முடிந்தளவு இந்த படத்தை பார்க்காமல் தவிர்ப்பது நல்லது. ஒரு காட்சியில் கூட அருவருப்போ குமட்டலோ வராமல் இருக்காது. இது ஒரு பரிசோதனை முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். உடல் எனும் வடிவம் டி கம்போஸ் ஆவது தான் படம்.
ஒரு இறந்த உடலை புதைக்கிறோம் என்றால் அந்த உடலில் மீது மண்ணுக்குள் ஏற்படும் சிதைவு... மாற்றம்தான்... இந்த படம்.
கொஞ்சம் கொஞ்சமாக உடல் கெட்டு....அழுகி... கூழாகி... உதிர்ந்து.... ஒன்றுமில்லாமல் மண்னோடு மண்ணாக மாறும் அந்த மாற்றத்தை உயிரோடு இருக்கையிலேயே நிகழ்த்தி பார்க்கிறது இந்த சினிமா. இந்த கற்பனைக்கே இயக்குனரை பாராட்டலாம். இறந்த பிறகு உடலில் நிகழும் இயல்பை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு.
உடல் எனும் அணுக்களின் கூட்டமைவை கொஞ்சம் உற்று காணும் கலைப்படைப்பு என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு படத்தை எடுக்க முதலில் பெருமூச்சடக்கி பழகியிருக்க வேண்டும். வாந்தி மயக்கம்... குமட்டல்... குளறுபடி என்று மண்டைக்குள் கரப்பான் பூச்சிகளை படர விடும் காட்சி அமைப்பு. ஒப்பனையில் வழியும் உடலின் உருகும் அழுகலை திரை தாண்டியும் உணர முடிந்தது. வாழ்வின் நிலையாமை.. உடலின் உருகும் தன்மை என்று படம் பேசுவதெல்லாம் எனக்கு சித்த வரைமை என்று தான் தோன்றியது.
அறிவியலின் வழியே உடற்கூறுகளின் சூட்சுமம் விளங்கும் போது ஒன்றுமில்லாமல் உருகுவது தான் இயல்பு என்று புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உடல் நம் கட்டுப்பாட்டிலிருந்து கரைந்து போகும் காலம்... நரகத்தின் நரம்பில் புழுக்கள் ஊர்ந்து செல்லும் கற்பனை தான். சிறு இருமலுக்கே...ஒரு பக்க தலைவலிக்கே... ஒரு சிறு காயத்துக்கே... நாம் மிரண்டு தவித்து போகிறோம். இது கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாக நாமே அழுகுவது குறித்ததென்றால்... தொட்ட இடமெல்லாம் பிய்ந்து கொண்டு வருமென்றால்... மண்ணாய் போகிற உடம்பென்று தெரியாமலா பெரியோர் சொல்லி வைத்தார்கள்.
உடல் எனும் பெரும் இயந்திரம் ஓடும் வரை தான் பேரழகு. எங்கோ எப்படியோ எதற்கோ நின்று விட்டாலோ... ஓட்டத்தை சற்று மாற்றிக் கொண்டாலோ... கதை கெட்டது. மூத்திரமோ மலமோ நம் பேச்சு கேட்கும் வரை தான்....நாம் நாம். அது தன் போக்குக்கு ஆகி விட்டால்... நமக்கு நாமே யாரோ தான்.
எத்தனை பெரிய அழகி இந்த கதை நாயகி. கொஞ்சம் கொஞ்சமாக உருகுலைகையில்.. அதை அவளே புரிந்து கொள்கையில்... உலகம் கை விடும் முன்... உலகத்தை அவள் கை விடும் இயலாமைக்குள்... அல்லாடி நடந்து தவழ்ந்து தன்னை தானே பரிசோதனை செய்யும் காட்சியில்... வாழ்வென்பது நரகத்தின் வாசலில் நிகழ்ந்து கொண்டிருப்பது என்று புரிகிறது. நூல் தப்பினால்... தொட்டாலே நூல் படரும் உடம்பு தான் ஒவ்வொருவருக்கும். எதுவோ ஆக வேண்டி என்னவோ ஆகி விட்டதன் வடிவம் தான் உடல். அத்தனையும் திசுக்கள். ரத்தம். சதை எலும்பு.. நரம்பு. எப்படியோ வந்து ஒட்டிக் கொண்ட மனம் எனும் மேடையில் தான் இத்தனை நாடகமும்.
