட்டதாகக் குறிப்புகள் இல்லை.  காவிரி வழிந்தோடும் பகுதிகளில் மட்டுமே இவர்கள் இயங்கியதாகத்தெரிகிறது.  எனவே, நீரினை தலைவாய்மூலம் அரசு கட்டுப்படுத்தும் வாய்ப்பும் திருப்பிவிடும் வாய்ப்பும் உள்ளது என்று உணரலாம்.   இதனை நீருரிமையிலும் நீர்ப்பாசனத்திலும் அரசின் தலையீடு எனலாம்.  நீர்ப்பாசன இயக்கத்தில் இவர்களின் இருப்பினை நொபோரு கராஷிமா சுட்டிக்காட்டி யுள்ளார்.37 நீரினை மேலாண்மை செய்வதில் அரசு தலையீடு நேரடியாக இல்லையென்றாலும் அதன்மீதான உரிமையினை மாற்றித்தருவதில் அதிகாரம் கொண் டிருந்தனர் என்பதால் அரசுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் தொடர்பு உண்டு எனலாம்.

* இதை காலவாரியாக பார்க்கவேண்டும். ஏனென்றால் காட்டாக, திருப்புள்ளமங்கை பிரம தேயத்திற்கு அவ்வாறு வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் என்ற அமைப்பு இல்லை. என்னுடைய மதிப்பின்படி ஏற்கெனவே மக்களால் உருவாக்கப்பட்ட நிலங்கள் பிரமதேயமாக மாற்றும் போது பிராமணர்களுக்கு பங்காக அளிக்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கெனவே வேளாண்குடிகள் இயற்கையாகச் சென்ற ஆறு/வாய்க்கால்களில் உருவாக்கிய விளைநிலங்கள் மீண்டும் சதுரங்களாக மாற்றம் செய்வது மிகப்பெரிய பணி. எனவே தான் அவை பங்குகளாக வழங்கப் பட்டிருக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட பிரமதேயங் களில் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் முறையைக் காணலாம். காட்டு செம்பியன்மாதேவி. இதைத்தான் நான் கருதுகோளாகக் கொண்டு ஆய்ந்து வருகிறேன். எனினும் இதுகுறித்த ஆழ்ந்த ஆய்வு தேவைப்படுகிறது.

குறிப்புகளும் விளக்கங்களும்

1) Henri J.M.Classen, Peter Skalink (ed), The Early State, Mouton Publishers, The Hague.1978 .1973 செப்டம்பர் மாதத்தில் சிகாகோவில் உலக அளவில் நடைபெற்ற ஒன்பதாம் மானிடவியல் இனவியல் அறிவியல்களுக்கான மாநாட்டில் தொடக்ககால அரசுகள் பற்றி நல்லதொருநூல் வெளியிடப்படவேண்டுமென்று அறிஞர்களால் முடிவெடுக்கப்பட்டது.  அவர்களின்  சில கூடுகைக்குப் (1974; 1975;1976) பிறகு இறுதியாக 1978 இல் இந்நூல் வெளியிடப்பட்டது. கருத்தியல், மாதிரிஆய்வுகள், ஒப்பாய்வு என்று மூன்று பகுதிகளில் அரசுகள் பற்றி விளக்கும் இந்நூல் அறிஞர்களின் கூட்டிசைவிற்கு நல்ல மாதிரி. இந்நூலில் கட்டுரை யளித்தவர்களில் எழுவர் சோவியத் ஒன்றியத்தினையும், எழுவர் அமெரிக்க அய்க்கிய நாட்டினையும், மூவர் செக்கோஸ்லோ வோகியாவையும், மூவர் நெதர்லாந்தினையும், ஒருவர் பெர்லினையும் சேர்ந்தோராவர். இந்தியாவின் ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகத்திலிருந்து சுதர்ஸன் செனவரட்னே (Sudarsan Seneviratne) கட்டுரையளித்துள்ளார். இவர் இலங்கைக்காரர்.  இந்நூலின் முதல் பகுதி அரசு பற்றிய வரலாற்றியல்பார்வைக்கு நல்ல அலசல்.

2) Frederich Engels, The Origin of the Family, Private Property and the State, Progress Publishers, Moscow (I printing, 1946) reprinted 1985. இந்நூலாசிரியர் சொத்துடைமையே குடும்ப அமைப்பு முறைக்கு அடித்தளம். அதுவே, சமூகத்தினையும் ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்கள் கூட்டத்தினையும் அரசினையும் உருவாக்கும் என்றார். இக்கருத்து Anti-During என்ற நூலில் வலியுறுத்தி எழுதப்பட்டுள்ளது.  இந்தியச்சமூகம் பற்றிய கட்டுரைகளில் Karl Marx இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

3) op cit.,Henri J.M.Classen, Peter Skalink,1978. ð.7. இந்நூலில் கீழைநாடுகளின் அரசு பற்றி கார்ல்மார்க்ஸின் இக்கருத்து மிகமுக்கியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

