இந்நடையின் கவர்ச்சி தற்போது மிகவும் குறைந்துவிட்டது. பிரச்சாரக் கருவியாக இந்நடைப் பயன்பட்டதேயன்றிச் சிறந்த இலக்கியப் படைப்புக்களை இந்நடையால் உருவாக்க இயலவில்லை
திராவிட இயக்கத்தின் தோற்றம், அதன் கருத்துப் போக்கு இவை பற்றி ஆராய்வது இந் நூலின் நோக்கமன்று. ஆயினும் அவ்வியக்கத்தின் நோக்கம் பற்றி அறியாமல் அதன் நடையின் தன்மையைக் குறித்துக் கருத்துக் கூற முடியாது. எனவே அதன் நோக்கம் பற்றி மிகவும் சுருக்கமாக இங்குக் குறிப்பிடுவோம்.
தேசிய இயக்கத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மையைக் கண்டு அஞ்சிய நிலவுடைமைத் தலைவர்களும் ஆட்சி இயந்திரத்தில் பிராமணர் களுடைய செல்வாக்குக் கண்டு தமது ஆதிக்கத்தை மேம்படுத்திக் கொள்ள விரும்பிய நடுத்தர வர்க்கத்தின் மேல்தட்டுப் பகுதிகளும் பழமையின் ஆதிக்கத்தை எதிர்த்த மிகச் சாதாரண சமூகப் பகுதிகளும் இவ்வியக்கத்தை ஆதரித்தனர்.
இவர்களில் நிலவுடைமை நலன்களுடைய சிறு பகுதி, மக்கள் ஆதரவைப் பெற்றுத் தமது சமூக அடித்தளத்தை விரிவாக்கிக் கொள்ள விரும்பியது. மக்களைக் கவர்ந்து கொள்ளத் தீவிரமான பழமை எதிர்ப்புப் பிரச்சாரமும் பழமையின் பாதுகாவலர்களான பிராமணர்களின் சமூக வேறுபாட்டுக் கொள்கைகளை மிக்க ஆவேசத்துடன் தாக்குகிற ஓர் இயக்கமும் அவர் களுடைய வர்க்க நலனுக்குத் தேவையாக இருந்தது. இவ்வியக்கத்தின் தலைமை நிலப்பிரபுத்துவப் பகுதிகளிடமே இருந்தது. அப்பகுதிகள் பிராமணர் அல்லாத மேல் வகுப்பினராக இருந்தனர்.
அவர்களுடைய கோரிக்கைகளில் ஆர்வமில்லாத சாதாரணத் தமிழ் மக்கள் சாதி வேறுபாடுகள் காரணமாக மிகவும் இழிவுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களுக்குச் சாதி இழிவை எதிர்த்துப் போராடு வதில் அக்கறை இருந்தது. இதனைப் பயன் படுத்திக் கொண்டு தங்கள் கோரிக்கைகளுக்குப் பொதுமக்கள் ஆதரவைத் திரட்டுவதில் நிலப் பிரபுத்துவப் பகுதிகள் ஈடுபட்டன.
ஈ.வெ. ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் காலத்துக்கு முன்பு நீதிக் கட்சியினுடைய அரசியல் நோக்கு இதற்குத் துணையாக இருந்தது. பின்னர் சுயமரியாதை இயக்கம் ஒரு சுதந்தரமான, சமூக ஆதிக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிற ஓர் இயக்கமாக மலர்ந்தது. இதற்கு நேரடியாகத் தலைமை தாங்காமல் நிலப் பிரபுத்துவப் பகுதிகள் தீவிரக் கருத்துக்கள் கொண்ட ஈ.வெ.ரா.வைத் தலைவராக ஏற்றுக்கொண்டன.
