சென்னை, நெய்வேலி ஆகிய இரண்டு ஊர்களில் புத்தகக் கண்காட்சிகள் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன. பின்னர் ஒருகட்டத்தில் புத்தக வாசிப்பில் ஆர்வமும் நம்பிக்கையுமுள்ள சமூ நல அமைப்புகள் ஆங்காங்கு புத்தகக் கண்காட்சிகள் நடத்தின. மிகக் குறைவான ஊர்களில் மட்டுமே இத்தகைய கண்காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன.ஈரோட்டில் 2005ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கண்காட்சி ‘புத்தகத் திருவிழா‘ என்ற பெயரில் நடத்தப்பட்டது. புத்தகச் சந்தை, புத்தக வணிகம் என்பதைத் தாண்டி வாசிப்பு, அறிவு, சிந்தனை சார்ந்த பல சிறப்பம்சங்கள் அதில் உள்ளடக்கப்பட்டன.
ஒரு திருவிழாவில் எப்படி ஒரு பக்கம் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளாக ராட்டினம், குதிரைச் சவாரி, பலூன் சுடுதல் போன்ற பல அம்சங்கள் இடம்பெறுகின்றவோ அப்படிப் புத்தகச் சந்தைகளில் புத்தக வெளியீடு, படைப்பாளர் சந்திப்பு, மாலை நேரச் சொற்பொழிவு, கதை சொல்லுதல், உலகத் தமிழர் வருகை என வாசகர்களை வரவழைக்கிற - வந்த பொதுமக்களுக்கு புத்தக வாசிப்பு பற்றிய புரிதலை ஏற்படுத்துகிற சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவை மக்களுக்கு திருவிழா மனநிலையை படிப்படியாக மேம்படுத்த உதவின.
அடுத்த கட்டத்தில் அரசே ‘புத்தகத் திருவிழா‘ என்று பெயரிட்டு ஆணை வெளியிடும் அளவுக்கு ஏற்கெனவே நடைபெற்று வந்த ‘திருவிழாக்கள்‘ மக்கள் மனதில் ஆழப் பதிந்திருந்தன. வெற்றி பெற்றிருந்தன.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்பட அரசே ஆணை பிறப்பித்தது மிகவும் வரவேற்கவும் பாராட்டவும் தக்கதாகும். ஏற்கெனவே சிறப்பாக நடத்தி வரும் சமூக நல அமைப்புகளோடு இணைந்து நடத்தவும் அத்தகைய சிறப்பும் அனுபவமும் மிக்க அமைப்புகள் விரும்பினால் அவ்வமைப்புகளை நடத்த அனுமதித்துவிட்டு நிதி உதவி வழங்குவதற்கும் அந்த அரசாணை வழிவகை செய்கிறது. அரசாணையிலுள்ள அனைத்து அம்சங்களும் வரவேற்கத் தகுந்தவையே.
இனி அடுத்தகட்டம் பற்றிச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் அவ்வாறு எடுக்கப்படுகின்ற சில நல்ல முடிவுகளை உடனடியாக அமல்படுத்தவும் அரசு முன்வருதல் அவசியம். புத்தகத் திருவிழாக்கள் சடங்குபூர்வமானதாகவோ, சம்பிரதாயபூர்வமானதாகவோ அமைந்துவிடுதல் கூடாது.
மாவட்டத் தலைநகர்களில் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகிறதென்றால் அம்மாவட்டம் முழுவதிலுமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் அத்திருவிழாவில் பங்கேற்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் சுற்றறிக்கை அனுப்புவது முதல்கட்ட முயற்சியே தவிர முழுப்பயனளிக்கிற ஒன்றல்ல.
ஒரு அறிவுச் சமூகத்தை உருவாக்குவது அவ்வளவு எளிதான ஒன்றல்ல. மக்களை வாசிப்புக்கு வசப்பட வைப்பதும் அதிலும் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் தேவையான தேர்வு செய்யப்பட்ட நல்ல நல்ல அறிவார்ந்த நூல்களை வாசிக்கப் பழக்கப்படுத்துவது பல கோணங்களிலான தொடர்ந்த இடைவிடாத முயற்சிகளின் விளைவாகவே சாத்தியப்படுவதாகும்.
இதற்கு அரசு, பதிப்புத் துறை, கல்வி நிலையங்கள், சமூகம், ஆசிரியர், பெற்றோர், நூலகங்கள், பொது நல அமைப்புகள் என அனைத்துத் தரப்பினரது முன்முயற்சிகளும் முனைப்பான ஒருங்கிணைப்பும் ஒத்துழைப்பும் அவசியப்படுகிறது.
இந்த ஒருங்கிணைப்பை உயிரோட்டத்துடன் உருவாக்க வேண்டியதும் வழிநடத்த வேண்டியதும் மாவட்ட நிர்வாகத்தின் வழியாக தமிழ்நாடு அரசுதான் என்பதை மறுக்க இயலாது.
புத்தகத் திருவிழா நடத்தப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டதன் நோக்கம் முழுமையாக வெற்றி பெறத் தகுந்த முன்முயற்சிகளை முழுமூச்சுடன் அரசு மேற்கொள்ள வேண்டும். அனைத்துத் தரப்பினருமே உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் ஒத்துழைக்க உறுதியேற்க வேண்டும்.
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு