kim ki dukநிகழவே கூடாது என்று ஒன்று இல்லை. நிகழ்ந்து விட கூடாது ஒன்று உண்டு.

இரண்டுக்கும் இடையே... இசைக்குள் நெளியும் சிறு வண்டியின் ரீங்காரத்தை ரத்தமும் சதையுமாக... நிஜமும்.. நித்யமுமாக நின் பகை அறுக்க என் நகை பூக்கும்... நகைந்த நறுமணத்தில் மீண்டும் அன்பே துளிர்க்கும்... என்ற மானுட ஆழ்மன தீயை அணையவே விடாத ஆன்ம பொருள் சூழும்.. அநியாய நேர்த்திக்கு சொந்தம் கிம் கி டுக்.

உலகமே கடவுளைத் திறந்து காட்டிக் கொண்டிருந்த போது கடவுளுள் இருக்கும் சாத்தானைத் திறந்து காட்டி இதுவும் நிஜம் தான் என்று பொதுவெளியில்... எல்லாம் வல்ல மானுட மனத்தின் இருட்காலத்தை வெளிச்சமேற்றிய கலைஞன்.

"கிம் கி டுக்"ன் படங்களைக் காண்பது என்பது... தனித்து மலையேறுவது... அல்லது தனித்து மலை இறங்குவது... அல்லது தனித்த மலையாவது.

"கிம் கி டுக்"கின் கதை மாந்தர்கள்... அதிகமாய் பேசுவதில்லை. அவர்கள் எப்போதும் தனித்தே இருக்கிறார்கள்... அல்லது தவித்தே இருக்கிறார்கள்... அல்லது தவிர்த்தே இருக்கிறார்கள். பெரும்பாலான படங்களில் பேச ஒன்றும் இருப்பதில்லை. இரண்டு பக்கம் வசனம் பேச வேண்டியக் காட்சியை ஒரே ஒரு பிரேமில் காட்டி விடுகிறார்.

கரைக் கண்ட திரைச் சதுரம் வால் ஆட்டாத நாய்க்குட்டி தான் அவருக்கு. காட்சி மொழியில் அவர் திரைக் கனக் கச்சிதமாக கதை சொல்கிறது. அருகிலும் தூரத்திலும்... ஒற்றை இறகை பறக்க விட்டு... பார்த்துக் கொண்டே இருக்கும்... தூரத்து கடல் அலையின் ஆர்ப்பரிப்பு நம்மைச் சுற்றிலும் இயங்கிக் கொண்டே இருக்க செய்வது... சித்து வேலை அல்ல. சித்தன் வேலை.

இருக்கும் என்பது இல்லாமலும் தான்... என்பதாகட்டும்... (3 iron) முகம் மாற்றித் திரியும்... அன்பின் புறக்கணிப்பாகட்டும்... (Time). அறுக்கப்பட்ட மகனின் உறுப்புக்காக பரிதவிக்கும்... தந்தையாகட்டும்... (Mobeus) சிறையில் இருக்கும் காதலனைக் காணச் சென்று ஒரு சிறுமியாக ஆடி களிப்பூட்டும் காதலாகட்டும்... (breath) அசைந்தாடும் பிரிவும் அகம் தீண்டும் சோகமும் நேர்த்தியோடு மிக மெல்லிய இசையாகி விடுகிறது... அவர் சினிமாக்களில்.

"இந்த உலகத்தில் நாம் வாழ்வது என்பது நிஜமா கற்பனையா என்பதை அத்தனை எளிதில் சொல்லி விட முடியாது..." எனும் தத்துவார்த்த ஊடறுப்பு சதா நிகழ்ந்து கொண்டே இருக்கும்.. கதைக்களங்கள் இவருடையன. காட்சிக்குக் காட்சி 'ரா' வான ரத்தின சுருக்கம்... திரைக்கதையாகி இருப்பது... தனி வடிவம். படத்தில்... படகில் தனக்குத் தானே தண்டனை கொடுக்கும் பெண்ணின் தூண்டிலில்... உலகமே கதறும் ஒரு காட்சி... நிஜத்தை நேருக்கு நேர் காணுகையில்... நெஞ்சத்தில் நெருப்பூரும் என்பது.

(the isle) எடுத்த இடத்தில் கிடைக்கும் தொலைத்தல்... தொலைந்த பிறகும் எடுக்கும் காலத்தின் ஜோடித் தத்துவம்.. நட்பெனவும் கொள்க. (samirtan girl) நினைத்த நாட்டுக்கு செல்ல கிடைத்த வழி... உடல் விற்பனை. உடலும் உடலும் சொல்லும் தத்துவத்தில்... என்னானது... பயணம். அலற வைக்கும்... அரூப நடை அவருடையது.

(bow) ம் (bad guy) ம் நெருங்க முடியாத நிர்பந்தம். நெற்றியில் விலகும் நேர் கோட்டு சித்திரம். நீருக்குள் நிகழும் நின் கடன் மானுடம் சேர்ப்பது (crocodile). வன்முறையே நம்மை வழி நடத்துகிறது. அதற்கு தான் மாற்றுப் பெயர்களை சுமந்துக் கொண்டு அலைகிறோம் என்று புரிந்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

அந்த புரிதலில் அளவு வேண்டுமானால் மாறலாம். ஆனால் ஆழம் மாறாது. கொரியாக்களின் சண்டையை (the Net) தன் வலையை நகர்த்திக் கொண்டு காட்டியது. மானுட குயுக்தி வெளி வந்தது (human space time & Human) தினம் ஓர் உடல்... தினம்... தான் ஒரு கடல். என மறுபக்கத்தை போட்டுடைக்கும் கிம் கி டுக்... அதிரூபன் இல்லை... ஆனால்... அந்நியனும் இல்லை.