ஈ.வெ.ரா. அதிக எழுத்தறிவில்லாத பொது மக்களைச் சில சமூக ஆதிக்கக் கருத்துக்களுக்கு எதிராக திரட்ட முயன்றார். எனவே, அவர் மொழியை ஆதிக்க எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினார். பொது மக்களிடையே தமது கருத்துக்களைப் பரப்புவதற்காக அவர் மேடை களில் பேச்சு மொழியைக் கையாண்டார். எழுத்தைப் பிரச்சாரத்துக்காகக் கையாளுகிறபோது அவர் பேச்சுக்கு மிகவும் நெருங்கிய தமிழ் மொழியைக் கையாண்டார். தமிழ் இலக்கியப் பயிற்சியோ, அதற்கொரு மதிப்போ அவர் உள்ளத்தில் இல்லாததால் அவர் கொச்சை மொழியைத் திருத்தவே முயன்றதில்லை. தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழி என்று அவர் கூறியது தற் செயலான ஒன்றல்ல.
ஈ.வெ.ரா.வின் நாத்திகவாதத்திலும் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களிலும் சோவியத் ஆதரவுப் பிரச்சாரத்திலும் மக்கள் ஆதரவு திரட்டப்பட்டது. திராவிட இயக்கம் இப்பொழுது மக்களின் இயக்கம் மட்டுமன்று. தமிழ் கற்ற மறைமலை யடிகள் போன்றோரது ஆதரவு பெற்ற இயக்க மாகவும் மலர்ந்தது. இவர்கள் பழுத்த சைவ சித்தாந்தவாதிகள். நாத்திகத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள். புலமை நடையை விரும்புபவர்கள். தமிழின் மேன்மையை மற்ற மொழிகளின் மேன்மைக்கு அதிகமாக மதித்தவர்கள். எனவே இவர்கள் ஈ.வே.ரா.வின் நாத்திகக் கருத்துக்களையோ சோவியத் ஆதரவுப் பிரச்சாரத்தையோ விரும்பவில்லை. இவர்கள் பிராமண எதிர்ப்பு, வடமொழி எதிர்ப்பு, புராண எதிர்ப்பு ஆகியவற்றிலேயே அவரோடு சேர்ந்து நின்றனர்.
சமூகச் சீர்திருத்த இயக்கமாகத் தொடங்கப் பட்ட சுயமரியாதை இயக்கம், பிராமணர் அல்லா தார் இயக்கமாக அரசியல் வடிவம் பெற்றது. நிலப் பிரபுத்துவ நலன்களைப் பாதுகாக்கும் ஜஸ்டிஸ் கட்சியும் இதனோடு ஒன்றானது. தலைமைக்கும் மக்களுக்கும் முரண்பாடுகள் தோன்றின. ஈ.வெ.ரா. படிப்படியாக மக்களது தீவிர இயக்கத்தை நிலப்பிரபுத்துவத் தலைமையின் விருப்பங்களுக்கு இணங்கி நடக்கச் செய்தார்.
இவ்வியக்கத்தின் அரசியல் போக்குகளால் இதன் தலைவர்களின் தமிழ் நடையில் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. இது தனியாக ஆராயப்படவேண்டிய ஒரு பொருளாகும்.
திராவிட இயக்கத்தில் பல வர்க்கப் பகுதிகள் சேர்ந்து இயங்கிய காரணத்தால் அவர்களது கருத்து வெளிப்பாடுகள் தமிழ் நடையில் வேறுபட்டன.
இவ்வியக்கத்தைச் சில அடிப்படைக் கொள்கை களின் மீது ஆதாரப்படுத்துவதற்குத் திரு. அண்ணா துரை முயன்றார். முரண்பட்டிருக்கும் வர்க்க நலன்களின் போராட்டங்களைச் சமரசப்படுத்த அவர் முயன்றார். ஆயினும் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் என்ற கருத்தோட்டங்களின் சுமையைத் தாங்கிக்கொண்டே திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழியர்கள் தமிழிலக்கிய அறிவையும், ஈ.வே.ரா. வின் ஆரிய-திராவிடர் கருத்தையும் இணைத்தனர். ஈ.வெ.ரா.வின் இயக்கத்தில் பற்பல கருத்துப் போக்குடையவர்களும் தத்தமக்கெனத் தனித் தனித் தமிழ் நடைகளை வகுத்துக் கொண்டார்கள்.
