“ஜோஸ்யக்கார நைனா வீட்டில் இருப்பாரா..?” - வடிவுக்கு, ஊரை நெருங்க நெருங்க இப்படி ஒரு கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.

யாராச்சும் வந்து அவரை அடிக்கடி வெளியூர்களுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். பயந்தது, தொலைந்தது, வினை மீட்டல் என்று சதாவும் சுற்றிக் கொண்டே இருப்பார்.

“எலக்ட்ரிக் வந்து பாதிப் பொழப்பு கெட்டுச்சு, பள்ளிக்குடம் வந்து மீதிய போட்டுத் தள்ளுது... இனி நாமளாப் போயி எதுனாச்சும் எரையப் போட்டு மீனப் பிடிச்சாத்தே உண்டும் திரவியம் பிள்ளேய்...” - என்று தாத்தாவிடம் புலம்பிக் கொள்ளுவார்.

ஊருக்குக் கடைசியில் வீடு. அதுவே அவருக்கு சாதகமாகவும் இருந்தது. நல்ல அமைதியான சூழல். மனித கசகசப்பு, இரைச்சலற்ற கனமான கணங்கள். மனசை ஒரு நிலைப்படுத்துகிற அவரது வசீகரமான குரல். அடிக்கடி வந்து போகச் சொல்லுகிற மதுரமான மொழி...

“ரா கண்ணூ... ரண்டம்மா ரண்டமா... பொன்னூ... என்னா பொன்னூ... ஆகட்டும்மா...” - என்று பால் வித்தியாசமில்லாது அழைப்பதும் வருடிக் கொடுப்பதும், தன் வயதை மீறிய பெரியவர்களாய் இருப்பின், “ரண்ட கிஷ்ணய்யா... ஏமி கோபாலா... சொல்லுங்க கண்ணய்யா... எல்லாமே என் நைனா வெண்ண திருடுன திருட்டுப் பயலோட வாக்குதேன்...” என புளகாங்கிதமாய். புன்சிரிப்புச் செய்வதுமாய் சிநேகத்தை ஏற்படுத்தி விடுவார்.

வடக்குத் தெருவில் மங்கத்தாயம்மாள் வீட்டில் ஒரு ‘களரி’ நடத்தினார். இவளது அப்பாதான் ஜோஸ்யக்காரரை அழைத்து வந்தார். அப்போது வடிவுக்கு கலியாணம் முடிக்கவில்லை.

மங்கத்தாயம்மாள் மகள் வசந்தா அக்கா, கலியாணம் முடிச்ச கொஞ்ச நாளிலேயே புருசனோடு வாழப்பிடிக்கவில்லை என்று தாய் வீட்டில் தங்கி விட்டாள். நாலு ஆம்பிளைகளோடு நடுவில் பிறந்த ஒரே பெண் பிள்ளை. ஒரு பிள்ளை என்பதால் வஞ்சகம் இல்லாமல் சீர் செனத்தியெல்லாம் நல்ல முறையில் செய்து வாத்தியார் ஒருத்தருக்கு கட்டிக் குடுத்திருந்தார்கள். வாத்தியாரும் நல்ல அம்சமானவர்தான். தலைமட்டும் வழுக்கை. படிப்பு கூடுதல் என்றார்கள்.

முழுசாய் மூணு மாதம் முடியவில்லை. மூசுமூசுவென அழுது கொண்டு அம்மா வீட்டுக்கு வந்து விட்டது வசந்தாக்கா. காரணம் கேட்டால் ‘கால்பூல்’ என அழுது மாய்ந்தது. ‘மாட்டேன்னா மாட்டேன் போக மாட்டேன்...’ - என்று அடம் பிடித்தது. எப்பவுமே அந்தக்கா அப்படித்தான் ரெம்பவும் அழுத்தமானது. தேள் கடிச்சதை யாராச்சும் வீட்டில் சொல்லாமல் இருக்க முடியுமா.... அந்தக்கா இருந்துச்சு. தானே வைத்தியம் பாத்துக்குச்சு... ‘தனக்கு வந்தது தானே தா போக்கிக்கணும்...’ங்கும்.

