இந்தியாவில் கோடை காலத்தில் வெயில் கொடுமை தாளாமல் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மொத்தமாக மக்களைக் கொல்லும் விபத்துகளைத் தடுப்பது குறித்தே நமது அரசுகள் கவலையற்று இருக்கின்றன. இதில், உதிரிச் சாவுகளைப் பற்றி மட்டும் எப்படி கவலைப்பட போகின்றன?

அமீரகத்தில் இந்தியாவை விட வெயில் அதிகம். கோடை காலத்தில் உச்சபட்சமாக 51 டிகிரி செல்சியஸ் (123 டிகிரி பாரன்ஹீட்) வரை எல்லாம் வெப்பநிலை பதிவாகும். ஆனால், வெயில் கொடுமை காரணமாக யாரும் இறப்பதில்லை. காரணம், வெயிலில் வேலை பார்ப்பவர்கள் குறித்து அமீரக அரசாங்கம் செலுத்தும் அக்கறை. கோடை காலத்தில் (ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை) மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரை வெயிலில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுப்பதற்கு ஏதுவாக நிழற்கூடங்கள் அமைக்க வேண்டும். இவற்றைக் கண்காணிக்க ரோந்துப் படை சுற்றிக் கொண்டிருக்கும்.

dubai mid day break

ஏதாவது ஒரு நிறுவனம் விதியை மீறி, வெயிலில் வேலை செய்ய வைக்கிறது என்றால், அவ்வாறு வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். ஆறு தொழிலாளர்கள் என்றால், ஒரு தொழிலாளருக்கு 5000 திராம்ஸ் வீதம் மொத்தம் 30,000 திராம்ஸ் ( ரூ.5,40,000 அபராதம்) விதிக்கப்படும்.

இத்தனைக்கும் அமீரகத்தில் வெயிலில் பார்ப்பவர்கள் யாரும் அந்நாட்டு குடிமக்கள் கிடையாது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளிலிருந்து வந்த ஏழைத் தொழிலாளர்கள்தான். அவர்களை மதிய வெயிலில் வேலை பார்க்க வைக்காமல் அந்நாட்டு அரசாங்கம் பாதுகாக்கிறது.

துபாய் வெயிலில் வேலை செய்வது லேசுப்பட்ட விஷயமல்ல, மிகக் கொடுமையானது. வியர்த்து ஒழுகும், எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் நா வறட்சி நிற்காது. கோடை காலம் முழுக்கவே எந்தக் குழாயைத் திறந்தாலும் சுடுதண்ணீராகத்தான் வரும். அதனால், வசதியான‌ துபாய் அரபிகள் தங்கள் வீட்டு சுற்றுச்சுவரில் Chilled water Machine-களைப் பொருத்தியிருப்பார்கள். எப்படியும் தெருவிற்கு ஒன்றிரண்டு மெஷின்கள் இருக்கும். அவற்றில்தான் நமது தொழிலாளர்கள் தண்ணீர் பிடித்துக் கொள்வார்கள்.

நானும் பல முறை அப்படி தண்ணீர் பிடித்ததுண்டு. காரில் வைத்திருக்கும் தண்ணீர் வெயிலில் சுடுதண்ணீராக மாறி, குடிக்க முடியாதபடி இருக்கும். அதைக் கொட்டிவிட்டு, இந்த chilled water machine-களில் பிடித்துக் கொள்வேன். நெருப்பைப் போல் சுடும் வெயிலில் அலைந்து வந்து, அந்தக் குளிர்நீரைப் பிடித்து முகம் கழுவும்போது ஒரு சுகம் கிடைக்கும் அல்லவா, அதற்கு இணையாக‌ எதைச் சொல்வது?

மதிய வெயிலில் வேலை வாங்கக் கூடாது என்பது அமீரக அரசு உத்திரவு என்பதால் அதை மீற முடியாது. அதற்காக, தொழிலாளர்களின் வேலை நேரத்தைக் குறைக்க முதலாளிகளுக்கு மனம் வருமா? சில நிறுவனங்களில் காலை 5 மணிக்கே வேலையைத் தொடங்கி, மதியம் 12.30 மணிக்குத் தொழிலாளர்களை கேம்ப்பிற்கு அனுப்பி விடுவார்கள். சில நிறுவனங்களில் வழக்கமாக மாலை 5 மணிக்கு வேலையை முடிப்பதற்குப் பதிலாக இரவு 7 மணி வரைக்கும் வேலை வாங்குவார்கள்.

நான் வேலை பார்த்த நிறுவனத்தில் காலையில் 5 மணிக்கு வேலையைத் தொடங்கும் முறை இருந்தது. இதற்குக் காரணம், மதிய நேரத்தில் தொழிலாளர்களுக்கு ஓய்விடம் வழங்குவதற்காக ஆகும் செலவைத் தவிர்ப்பதுதான். ஆனால், அதற்கு தொழிலாளர்கள் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்திருக்க வேண்டும். அப்போதுதான் 4 அல்லது 4.15 மணிக்கு பேருந்தில் ஏறி, 5 மணிக்கு கட்டுமான இடத்திற்கு வர முடியும்.

துபாயில் இருந்து தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தில் அவர்கள் தொலைத்த தூக்கமும் சேர்ந்தேதான் இருக்கிறது.

