பெயர் : சமீரா மக்மல் பஃப்

பிறப்பு : 15.12.1977

தாய்நாடு : ஈரான்

புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சமீரா மக்மல் பஃபைப் பற்றி வலைதளத் திலுள்ள குறிப்புகள் இப்படித்தான் ஆரம்பிக்கின்றன. ஆனால் இந்தக் குறிப்புக்குத் முரணாகத் தன் தாய்நாடான ஈரானின் மண்ணிலிருந்து சமீராவின் கால்தடங்கள் மறைந்து போய்விட்டன. உலக வரைபடத்தில் பதிந்த புலம் பெயர்ந்தவர்களின் கால்தடங்களுக்கிடையில் சமீராவின் பாதங்களும் இடம் பெற்றதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. மத அடிப்படைவாதத்துக்கு எதிராகத் தன் காமிராவைத் திருப்புகையில் என்றாவது ஒருநாள் இப்படிப் புலம்பெயர வேண்டி யிருக்கும் என்று அவர் எதிர்பார்த்ததுதான்.

‘டூலெக்ட் ஹார்ஸ்’ (இரட்டைக்கால் குதிரை) என்ற தன்னுடைய படத்துக்கு ஈரான் அரசு அனுமதி தர மறுத்ததுதான் புகழ்பெற்ற இயக்குநர் மக்பஃபின் மகள் சமீராவைத் தாய்நாட்டைவிட்டு ஆப்கானிஸ்தானில் குடிபுக வைத்த முக்கிய காரணம்.

சமீராவின் ஆப்பிள் (1998) என்ற முதல்படம், சினிமா பாரம்பரியமுள்ள மக்மல்பஃப் குடும்பத்திலிருந்து இயல்பாக வெளிவரக்கூடிய படைப்பே என்று எண்ணியவர்களுக்கு அந்தக் கணிப்பு சரியல்ல என்று புரிந்தது. சமூகத்தில் நடக்கவிருக்கும் பெரிய புரட்சிகரமான மாற்றங்களுக்கு முன்னோடியாக எழுப்பப்பட்ட சிறு சலசலப்பாக அது அமைந்தது. மதம், அரசியல், அதிகாரம் போன்றவைகளில் கண்டு வருகின்ற மோசமான போக்குகளைத் தட்டிக் கேட்கும் வகையில் பிற்பாடு வெளிவந்த சமீராவின் Black Board, At five in the Afternoon போன்ற திரைப்படங்கள் அடிப்படைவாதத்தினரின் முகத்தினை சுளிக்க வைத்தன.

மிகவும் சமீப காலத்தில் வெளிவந்த ‘டூலெக்ட் ஹார்ஸ்’ படத்தில் வரும் ‘குதிரை’ என்ற உருவகம், அனைத்தையும் கடிவாளத்தால் கட்டுப்படுத்தி இரை களின் மீது அசுவமேதம் நடத்துகின்ற அதிகார/மத மேலாண்மைக்கு எதிராகக் குளம்படி சத்தத்தை எழுப்புகிறது. அதிகாரம் உள்ளவர்களுக்கும் இல்லாதவர் களுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தாம் ‘இரட்டைக்கால் குதிரை’யின் கதை கரு. இன்னொரு விதமாகச் சொல்லப்போனால் அதிகாரம் எப்படி மனிதனை மிருகமாக்குகிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. அடிமையாக்கப்பட்ட மிர்வாய் என்ற சிறுவனின் வாயில் கயிற்றைக் கட்டி கடிவாளமாக்கி உடம் பில் குதிரைக்கு அணிவிப்பது போல சேணம் கட்டி வைத்து சவாரி செய்யும் காட்சி ஆதிக்கம் செய்பவர்களை மட்டுமல்லாது எந்த ஒருவனின் மனதையும் கலங்க வைக்கும்.

தான் ஏற்றுக் கொண்ட விஷயத்தின் தீவிரத்தன்மை காரணமாகவே சமுதாயத் தின் பல்வேறு திசைகளிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து உயிர்தப்பிய இந்தப்பெண் இயக்குநர் காமிராவுக்குப் பின்னால் இன்றைக்கும் அடிசறுக்காமல் நிற்கின்றார்.

