சோழர்கள் காலத்தில் அடிமை முறை இருந்தது. இதை கே.கே.பிள்ளை அவர்கள் தமது நூலில் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளார் . சதாசிவப் பண்டாரத்தாரும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர்கள் நம்மைத் தேற்றுவிக்கும்படியாக "இந்த அடிமைகளை அமெரிக்கா போன்ற மேலைநாட்டு அடிமை முறையுடன் ஒப்பிடக்கூடாது. நம்மவர்கள் ரொம்ப நல்லவர்கள்" என்று எழுதியுள்ளனர். காந்தி ஒரு முறை "நம்முடைய நாட்டிற்கு பொதுவுடமைத் தத்துவம் சரி வராது ஏன்? நமது நாட்டு முதலாளிகள் மிகுந்த இரக்க குணம் கொண்டவர்கள்" என்று கூறினார். அது போன்றதுதான் இதுவும். கோவிலுக்கு மட்டும் இல்லை பரம்பரையாய் செல்வர்களுக்கும் அடிமைகளாய் வாழ்ந்தவர்கள் இருந்திருக்கின்றனர். ஆடு மாடுகளைப் போல் அவர்கள் சந்தையில் வாங்கப்பட்டனர்; விற்கப்பட்டனர். வயது முதிர்ந்தபிறகு கோவிலுக்கு என விற்கப்பட்டனர். இதற்கு ஏகப்பட்ட சான்றுகள் உள்ளன.

தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கொறுக்கை என்ற ஊரில் இரண்டாம் ராசாதிராசன் முதல் குலோத்துங்கன் காலத்தில் இப்படி பரிசிலாகவும் விலைக்கும் வாங்கப்பட்ட அடிமைகள் நூற்றுக்கணக்கானோர் இருந்தனர். தனிப்பட்ட மாந்தர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகளிலும் வேளாண் அடியார், புலையர் அடியார் பெண்டுகளும் உண்டு என்பதை திருப்பராய்த்துறைக் கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன

பிரம்மதேய மத்தியஸ்தர்கள் பல அடிமைகளை தங்களுடைய ஆட்சியின் கீழ்க் கொண்டவர்களாகத் தெரிகிறது. அதாவது வெறும் சோற்றுக்கு வேலைசெய்யும் அடிமைகள். இவர்களை விற்பதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டு. வயலூர்க் கோவில் கல்வெட்டு ஒன்று இதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. காவேரிக்குத் தென்கரையிலிருந்த நந்திவர்ம மங்கலத்து மத்தியஸ்தர் நாலாயிரத்து முன்னூற்றுவரான சந்திரசேகர அரசமைந்தன் கி பி 941 இல் தம்மிடம் கூழுக்குப் பணி செய்யும் தம் அடியாள் ஊரன் சோலை, அவ்வம்மையின் மகள் வேளான் பிராட்டி, அவ்வம்மையின் மகள் அமைந்தன்கண்டி ஆகிய மூன்று தலைமுறையினரை வயலூர்த் திருக்கற்றளிப் பரமேஸ்வரர் கோவில் சாமரம் வீசவும் [கவரிப் பிணா] திருப்பதியம் பாடவும் தானமாகத் தந்தார் [காண்க தளிச்சேரி கல்வெட்டுகள் இரா கலைக்கோவன் பக் 108] இது முதலாம் பராந்தகன் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்று கருதப்படுகிறது.

திருப்பராய்த்துரையில் உள்ள தாருகாவனேஸ்வரர் கோவில் கல்வெட்டு மகளிரில் உயர் குலத்தோர் சொத்துரிமைப் பெற்று தானம் அளிக்குமளவுக்கு வசதி படைத்து இருந்தனர் என்பதை சுட்டுகிறது. அதைப் போன்றே வசதி இல்லாத பெண்கள் அடிமைகளைப் போல் கோவிலுக்கு மட்டும் இன்றி தனியாருக்கும் பிரீதி தானமாக அளிக்கப் பட்டனர் என்பதையும் குறிக்கிறது. விசய நகர காலத்தை சேர்ந்த கல்வெட்டு ஒன்று பிரீதிதானமாக அளிக்கப்பட்ட "நன்செய் நிலங்கள் மனையும் அத்துடன் பல வேள்ளாட்டிகளும், புலை அடியாரையும் பிரீதியாகக் கொடுத்து" என்று கூறுகிறது இது ஒரு நிலக் கிழான் தன்னுடைய வைப்பாட்டிக்குக் கொடுத்தது. எதற்கு? அவள் ஒரு ஆண்மகவு ஒன்றை பெற்றதைப் பாராட்டும் வண்ணமாக! காண்க மேலது பக் 147 .