மாமனாரும் மாமியாரும் வந்து அன்பொழுகப் பேசி அழைத்தார்கள். அவர்களிடம் சரிசரி என பேசி சிரித்த அக்கா, அப்பாவோடு வருகிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்தது. அப்பா அழைத்தபோது, ஆங்காரமாய் பேசி அழுதது. “அங்க போனா, அடுத்து வாரப்ப நீங்க, என்ன உசுரோட பாக்க முடியாது... அரளிக் கொட்டைய அரச்சுக் குடிச்சு அங்கேயே சமாதியாகிடுவேன் சரியா...” - எனக் கேட்டது.

மாப்பிள்ளை வந்து நாலைந்து தரம் அழைத்த போதும், அந்த மனுசனிடம் முகங்குடுத்துப் பேசவில்லையாம். சோறுதண்ணியெல்லாம், எடுப்புக் கடைக்காரனைப் போல எட்ட வைத்துவிட்டு ஓடிப் போய் மறைந்து கொள்ளுமாம் அக்கா. புருசன்காரன் ராத்தங்கினால் படுக்கலிடுமாம். கொதித்துப் போய் ஒருநாள் ராத்திரி படுத்திருந்தவன், பாதி ராத்திரியில் எழுந்து, அம்மாவோடு படுத்துக் கிடந்தவளை இடுப்புக்குக் கீழே உதைத்துவிட்டு ஊருக்குப் போய்விட்டாராம்.

சொந்த பந்தங்கள் பேசி, புத்திமதி நல்லவார்த்தை என்று நாள்ப் பூராம் பேசி, தீபாவளிக்கு ரெட்டைச்சீர் கொடுத்துப் புருசன் வீட்டில் விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். சுட்டுக் கொண்டுபோன பலகாரங்கள் தின்று முடிவதற்குள் திரும்பி வந்துவிட்டாள் வசந்தா அக்கா.

“இன்னொருதரம் அங்க போகச் சொன்னா, சொன்ன நிமிசம் அரளிச்சாரக் குடிச்சு, அல்லாரையும் டேசனுக்கு (போலீஸ்) அனுப்பிச்சிருவேன்...” என்றது.

அக்காவொத்த வயதுக்காரப் பெண்களைக் விட்டு வசந்தாக்காளிடம் விசாரிக்கச் சொல்லி இருக்கிறார்கள். “அவங்கூட வாக்கப்பட்டுக் கெடக்கறதுக்கு நாலஞ்சு அரளிக் கொட்டயப் பிடுங்கி நையிநையின்னு மெண்டு அல்ப்பாய்சுல போய்ச் சேந்துரலாம்” - என்று சொல்லியிருக்கிறது.

வீட்டைச் சுற்றிலும் வளர்ந்திருந்த அரளிச் செடிகளைப் பூராவும் வெட்டிப் போட்டார்கள். தோட்டத்து வேலிப் புதரோடு காவலுக்கு நின்ற அரளிமூட்டுகளும் தப்பவில்லை. ஆள்விட்டு பெயர்த்து எடுத்துவிட்டார்கள்.

அதன்பிறகுதான் அப்பா, ஜோஸ்யக்காரரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

ஒரு வெள்ளிக்கிழமை தலைமுழுக்காட்டி ஒத்தைச் சடை போட்டு, பூனம் சேலை உடுத்தி ஒரு சினிமாக்காரியைப் போல அலங்கரித்து கோயிலுக்குப் போகிறோமெனப் பொய் சொல்லி அக்காவை ஜோஸ்யர் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.

ஜோஸ்யரும் மதியச் சாப்பாடு முடித்து வெத்திலை போட்டு, வேஷ்டியை தளரக் கட்டி, மேல்சட்டை ஏதும் அணியாமல் நெற்றியில் நீளமாய் இழுத்த கோபாலச் சிவப்போடு, இவர்களை வாய்குளிர வரவேற்றிருக்கிறார்.

“ரண்டய்யா... ராகிஷ்ணா... ரா கண்ணூ... பொன்னு பிள்ள... வாடா ... வாவா...”

மீசையும் தாடியும் மழித்து சிவந்த அவரது முகம் கௌரவம் சிவாஜி கணேசனைப் போல சிரித்தது. கட்டு மீறாத உடம்பும், கனிவான வார்த்தைகளும் எல்லோரையும் கட்டி இழுத்து வீட்டினுள்ளே அழைத்துச் சென்றிருக்கிறது.