4) சீறூர் மன்னர்களும் குறுநிலமன்னர்களும் அவரவர்களின் ஊர்களுக்கு ஆட்சியாளர்களாக இயங்கினர் என்றும், அவர்களின் ஆட்சிஎல்லை சீறூர்களைச் சார்ந்ததாகவே அமைந்திருந்தது என்றும் உரைத்து அப்படிப்பட்ட பல சீறூர்களை தமிழறிஞர் இனம் கண்டுள்ளார். பெ.மாதையன், சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும், NCBH, 2004, p.148.  ஆட்சியாளர் களுக்கு இடையிலான சண்டைகளை புலவர்கள் நியாயப் படுத்தினர் (புறம்:76). இப்பாடல் ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை என்று உரைக்கிறது.  காலத்தால் பிந்திய பதிற்றுப்பத்து வேந்தர்கள் போரில் இயற்கை வளங்களையும் நீராதாரங்களையும் அழிப்பர் என்று விளக்கும் (பதிற்று:13;15’20;23;25;26;71).

5)  K.Kailasapathy, Tamil Heroic Poetry, OUP, 1968. தமிழ் செவ்வியல் இலக்கியங்களை கிரேக்க வீரயுகக்கவிதைகளோடு ஒப்பிட்டு இதுபோன்ற முடிவிற்கு க.கைலாசபதி வந்தார். சோழர் குலத்தின் கரிகாலன் அரியணை ஏறுமுன் தம் தாயாதிகளுடன் போரிட வேண்டியிருந்தது என்றும் கிள்ளிவளவன் அரியணை ஏறுமுன் ஒன்பது மன்னர்கள் எதிர்த்தனர் என்றும் ர.பூங்குன்றன் தம் ஆய்வில் கண்டுள்ளார்.  சங்ககாலத்தில் குடிகளிடையிலும், வேளிர்களிடையிலும் போர்கள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன என்கிறார். ர.பூங்குன்றன், தொல்குடி வேந்தர் வேளிர்: பண்டைத்தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு, NCBH. Chennai. 2016. p100; 125.. செம்மொழிப்புலவர்கள் வீரர்கள் புகழெனின உயிருங் கொடுக்குவர் என்று புகழ்ந்து போருக்கு தயார்படுத்தினர் (புறம்:182). இதனால் கிட்டும் புகழ் வான்புகழ், விண்புகழ், வியங்குபுகழ், நின்புகழ் எனப்பட்டது.  போரில் இறந்துபட்டு புகழ் பெறுவதனை விண்பெருபுகழ் என்று புறப்பாடல் சுட்டும் (புறம்:116). போரில் மாண்ட வீரனை தேவருலகம் எய்தினான் என்று புலவர் போற்றுகின்றனர்.  இதனை புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை (புறம்:228).

6)வேள்விசெய்தலில் மூவேந்தர்களும் அக்கறைகாட்டினர் என்பதனை செவ்வியல் இலக்கியங்கள் விளக்குவன. ராஜ சூயவேட்டபெருநற்கிள்ளி என்ற சோழவேந்தன் வேள்வி செய்தான் (புறம்:16;125;367;377). பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசனின் பெயரிலேயே  பலயாக சாலைகளை உருவாக்கினான் என்று பொருள் அமைகிறது. இவன் பலவேள்வித்தூண்களை உடைய நாடு உடையவன் என்று புகழப்பட்டான் (புறம்:15;20;21). குடமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் நாடு அந்தணர் செய்த வேள்வித்தீயினை உடையது எனப்பட்டது (புறம்;397). கரிகாற்சோழன் தம் மனைவியோடு யாகசாலையில் இருந்தான் என்று புறப்பாடல் 224 விளக்கும்.  நலங்கிள்ளி பலவேள்விகள் செய்தவன் என்று புறப்பாடல் 400 பேசும்.  சேரவேந்தர்கள் வேள்வியில் பெரும் அக்கறை காட்டியுள்ளனர் (குறுந்:233;புறம்:361;பதிற்:70). வேதச்சடங்குகள் மக்களிடையே புகழ் பெற்றிருந்தன என்பதனை வேதம், வேள்வி, மறைநூல், முதுநூல், எழுதாக்கற்பு போன்ற சொற்கள் செம்மொழி இலக்கியங்களில் பதியப்பட்டதால் அறியலாம் (புறம்: 2;15;224;166, மதுரை:468;656, ஐங்;387, புறம்:93, பரி:912, பெரும்:315, பதிற்:62;70;74, கலி:126, குறுந்:156). வேள்விச்சடங்குகள் அரசர்களையும் அந்தணர் களையும் ஓரணியில் சேர்த்துள்ளன.