இந்த மானுடத்தின் சாபமும்.. வரமும்.. அன்பு மட்டுமே. (pieta) அது இருக்கும் ஆயுதத்துக்கெல்லாம் உயர்ந்த ஆயுதம். அதைக் கொண்டு... எதிராளியின் மனதுக்குள் கூர்க் கத்தி ஒன்றை செய்து உள் நோக்கி மரணத்தை திருப்பி விட்டு விட முடியும். அடித்துக் கொண்டேயிருப்பது வன்முறை என்றால்.. அடி வாங்கிக் கொண்டே மீண்டும் மீண்டும் அடி என்று கூறுவது வன்முறையின் உச்சம்.

உச்சத்தின் முனையில் நின்று உலகுக்கு மௌனமாய் எடுத்து சொல்வது... அத்தனையும் இந்த மானுட வாழ்வின் ஆதி பரியந்தம் தான். வேதாளம் இடம் மாறும் நுட்பத்தைத் தான் மனிதன் கடவுளுக்கு பிரார்த்திக்கிறான்.

எதிர் வினையில் நின்ற வினைக்குள் எட்டிப் பார்க்கும் பொருளுக்கு பொருளற்று சேர்ந்து கொள்ளும்... பொருள் ஒன்றில்... சொல்லப்படும் நிர்பந்தங்களைத்தான் இந்த மனித மனம் விரும்புகிறது. அந்த மனம் முழுக்க... அவனின் துயரத்தின் சுவடுகள்... மீள் பயத்தின் மிச்சமென...அவனால் விரும்பப் படுவது தனிமையின் இருள் சேர்ந்த சில காலங்களின் சாபங்கள் தான்.

வினோதம் மூச்சடைத்து சாவும் மணித் துளிகளை மனம் மீன் தொட்டியில் ரசித்துக் கொண்டிருக்கும். ஒழுக்கம் என்பது ஊர்களை பொருத்தது என்று ஒரு பாடல் வரி உண்டு. அதையும் தாண்டி... ஒழுக்கம் என்பது உள்ளத்தை பொறுத்தது என்று கூட யோசிக்க வைக்கும்.

உள்ளார்ந்த கசடு நிறைந்த மனித மிருகத்தின் மிச்சத்தை எடுத்துக் காட்டிய கலைஞன். அவர் ஊரில் பெரிதாக வெறுக்கப்பட்ட அதே நேரம் உலகலாவில் பெரிதாக விரும்பப்பட்ட... கதைக்க சொல்லி கிம் கி டுக் ஓர் உக்கிர தூதுவன்.

வலிமைக்கு வலிமை எளியவையும் ஆகும். அது மிகச் சாதாரணமாகக் கதவைத் தட்டி விட்டு கடந்து விடும். திறக்கையில் அன்போடு சிறகு முளைத்த தேவதை ஒருத்தி எந்த வயதிலும் நிற்கலாம்....ஒரு கூடை அன்பை சுமந்தோ... அல்லது ஒரே ஒரு காரணம் சுமந்தோ.

அன்பை விட கொடிய ஆயுதம் ஒன்று உண்டோ..! என்று ஒவ்வொரு கதையிலும்... ஒவ்வொரு வடிவம் கொண்டு இருத்தல்... அழிக்கும் ஆக்கம்... திகைக்கும் பிரமிப்பு என்பதைத் தாண்டி தனி மனித சுத்திகரிப்பு... எனலாம்.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. பார்க்கும் ஒவ்வொருவரும் அவரவருக்கான செய்தியைச் சுமந்தலைவது விதி. இந்த தேகத்தின் வரம்பறியா நிலையில்.. மலைமீது புத்தனைச் சுமந்து செல்லும் சுய திருப்தி.. (spring summer fall winter & spring) சுயம் அழித்தல்... அல்லது சுயம் மீட்டல்... என்று ஆன்மீக துவாரம் அதே அளவில் நீண்டு கொண்டு போவதை பேரன்பின் மௌனத்தோடு உணர்ந்திருக்கிறேன்.

"கிம் கி டுக்"கின் சினிமா எல்லாருக்கும் நெருக்கமான வாழ்வின் ஜன்னலை திறந்தே வைத்திருக்கிறது. அதன் வழியே ஒரு பெரும் வாழ்வின் திரை பதட்டத்தோடே விலகுகிறது.

தன்னை திறந்து திறந்து திறந்துக் கொண்டே சென்ற கலைஞன் சட்டென கண் மூடிக் கொண்டதை திரை தாண்டியும் வருத்தத்தோடு உணர்கிறேன். இசைக்க தெரியாத போது சத்தமிட்டு அழுது விட தோன்றும் சில நொடி பிதற்றல்களை "கிம் கி டுக்" என்ற மகா கலைஞனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

மனிதன் தான் சாவான். கலைஞன் இல்லை.

- கவிஜி