‘புதிய விடியலைக்‘ குறிக்கும் நவோதயா பள்ளிகளைக் கொண்டு வருவது குறித்து 1986 ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசு அறிவித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பள்ளியை உருவாக்கி, அதற்கு 20 கோடி ரூபாய் மானியமாகக் கொடுத்து, 240 மாணவர்களை சேர்த்து, மாதிரிப் பள்ளியாக நடத்திக் காட்டுவது என்பது திட்டம். 11, 12 ஆம் வகுப்புகளில் இந்தி கட்டாயம் என்பது அதில் நளினமாகத் திணிக்கப்பட்ட நஞ்சு.

எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய மூவருமே தாங்கள் முதல்வார்களாக இருந்த கால கட்டங்களில், நவோதயா பள்ளிகளுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்று தெளிவாகக் கூறிவிட்டனர். அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கைக்கு எதிரான இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள இயலாது என்று அரசு கொள்கை முடிவு எடுத்தது.

இப்போது அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடுகிறது. நவோதயா பள்ளிகளை நடத்த வேண்டும் என்கிறது. அதனை மத்திய அரசு மௌனமாய் ரசிக்கிறது. இங்கே உள்ள எடுபிடி அரசு எதுவும் பேசாமல், ‘அம்மா ஆட்சியை’ நடத்துவதாகச் சொல்கிறது.

இந்தித் திணிப்புக்காக மட்டுமில்லை, லட்சக்கணக்கான பிள்ளைகள் உள்ள மாவட்டத்தில், 240 பிள்ளைகளுக்கு மட்டும் தனிச் சலுகை என்பது என்ன நியாயம்? மறைந்த கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலு சொன்னதை போல, குடிசைகளுக்கு நடுவில் ஏன் அரண்மனை கட்ட வேண்டும்? அந்தப் பணத்தை ஏன் எல்லாக் குழந்தைகளுக்குமான கல்விக்காகச் செலவழிக்கக் கூடாது?

இவை போன்ற ஜனநாயகக் கேள்விகளுக்கெல்லாம் மத்திய அரசோ, நீதிமன்றமோ விடை சொல்லவில்லை என்றால், நவோதயா பள்ளிகளை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடுவதைத் தவிரத் தமிழர்களுக்கு வேறு வழியில்லை.

Pin It