7) கபிலர், பரணர் போன்ற புலவர்கள் வேந்தர்களை பெரிதும் போற்றியுள்ளனர்.  இதில் பாரிக்கும் கபிலருக்குமான அறிவுசால் நட்பு (intellectual friendship) உணரத்தக்கது. சங்ககாலத்தில் அரசர்களுக்கும் பாணர்களுக்கும்/புலவர்களுக்கும் நட்பு இருந்ததனை க.கைலாசபதி எடுத்துக்காட்டினார்.  K.Kailasapathy. 1968. p.59. கோப்பெருஞ்சிங்கனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையிலான உறவினை இப்படிப் பார்க்கலாம்.   அவ்வைக்கும் அதிகமானுக்கும் இடையிலான உறவினையும், பாரிக்கும் கபிலருக்கும் இடையிலான உறவினையும் இவ்வாறு கணிக்கலாம். பாரி, அறிவுசால் நட்பாக ஒரு பிராமணரை தெரிவு செய்ததுதான் பின்னாட்களில் சோழ அரசர்களுக்கு பிராமணரை மந்திரியாக தெரிவு செய்யும் முன்னேராக அமைந்திருக்கும்.

8) EI;15:64. அன்பில் செப்பேட்டின் பதிப்பில் இக்குறிப்பினை T.A.Gopinatha Rao தருகிறார்.

9) C.Minakshi, The Historical Sculptures of the Vaikunda Perumal Temple in Kanchi in Memoirs of the Archaeological Series,No.63. Delhi.1941.p.37.

10) வேள்விகள் செய்த ராஜசூயவேட்டபெருநற்கிள்ளி முருகனைப் போன்று சீற்றமுடையவன் என்று புறப்பாடல் சுட்டும் (புறம்:16). குராப்பள்ளி துஞ்சிய நன்மாறனும், பாண்டிய வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் முறையே பலராமனுடனும் திருமாலுடனும் ஒப்பிடப்பட்டனர் (புறம்:58).  இப்படி கடவுளர்களுக்கு இணையாக அரசர்கள் புலவர்களால் நிறுத்தப்பட்டனர்.  இதுவே, பின்னாட்களில் அரசர்கள் தம் தம் பெயரில் கோயில்கள் எழுப்பிக் கொள்வதற்கு வழிவிட்டிருக்கும். முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் தம் தம் தலைநகர்களில் தம் தம் பெயரில் கோயில் எழுப்பினர்.  இரண்டாம் இராஜராஜனும் மூன்றாம் குலோத்துங்கனும்கூட முறையே தாராசுரம், திருபுவனம் என்ற இடங்களில் அரசு கோயில்களை எழுப்பினர்.   இவை பாடல் பெற்றதலங்கள் இல்லை. எனவே இவை பக்தித் தலங்கள் இல்லை; அரசுக்கான சடங்குத்தலங்கள் (royal ceremonial centres) எனலாம். சித்தூர் மாவட்டத்தின் காளஹஸ்தியில் உள்ள கோயிலில் மூன்றாம் குலோத்துங்கனின் உருவம் என்று அறியப்படும் உலோகப்படிமம் உள்ளதாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அங்கு சோழமாதேவியின் உலோகப்படிமமும் உள்ளது. பார்க்க K.A.Nilakanta Sastri, The Colas….p.754.fig:33;32.

11) பண்டைய இந்தியாவில் குலங்கள் அரசாக வளர்ந்ததனை  Romila Thapar தம் ஆய்வில் விளக்கியுள்ளார், Romila Thapar, From Lineage to the State: Social Formations in the Mid-First Millennium BC in The Ganga Valley [III impression], OUP, Madras, 1993.

12) வேதம்கற்ற, சடங்குகள் செய்கிற, ஆன்மீக குருமார்கள், சமயபூசாரிகள் போன்றவர்களுக்கு போதுமான விளைச்சல் தரும் வரிவிலக்கிற்கு உட்பட்ட, தண்டப்பணம் இல்லாத நிலத்தினைக் கொண்டு பிரமதேயங்கள் உருவாக்கித்தருவது அரசரின் கடமை களுள் ஒன்றாக அர்த்தசாஸ்திரம் அறிவுறுத்துகிறது R.Shamasastry, Kautilya’s Artasastra, [8thedition], Mysore Printing and Publishing House, Mysore.1967.p.45. திருக்குறள் நாடு, அமைச்சு, அரண், குடி, கூழ்,பகை என்று பல தலைப்புகளில் ஆட்சி பற்றி விவாதிக்கிறது.  எதுமாதிரி ஆட்சியாளர் வேண்டும் என்றும் கூடாது என்றும் பரிந்துரைக்கிறது.  குறள் 756 உல்கு என்ற வரியும் அபராதப் பணமும் அரசனுக்கு வருமானம் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், இக்கருத்துகளை ஆட்சி(government) என்ற பொருளில் கொள்ளலாம்;அரசு என்ற பொருளில் கொள்ள இயலாது.

