ஒரு நல்ல வாசகன் வாசிப்பை முடிப்பதேயில்லை என்றார் மார்க் ட்வைன். மனிதனையும் விலங்குகளையும் பிரிப்பது வாசிப்புத்தானே. வாய்ப்பு வசப்படும் போதெல்லாம் நாம் படித்துக்கொண்டே இருக்க வேண்டும். வாசிப்பு வசப்பட்டால்தான் உலகில் உலவும் உண்மைகளை அறிய முடியும். கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தில் கல்விக்கான வாய்ப்பு வரும்போது புரட்சிக்கவியும் ’நூலைப் படி - சங்கத்தமிழ்

நூலைப்படி - முறைப்படி

நூலைப்படி

காலையில் படி - கடும்பகல் படி

மாலை இரவு பொருள்படும்படி’ என படித்துக்கொண்டே இரு என்கிறார்.

வேலையினைச் சுமந்து கொண்டு அல்லும் பகலும் உழைக்கும் நமக்கு எப்போது படிக்க நேரம் வாய்க்கும் என அலுத்துக் கொள்வோரும் உண்டு. ஆனால், நாம் பேருந்துக்கெனவும், மருத்தவரிடமும், மேல் அலுவலரிடமும், இல்லை ஏதேனும் ஒன்றுக்காக வரிசையில் காத்திருக்கும் தருணம் ஒரு நாளில் ஒரு முறையாவது வாய்த்துவிடுகிறது. இந்நேரங்களில்  நமது விலைமதிப்பற்ற நேரம் கற்பூரமாய்க் காற்றில் கரைகிறது. இதனை எப்படிப் பயனுள்ள முறையில் மீட்பது என்பதற்காகவும் வாசிப்பினை வசப்படுத்தவும் ஒரு அற்புதமான செயலி உள்ளது.

இப்போது தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. நீங்கள் நினைப்பது போல் புத்தகம் என்பது காகிதம், மேல் அட்டை, அச்சடிக்க தாள்கள் என்ற அமைப்பிலேதான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மின்னணு வடிவில் இப்போது புத்தகம் வந்துவிட்டது. ஆம் அது அமேசான் கிண்டில் (Kindle) என்கிற மின் புத்தகம். இது பார்க்க டேப் கணினி போல் இருக்கும். இதன் விலை 7 ஆயிரத்தில் இருந்து 21 ஆயிரம் வரையில் ஆகும். அடேங்கப்பா அவ்வளவா? என வாய்பிளப்பவர்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி இருக்கிறது. ஆம் அந்த கிண்டிலின் வசதியினை நாம் எப்போதும் கைகளில் வைத்திருக்கும் திறன் பேசியிலேயே வரவழைக்க முடியும்.

அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவே தான். Google Play Storeக்குச் செல்லுங்கள். Kindle எனத் தட்டச்சு செய்யுங்கள். ஒருவர் மரத்தடியில் உட்கார்ந்து படிப்பது போன்று ஒரு செயலி இருக்கும். இதனை  நிறுவிக் கொள்ளுங்கள். உங்களுக்கான கணக்கினை ஆரம்பியுங்கள். பயப்படாதீர்கள் பாரத ஸ்டேட் வங்கி போன்று ஐந்தாயிரம் பணம் இருந்தால்தான் கணக்குத் தொடங்குவேன் பேர்வழி என்கிற  கெடுபிடியெல்லாம் இங்கு  இல்லை. வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமிருப்வேர் எவரும் கணக்குத் தொடங்கலாம்.

மேலே தேடுதல் திரை வழியே உங்களுக்குத் தேவையான புத்தகத்தின் பெயரைத் தட்டச்சு செய்து தேட ஆரம்பியுங்கள். புத்தகத்தின் தலைப்பையோ அல்லது எழுதிய ஆசிரியரின் பெயர்கொண்டோ, பதிப்பகத்தின் பெயர் கொண்டோ தேடினால் விவரங்கள் கிடைக்கும். இலவசப் புத்தகங்களில் தொடங்கி ஆயிரக்கணக்கான விலையுள்ள புத்தகங்கள் வரை கிடைக்கும். அமேசான் கிண்டிலில் ஏறத்தாழ 1.5 மில்லியன் புத்தகங்கள் உன்னளவாம். தேவையான புத்தகத்தினைத் தரவிரக்கம் செய்து படிக்க வேண்டியதுதான்.

இதில் பல்வேறு மொழிகளைச்  சார்ந்த புத்தகங்கள் கிடைக்கின்றன. இப்போது இந்திய மொழிகளிலும் ஏராளம் இறங்கியுள்ளது. நமது தமிழ் மொழி எட்டுக்கால் பாய்ச்சலின் வேகங்கொண்டு பிற இந்திய மொழிகளுக்குச் சவால் விடும் வகையில் முதன்மையான இடத்தை நோக்கி பயணிக்கிறது. 

அது மட்டுமல்ல ஆங்கிலப் புத்தகம் படிக்க இது மிகச்சிறந்த தளம். ஏனெனில் தெரியாத, புதிய சொற்களுக்கு நீங்கள் அகர முதலி தேடிப் போகவேண்டியதில்லை. அந்தச் சொல்லைத் தேர்வு செய்தால் போதும் அதற்கான பொருள்  அந்த நொடியே உங்கள் சுட்டுவிரல் நுனியில் வந்துவிடும். 