பெண்ணியமென்ற பொதுவான ஓடையில் பாயாமல், இது என் கதையும் கூட என்று உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் நினைக்கும் வண்ணம் சினிமாவை பாமரமயமாக்க முடிந்தது என்பதே சமீராவின் தனித்திறமை. ஆயுதத்தைவிட கருத்துக்களுக்குத்தான் பயப்பட வேண்டும் என்று மத-அரசியல் வர்க்கம் எப்பொழுதோ தெரிந்து கொண்டிருக்கிறது. ‘இரட்டைக்கால் குதிரை’க்கு ஈரான் அரசு அனுமதி தர மறுத்ததும் ஆப்கானிஸ்தானில் இதன் படப்பிடிப்பின்போது குண்டு வீசித்தாக்கியதும் எதேச்சையாக நடந்த சம்பவங்களல்ல என்று இந்த இயக்குநர் நம்புகிறார். முற்போக்கான எல்லாவற்றையும் மதக்கட்டுப்பாடுகளின் முக்காடுக்குள் மறைக்கச் சொல்லும் இப்படிப்பட்ட சமூகத்தில் அந்த முக்காடையே பிய்த்து எறிகிறது சமீராவின் காமிரா.

கேரளாவில் நடந்த பதின்மூன்றாவது அனைத்துலக திரைப்பட விழாவில் நடுவர் குழுவினராக வந்த சமீரா தன் புதிய படத்தைப் பற்றியும் புலம்பெயர்ந்த வர்களின் பிரச்சனை, மத அடிப்படைவாதம், அரசியல், பயங்கரவாதம் என தற்கால முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களைப் பற்றியும் தன் கருத்துக்களைப் பரிமாறுகிறார்.

புலம்பெயர்ந்தவர்கள்

தாய்நாடு அந்நியமாகிப் போகிற இயக்குநர் நிலைமை புலம்பெயர்ந்தவர் களுக்கே உரியதென்றால் இயக்குநர் என்ற நிலையில் நானும் இன்று ஒரு புலம் பெயர்ந்த மனுஷிதான். புலம்பெயர்ந்தவர்களை உருவாக்குகின்ற உலகம் மிகப் பரந்தது. எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் புலம் பெயர்தல் என்ற பிரச்சனை இருந்திருக்கிறது. ‘இரட்டைக்கால் குதிரை’ என்ற புதிய படத்தைச் சார்ந்த பிரச்சனைக்குப்பின் ஈரானைவிட்டு ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்து வாழ்கிறேன். இருப்பினும் ஈரானைவிட ஆப்கானிஸ்தான் பாதுகாப்பான இடம் என்றெல்லாம் நான் நம்பவில்லை. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலையில் நாடும் மொழியெல்லாம் தொலைத்துவிட்ட ஒரு மக்கள் இனத்தைப் பற்றி நான் என்றைக்கும் யோசித்ததுண்டு.

இவர் தனக்கு இரண்டாவது படமான ‘ப்ளாக் போர்டு’ படத்தில் அகதிகளின் நிலைமையைச் சித்தரித்துள்ளார். ஈராக்கின் எல்லைப் பிரதேசமான குர்திஸ்தானில் குர்துகளின் இரக்கற்ற புலம் பெயர்தலை இதில் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.

பயங்கரவாதம்

எங்கே மனிதன் மனிதனைச் சுரண்டல் செய்கிறானோ அங்கே வன்முறையும் கலவரமும் வெடிக்கிறது. அது சில சமயங்களில் நாடுகளுக்கிடையே நடக்கிறது. வன்முறை சுபாவம் மனிதகுலத்தில் எதிர்பார்த்த விஷயம்தான். இதைக் கண்டும் காணாமல் இருப்பது இப்போது பழக்கமாகிவிட்டது. எந்தக் கலையையும் போல சினிமா என்ற கலையின் குறிக்கோளும் வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வு உண்டாக்குவதே என்று சொல்லலாம்.

அரசியல்

ஈரானில் எழுதப்பட்டதும் எழுதிவைக்கப்படாததுமான சட்டங்கள் இருக்கின் றன. அந்த நாட்டில் அதிபராக ஒரு பெண் வரக்கூடாது என்பது எழுதிவைக்கப் பட்ட சட்டம். ஆனால் ஒரு பெண், திரைப்பட இயக்குநராகக் கூடாது என்று எந்த சட்டமும் சொல்லவில்லை. பொதுவாக இங்கு மக்களின் மனதில் ஒரு பெண், எழுத்தாளராகவோ திரை இயக்குநராகவோ கலைஞராகவோ ஆகக் கூடாது என்ற கருத்து உறுதியாகவே இருக்கிறது. அரசாள்பவர்களைப் பொறுத்த வரையில் மனிதன் என்பது நிறைய நபர்களின் கூட்டத்தில் ஒரு எண் (வாக்காளர்) மட்டுமே. அதே நேரத்தில் ஒரு கலைஞனுக்கு அது எலும்பும் சதையும் கொண்ட ஒரு தனி நபரே. நான் ஒருபோதும் தனிநபராக மாற நினைத்ததில்லை. அதிகார வர்க்கத்திற்கு சில எல்லைகள் உண்டு. ஆனால் ஒரு திரைப்பட படைப்பாளிக்கு ஊரின் எல்லையையும் மொழியின் எல்லைகளையும் தாண்டி உலகின் எல்லா மனிதர்களுடனும் உறவாட முடியும்.