13)K. A.NilakantaSastri,The Colas என்ற நூலினை மூன்று தொகுதிகளாக இந்தியவிடுதலைப் போராட்டச் சூழலில் வெளியிட்டார்.  இந்தியா விடுதலை பெறும் என்ற சாதகமான அரசியல் சூழல் உலகளவில் எழத்தொடங்கியபோது இத்தொகுதிகள் வெளியிடப்பட்டு பண்டைய இந்திய வம்சாவழி அரசு ஒன்றின் கட்டமைப்பினை ஆங்கிலத்தில் உலகிற்கு உணர்த்தினார்.  தொடர்ந்து தமிழ்ப்புலமை வட்டத்திற்கு  இக்கருத்தினை தி.வை.சதாசிவபண்டாரத்தார், மா.இராசமாணிக்கம் இருவரும் தம் தம் பங்கிற்கு தமிழ் இலக்கிய சான்றுகள் வழியே சோழர் வரலாற்றினை ஆய்ந்தனர். தி.வை.சதாசிவபண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம் [முதல்பதிப்பு,1949], அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.  மா.இராசமாணிக்கனார், சோழர் வரலாறு [(மூன்று பாகங்கள்) முதல் பதிப்பு, 1947;மறுபதிப்பு,1999], பூரம் பதிப்பகம்,சென்னை

14) Burton Stein, State and Agrarian Order in Medieval South India: A Historiographical Critique என்ற தம் கட்டுரையில் தென்னிந்திய வரலாற்றினை விமர்சனபூர்வமாக அணுகியிருந்தார்.  இக் கட்டுரையின் அடிப் படையில் எழுதப்பட்ட Peasant State and Society in Medieval South India என்ற நூலில் சோழர் அரசு ஒரு கூறாக்க அரசு (segmentary state) என்றும் அங்கு அரசர்கள் சடங்குநிலை அரசர்களாக இயங்கினர் என்றும் முன்மொழிந் திருந்தார்.  இந்நூலிற்கு பல அறிஞர்களும் விமர்சனம் அளித்தனர்.  இந்நூலினை தீர விமர்சனம் செய்து பல கட்டுரைகள் வெளிவந்திருப்பினும் அவருடைய சில கருத்துகளை முழுதாக புறக்கணிக்க முடியவில்லை.

15) Y.Subbarayalu, South India under the Cholas, OUP.2013. 1982 1982 இல் The Chola State என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரையின் பொலிவூட்டப் பட்டதாக சோழர் அரசு பற்றி இருகட்டுரைகளை இந்நூலில் வெளியிட்டுள்ளார்.   இவற்றில் சோழ அரசின் கூறுகள் Henri J.M.Classen and Peter Skalnik தொகுத்தளித்த கட்டுரைகளில் பரிந்துரைக்கப்பட்ட சில கூறுகளோடு சோழர் அரசு பொருந்திப்போகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

16) K.A.Wittfogel, Oriental Despotism, New Haven, 1957. பெரும்பாலான ஆசிய நாடுகளின் நீர்ப்பாசன மேலாண்மையினை அரசுடன் பொருத்திப் பார்த்து அரசின் கூறுகளை அலசி முடிவுகளைச் சொன்ன இவரது நூல் அரசுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் இடையிலான உறவை விளக்கும் ஆய்வுகளுக்கு முன்னோடி யாகும்.

17) RALH.Gunawardana, InterSocietal Transfer of Hydraulic Technology in Pre- Colonial South Asia:Some Reflections Based on a Preliminary Investigation in South East Asian Studies, Vol.22.No.2.sep.1984.pp115-142; idem,Cistern Sluices and Piston Sluices:Some Observations on Types of Sluices and Methods of Water Distribution in Pre-Colonial SriLanka in Journal of Humanities,Vol.10.Nos.1&2 (for1984,).pp.87-104.; Hydraulic Engineering in Ancient SriLanka The Cistern Sluices in Rat Paranavitana Commemoration Volume Leelananda Premetillake (et al) Leiden.1978.pp.61-74; Social Function and Political Power:A Case Study of State Formation in Irrigation Society in The Indian Historical Review,pp.259-273.

18) C.N.Subramaniam, Aspects of Agriculture in Kavery Delta C 850 to C 1600, unpublished M.Phil.,dissertation submitted to JNU,1983.

19) N.Kathiravan,N.Athiyaman, Irrigation System of Kavery Delta during the Chola Regime:A Case Study of Cembiyan Madevi Village in Amaravati:Felicitation Volume for Professor P.Shanmugam, (eds.) S.Rajavelu.(et al), 2017.

