pavanar450“தமிழ்க்கெனப் பிறந்து தமிழ்க்கென வளர்ந்து

தமிழ்க்கெனப் பயின்று தமிழ்க்கெனப் பயிற்றித்

தமிழ்க்கென ஓய்ந்து தமிழ்க்கென ஆய்ந்து

தமிழ்க்கென வாழுந்தமிழே வாழி”

எனப் பாவாணரின் மாணவராகிய பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் போற்றுதலுக்குரிய ஆசிரியராக விளங்கியவர் பாவாணர். தமிழைச் சொல்லிப் பிழைத்தவர் மத்தியில் தமிழைப் பரப்பியவர். தமிழ்வாழ வளம் சேர்த்தவர், தமிழ்வாழத் தம்வாழ்வை அர்ப் பணித்தவர் பாவாணர். தமிழ்வாழ,  வளர, தம்வாழ்வை ஈகஞ்செய்து தமிழர் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்தவர் பாவாணர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன் நயினார் கோயிலில் திருவள்ளுவராண்டு 1933 சுறவம் (தை) திங்கள் 26 (7.2.1902)இல் ஞானமுத்து பரிபூரணத் தம்மையார்க்குப் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர் பாவாணர். இளமையிலேயே பெற்றோரை இழந்த பாவாணர், தமக்கையாரின் அரவணைப்பில் வளர்ந்தார். சோழபுரம் விடையூழியப்பள்ளி மாணவவிடுதியில் சேர்க்கப்பெற்றுத் தொடக்கக்கல்வி பயின்ற அவர், தம் மூத்த அக்கையாருடன் ஆம்பூருக்குச் சென்று அங்கிருந்த மிசௌரி நல்லஞ்சல் உலுத்தரின் விடையூழிய நடு நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்றார்.

கல்விப்பணி

சீயோன்மலை எனப்படும் முரம்பில் விடையூழி யராக இருந்து கல்விப்பணி ஆற்றிவந்த எங்குதுரையிடம் கடனுதவி பெற்றுப் பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழியக் கழக உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் (பதினோராம் வகுப்பு வரை) படித்துத் தேறினார்.   அதற்குமேலே படிக்க வாய்ப்பின்றி, தம் கல்விக் கடனை அடைக்க 1922-இல் எங்குதுரை மகனாரின் ஆளுகைக் குட்பட்ட சியோன்மலை நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆசிரியராகத் தமது பதினேழாம் அகவையில் தமிழ்க் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் பாவாணர்.

தேவநேயப் பாவாணர் மாணாக்கர்க்குத் தமிழ்ப் பயிற்றும் ஆற்றலுடையவர் என்பதற்குச் சான்றிதழ் வழங்கிய பாளையங்கோட்டைத் திருச்சபை விடையூழிய உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் பண்டித மாசிலா மணியார், தேவநேயனாரின் “பாடல்புனையும் ஆர்வத் தையும் ஆற்றலையும் அறிந்திருந்தமையால் அவர் பெயரைத் தேவநேசக் கவிவாணன்” என்று சிறப்பித்துள்ளார். தேவநேசன் என்பது தேவநேயனாருக்குப் பெற்றோர் இட்டப் பெயராகும். “தமிழறிஞர்களுள் பாவாணர் ஓர் ஆராய்ச்சிமலை. அவரைப்போல் இதுவரை தமிழ் மொழிக்காக எவரும் தம்மை முழுமையாக ஒப்புக் கொடுத்ததில்லை. தம்மைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் தமிழ் பற்றியே நினைந்து நினைந்து வரலாறாகிப் போனவர் பாவாணரிடம் இருந்து ஓரிரு குறைகளுள் தலையாயது எல்லோரையும் நம்பிவிடும் குழந்தை உள்ளத்தினர் என்பதுதான்” எனப் பாவாணரின் குறைநிறைகளைப் பாவலரேறு இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்ச்சங்கப் பண்டிதர் தேர்வு பெற்றதன் பயனை ஆழமாகச் சிந்தித்து எழுதுகிறார் பாவாணர். “1924 ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வெழுதித் தேறினேன். அதனால் எழுந்த செருக்கினாலும் தமிழ்வெறியினாலும் ஆங்கிலத்தை அறவே புறக்கணித்து நான் ஆங்கிலம் பேசக்கூடாது என்றும், பிறர் பேசின் செவிமடுக்கக்கூடாது என்றும் சூளிட்டுக்கொண்டேன். அம்மயக்கும் பத்தாண்டு தொடர்ந்தது. அதனால், தமிழாராய்ச்சியில் ஆழ முழுகித் தமிழின் அடிமட்டத்தைக் கண்டேனாயினும், ஆங்கிலப் பேச்சாற்றலை இழந்துவிட்டதால் ஆங்கிலப் பட்டம் பெறும்வரைக் கல்லூரியில் கால்வைக்க முடியாது போயிற்று. அதனால் பதவி உயர்வும் பொருளியல் முன்னேற்றமும் இல்லாது போயின” என்கிறார்.