பொதுவாகவே செத்த உடல் சற்று நேரத்தில் குளித்து விடுவதை நடுக்கத்தோடு தான் உணர முடிகிறது. அது நமக்கு எத்தனை நெருக்கமான மனிதராக இருந்தாலுமே. நம்மிலிருந்து வேறோன்றாக அது மாறி விடுவதை செத்த வீட்டில் உயிரோடு இருப்போர் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். அதனால் தான்... இறந்த உடலை பெரும்பாலும் தொடாமல் தவிர்க்கிறோம். அந்த தவிர்ப்பு என்பது அனிச்சை. உடலின் ஒரு நிலை தான் இறப்பு. அதன் பிறகும் அதில் நடக்க நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. இங்கே தோன்றிய எதுவும் அழிவதில்லை. அது இன்னொன்றாக மாறி விடுகிறது. எரித்தால்... சாம்பல். சாம்பலைக் கரைத்தால்... நீரில் அது ஐக்கியம். நீர் என்னவெல்லாம் ஆகும் என்று நாம் அறிவோம். புதைத்தால்.... உருகி... மக்கி... புழுக்களுக்கு உணவாகி... மண்ணுக்கு உரமாகி... மீண்டும் அது எங்கோ இந்த பூமியில் ஒரு துளியாகி.... அது ஒரு தொடர்கதை.
ஒன்றுமில்லாமல் போவதிலும் ஒன்று இருக்கிறது. அது தான் மொத்த சூட்சுமம். சூனியம் என்று பேச்சுக்கு சொல்லிக் கொள்ளலாம்.
"மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று. தெய்வம் சிரிப்பதுண்டு மனிதன் பாவமென்று..." கவிஞன் சொன்னது நினைவுக்கு வந்தது. காலத்தின் பிசுபிசுப்பு ஒவ்வொரு உடலுக்குள்ளும் மலக்கிடங்கை சுமந்து கொண்டிருக்கிறது. அருவருப்பின் மீது போர்த்திய அழகிய தோல் வழியே தான் நமது வாழ்வும் வளமும்.
ஒரு நாள் பல் துலக்காமல்... இரண்டு நாள் மலம் கழிக்காமல்... மூன்று நாள் குளிக்காமல்... அது காதலியே ஆனாலும்.. கருமம் தான். அந்த நிஜம் தான் இந்த படத்தில் ரத்தம் சொட்ட... நிணநீர் சொட்ட நாம் புரிந்து கொள்வது. ஒன்றிலிருந்து ஒன்று மாறுவதில் எங்கோ பிசிறு தட்டினால் போதும்... ஒன்றுமில்லாமல் உருக்குலையும் உடல் தான் இது. அந்த வெற்று இதைக் கொண்டு.... நான் அது... நான் இது... என்று சொல்வதெல்லாம் புழுக்கள் சிரித்துக் கொள்ளும் மொழியற்ற பூச்சு.
எத்தனைக்கு எத்தனை ஆச்சரியமோ... உடல் அத்தனைக்கு அத்தனை அழுகல். கால் மீது சுத்தியல் விழுவது கூட தெரியாமல் நிற்பது.. நகம் பிய்ந்து கொண்டு வருவது... தலைக்குள் ஓட்டை விழுவது... உடல் கறுத்து உயிர் நோக ஒரு தவம் அரங்கேறுவது... இயலாமையில் ஆதி யுக்தி கொலையை முன்னிறுத்தி அதன் மூலம் ஒரு புணர்ச்சி விதியை மனதுக்குள் கொண்டாடுவது... என்று படம் பேசாமல் பேசுவது எல்லாம் இந்த மானுட உடலின் மர்மம் பற்றி தான்.