20) சோழர் ஆட்சியின் எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சியின் அடிப் படையில் சமூகக்கூறுகளையும் போக்குகளையும் புரிந்து கொள்வதற்கு அறிஞர்கள் சோழர் ஆட்சிகாலத்தினை நான்கு கட்டங்களாகப் பிரித்துள்ளனர்:மி: I:850- 985;II:985-1070;III:1070-1120;IV:1120-1279. இதனை வரலாற்றுப் போக்குகளின்படி தொகுத்தளித்த நொபோரு கராஷிமா மூன்றாம் கால கட்டத்தினை சோழர் அரசு நிலைப்படுத்திக்கொண்ட காலகட்டம் என்பார். கே.ஏ.நீலகண்டசாஸ்திரி முதலாம் இராஜராஜன் ஆட்சிக் காலத்தினை சோழர்அரசு உருவாகும் காலம் என்பார்.  சோழர் அரசுகாலகட்டத்தினை மூன்றாகப் பகுக்கும் இவர் சோழர்அரசினை பேரரசு என்று வருணிப்பார். சோழர் அரசில் இயங்கிய குரிசில் தலைவர்களின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு M.S.Govindasami சோழர் ஆட்சிகாலத்தினை மூன்றாகப் பகுக்கிறார் (விஜயாலயன் முதல் உத்தமசோழன்வரை; முதலாம் இராஜராஜன் முதல் முதலாம் குலோத்துங்கன் வரை; முதலாம் குலோத்துங்கன்முதல் மூன்றாம் ராஜாதிராஜன்வரை).  Noboru Karashima (et al), A Concordance of the Personal Names in the Chola Inscriptions,Vols.1978; K.A.Nilakanta Sastri, The Colas, (reprinted), 1984.p.168; M.S.Govindasami, The Role of Feudatories in Later Chola History,Annamalai University,1979, p.296.

21) புதுக்கோட்டை வட்டாரத்தில் 1990 களில் கள ஆய்வுகளில் பெறப்பட்ட செய்திகள்

22) இதுபோன்றதொரு அறுபடாத தொடர்ச்சியினை புதுக் கோட்டை வட்டாரத்தில் சித்தன்னவாசல், நார்த்தாமலை, குடுமியான்மலை போன்ற இடங்களில் காணலாம்.  நீர் நிலைகள் தொல்லியல் தளங்களின் அருகிலேயே இருப்பதனை அறிஞர்கள் கண்டுள்ளனர். K.S.Ramachandran, Archaeology of South India:Tamil Nadu,Sundeep Prakasan,New Delhi;K.R.Srinivasan,Megalithic Monuments of South India-Literature and Tradition inArchaeology Society of South India (Transactions for the year,158- ’59).அண்மையில் கள ஆய்வில் குமிழி-மடைகளைக் கொண்ட நீர் நிலைகள் அருகே தொல்லியல் தளங்களும், நில இடங்களில் நீர்நிலைகளின் உள்ளேயும்கூட தொல்லியல் தளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. K.R.Sankaran, Irrigation in the History of Tamil Nadu with Special Reference to Pudukkottai Region from C 800 to C1800 AD, unpublished P.hD.,thesis submitted to Tamil University, Thanjavur.1997. see the tebleno.II in the thesis.இவ்வட்டாரத்தில் பயன்பாட்டில் உள்ள சிலமடைகளுக்கு விலங்குபலியிட்டு வழிபடும்முறை வழக்கில் உள்ளது.

23) வீ.செல்வகுமார், தமிழகவரலாற்றில் ஊர்கள்-நாடுகள் சமூக உருவாக்கம்:அம்பல் (அம்பர்) அகழாய்வும் காவிரிப்படுகையில் பழங்காலச் சமூக உருவாக்கம் குறித்த ஆய்விற்குத் தொல்லியல் வழங்கும் தெளிவுகள் பற்றிய சிலகுறிப்புகள்  புதிய ஆராய்ச்சி, இதழ்:07,ஜனவரி-ஜூன்,2017பக்.119-133. இவர் தலைமையில் இயங்கிய அகழாய்வுக்குழு இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில் தலங்களுக்கு அருகிலேயே தொல்லியல் தளங்களைக் கண்டுள்ளனர்.  அவற்றுள் நீடூர்,  நாங்கூர், இன்னம்பர்  போன்ற வேளாண் ஊர்கள் முக்கியமாக இனம் காணப்பட்டுள்ளன.

24) K.A.NilakantaSastri செங்கற் தளத்தின்மேல் கட்டப்பட்ட கற்கோயில்களை நம் கவனத்திற்குத் தருகிறார். 167 of 1894; 392of1924; 36of1931; 91-92of1895. K.A.Nilakanta Sastri, The Colas…p.696,697.

25) A sepulchral temple was built in memory of Arinjayan in a place called Melpadi by Rajaraja I (SII,3:15). At a place called Tondamanad, Parantaka I built such a temple in memory of his father. The temple is called as Adityeswara. Rajaraja I built the grand temple called after him (Rajarajeeswaram) in his chosen capital; his son Rajendra I installed a temple on the same model in his capital Gangaikondacholapuram. It is called after him (Rajendracholiswaram).

26) பல்லவ விஜயசிம்மவர்மனின் ஆறாம் ஆட்சியாண்டில் ஆணையிட்டு சமணசமய குரவர்களுக்கு பள்ளிச்சந்தமாக நிலம் கொடையளிக்கப் பட்டபோது அந்நிலத்தில் முன்பு பயிர் செய்து வந்தோரை குடிநீக்கி அந்நிலம் வழங்கப்பட்டது. நந்திவர்மனின் 22 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட காசாகுடி செப்பேட்டில் பிரமதேயம் உருவாக்கப் படுவது விளக்கப் படுகிறது. கொடையளிக்கப்பட்ட அந்நிலத்தில் முன்பு பயிர் செய்து வந்தோர் உரிமை பறிக்கப்பட்டநிலை பதியப் பட்டுள்ளது (பார்க்க:பல்லவர் செப்பேடுகள் முப்பது).