தமிழிலே பெற்ற பண்டிதத்தேர்வுக்குப் பின் நெல்லைத் தமிழ்ச்சங்கப்புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் பட்டமும் இந்தியில் விசாரத்துப் பட்டம் எனும் பல பட்டங்களைப் பெற்றிருந்த பாவாணர் “இனி இந்தியத் துணைக் கண்டத்தில் யான் பெறும் பட்டம் ஒன்றும் இல்லை” என்று உறுதிசெய்து பல மொழிகளையும் பணியில் இருந்துகொண்டே பயின்றுள்ளார்.

“மொழி கற்கும் கூர்மை அமைந்த ஒருவர் எளிமையாக ஐம்பது மொழிகளைக் கற்கமுடியும்”என்று எழுதும்  பாவாணர் 23 மொழிகளைக் கற்றார். 58 மொழி களில் வேர்ச்சொல் கண்டார். தொல் பழமொழிகளை ஆராய்ந்தார்.

1971 - இல்  விடுத்த தம் பிறந்தநாள் செய்தியில் தமிழ் உயர்ந்தால்தான் தமிழன் உயர முடியும். அதற்குத் தமிழர் இனி எல்லாவகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும். தமிழர் அனைவரும் தமிழ்ப்பெயரையே தாங்கல்வேண்டும். தமிழ் என்பது தனித்தமிழே என்பார் பாவாணர். அவர் எப்பொழுதும் தூயதமிழிலேயே பேசுவார்., எழுதுவார். எதிலும் பிறமொழிக் கலப்பே இராது, சொல்வது மட்டுமல்லாமல் செயலிலும் காட்டியவர் பாவாணர்.

பிறப்பால் கிறித்தவராக இருந்தாலும் வாழ்வால் தமிழராகித் தம் மக்களுக்கு அழகிய மணவாளதாசன் (முதல் மனைவியாகிய எஸ்தர் அவர்களுக்குப் பிறந்தவர்.  குழந்தை பிறந்து ஆறு திங்களிலே குழந்தையின் தாய் இறந்துவிட்டதால் தமது மகனைத் தமது சகோதரருக்குத் தத்துப்பிள்ளையாகக் கொடுத்துவிட்டார்) நச்சினார்க் கினியநம்பி, பைந்தமிழ் வளர்த்த பாண்டியன், சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலை வல்லான், அடியார்க்கு நல்லான், மடம்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்றவாணன் எனத்தம் மக்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார் பாவாணர்.

தமிழ்ப்பணி

ஆங்கிலம் கற்று ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பெருவிருப்பங் கொண்டிருந்த பாவாணர் தமிழ்மீது கொண்ட பற்றால், தமிழாசிரி யராகத் தமிழ் ஆய்வையும் மேற்கொண்டு, தம் வாழ்வைத் தமிழுக்காக ஈகம் செய்தவர்.

சென்னை, திருவல்லிக்கேணி கெல்லற்று உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக 1925-இல் பணியாற்றினார். சென்னைக் கிருத்தவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். 1928- இல் சென்னை, பெரம்பூர் கலவகண்ணனார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக ஈராண்டு பணி தொடர்ந்தார்.

மன்னார்குடி ‘பின்லே’ கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராக ஐந்தாண்டுகள் பணி தொடர்ந்தார். 1936 இல் திருச்சி புத்தூர் ஈபர் கண்காணியர் உயர்நிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். சென்னை, மண்ணடி முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். இப்பள்ளியில் பாவாணரோடு முனைவர் மா.அரசமாணிக்கனாரும் பணியாற்றினார்.

1944 இல் சேலம் நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியையேற்றுப் பின்னர் பேராசிரியரானார். சேலம் கல்லூரியில்  பன்னிரண்டு ஆண்டு தமிழ்ப்பணியைத் தொடர்ந்தார். 1956 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திராவிட மொழி யாராய்ச்சித்துறை வல்லுநராக அப்பணியை ஏற்றார்.

பாவாணரின் தமிழ்மனம்

பாவாணரின் மாணவர்கள் எல்லாம் ஆசிரியராகவும் சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் இருந்த காலங்களிலெல்லாம் தன் கண்முன் தமிழும் தமிழரும் தமிழ்நாடும் தமிழ்ப்பண்பாடும் இழிநிலையில் இருந்ததைக் கண்டு கொதித்துள்ளார். ஆரியர்கள், அன்னியர்கள் திட்ட மிட்டே தமிழினத்திற்குக் கேடுகளைச் செய்துவந்ததைப் பார்த்துப் பதைபதைத்தார். நூல்கள், இதழ்கள்மூலம், சொற்பொழிவுகளின்மூலம் நடந்த திரிபுச்செய்திகளை அவற்றின் மூலமே எதிர்க்க முடிவுசெய்து தமிழறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள் என அணி திரட்டினார். தன்னுடைய ஆசிரியர்பணி வருமானம் மட்டுமே வாழ்வில் இன்பம்தரும் என்பதை அறிந்த பாவாணர் அதற்கும் மேலாகத் தமிழ்மானப் பணியும் செய்ய வேண்டும் என்று எண்ணினார்.

மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதர் தேர்வில் வெற்றி பெற்றிருந்ததோடு தன் கல்வி நிலையை வைத்துக் கொள்ளாமல் திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்சங்கத் தமிழ்ப்புலவர் தேர்வில் வெற்றிபெற்றதோடு கீழமைக் கலை அறிவின் ((B.O.L)) பட்டம் மற்றும் அதில் கலைமுதுவர் பட்டமும் பெற்றார். இந்தப் படிப்புகளும் பட்டங்களும் தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் தமிழ் மானம் காக்கப் பயன்பட்டன. ஆங்கிலம் அறிந்தவர்கள் அதிக ஊதியம் பெற்று ஆங்கிலம் பயிற்றுமொழிக் கல்வியில் உயர்ந்ததையும் தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் ஊதியத்தில் குறைந்ததையும் போக்கவும் பாடுபட்டார்.

குலக்கல்வித் திட்டம் அறிமுகமானதையும் இந்தி புகுத்தப்பட்டதையும் கல்வித்துறையில் தமிழ் பின்னடைய காரண மானவர்களைக் கண்டுகனன்றார். அவர் படித்த  படிப்பு அவரின் வரலாற்றறிவுக்கும் மொழியறிவுக்கும் உறுதுணை செய்தன. பள்ளியின் இலக்கியமன்றச் செயலாளராகப் பொறுப்பேற்று ஆங்கிலப் பேச்சாள ராகவும் வளர்ந்திருந்தாலும் ஆங்கில இலக்கியங்களைக் கற்றுக் கரைகாண எண்ணம் உடையவராகவும் ஆக்சுபோர்டு  (Oxford) பல்கலைக்கழகத்தில் பணிசெய்ய விருப்பமுடையவராகவும் இருந்துள்ளார். இத்தனையும் எண்ணியிருந்தாலும் அவர் தமிழ்மானம் காக்கவே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருந்தார். அரசின் அடக்கு முறைகளை எதிர்க்கக் கருவியாக எண்ணத்தை நூலாக்கிப் பயன்படுத்தியுள்ளார்.

வடசொற்களை அறவே அகற்றித் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்தது தமிழ்மொழி என்று கால்டுவெல் (1814-1897) குறிப்பிட்டது, பாவாணரின் ஆராய்ச்சிக்கு அரண் சேர்த்தது. தமிழ்ச்சொற்களை அறியாது வாழ்ந்து வந்த தமிழர்களைக் கண்ட பாவாணர் நூற்றுக்கணக்கான அயற்சொற்களுக்கு அருந்தமிழ்ச் சொற்களை மொழி பெயர்த்துக் கொடுத்தார். சொல்வங்கியைப் படைத்துத் தமிழ்மானம் காத்தார். குளம்பி, தூவல், ஏவுகணை, கலை இளைஞர் முதலியவை பாவாணர் உருவாக்கிய சொற்களாகும். பிராணியை ‘உயிரி’ என்றும் கிராமத்தைச் ‘சிற்றூர்’ என்றும் வக்கீலை ‘வழக்கறிஞர்’ என்றும் மாற்றித் தந்தார்.

தமிழ்மானம் காக்க பாவாணர் அனைத்துத் துறைகளிலும் ஆராய்ச்சிக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டார். சொல்லாராய்ச்சி, மொழியாராய்ச்சி மூலம் தமது முக்கொள்கைகளான 1. தமிழ் திராவிடத் திற்குத் தாய் ஆரியத்திற்கு மூலம், 2. தமிழ் உலக முதன்மை உயர்தனிச் செம்மொழி, 3. மாந்தன் பிறந்தது குமரிக்கண்டம்,  எனவே தமிழன் பிறந்ததும் அதுவே ஆகும். இவற்றை நிலைநாட்ட எண்ணிச் செயல் பட்டார். தமது ஆராய்ச்சியில் கண்டதுதான் இம் முக்கொள்கைகளாகும்.