ஆனால், அண்ணாதுரை ஒரே வகையான தமிழ் நடையின் மூலம் பலவிதமான போக்குகளைச் சமரசம் செய்து வைத்தார். அதே போக்கைத் தான் எல்லாத் தி.மு.க. தலைவர்களும் பின்பற்று கிறார்கள். ஈ.வெ.ரா. பின்பற்றிய பேச்சு நடையையும் தமிழிலக்கியச் செய்திகள் கொண்ட பேச்சு நடைக்கு மாறான எளிய தமிழ் நடையையும் அவர்கள் கையாண்டனர்.
எதுகை மோனைகள், அடுக்குச் சொற்கள், எதையும் உவமைகளோடு எழுதுவது, பொருளைத் தெளிவாகச் சொல்லாமல் அடைமொழிகளோடும் உவமைக் கதைகளோடும் சொல்லுவது, குழப்பமான கருத்துக்களை மிக நீண்ட வாக்கிய அமைப்பு களால் தெளிவாக்குவது போல எழுதுவது, உயர்வு நவிற்சி, கூடியவரை எழுத்தறிவில்லாத மக்களுக்கு விளங்கும்படிக் கதை, உவமை முதலிய உத்திகளைப் பயன்படுத்தி எழுதுவது ஆகிய தன்மைகள் தி.மு.க. தலைவர்களின் தமிழ் நடையின் சிறப்பான அம்சங்கள்.
துடிப்புள்ள இளைஞர், மாணவரிடையே இந்த நடை பெரிதும் வரவேற்பினைப் பெற்றது. உள்ளடக்கத்தைவிட உருவத்திற்கு அதிக மதிப்புக் கொடுக்கும் பருவத்தினரான மாணவர்களும் இளைஞர்களும் இந்நடையால் கவரப்பட்டனர். மிகச் சாதாரணமாகச் சொல்லிவிடக் கூடிய செய்தியை மேற்கூறிய உத்திகளைக் கையாண்டு அழகுடனும் ஓசை நயத்துடனும் அண்ணாதுரை எழுதினார்.
“ரஷியா என்றொரு நாடு இருக்கிறதாம்... அங்கு... என்று ஏழை பேசத் தொடங் கினாலோ... ‘அங்கு தேனும் பாலும் ஆறாக ஓடுகிறது. வாரிவாரி பருகலாம். பாடு படாமல் பிழைக்கலாம்’... ‘பைத்தியக்காரா! பைத்தியக் காரா! பொய்யுரை கேட்டுப் பூரித்துப் போ கிறாயே! அது ஓர் பாவ பூமி! பழிபாவத்திற்கு அஞ்சாத நெஞ்சினர் அவர்கள். அங்கு கலையும் காவியமும் காண முடியாது. ஞானமும் மோனமும் கிடையாது. தேர் திருவிழா இல்லை. தேவனருள் கிடையாது. மகிழ்ச்சி இல்லை. எழுச்சி இல்லை. செக்கு மாடுபோல் மக்கள் கிடந்து உழல்கின்றனர். இங்கு நீ ஆயிரம் கேள்விகள் கேட்கிறாய். பொறுமை யாய்ப் பதில் அளிக்கிறோம். அஞ்ஞானத்தால் உளறுகிறாய். மெய்ஞ்ஞானம் போதிக் கிறோம். அங்கு இது போல் முடியுமா? ஏன் என்று கேட்டு வாய் மூடுமுன் பிணமாவாய்’ என்று கூறி மிரட்டுவார் ஆட்சியாளர்களும் ஆலை அதிபர்களும்.”