27) புராணங்களில் பட்டியலிடப்பட்ட அரசர்களின் பெயர்களையும் தமிழ் செம்மொழி இலக்கியங்களில் இடம்பெற்ற கிள்ளி போன்றவர்களின் பெயர்களையும் கோத்து சோழர் வம்சத்தின் பெயர் பட்டியலில் கரிகாலன் பெயரினை அன்பில் இலய்டன் செப்பேடுகளின் பிரசஸ்திகளில் பதிக்கப்பட்டிருப்பதனை அன்பில் செப்பேடுகளின் பதிப்பில் T.A.Gopinatha Rao சுட்டிக் காட்டியுள்ளார். அதில், கரிகாலன் காவிரியாற்றின் இருபுறமும் கரைகட்டினான் என்று குறிப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இவ்விடத்தில்  செம்மொழி இலக்கியங்களில் காலத்தால் பிந்திய பத்துப்பாட்டின் பொருநராற்றுப்படை  சோழ நாட்டின் வளம், காவிரியின் வெள்ளச்சிறப்பு, சோழநாட்டின் வயல்வளம் போன்றவற்றைப் போற்றுகிறது என்பதனை கவனத்திற் கொள்ளவேண்டும் (பொரு:178-213;214-231;232-241;242-248).  பெ.மாதையன், ........2003.ப.169.

28) குடிநீக்கி, குடிநீங்கா என்ற சொற்களை ஆய்ந்த அறிஞர்களின் கருத்துகளை பரிசீலித்து நொபோரு கராஷிமா குடி என்பது நிலத்தின் மீதான உரிமையினைச் சுட்டுமே தவிர குத்தகை தாரரை (tenant) குறிக்காது என்றும் குடி நீக்கி என்பது நிலத்தின் மீதான உரிமையினை நீக்குவதே தவிர குத்தகைதாரரை நீக்குவது அன்று என்றும் தம் ஆய்வில் விளக்கியுள்ளார்.   Noboru Karashima, South Indian Society in Transition:Ancient to Medieval,OUP, New Delhi.2009.p.27.ff. °®c‚A â¡ø ªê£™¬ô K.G.Krishnan, removing the tenant என்று மொழி பெயர்க்கிறார் (கரந்தை செப்பேடுகள்,ப.30).

29) பிராமணர்-சத்திரியர் உள்ளுறவு செம்மொழி இலக்கியங்கள் இயற்றப் பட்ட சங்ககாலத்தில் இருந்து வழக்கில் உள்ளது என்பதனை சங்கப் பாடல்கள் விளக்குகின்றன. பட்டினப் பாலையில் கரிகாலன் பசுக்களை பாதுகாப்பவன் என்றும்  நான்மறையோரின் புகழினையும் போற்றுபவன் என்றும் புகழப்படுகிறான் (பட்டி:201;202).  பிராமணர்க்குத் தீங்கு செய்வது பாவம் என்றும் (புறம்:34) போர்ச்சூழலில் அவர்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும் என்றும் (புறம்:9) செம்மொழிப்பாடல்கள் பரிந்துரைக்கின்றன.  வேந்தர்களிடம் அந்தணர்கள் பரிசு பெற்றதனை செம்மொழிப் பாடல்கள் விளக்குவன (புறம்:367;361). Y.Subbarayalu, A Note on Tiruvindalur Copper Plate Grant in Medieval Religious Movements and Social Change:A Report of a Project on the Indian Epigraphical Study (ed) Noboru Karashima,Tokyo,The Toyo Bunko,2016.pp.125-135.பிராமணரின்றி ஷத்திரியனுடைய சத்கருமங் களும் ஷத்திரியரின்றி அந்தணனின் ஜீவனமும் நடைபெறாததாகையால் ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால் இம்மை மறுமைகளின் இன்பங்களை அடையக்கடவர், மனு-9:322.

30) Y.Subbarayalu, Political Geography of the Chola Country, State Department of Archaeology, Government of Tamilnadu,Madras,1973.p.59.see the Map.No:12.

31) இதுபோன்ற தொடர்கள் பெரும்பாலும் அரசாணைகளில் பதியப் பட்டுள்ளன. ஒரு பாசனவாய்க்கால் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு நீரீந்துவதால் இடைக்காலத்தின் தமிழக கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை என்ற கருதுகோள் உடைகிறது.

32) C.N.Subramaniam, Aspects of the Agriculture in Kavery Delta C 850 to C.1600, unpublished M.Phil.,Dissertation submitted to JNU,1983.

33) K.R.Sankaran, Some Historical Trends as Gleaned from the Nomenclature of the Canals (Vaykkals) in the Chola Inscriptions in Sri Puspanjali (Recent Researches in Prehistory, Protohistory,Art,Architecture,Numismatics,Iconography and Epigraphy), Dr.C.R.Commemoration Volume, K.V.Ramesh (et al), Bharatiya Kala Prakashan,Delhi.pp.206 271.