“எனக்கும் தனித்தமிழுணர்ச்சி இருந்ததால் மறைமலையடிகளோடு தொடர்புகொள்ள நேர்ந்தது. அவரிடத்தில் அடிக்கடி போனேன்” என்று குறிப்பிடும் பாவாணர், மறைமலையடிகளுக்குப் பிறகு தமிழ்த் தூய்மை பேணும் பேராசிரியன் யான் ஒருவனே என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழியிலும் பேச்சிலும், எழுத்திலும் ஏற்பட்ட எண்ணற்ற மாற்றங்களுக்குப் பாவாணரின் சொல்லாய்வே கரணியமாகும்.

தமிழை வடமொழிப் பிணிப்பினின்று மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள் என்பதை வெளிப் படுத்தினார். அந்தக் கருத்தை சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகமும் செந்தமிழ்ச்செல்வியும் வலுவாக்கின. பாவாணரைப் போலவே பரிதிமாற்கலைஞர், மு.தமிழ்க் குடிமகனார், புலவர் குழந்தை, பாவலரேறு பெருஞ் சித்திரனார், பாரதிதாசன், சி.இலக்குவனார், பன் மொழிப்புலவர் கா.அப்பாத்துரையார், இலக்கியச் செம்மல் புலவர் இரா.இளங்குமரனார் போன்று நூற்றுக்கணக்கானவர்கள் சமற்கிருத எதிர்ப்பணியில் அணி வகுத்தனர். உலக முதன்மொழி, உலக உயர் தனிச்செம்மொழி என உறுதிப்படுத்தினர்.

“மொழியானது இந்நாட்டில் பொதுவாய்க் கருதப்படுகிறபடி இறைவனால் படைக்கப்பட்டது மன்று; இயற்கையால் உள்ளதுமன்று; மாந்தனால் ஆக்கப்பெற்றதே ஆயின் ஒருவனால் மட்டுமன்று, கழிபலவூழிகளாகக் கணக்கற்ற தலைமுறையாளர்களால் சிறிதுசிறிதாய் ஆக்கப்பெற்றதாகும். இங்ஙனம் ஆக்கப் பெற்ற மொழிகள் உண்மையில் ஒரு சிலவே. அச்சிலவே, அவற்றின் பல்வேறு நிலைகளில் நிகழ்ந்த திரிபு, சுருக்கம், பெருக்கம், கட்டு, கலப்பு என்னும் ஐம்முறை களால் ஏறத்தாழ மூவாயிரம் மொழிகளாகக் கிளைத்து உலகமெங்கும் பரவியிருக்கின்றன. அம் மூலமொழிகளுள் முதன்மையானது தமிழே; அது தோன்றிய இடம் மாந்தன் பிறந்த இடமாகிய குமரிநாடே”எனப் பாவாணர். தமது ஆய்வின்வழி வெளிப்படுத்தியுள்ளார்.

“ஆரவாரம் என்பது கடல் அலையைப் போன்றது. புரட்சி என்பது எரிமலையைப் போன்றது” என்பார் பாவாணர். அது திடீரென்று வெடித்து புரட்சியாக மாறும். அதைத்தான் மொழிப்போர் கண்டது. தமிழ்ப்பயிரில் உருவாகும் களைகள் ஒன்று இந்தி, மற்றொன்று வடமொழி என்பார் பாவலரேறு. தமிழர் வாழ்வை, தமிழர் வனப்பைத் தாவிக் கடித்திடும்நாய் என்பார். அந்நாயைத் தடிகொண்டு அடித்து விரட்ட வேண்டும். திராவிடம், திராவிடர், திராவிடநாடு என்னும் ஆரியச்சார்புச் சொற்களை அறவே ஒழித்து தூய்மையுணர்த்தும் தமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்னும் சொற்களையே இனி வழங்கவும், முழங்கவும் வேண்டும் என்று பாவாணர் கூறியதுபோல் இனிமேல் தமிழர்கள் செயல்பட வேண்டும். பிற மொழியையும் அம் மொழி பேசும் மக்களையும் குறை கூறுவதைவிட நம்மொழிமீது நாம் அக்கறை செலுத்தினாலே பிறமொழிச் சொற்கள் தானாக மறைந்துவிடும் “எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு”என்ற பாவேந்தரின் கூற்று மெய்படும் காலம் வெகுதொலைவி லில்லை என்பதே உண்மை.