மதஅடிப்படைவாதம்

ஒருவரின் நம்பிக்கையும் அரசியல் கொள்கையும் மற்றவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண் டும் என்று கூறுமிடத்தில் மத அடிப்படைவாதத்தின் விபரீத மான செயல்பாட்டை உணர முடியும். எந்தவிதமான மத அடிப்படைவாதமும் ஆபத்தா னது. எல்லா மதங்களிலும் அம்மதம் வற்புறுத்திச் சொல்லும் சில நிபந்தனை களைக் காணலாம். இப்போதுள்ள மதங்களில் மட்டுமல்ல, இனி உருவாகப் போகும் மதங்களிலும் அடிப்படைவாதத்தின் விதைகளைக் காணமுடியும். மதமோ கொள்கையோ எதுவானாலும் அதன் சிறு வட்டத்துக்குள் ஒதுங்கிவிட வேண்டுமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். நான் மத நம்பிக்கையுடையவள். மதநம்பிக்கை என்பது மற்றவர்களின் நம்பிக்கைக்கு முரணாகப் பிரச்சாரம் செய்து மக்கள் அந்த நம்பிக்கைக்கு எதிராகத் திருப்பிவிடும் விதத்தில் அமையக்கூடாது.

திரைப்படம்

திரைப்படம் எனக்கு ஒரு ஜன்னலைப்போலவே. விதவிதமான கலாச்சாரங் களும் மனித வாழ்க்கை நிலைகளும் இந்த ஜன்னல் வழியாகத்தான் என்னை வந்தடைகிறது. நான் ஒரு சினிமாவை உருவாக்கும்போது என் மனக்கண்முன் தோன்றுவது ஈரானியனோ ஜப்பான்காரனோ அல்ல. உலகிலுள்ள எல்லா மனிதர்களுடனும் அந்தப் படம் பேசிக்கொண்டிருக்க வேண்டும்.

சமூகத்திலுள்ள பிரச்சனைகளை நான் என் சினிமாவில் வெளிப்படையாகக் காட்டுவதில்லை. சில உருவகங்கள், சில அடையாளங்கள் வழியாகச் சுட்டிக் காட்டுவதே என் பாணி. முதல் படமான ‘ஆப்பிளும்’, ‘அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்னூன்’ என்ற படத்தில் வரும் ஷ§வும் கறுப்புப்பலகையும் குதிரையும் எல்லாமே இப்படிப்பட்ட சக்திவாய்ந்த அடையாளங்களே. இந்த பிம்ப உருவகங்கள் பார்வையாளனுக்குள் சில கேள்விகளை எழுப்பும் என்று நான் நம்புகிறேன். சொல்லவந்த விஷயம் தான் சினிமாவில் முக்கியம். தொழில்நுட்பமெல்லாம் பிற்பாடுதான். முன்னாலுள்ள காமிரா எந்த நிமிடமும் குண்டு பாய்ச்சும் துப்பாக்கியாக அந்த நடிகர்களுக்குத் தோன்றக்கூடாது. தொழில்நுட்பத்தை இந்த முறையில்தான் கையாள வேண்டும்.

இயக்குநராகச் செயல்படுகையில் ஆண்,பெண் என்ற பாகுபாட்டில் அர்த்த மில்லை. ஏற்றுக்கொண்ட விஷயத்தை அதற்குத் தேவையான அழுத்தத்துடன் சினிமாவாக உருவாக்குகையில் மதம், இனம், பால், மொழி, ஊர் இவையன் றும் என்னைப் பாதித்ததில்லை. அதுமட்டுமின்றி, ஒரு பெண்ணாக இருப்பதனால் லொக்கேஷனில் பெண்களுடனும் குழந்தைகளுடனும் நெருங்கிப் பழக முடிகிறது. இயக்குநர் என்ற முறையில் எனக்கு எதிராகப் பல திசைகளிலிருந்து எழுந்துவரும் மிரட்டல்களுக்கு நான் பயப்படுவதில்லை. ஆனால் ஒரு படைப்பாளி என்ற முறையில் என் சுதந்திரம் மறுக்கப்படும்போது மனம் வேதனைக்குள்ளாகிறது.