34) op cit.,Y.Subbarayalu....1973.p.57.

35) சோழர் ஆட்சிகாலம் முழுக்க சோழ அரசர், அரசியர் பெயர்களில் வதிகள் கல்வெட்டுகளில் பதியப்பட்டுள்ளன.   சோழர்அரசு சரிவுறும் கட்டத்தில் பாண்டிமாதேவிவதி என்று ஒரு கல்வெட்டு குறிப்பு உள்ளது கோ.விஜயவேணுகோபால், பரசலூர் கல்வெட்டுகள், ஆவணம், 24,2013. பக்.102-113.   இது பாண்டியர் ஊடுருவலின் தாக்கம் எனலாம்.

36) Y.Subbarayalu, Spatial Planning in an Early Medieval Settlement in Discourse on Indian History:A Festchrift in Honour of Professor N.Rajendran, (ed).N.Sethuraman,Clio Publishers,Tiruchirappalli.2016.

37) தலைவாய்ச்சாறார் என்பதன் பொருள் தெளிவில்லை என்றாலும் நீர்ப்பாசனத்தின் பொறுப்பாளர்கள் இவ்வாறு குறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் நீரினை விலக்கித்தரும் முதன்மையான மதகு/மடையின் பொறுப்பாளர்களைக் குறிக்கலாம் என்றும் பொருள் கண்டறியப்பட்டுள்ளது.   இவ் வேலைகளைச் செய்வதற்கு இவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டதும் அறியப்பட்டது.  மதகுகளை இயக்கும் இவர்கள் தனித்த குடியிருப்புகளில் வசித்தனர் என்பதனை தலை வாய்ச்சேரி என்ற சொல் விளக்கும்.   இது தலைச்சேரி என்றும் அரசாணையில் குறிக்கப்பட்டுள்ளது. Noboru Karashima, South Indian Soceity and History:Studies from Inscriptions AD 850-1800, OUP,1984.pp.6,47.54.

முதன்மை சான்றுகள்

பல்லவர் செப்பேடுகள் முப்பது

Epigraphia Indica, Vol.22,No.34.

Epigraphia Indica,Vol.15,No.5.

South Indian Inscriptions,Vol.2,No,4,5.

……………………….Vol.3,No.9;15;205;151.

Kishnan,K.G.Karantai Tamil Sangam Plates of Rajendrachola I, Memoirs of the Archaeological

Survey of India, No:79.ASI.1984

ஸ்ரீதர்,ஸ்ரீ.தி,(ப.ர்), திருவிந்தளூர் செப்பேடு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை, 2011.

துணைநூல்கள்

1) செல்வகுமார்,வீ.2017.தமிழகவரலாற்றில் ஊர்கள்-நாடுகள் சமூக உருவாக்கம்:அம்பல் (அம்பர்) அகழாய்வும் காவிரிப்படுகையில் பழங்காலச் சமூக உருவாக்கம் குறித்த ஆய்விற்குத் தொல்லியல் வழங்கும் தெளிவுகள் பற்றிய சிலகுறிப்புகள்  புதிய ஆராய்ச்சி, இதழ்:07,ஜனவரி-ஜூன்,

2) பூங்குன்றன்,ர.2016.தொல்குடி வேந்தர் வேளிர்:பண்டைத்தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு, NCBH.Chennai..

3) மாதையன்,பெ.2004. சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும், NCBH, சென்னை.

4) Govindasami,M.S.1979. The Role of Feudatories in Later Chola History, Annamalai University. Annamalainagar.

5) Gunawardana,RALH,1978. Hydraulic Engineering in Ancient SriLanka The Cistern Sluices in Rat Paranavitana Commemoration Volume Leelananda Premetillake (et al) Leiden..pp.61-74;

6) ...............................1984. InterSocietal Transfer of Hydraulic Technology in Pre-Colonial South Asia:Some Reflections Based on a Preliminary Investigation in South East Asian Studies, Vol.22.No.2.sep.

7) ……………………..1984. Cistern Sluices and Piston Sluices:Some Observations on Types of Sluices and Methods of Water Distribution in Pre-Colonial SriLanka in Journal of Humanities,Vol.10.Nos.1&2 (for1984,).pp.87-104

8) Henri J.M.Classen,Peter Skalink. 1978, (ed), The Early State, Mouton Publishers, The Hague.

9) Frederich Engels,1985. [(I printing,1946) rex   rinted)] The Origin of the Family, Private Property and the State, Progress Publishers, Moscow.

10) Karashima,Noboru,1978. (et al), A Concordance of the Personal Names in the Chola Inscriptions,Vols. Sarvodaya Ilakkiya Pannai.Madurai.

11) Noboru Karashima.1984.South Indian Society and History:Studies from Inscriptions AD 850-1800, OUP,1984.New Delhi.

12)………………2009.South Indian Society in Transition:Ancient to Medieval,OUP, New Delhi.