இந்த எடுத்துக்காட்டு அண்ணாதுரையின் எழுத்தாகும். இதில் முதலில் கூறிய அத்தனை தன்மை களுடன் வேறு புதிய யுத்தியையும் பார்க்கலாம். தாம் சொல்ல வந்த கருத்தினை மட்டும் கூறிடாது எதிர்க் கருத்துக்களையும் எடுத்துக்கூறி, அதே நேரத்தில் அதனை எள்ளி நகையாடும் முறையில் கூறி, தங்களுடைய கருத்தினை வலியுறுத்தும் பாணி இது. உரையாடல் போல எழுதும் பாணி யாகும். இத்தகைய நடை எதிர்பார்த்த வெற்றி யினை அவர்களுக்குத் தேடித் தந்தது.
ஆங்கில மொழி நடை மரபில், எழுவாய் முதலில் அமைய வேண்டும், பயனிலை இறுதியில் அமைய வேண்டும் என்ற மரபு கிடையாது. தமிழில் இத்தகைய மரபு இலக்கண மரபு உண்டு. தமிழ்ச் செய்யுளில் இது மாறுபட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், ஆங்கில மரபுப்படி பயனிலை முதலிலும் எழுவாயினை அடுத்தும் அமைத்து எழுதுவது அண்ணாதுரையின் வழக்கம். இந்த மரபினைத் தி.மு.க.வினர் பெரிதும் பின்பற்றினார்கள்.
“கேட்டோம், மருண்டோம், கண்டோம், மகிழ்ச்சி கொண்டோம். மடிந்த பொல்லாங்கு; ஒழிந்தனர் புரட்டர்; சாய்ந்தனர் புல்லர்கள்.”
இத்தகைய நடையில் உள்ள ஓசை நயம் கேட்பவர்களையும் படிப்பவர்களையும் கவர்கிறது. விஷயத்தைவிட ஓசை நயம் கவர்ச்சி உடையதாக உள்ளது.
உழைப்பாளிகள் சுரண்டப்படுகின்றனர் என் பதனைப் புள்ளி விவரங்களுடன் கூறுவது ஆராய்ச்சி யாளர்கள் கையாள வேண்டிய நடை. பாமரனாய் இருக்கும் உழைப்பாளியைத் தான் சுரண்டப் படுவதை உணர வைக்கவேண்டும். அவனுக்குத் தெரிந்த உவமானத்துடன் கூறினால் அதன் பலன் அதிகம் கிட்டும்.
“காட்டில் வாழும் கடும்புலிக்குக் குகையும், நச்சுப்பல் பாம்புக்குப் புற்றும், நயவஞ்சக நரிக்குப் புதரும் கிடைக்கிறது. ஆயிரமாண்டுகள் அழகொளியுடன் நிற்கத் தகும் அரண்மனை களும் மந்தகாச வாழ்விற்கான மாளிகைகளும் மாற்றோரைத் திகைக்கச் செய்யும் கோட்டை கொத்தளம் அரண் அகழி ஆகியவற்றினையும் கட்டித் தந்திடும் எனக்குத் தங்க ஓர் குடில் இல்லை.”
சுரண்டப்படுகிறவன் எண்ணுவதைப் போல் எழுதும் இத்தகைய யுத்திகளையும் தி.மு.க.வினர் வெற்றிகரமாகக் கையாண்டனர்.