உங்கள் உள்ளங்கவர்  பத்திகளை நீங்கள் மேற்கோளிட முடியும்.  அந்தப் பகுதியினை உடனடியாகச் சமூக வலைத்தளங்களில் பகிரவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு. உங்களுக்கு வரும் மின்னிதழ்கள், நூல்கள், பத்திகள் பகுதிகள் எதுவானாலும் அதனை கிண்டிலில் இணைத்துக்கொள்ள முடியும். அது மட்டுமல்ல ஒரு கணக்கில் டேப் கணினி, கணினி, திறன்பேசி என நீங்கள் பார்வையிடலாம்.   இணையத்துடன் இணைந்தால் அதுவாகவே தரவுகளோடு ஒத்திசைவு (Synchronize) ஆகிவிடும். தரவுகள் தவற விடுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

புத்தகக் கடைகளில் பார்த்திருக்கிறேன், சில புத்தகங்கள் வாசகர்கள் கைபட்டு அழுக்கடையாமல் இருக்க பாலித்தீன் கவர்கள் கொண்டு பேக் செய்யப்பட்டிருக்கும். இதனால் புத்தகத்தினைப் பற்றி ஏதும் அறிய முடியாது. சில  நேரங்களில் இது கதையா, கட்டுரையா, புதினமா, கவிதை நூலா என்று கூட அறிய முடிவதில்லை.  பின் அட்டையில் ஆசிரியருக்கு நெருக்கமானவர் ஆகா, ஓகோ வென எழுதியிருப்பதை

நம்பிச் சில நேரங்களில் வாங்கிவிடுவோம். ஆனால் அது நமக்கு விருப்பமில்லாத, அல்லது உடன்படாத புத்தகமாகக் கூட இருக்கக் கூடும்.

கிண்டிலில் இந்தப் பிரச்சனையே இல்லை. எந்த புத்தகமானாலும் 10 பக்களை மாதிரிகளாகப் பெறமுடியும். எத்தனையாவது பதிப்பு, முன்னுரை, புத்தகத்தின் ஒரு பகுதி என நீங்கள் படித்துப்பார்த்து பிடித்திருந்தால் வாங்கிக் கொள்ளலாம்.  அச்சுப்புத்தகத்தின் விலையில் ஏறக்குறைய பாதி விலையில் கிடைக்கிறது. தமிழில் தேடுதல் வசதி கொடுத்திருப்பதால் நீங்கள் ஒரு குறிச்சொல்லினை வைத்து நூலின் எந்தப் பகுதிக்கும் சென்று தேடிப்பெறலாம். மேற்கோளிடலாம். எழுத்துகளைப் பெரியதாக்கிப் படிக்கலாம். இரவு நேரங்களில் கண்கள் கூச்சமின்றி படிக்க வசதியாகத் திரை அமைப்பினை மாற்றிக் கொள்ளலாம்.

கிண்டில் வாசிப்பு நிச்சயமாக அடுத்த தலைமுறைக்கானது. இதனால் பல நன்மைகள் உண்டு.  இனி பழைய புத்தகம் ஏதும் தொலைந்துவிட்டது என்ற சொல்லுக்கும் இடமில்லை, மறுபதிப்பு வரவில்லை என்று காத்திருக்கவும் தேவையில்லை. நாட்டுடைமை ஆக்கப்பட்ட பல தமிழ் புத்தகங்கள் யாவும் கிண்டிலில் இலவசமாக வரவிருக்கின்றன. இப்போதே சில புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. காத்திருக்கும் நேரத்தில் உங்களுக்கு விருப்பமான புத்தகத்தைத் தரவிறக்கம் செய்து உங்கள் திறன் பேசியிலேயே படித்துக் கொள்ளலாம். PDF வடிவில் உள்ள பக்கங்களைக் கூடத் தங்கு தடையின்றி வாசிக்க முடியும். கருஞ்சட்டைத் தமிழர் இதழினை அதில்வாசிக்கவும் முடிகிறது, சேமித்து வைக்கவும் முடிகிறது. 

இணையத்தில் இலவசமாக ஏராளமான தமிழ் மின்னூல்கள் கிடைக்கின்றன. இவற்றைத் தரவிறக்கம் செய்து படிக்கலாம். கல்கி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் படைப்புகள் உட்பட பல்வேறு அரிய நூல்கள் விலையின்றிக் கிடைக்கின்றன.

மக்கள் தொடர்ந்து அறியாமையில் இருக்க இப்போது ஆளும் அரசு குடி, குடி, சாகும் வரை குடி என்கிறது.

மக்கள் விரோத அரசினை அகற்ற, தொழில் நுட்ப உதவியுடன் படி, படி  அடிமைச் சங்கிலி அறுபடும் வரை படி என்கிறார்கள் முற்போக்குச் சிந்தனையாளர்கள். நாள்தோறும் படிப்போம். இந்த உலகம் அன்பாலும் அறிவாலும் ஆளப்படட்டும்.

Pin It