பூஜை ரூமுக்குள் போனதும் கிருஷ்ணனின் படங்களுக்கு எதிரே அவர்களை அமர்த்திவிட்டு, அவர்களுக்கெதிராய் படங்களோடு உட்கார்ந்து கொண்டார். துண்டை எடுத்துவிட்டு அரை வேட்டியுடன் பத்மாசனம் போட்டு வசந்தாக்காவுக்கு எதிராய் அமர்ந்து கொண்டார். இரண்டு பேருக்கும் நடுவில் - பித்தளை சூடத்தட்டு மட்டும் திருநீருடன் - இருந்தது. உடன் வந்தவர்கள் சற்றுத்தள்ளி அமர்ந்து கொண்டார்கள். வசந்தாக்கா அசூசையுடனும் ஆத்திரத்துடனும் அமர்ந்திருந்தார்.

ஜோஸ்யக்காரர் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தியவாறு கிருஷ்ணனிடம் எதோ பேசினார். “அட்டனபா... ஒத்ந்துயா...சின்னபிட்ட... செப்புப்பா...? செப்பு நைனா...” என்று தெலுங்கில் பேசியவர், “சரிசரி, சரிசரி” - என்று கண்களைத் திறந்து கைகளை இறக்கினார் வலது கையில் விபூதி இருந்தது.

அத்தனைபேரும் கையெடுத்து கும்பிட்டனர். கையிலிருந்த விபூதியை வசந்தாவின் தோள்பட்டை வழியே பூசிக் கொண்டு வந்தவர், இடுப்பு, தொடை என வந்து அக்காவிடம் அம்மாவிடம் - மங்கத்தாயம்மாளிடம் - “துணியக் கொஞ்சம் தூக்குமா” - என்றார். வசந்தாக்கா சேலையை தானே உயர்த்தி கணுக்காலை மட்டும் காட்டியிருக்கிறார். “போதும்... போதும்” - என்று காலில் பூசிவிட்டார்.

மீதியை நெற்றியில் பூசிவிட்டு, வசந்தாக்காவின் மோவாயைப் பிடித்துக் கொண்டு, “வாயைத் தெற...” - என்றார். அவரது கையை வெடுக்கென தட்டிவிட்டவளின் முகம் பார்த்தார் ஜோஸ்யர்.

“உங்க வீட்டுக்கு வர்ரேன்... அங்க வச்சு ஒரு களரி நடத்தி முடிச்சிரலாம்... ம்..!”என்றபடி விபூதியை வசந்தாவின் வாயில் திணித்து விட்டார். அவரது விரலில் அவளது எச்சிலின் உஷ்ணம் தகித்தது.

அதுவும் ஒரு வெள்ளிக்கிழமையன்றுதான் நடந்தது. அதற்கு முன்னால் இரண்டொருதரம் வசந்தாக்காவின் வீட்டுக்கு வந்திருக்கிறார் ஜோஸ்யர். மத்தியான வேளையில்தான் வருவார். சாப்பிட்டு முடித்து கண்ணசரும் நேரத்தில், உக்கார வைத்து மந்தரித்து விபூதி பூசி விடுவார். எதோ ஒரு ஆணின் பெயரைச் சொல்லி, அந்த நபருடைய விளையாட்டுத்தானென்றும் ஒரு ரா பூஜையில் விரட்டி விடலாம் என்றும் வீட்டார்க்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருந்தார். அந்த பூஜைக்கு ‘களரி’ என்றும் பெயர் சொன்னார். அதற்கும் கூட வசந்தாக்கா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. ‘வீணா எதாச்சும் செஞ்சு, காச விரயம் பண்ண வேனாம். எனக்குத் தோன்றப்ப எம் புருசெ வீட்டுக்கு போய்க்கிறேன்’ - என்றதாம்.

வசந்தாக்காவின் இந்தப் பேச்சுக்கூட ஜோஸ்யரின் விபூதியின் மகிமைதான் என கணக்கு வைத்தார்கள். வசந்தாவுக்குத் தெரிந்தும் தெரியாமலும் வெள்ளிக்கிழமை களரிக்கு ஏற்பாடு செய்தனர்.