உடலின் மையத்தில் இருந்தே உடல் துவங்குகிறது. அதனால் தான் மர்ம முடிச்சுகள் வழியே மாய்ந்து மாய்ந்து மனிதன் முணுமுணுப்பது. சராசரி வாழ்வின் அடித்தளம் புணர்ச்சியில் இருக்கிறது. இந்த படத்தில் கூட அத்தனை உருகுதலின் நிலையிலும் அவள் புணர்ச்சியை நாடி மண்டியிடுவது அதனால் தான். சுய மைதுனம் வழியே உடல் வலியை சற்று ஒதுக்குவது அப்படி தான். வலிக்கும் சுகத்துக்கு நூல் அளவு இடைவெளி தான். உணர்ந்தோருக்கு அர்த்தம் புரியும். கலவி... மானுட விடுதலை. அது இன்றியே இங்கே பெரும்பாலைய மனங்களில் சிறைச்சாலை கம்பி நீட்டிக் கொண்டிருக்கிறது. யோனி எனும் சிருஷ்டி தான் இங்கே பிரபஞ்ச ரகசியம். அதன் காரணம் தான் அது இருக்குமிடம் முட்டாள்களுக்கு அகப்படுவதில்லை. உடலை போற்றி புகழ்ந்து தள்ள வேண்டாம். அதே நேரம் உடல் வளர்ந்தேன் உயிர் வளர்த்தேன் எனும் திருமூலரின் சொல்லுக்கு வளைய செய்வது கால தேவை.
"கலவி உள்ள காலம் வரை உடம்புக்குள்ள சிக்கல் இல்லை" என்று நம் கவிஞன் சொல்கிறான்.
உயிர் போகும் போது பலர் மலம் கழித்து விடுவதுண்டு. குறிகள் விரைத்துக் கொள்வதுண்டு என்று ஊரில் பெருசுகள் பேச... சிறுவயதில் கேட்டிருக்கிறேன். ஒரு மரணத்தில்... அருகேயே கண்டிருக்கிறேன். ஆக வாழ்வுக்கும் மரணத்துக்கும் எப்போதும் தொடர்புண்டு. மரணத்துக்கும் கலவிக்கும் முப்போதும் தொடர்புண்டு. அதனால் தான்.. ஒவ்வொரு புணர்ச்சியிலும் ஒரு சிறு மரணம் உணர்கிறோம். வாழ்வின் அடித்தளம் புணர்ச்சி என்றால்... இருபக்க சுவர்... பிறப்பும் இறப்பும். மூன்றும் ஒரு வழி பாதை என்பது தான்.. எவ்வழியே... உயிரணு உள்ளே போகிறதோ... அவ்வழியாகவே பிண்டம் வெளியேறுவதும்.
மனிதன் மறைவுக்கு பின் அவன் உடலில் நிகழும் சிதைவுகளை... உயிரோடு இருக்கையிலேயே நிகழ்த்தி பார்க்கும் மிகு புனைவு ஒரு வகையில் ரசிக்க தக்கவை தான். இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது தானே. சினிமா ஆக பெரிய கலை. அது ஒரு வகுப்பறை. வாழ்வின் இண்டு இடுக்குகளில் இருந்தெல்லாம் இருட்டையும் ஒளியையும் கொண்டு வந்து கொட்டும். வேண்டுமென்பதை அறிந்து கொண்டு... வேண்டாம் என்பதை அறிந்ததில் இருந்து அரிந்து கொள்ளுங்கள். மற்றபடி உருமாற்றங்கள் நொடிக்கு நொடி நிகழ்ந்து கொண்டே இருப்பவை தான். அதற்கு வாழ்வது சாவது பற்றியெல்லாம் அக்கறை இல்லை.
Film: Thanatomorphose
Director : Éric Falardeau
Language: English
Year : 2012
- கவிஜி