‘டூ லெக்கட் ஹார்ஸ்’

இந்தப் படத்தில் குதிரை என்பது ஆதிக்கம், சகிப்புத்தன்மை ஆகிய உணர்வுகளின் குறியீடாக ஒரே சமயத்தில் காட்டப்படுகிறது. ஆப்பானிஸ்தானின் வறுமைமிக்க ஒரு ஊரில் கதை நிகழ்கிறது. உடல் ஊனமுற்ற ஒருவனைப் பராமரிக்கத் தயாராகும் ‘மிர்வாய்’ என்ற ஏழைப்பையன் தான் முக்கிய கதாபாத்திரம். எஜமானனான ஊனமுற்றவனின் கையிலிருந்து மிர்வாய் அனுபவிக்கும் கொடுமைகளின் நீண்ட காட்சிகள் பல இந்தப் படத்திள்ளன. இந்தக் காலத்திலும் இரையாகவே வாழ வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்ட ஒரு கமூகத்தைத்தான் ‘போக்கஸ்’ செய்கிறேன். இரைகள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் உலகில் சுரண்டல் செய்பவர்களுக்கு என்றும் ஒதே முகம்தான் என்று நம்புகிறேன். இரைகளின் மீது தொடுக்கப்படும் கொடுமைகளின் தொடர்ச்சியான காட்சிகள் வேட்டைக்காரர்களின் கோட்டை கொத்தளங்களை நோக்கி விரல் சுட்ட, பார்வையாளனைப் பக்குவப்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

மக்மல்பஃபின் குடும்பத்திலிருந்து வெளிவந்த படைப்பு என்ற ஒரே காரணத்துக்குத்தான் ஈரான் அதிகாரிகள் இந்தப்படத்துக்கு அனுமதி தர மறுத்தனர். பிற்பாடு படத்தின் லொக்கெஷன் ஆப்கானிஸ்தானுக்கு மாற்றப் பட்டது. ஆனால் அங்கேயும் பாதுகாப்பான நிலைமை என்று சொல்ல முடியவில்லை. ஒரு நாசக்கார கும்பல் லொக்கேஷனைக் குறிபார்த்துக் குண்டு வீசியது. இதில் ஒருவர் பலியாகி பலபேர் காயமும் அடைந்தனர். ஆப்கானிஸ்தானின் ஸார்போல் நகரத்தில் 2007 மார்ச் 12.20 மணிக்கு குண்டுத் தாக்குதல் நடந்தது. நான் செட்டை ரெடி செய்து நடிகர்களைத் தயார்படுத்தி ‘காமிரா ஆக்ஷன்’ சொல்லும் நேரத்தில்தான் தாக்கினார்கள். இதுவும் பதிவு செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்போ சூழலோ உத்தரவாதம் ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராக நடக்கும் ஐந்தாவது தாக்குதல் இது.

தந்தை மக்மல்பஃபின் ‘காண்டஹார்’ படத்துக்கு எதிராக இரண்டாயிர மாண்டில் ஆப்கான் எல்லையில் இரண்டு முறை தாக்குதல் நடந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறது ‘அட் ஃபைவ் இன் தி ஆஃப்டர்னுன்’ என்ற என் படத்தின் லொக்கேஷனில் காபுல் நகரத்தில் என் சகோதரி ஹனா மக்மல்பஃபை கடத்திச் செல்ல முயற்சி நடந்தது.

‘இரட்டைக்கால் குதிரை’யின் செட்டில் உண்டான தாக்குதலைத் தொடர்ந்து ஐ.நா.சங்கத்தின் அறிவிப்புக்குப் பணிந்து சிறிது காலம் ஷ¨ட்டிங் நிறுத்தி வைத்தோம். எத்தனையோ தியாகங்களைச் சகித்துத்தான் இந்தப் படத்தைச் செய்து முடித்தேன்.

- வி.கே.சுதீஷ்குமார் (மாத்ருபூமி)

மொழியாக்கம் : டாக்டர் டி.எம்.ரகுராம்

 

Pin It