நமது ஊரில் வெயில் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், மதியம் மற்றும் மாலை வேளைகளில்தான் குழாயில் தண்ணீர் கொஞ்சம் வெதுவெதுப்பாக வரும். இரவிலும், காலையிலும் தண்ணீர் குளிர்ந்திருக்கும். துபாயில் அப்படியல்ல. காலையில் குளிக்கப் போனாலும், தண்ணீர் சூடாகத்தான் வரும்.

நான் என்ன செய்வேன் என்றால், இரவே ஒரு வாளியில் தண்ணீர் பிடித்து வைத்துவிடுவேன். அது காலையில் குளிர்ந்திருக்கும். அதுபோல், காலையில் அதைக் குளித்தபின்பு, மீண்டும் தண்ணீர் பிடித்து வைத்துவிடுவேன். அது மாலையில் வரும்போது குளிப்பதற்கு ஏதுவாக இருக்கும். ஆனால், லேபர் கேம்ப்பில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு இந்த வசதி இருக்காது. அவர்கள் சூடான தண்ணீரில்தான் குளித்தாக வேண்டும்.

இன்னொரு சிக்கலும் அவர்களுக்கு உண்டு. அவர்கள் முதல்நாள் இரவு சமைத்த உணவைத்தான் மறுநாள் காலையிலும், மதியமும் சாப்பிட வேண்டியிருக்கும். வெயில் காரணமாக மதியம் சாப்பிடுவதற்குள் அந்த உணவு கெட்டுப் போவதற்கு வாய்ப்புண்டு. அதனால் பெரும்பாலானோர் காலையில் சாப்பிட்டவுடன், மதிய உணவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிடுவார்கள். ஏனெனில், கெட்டுப் போய்விட்டால், வெளியே வாங்கி சாப்பிடுமளவிற்கு பக்கத்தில் உணவு விடுதிகள் ஏதும் இருக்காது. தூரத்தில் இருக்கும் உணவு விடுதிக்கு நடந்துபோக முடியாத அளவு தீக்கங்குகளை வெயில் பரப்பி வைத்திருக்கும்.

dubai summer

அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தும் மே மாதத்தில்கூட இங்கு மாலை வேளையில் கடற்கரை காற்று வீசி, நம்மை ஆசுவாசப்படுத்தும் அல்லவா? அப்படியான ஆசுவாசம் துபாய் கோடை காலத்தில் கிடையாது. 24 மணி நேரமும் வெப்பநிலை தகிக்கும். இரவில் சில டிகிரிகள் குறைவாக இருக்குமேயொழிய வெக்கை குறையாது. கடற்கரையிலும் குளிர்ந்த காற்று வீசாது.

நமது ஊர் வெப்பநிலையை காற்றாடியைக் கொண்டு சமாளிப்பதுபோல், அரபு நாடுகளில் முடியாது. எல்லா இடங்களிலும் ஏ.சி. வேண்டும். இந்தக் கடும் வெப்பநிலை காரணமாக கோடை காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து, ஹோட்டல் அறைகள் குறைவான விலைக்குக் கிடைக்கும். விமான பயணச்சீட்டு விலையும் பெருமளவு குறைந்து காணப்படும். நமது ஆட்களும் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஊர் வந்து, 'துபாய் ஷேக்' வேஷம் போடுவார்கள்.

துபாயில் வெயில் அதிகமாக இருப்பது உண்மைதான். ஆனால், எந்த ஒரு மலையாளியும் துபாய் வெயிலில் வேலை பார்ப்பதில்லை. ஏனெனில், அவர்கள் ஒரு பட்டப்படிப்புடன் துபாய் வருகிறார்கள், ஒயிட் காலர் வேலைதான் பார்க்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, வட இந்திய மாநிலங்களில் இருந்து போகும் கட்டுமானத் தொழிலாளர்களும், இதர உடலுழைப்புத் தொழிலாளர்களும்தான் வெயில் கொடுமையை அனுபவிக்கிறார்கள்.

நீங்கள் படித்திருக்கிறீர்கள், அலுவலக வேலை பார்க்கப் போகிறீர்கள் என்றால் தாராளமாக குடும்பத்துடன் துபாய் போகலாம். தங்குமிடம், கார், பேருந்து, மெட்ரோ ரெயில் அனைத்தும் குளிரூட்டப்பட்டிருக்கும். பேருந்து நிழற்கூடமும் ஏ.சி. வசதியுடன் இருக்கும். மெட்ரோ ரயில் நிலையங்கள் முழுவதும் குளுரூட்டப்பட்டிருக்கும். சிறுசிறு மளிகைக் கடைகள், சலூன் கடைகள், அலுவலகம், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் அனைத்தும் ஏ.சி. வசதியுடன் இருக்கும். வெள்ளிக்கிழமை தொழுகை நேரத்திலும், ரம்ஜான் மாதத்திலும் அனுபவிக்கும் சிரமங்களை சகித்துக் கொண்டால், துபாய் இந்தியாவை விட பாதுகாப்பான, இந்தியாவில் கிடைக்கும் அனைத்தும் கிடைக்கின்ற, சொல்லப்போனால் இந்தியாவில் கிடைக்காதது எல்லாம் கிடைக்கின்ற, அதுவும் முதல் தரத்தில் கிடைக்கின்ற ஊர்.

அய்ரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் சமூக வாழ்க்கை முடங்கும், துபாயில் அது கோடை காலத்தில் முடங்கும். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி, துபாய் பாலைவனத்தில் ஒரு சொர்க்கம்.

- கீற்று நந்தன்

Pin It