கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வளர்ச்சி முழக்கம் தமிழகத்தை உலுக்கிக் கொண்டு இருக்கின்றது. அது பல இடங்களில் பைத்தியம் பிடித்து, துப்பாக்கிகளையும், லத்திகளையும் தூக்கிக் கொண்டு அம்மணமாக ஆடிக் கொண்டு இருக்கின்றது. அது வளர்ச்சிக்கு எதிராக கோஷம் போடுபவர்களின் நரம்புகளை அறுத்து எறிகின்றது, எலும்புகளை நொறுக்குகின்றது, மூளையை சிதறடிக்கின்றது, இதயங்களை இரண்டாகப் பிளக்கின்றது. அது அனைவருக்கும் உத்திரவிடுகின்றது மரங்களை வெட்டு, காடுகளை அழி, வயல்களில் நெருப்பு வை, காற்றையும், மண்ணையும், நீரையும் பலாத்காரம் செய், இறுதியில் உன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள 'பாரத் மாதா கீ ஜே' என்று உரத்துச் சொல். அதுதான் அனைத்து பாவங்களையும் புனிதப்படுத்தும் மந்திர உச்சாடனம். முதலாளிகளின் மலத்தைத் தின்று வயிறு வளர்க்கும் பன்றிக்கூட்டத்தின் ஆழ்மனங்களில் உறைந்து கிடக்கும் தேசபக்தி எப்பொழுதெல்லாம் பீறிட்டுக் கொண்டு மேலே எழுகின்றதோ அப்பொழுதெல்லாம் அது நக்சலைட், மாவோயிஸ்ட் என்று உறுமுகின்றது. சேற்றிலும், சகதியிலும் படுத்து உருண்டாலும் தன்னை அப்பழுக்கற்றதாக காட்டிக்கொள்ள பன்றிகள் விரும்புகின்றன. அதனால் நம்மையும் அவை மலம் தின்னச் சொல்லி பயமுறுத்துகின்றன‌. சேறுகளிலும் சகதிகளும் படுத்து உருள ஆணை இடுகின்றன‌.

protest against green corrider

வளர்ச்சி அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு நமக்கு முன்னால் ஓடுகின்றது. மிதிவண்டிகளிடம் இருந்தும், நடைபாதைவாசிகளிடம் இருந்தும் சாலைகளை பிடுங்கிக் கொண்ட வளர்ச்சி, இப்போது அவர்களிடம் இருந்த வயல்களையும், வீடுகளையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை ஊரற்றவர்களாகவும், வீடற்றவர்களாகவும் நகரத்தின் வாசலில் வேலைக்காக காத்திருக்கும் அத்துக்கூலிகளாகவும் மாற்றப் போகின்றது. அவர்கள் தொலைத்துவிட்ட வாழ்க்கையை இந்தச் சாலை ஒருநாளும் அவர்களுக்கு இனி திருப்பித் தரப் போவதில்லை. அதிவேகமாக வாகனங்கள் பறந்து செல்ல, அதைவிட அதிவேகமாக அவர்களின் வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வருகின்றார்கள். தாங்கள் பிறந்த வளர்ந்த மண்ணோடு இரண்டறக் கலந்த அவர்களின் உடல்கள் வலுக்கட்டாயமாக அந்த மண்ணின் பிணைப்பில் இருந்து அறுத்து எறியப்படுகின்றன. அவர்கள் நேற்றுவரை நினைக்கவில்லை தலைமுறை தலைமுறையாய் அப்பனுக்கும், தாத்தனுக்கும் உயிர்வாழ பசுமையான காய்களையும், கனிகளையும், பயிர்களையும் அள்ளி அள்ளிக் கொடுத்த மண்மீது கருப்புத்தார் கொட்டி அதைக் கொலை செய்யவார்கள் என்று.

உறக்கத்தைத் தொலைத்து விவசாயிகளின் மனம் கொந்தளித்துக் கொண்டு இருக்கின்றது. அவர்களால் வளர்ச்சியை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அது அவர்களின் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் அமர்ந்து கொண்டிருக்கின்றது. அவர்களது மூதாதையர்கள் அவர்களுக்கு பண்படுத்தி கையளித்துவிட்டுச் சென்ற நிலத்தை இன்று அவர்கள் தங்களது சந்ததிகளுக்கு கையளிக்கவிடாமல் ஒரு கொடிய பாசிச அரசு அதை வம்படியாகப் பறித்து, அவர்களின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கின்றது. உங்களது வீடுகளும், வயல்களும் இதுநாள்வரை உங்களுக்குச் சொந்தமானது என்ற பெருமிதத்தோடு நீங்கள் இருந்தால் இனி அதை மாற்றிக் கொள்ளுங்கள். மூலதனம் காடுகளையும், மலைகளையும், ஆறுகளையும் ஒரு பிரளயமாய் அழித்துக்கொண்டு செல்லும் போது அதில் இருந்து உங்களது வீடும், நிலமும் மட்டும் மிஞ்சிவிடுமா என்ன?. உங்கள் நுரையீரலில் கடைசியாக எஞ்சியிருக்கும் காற்றைக் கூட முதலாளிகள் விரும்பினால் அதை உறிஞ்சி அவனுக்கு எடுத்துக் கொடுத்துவிட்டு அவன் முன்னால் மண்டியிட்டு உட்காரும் அடிமை நாய்கள் ஆட்சி செய்யும் காலத்தில் நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் நாய்களின் வாலை ஒட்ட நறுக்குவதைவிட வேறுவழி இல்லை.