சாராய பாட்டிலிலிருந்து, கோழிக்கறி, முட்டை, பால், பழம் என அத்தனை ‘தீவன’ வகைகளும், அத்தர், பன்னீர், சவ்வாது, ஊதுவத்தி என்று வாசனை திரவியங்களும் ஏற்பாடு செய்தனர். இரவுப் பன்னிரண்டு மணிக்கு வசந்தாக்காவைக் குளிரக் குளிப்பாட்டி நடுவீட்டில் உட்கார வைத்து, வாசனாதி திரவியங்களைப் பூசி அலங்கரித்தனர். பால், பழ, இறைச்சி வகைகளைக் கூட்டி வைத்து ஜோஸ்யர் சொன்ன அந்த ‘நபருடைய’ பெயரால் வசந்தாக்காவை அழைத்து “வேணுமட்டும் தின்னுட்டு... எம்பிள்ளய விட்டு வெளியேறு” என்றனர்.

“ஒங்களுக்கெல்லா கிறுக்கா புடிச்சிருக்கு...?” என்ற வசந்தாக்கா, பின்னால் ஜோஸ்யர் மறைந்திருப்பதை அறியாமலே... “இந்த நேரத்துல இவ்வளவையும் திங்க, எனக்கென்னா பேயா புடிச்சிருக்கு...? இல்ல, ஒங்கள முனிபுடிச்சு ஆட்டுதா...?” - என்று சாதாரணமாகத்தான் சொன்னது.

“ரேய்க்... க்குக்கா...!” - என்று நாயடிக்கும் சிறுபிரம்பு என்ளை சுழற்றியபடி அவள் முன்னால் அமர்ந்தார் ஜோஸ்யக்காரர்.

ஜரிகை கரை வேட்டியுடுத்தி, கழுத்தில் தங்கச் சங்கிலி மினுங்க, பொன்னார்ந்த மேனியும், நெற்றியில் அழுத்தமாய்த் தீட்டிய கோபாலச் சிகப்புமாய் விழிகளை உருட்டி மிரட்டினார்.

உடனிருந்த அனைவரையும் வெளியேற சைகை செய்தார். பயபக்தியுடன் வெளியேறியவர்கள் கதவைத் தாழ் போட்டு மூடினார்கள்.

ஜோஸ்யக்காரர் தானாகத் தட்டும் வரை கதவைத் திறக்கலாகாது. சிறு பிள்ளைகள் அடுத்த வீட்டில் படுக்க வேண்டும். கன்னிப் பெண்கள், பையன்கள் அருகில் இருக்கக் கூடாது. மற்றவர்கள் உறங்கிவிட்டாலும் பரவாயில்லை. வயதான ‘பெண்ணரசி’ மட்டும் கதவுக்கு வெளியில் இருந்தால் போதும்... முன்பே பல பேச்சுக்கள் நடந்தேறி இருந்தன. அதன்படி வசந்தாக்காவின் அப்பத்தாள் மட்டும் கதவை அண்டிப் படுத்திருந்தார்.

உள்ளே பெருத்த சத்தமும், பேய்க் கூச்சலும் கேட்டதாக அப்பத்தா சொன்னார்.

ஜோஸ்யர் வெளியே வந்தபோது ரொம்ப வியர்த்துப் போய் இருந்தாராம். கோபாலம் அழிந்து, தலைமயிர் கலைந்து பேய்கடித்த தடம்கூட இருந்ததாகச் சொன்னார்கள்.

பாட்டில் சாராயம், தின்பண்டங்கள்... காலியாகியும் சிந்திச் சிதறியும் கிடந்தனவாம்... வசந்தாக்கா அழிந்த ஓவியமாய் நடுக்கூடத்தில் கிடந்ததாம்.

ஓடிப்போய்த்தூக்கியவர்களைத் தடுத்த ஜோஸ்யக்காரர், “அதுவா எந்திரிக்கட்டும் விடுங்க” - என்றாராம். “அடுத்த களரி, வார செவ்வாயில வச்சிக்கவம்...!” - என்றபோது மட்டும் பளிச்சென கண்திறந்த வசந்தா, மறுநாளைக்குத்தான் எழுந்திருக்கிறது.

செவ்வாய்க்கு முன்தினம், திங்கள் கிழமையன்றே, அப்பாவிடம் தன்னை, புருசன் வீட்டில் கொண்டு போய் விடச் சொல்லி அழுதிருக்கிறார்... வசந்தாக்கா.