பாவாணர் எவ்வளவு இடர்பாடுகள் வந்தாலும், எவ்வளவு இழப்பு நேர்ந்தாலும் கவலை கொள்ளாது கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்றவர். அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் பணியில் இருந்தபோது தமிழுக்கு உயர்வுதரும் உண்மை ஆராய்ச்சியை வெளிப்படுத்தினால் வேலையை விட்டு வெளியேற்றப் படக் கூடுமென்று அறிந்திருந்தும், ‘எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அதோடு மானமும் உண்டு’என்ற கொள்கைப் பிடிப்புடன் உண்மை ஆய்வை வெளிப்படுத்தி, 1961 இல் அண்ணாமலைப் பவ்கலைக் கழகத்திலிருந்து வெளியேறினார்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணி தொடர முடியாத நிலையில், தன்மானத்துடன் அங்கிருந்து வெளியேறிய பாவாணர் “யான் வெளி யேறினேன்;  தமிழும் என்னோடு வெளியேறியது”என்று குறிப்பிடுகிறார்.

22 ஆண்டுகள் உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரிய ராகவும், தலைமையாசிரியராகவும் 12 ஆண்டுகள் கல்லூரிப் பேராசிரியராகவும், 5 ஆண்டுகள் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் திராவிட மொழி யாராய்ச்சித் துறைவாசகராகவும், செயலாளராகவும், “இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்”என்ற குறளை நன்குணர்ந்த கலைஞர் அகரமுதலி தொகுப்புக் குழுவைப் பாவாணர் தலைமையில் அமைத்ததன் மூலம் தமிழ்மொழிக்குப் புதுவாழ்வு கிடைத்தது. 6 ஆண்டுகளுக்குமேல் 1974 -இல் தமிழ்நாட்டரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்குநராகவும் பணியாற்றினார் பாவாணர். 40 ஆண்டுகளுக்குமேல் தமிழ்ப் பணி யாற்றிய பாவாணரின் வாழ்க்கை வறுமை நிறைந்த தாகவே இருந்தது. எந்தநிலையிலும் தம்ஆய்வுக்கு வேண்டிய நூல்களை வாங்கிச் சேர்ப்பதை விட்டதில்லை.

1977 - இல் பாவாணர் “காலமெல்லாம் தனித் தமிழ் கொள்கையினால் குறைந்த சம்பளம் பெற்று வந்தேன். இன்றுதான் இறுதிக் காலத்தில் சம்பளம் சற்று உயர்ந்திருக்கிறது. இன்னும் குடியிருக்க வீடில்லை; புத்தகம் வாங்கப் பணமில்லை” எனக் குறிப்பிடும் பாவாணர் தம் வறுமை நிலையிலும் தமிழுக்கு வளம் சேர்த்தவர், தமிழே வாழ்வாய் வாழ்ந்தவர் பாவாணர் என்பது புலனாகிறது.

“பாவணர்க்கென்று தனிக் கொள்கை எதுவும் இல்லை. தமிழ்தான் அவர் கொள்கை. தமிழ் அனைத்து நிலைகளிலும் விடுபட்டுத் தனித்தியங்கி, உலகின் மூல முதல்மொழியென்று பிறநாட்டாரும் ஒப்பும் அளவுக்கு மெய்பிக்கப்பெற்று, நிலைநாட்டப் பெறல்வேண்டும் என்பதுதான் அவரின் வாழ்வியல் கொள்கை.    இத்துறையில் உழைக்கின்ற உண்மையான நேர்மையான நடுநிலையான தமிழாய்வறிஞர்களுக்குப் பாவாணரிடம் காட்டிய அன்பையும் ஆதரவையும் தந்து, தமிழ் மேம்பாட்டிற்கு வழிகோலுவதே அவரிடம் உண்மையான அன்பும் மதிப்பும் கொண்டவர்களாகத் தங்களைக்கூறிக் கொள்ளும் அன்பர்களுக்கு நான் கூறிக்கொள்கின்ற அறிவுரையாகும். இந்நிலையினின்று தாமும் அவர்களின் ஒவ்வொரு முனைப்பும், வினைத்திறமும் தமிழ் மொழியில் முன்னேற்றத்தைப் பல படிகள் தாழ்த்திவிடும் என்பதை அவர்கள் தந்நலமற்ற நோக்குடன் ஒப்புக் கொள்ளுதல் வேண்டும்”. என்றார் பாவலரேறு.

Pin It