இப்படி பரிசிலாக வழங்கப்பட்ட பெண்கள் எதற்கு, பயன்படுத்தப்பட்டிருப்பார்கள் என்று முடிந்தவர்கள் ஊகித்துக்கொள்ளலாம். இப்படி பெண்கள் பரிசுகளாக வழங்கப்பட்ட காலம்தான் பொற்காலமாம். நம்புங்கள் நண்பர்களே!

15 வகை அடிமைகள் இருந்ததாகக் கருதப்படுகிறது.

1தாசியின் மக்கள் (அதாவது அடிமையின், தாசியின் மக்கள் அடிமைகள்! இது சாதி இல்லாமல் வேறு என்னவாம்) 2.விலைக்கு வாங்கப்பட்டோர் 3.கொடையாக வழங்கப்பட்டோர் 4.பெற்றோரால் விற்கப்பட்டோர் 5.வெள்ளத்தின்போது பாதுகாக்கப்பட்டோர் 6.பிரமாணத்தின் மூலம் அடிமையானோர் 7.கடன் காரணமாக அடிமையானோர் 8.போரில் பிடிபட்டோர் 9.சூதில் வெல்லப்பட்டோர் 10.தாமே வழிய வந்து அடிமையானோர் 11.வறுமையினால் அடிமையானோர் 12.தன்னைத்தானே விற்றுக்கொண்டோர் 13.இறைவனுக்கு அடிமையானோர் 14.அடிமைப் பெண்ணைத் திருமணம் செய்து அதன்வழி அடிமை ஆனோர் 15.குறிப்பிட்ட கால அடிமைகள்

இவ்வாறு 15 வகையான அடிமைகள் இருந்தனர். சமூகத்தில் இழிவானதாகக் கருதப்படும் காரியங்களை இவர்கள் செய்தனர், இவர்கள் தாசர், தாசன், தாசி என்று அழைக்கப்படுவர். அடிமைகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டதும் உண்டு. நாங்கூர் அந்தணனொருவன் தன்னுடைய அடிமைகளில் பெண்கள் உள்பட 7 பேரை ஒருமுறையும் 15 பேரை மற்றும் ஒரு முறையும் விற்றுள்ளான்.

அடிமைகளும் பொருள்களைப் போல் கருதப்பட்டனர். அவர்களை விற்கும்போது அல்லது தானமாக வழங்கும்போது பதிவு செய்யும் வழக்கம் இருந்தது, நிலத்தைப் பதிவு செய்வதுபோல. அடிமை விற்பனை பதிவு ஆவணத்திற்கு # "ஆள்விலைபிரமாண இசைவுத்தீட்டு" என்று பெயர் இடைக்குடி மக்களை அடிமைகளாக வழங்கும்போது முத்திரைகள் இட்டு வழங்கி உள்ளனர்  #" திருவிலச்சனை செய்து சந்த்ராதித்தவரை இவ்விடையரை நாம் கொள்ள" என்று குறிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. முத்திரை என்பது அவர்கள் உடம்பின் மேல் இடப்படும் இலக்கமாகும். இதனை சூட்டுகோல் கொண்டோ அல்லது வேறு எப்படியோ இட்டு வந்தனர். கோவில் அடிமைகளுக்கு ஒரு விதமாகவும் அரண்மனை அடிமைகளுக்கு வேறு விதமாகவும் முத்திரை பதித்துள்ளனர்.

1.காண்க அடிமைகளின் வகைகள் "ராசராசன் துணுக்குகள் நூறு" ஆசிரியர்கள் சொ.சந்திரவணன், நாக.கணேசன், இரா.சிவானந்தன் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை சென்னை-600008 ஆண்டு 2010 பக்27.

2.ராசராசசோழன் தஞ்சைப் பெரிய கோவில் வடவெளிச்சுற்று சுவரில் தஞ்சை தளிச்சேரிக் கல்வெட்டுகள் காணப்படுகிறது. அதில் உள்ள செய்திகளைப் படித்து இரா.கலைக்கோவன் ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். தஞ்சை தளிச்சேரிக் கல்வெட்டுகள் - முனைவர்/மருத்துவர் இரா .கலைக்கோவன் சைவ சித்தாந்தக் கழக வெளியீடு 2002 பக்12 - 55

# குறியிடப்பட்டவை கல்வெட்டுகளில் காணப்படும் வரிகள். அவைகளில் இருக்கும் பிழைகளை திருத்தும் உரிமை நமக்கு இல்லை.

Pin It