மகள் புறப்பட்ட சந்தோசத்தில் மாட்டுவண்டி கட்டி, மறுசீர் கொடுத்து, சந்தோசமாய் விட்டு வந்தார்கள். அன்றைக்கு புருசனோடு சேர்ந்தவர்தான். அதன்பிறகு தாய் வீட்டிற்குத் திரும்பவே இல்லையாம்.

வசந்தாக்காவின் புருசன் வீட்டுத் தோட்டத்திலும் அரளிச் செடி கொத்துக் கொத்தாய் காய் பிடித்துக் கிடந்திருக்கிறது. புருசனோடு சேர்ந்த ஆறேழு மாதத்தில் அக்காவின் வார்த்தைப்படியே அரளிக் காய் தின்று அங்கேயே அடக்கமான சேதி வந்தது.

வாழா வெட்டியாய்ச் செத்துப் போகாமல் சுமங்கலியாய்ப் போய்ச் சேர்ந்ததில் பலருக்கு நிம்மதி.

பஸ்ஸை விட்டு இறங்கியதும், பக்கத்திலிருந்த பலசரக்கு கடையில் விசாரித்தாள் வடிவு.

“ஜோஸ்யக்காரரா...?”

“ம்... நாக்யரு...! நெத்தீல பெரிஸ்சா கோபாலம் போட்டுருப்பாரே...!”

கடைக்காரன் புதியவன் போலிருக்கிறது. பத்து வருசத்திற்கு முன்பான கதை தெரிந்திருக்கவில்லை.

“நேரா போனீங்கன்னா... ரேசன் கட. பக்கத்தில ஒரு கோபாலன் கோயில்... பின்னாடி...” - ஆனாலும் வழி சொன்னான்.

அதே வீடுதான் போலிருக்கிறது. வீட்டில் ஜோஸ்யர் இல்லை. அம்மாதான் இருந்தார். கண்ணும் காதும் அரைகுறை. தட்டுத்தடுமாறி ஜோஸ்யக்காரரின் ஆஸ்ரமத்திற்கு அடையாளம் சொன்னார்.

பக்கத்திலிருந்த கரட்டுக்குப் போனார்கள். கரடெங்கும் பொத்தக்கள்ளியும், அரளியும் அழிந்த போயிருந்தது. பார்த்தீனியச் செடிகள் வெள்ளை பூத்து அடர்ந்து வழியெங்கம் கிடந்தன.

பெரிய ஆலமரத்தடியில் குடில் அமைத்திருந்தார். தாடிவளர்த்து வெளேரென்று தளர்ச்சியாய் இருந்தார்.

வெளியில் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களும், பட்டும் பருத்தியாடை உடுத்தியோருமாய் நிறைந்திருந்தனர்.

“ஜோஸ்யம் கேக்கணும்...!”

நெற்றியைச் சுருக்கி வடிவை நினைவுக்குக் கொண்டு வந்தார் ஜோஸ்யக்காரர்.

“திரவியம்பிள்ளை பேத்தியாளா... பிச்சையம்மா மக...!” - தன் பால்யத்தைக் கண்டு கொண்டதில் பரவசம் வடிவுக்கு. நிறைய பேச நினைத்தாள் நேரமில்லை.

“களரியெல்லாம் போறதில்லையா நைனா...!”

“வயசாச்சுல்ல கண்ணூ...”

வடிவு கீழே உட்கார, ஜோஸ்யர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.

சிறிது விபூதி எடுத்து கைக்குள் புதைத்தவர், கையை கண்ணன் திருவடியில் வைத்து மந்திரம் சொன்னார். பிறகு கையை நெஞ்சில் பொதித்து கண்ணனோடு பேசினார்.

“மா பிட்டப்பா... சூசி செப்பு... அவுந்து... அவுந்து... சரிசரி சரிசரி...”

கண்திறவாமல் தனது மூடிய கரத்தை வடிவுக்கு நீட்டினார்.

வடிவு இரு கையையும் ஏந்தி வாங்கினாள். அவளது கையில் செவ்வரளிப் பூக்கள் விழுந்தன.

- ம.காமுத்துரை
Pin It