13) Kailasapathy,K.1968.Tamil Heroic Poetry, OUP,London.

14) Kathiravan,N.Athiaman,N 2017.Irrigation System of Kavery Delta during the Chola

15) Regime:A Case Study of Cembiyan Madevi Village in Amaravati:Felicitation Volume for Professor P.Shanmugam, S.Rajavelu.(et al).

16) Minakshi,C.1941.The Historical Sculptures of the Vainkunda Perumal Temple in Kanchi in Memoirs of the Archaeological Series,No.63. Delhi.

17) Sankaran, K.R.2004.Some Historical Trends as Gleaned form the Nomenclature of the Canals (Vaykkals) in the Chola Inscriptions in Sri Puspanjali (Recent Researches in Prehistory, Protohistory,Art,Architecture,Numismatics,Iconography and Epigraphy), Dr.C.R.Commemoration Volume, K.V.Ramesh (et al), Bharatiya Kala Prakashan, Delhi.pp.206-271.

18) Shamasastry,R.1967. Kautilya’s Artasastra, [8thedition],Mysore Printing and Publishing House, Mysore.

19) Sastri,Nilakanta,K.A.1984 [II edition],University of Madras,Madras.

20) Southall.W.Aidan, A Note on State Organisation:Segmentary Stae in Africa and Medieval Europe in Early Medieval South India (ed) Sylvia Thrupp. NewYork,1980.

21) Stein, Burton,1981.Peasant State and Society in Medieval South India,OUP,Madras. Subbarayalu,Y.2013.South India under the Cholas, OUP.Chennai.

22) Subbarayalu,Y.2016.Spatial Planning in an Early Medieval Settlement in Discourse on Indian History:AFestchrift in Honour of Professor N.Rajendran, (ed).N.Sethuraman,Clio Publishers, Tiruchirappalli.

23) Subbarayalu,Y.2016. A Note on Tiruvindalur Copper Plate Grant in Medieval Religious Movements and Social Change:A Report of a Project on the Indian Epigraphical Study (ed) Noboru Karashima,Tokyo,The Toyo Bunko,.pp.125-135.

24) Subramaniam,C.N.1983. Aspects of the Agriculture in Kavery Delta C.850 to C.1600, unpublished M.Phil.,Dissertation submitted to JNU. New Delhi.

25) Thapar, Thapar.1993. From Lineage to the State: Social Formations in the Mid-First Millennium BC in The Ganga Valley [III impression], OUP,Madras.

26) Wittfogel, K.A.1957. Oriental Despotism,New Haven.

பின்னிணைப்பு

செப்பேட்டுப் பாடம்  

இந்நிலத்துக்கு நீர்கீய்ந்தவாறு வாய்க்கால் குத்தி பாச்சவும் வாரவும் பெறுவதாகவும்/இவ்வாய்கால்கள் கீழ்நடைநீர்பாயவும் வாரவும் பெறுவதாகவும்/இவ்வாய்க்கால்கள் அந்நியர் குறங்கறுத்துக் குத்தவும் குற்றேத்தம் பண்ணவும் கூடைநீர் இறைக்கவும் விலங்கடைக்கவும் பெறாததாகவும் சென்னீர் பொதுவினை செய்யாதிதாகவும்/அன்னீர் அடைச்சுப் பாச்சப்பெறுவதாகவும்.

விளக்கம்

அதாவது கொடையளிக்கப்பட்ட நிலங்களுக்கு வேண்டிய நீரினை வழங்கப்பட்ட வாய்க்காலில் இருந்து அதனை ஆழப்படுத்தி பெற்றுக்கொள்ளவும்.  வாய்க்கால்களில் நீர் மிகுந்துள்ளபோதும், குறைவாகவுள்ளபோதும் பெற்றுக்கொள்ளவும்.  கொடையாளிகள் தவிர பிறர் இவ்வாய்க்கால்களில் குறுக்கே வாய்க்கால் வெட்டி நீர் பாய்ச்சவேண்டாம் என்றும், கூடைமூலமும், ஏற்றம் மூலமும் நீர் இறைக்கவேண்டாம் என்றும் சொல்லப்பட்டது.  தட்டுப்பாடான காலங்களில்கூட நீரினை அடைத்து பாய்ச்சவும் உரிமை வழங்கப்பட்டது.

# இக்கட்டுரை நல்வடிவம் பெறுவதற்கு  கருத்துகளை வழங்கி ஊக்கப்படுத்திய பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், இளம் பொருளியல் ஆய்வாளர்/களப்பணியாளர் ர.மணிமோகன் பேரா.ந.அதியமான் அனைவருக்கும் நன்றி.  கண்ணாறு-சதிரம் பற்றிய புரிதலுக்கு தாம் தொகுத்திருந்த தரவுகளை பயன்படுத்து வதற்கு அளித்த ஆய்வாளர் நடராஜன் கதிரவனுக்கு நன்றி பதிப்பது கடப்பாடாகும்.

26-11-2017 அன்று கீற்று இணைய இதழில் பதிவேற்றப்பட்ட கட்டுரை

Pin It