படித்த, இளைஞர்களையும் மாணவர்களையும் தங்கள் பக்கம் கவர்ந்துகொள்ளத்தொடர்நடை, நீளமான சொற்றொடர் அமைப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தினர் தி.மு.க. எழுத்தாளர்கள். “சென்னை, கப்பம் கட்டி. கட்டியங்கூறி, காவடி தூங்கிச் சேவடி தாங்கி, தன்மானமிழந்து தவிக்கிறதே இது தகுமா?” என்பது போன்ற தொடர் நடையாலும், “ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே காந்தாரமும், கனோசும், காமரூபமும், மாளவமும், கூர்ஜரமும், பிறவும் உருவாகாத நாட்களிலேயே அயோத்தியும், அஸ்தினாபுரமும், காசியும், அரித்துவாரமும் திவ்விய சேஷத்திரங்கள் ஆகாததற்கு முன்பே பூம்புகாரும், கொற்கை, தொண்டி, முசிறி எனும் பல்வேறு துறைமுகங்கள் கொண்ட தாய் விளங்கியது எந்நாடோ? எந்த நாட்டிலே முரசு மூன்று, தமிழ் மூன்று வகை என்றும் தானை நால்வகை, போர் முறை பல்வேறு வகை, கருவிகள் பலப்பல என்றும் வகுத்து வைக்கப்பட்டு இருந்ததோ, எந்த நாட்டு முத்தும் பவளமும் பிற நாட்டுப் பேரரசர்கள் தமது காதலைப் பெற்ற கட்டழகியர்க்குக் காணிக்கையாக்கிக் களித்தனரோ... அந்த நாடு, அதன் எல்லைகள் வெட்டப்பட்டு, வேற்றாரால் கவரப்பட்டு, அதன் பண்பு பாழ்படும் வகையில்தான் மொழிக்கும், கலைக்கும் இடமளித்து விட்டு, இடர்பட்டு, இழிநிலை பெற்று, இயல்பு கெட்டு, எழில் குலைந்து, கொற்றம் அழிந்து, கோலம் கலைந்து, மற்றையோர் கண்டு எள்ளி நகையாடத் தக்க விதத்தில் மானமிழந்து, ஈனர்க்குக் குற்றேவல் புரிந்து கிடக்கும் எடுபிடியாக்கப்பட்டுள்ளது.”
என்பது போன்ற நீண்ட வாக்கிய நடையாலும் இளைஞர்களைக் கவர்ந்தனர்.
தி.மு.க. உரைநடை ஒரே போக்கினை உடைய தல்ல என்பதை, மேலே உள்ள எடுத்துக்காடு களால் அறியலாம். கூற வந்த செய்திக்குத் தக்கபடி உரைநடை மாற்றப்படுகிறது. படித்த இளைஞர் களைக் கவர்வதற்கு ஏற்ற நீண்ட வாக்கியத் தொடர்கள், பாமரரைக் கவர்வதற்கு எளிய உவமானம், கதைகள் ஆகியவற்றுடன் கூடிய நடை, உணர்ச்சியைத் தூண்ட, பழம் பெருமையில் தமிழரை மிதக்க வைக்க அலங்காரச் சொற்கள் நிறைந்த நடை எனப் பலவகையான நடைகளை அவர்கள் கையாண்டுள்ளனர்.
இந்நடையின் கவர்ச்சி தற்போது மிகவும் குறைந்து விட்டது. பிரச்சாரக் கருவியாக இந்நடை பயன்பட்டதேயன்றிச் சிறந்த இலக்கியப் படைப்பு களை இந்நடையால் உருவாக்க இயலவில்லை.
சினிமாவில்கூட இந்நடை வெற்றி காணவில்லை. பேச்சு நடையே சினிமாவில் பாத்திரங்களின் இயல்பான உரைநடைகளில் பயன்படுத்தப்படு கின்றது. ‘ரொமாண்டிக்’ பாணியில் சினிமா சென்ற போது அடுக்குத் தொடர் நடை சிறிது கவர்ச்சி யாக இருந்தது. இப்போது ‘ரியலிசம்’ வெற்றி பெறும் காலத்தில் பாத்திரங்களின் சமூக நிலையில் இயல்பாக வருகிற பேச்சு நடைதான் அப்பாத்திரங்களைப் பூமியில் உலவும் பாத்திரங்களாகக் காட்டுகின்றது.
எனவே செயற்கையான தி.மு.க நடை இப்போது இலக்கியம், சினிமா முதலிய துறைகளில் எடுபடுவதில்லை.
நா.வானமாமலையின்
‘உரைநடை வளர்ச்சி’
எனும் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘பாரதி பிற்காலம்’ என்ற கட்டுரையின் ஒரு பகுதி.