277 கிமீ சாலையமைக்க 1900 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படுகின்றது. அதிலும் 9.9 கிமீ நிலம் இரும்புத்தாது, அலுமினியத் தாது, மெங்னசைட், படிகக்கல், சுண்ணாம்புக்கல், பெல்ஸ்பர் போன்ற கனிம வளங்கள் நிறைந்த அடர் வனப்பகுதியில் கையகப்படுத்தி அமைக்கப்படுகின்றது. இந்தப் பசுமை வழிச் சாலை ஐந்து மாவட்டங்கள், 14 தாலுக்காக்கள், 159 கிராமங்கள் வழியாக அமைக்கப்படவுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 74 கிராமங்கள், தர்மபுரி மாவட்டத்தில் 24 கிராமங்கள், சேலம் மாவட்டத்தில் 18 கிராமங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1 கிராமம் என மொத்தம் இந்தச் சாலையால் 159 கிராம மக்கள் தங்களின் வாழ்க்கையைத் தொலைக்கப் போகின்றார்கள்.

எப்பொழுதெல்லாம் மக்களின் நிலங்களும், அவர்கள் காத்து வந்த கனிம வளங்களும் கொள்ளையடிக்கப்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதற்கு முன்பாக கனிம வளங்கள் நிறைந்த பகுதியில் மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் இருக்கின்றார்கள், அவர்கள் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தானவர்கள் என்ற முழக்கத்தை முதலில் பரப்புவார்கள். பிறகு அதை உண்மையாக்க அரச பயங்கரவாதத்தை நிறைவேற்றும் வேட்டை நாய்களை ஏவி அந்த மக்களை கடித்துக் குதறுவார்கள். இந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பு வந்தவுடனேயே எச். ராஜா சேலம் முதல் சென்னைவரை உள்ள கிராமங்களில் நக்சலைட்கள் நிரம்பியுள்ளார்கள் என்றும், பொன்.ராதாகிருஷ்ணன் தமிழ் ஆர்வலர்கள் என்ற போர்வையில் பயங்கரவாதிகள் செயல்படுகின்றார்கள் என்றும், மலைப்பகுதிகளில் நக்சலைட்கள் பயிற்சி எடுக்கின்றார்கள் என்றும் விஷமக் கருத்தை பரப்பினார்கள். இப்போது அரசு பசுமை வழிச் சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான், பியூஷ் மனுஸ், வளர்மதி போன்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றது. மேலும் நில அபகரிப்புக்கு எதிராக தங்கள் நிலங்களைக் கொடுக்க மறுத்து, போராடும் விவசாயிகளையும் விரட்டி விரட்டி வேட்டையாடிக் கொண்டு இருக்கின்றது. எந்த விலை கொடுத்தாவது இந்தத் திட்டத்தை செயல்படுத்தாமல் விடமாட்டோம் என அடிமை எடப்பாடி அரசு துடித்துக் கொண்டு இருக்கின்றது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் நிம்மதி இன்றி, ஒவ்வொரு நாளும் 'வாழ்வா சாவா' போராட்டத்தில் இந்த அரசு தள்ளிக் கொண்டு இருக்கின்றது. மக்கள் தெருவுக்கு வந்து போராடவில்லை என்றால், அவர்களின் உயிரையும், உடைமைகளையும் பறித்துக் கொண்டு சுடுகாட்டிற்கு அனுப்ப இந்த அரசு ஒரு நாளும் தயங்காது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழக மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைத்துக் கொண்டு, அதைக் காப்பாற்றுவதற்காக காவிப் பயங்கரவாதிகளின் திட்டங்கள் அனைத்தையும் மிக மூர்க்கத்தனமாக இந்த அரசு, மக்கள் மீது திணித்து வருகின்றது. தமிழக மக்களின் ரத்தத்தின் மீது இவர்கள் தங்களின் ஆடம்பர சொகுசு வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

மக்கள் வீடுகளையும், நிலங்களையும் , வேலைவாய்ப்பையும் பறித்துவிட்டு அவர்களை பஞ்சைப் பராரிகளாய் துரத்துவதை வளர்ச்சி என்று அவர்கள் நம்மை நம்பச் சொல்கின்றார்கள். அடர்ந்த காடுகளையும், மலைகளையும் அழித்துவிட்டு அதற்கு வெட்கம்கெட்ட முறையில் பசுமைவழிச் சாலை என்று பெயரிடுகின்றார்கள். அரசே முன்னின்று நடத்தும் மனித இன அழித்தொழிப்பு நடவடிக்கைகள் அனைத்திற்கும் ‘பசுமை’ என்ற சொல் தேவைப்படுகின்றது. மாவோயிஸ்டுகளை ஒழிக்கின்றோம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட ‘பசுமை வேட்டையும்’ தற்போது தமிழக அரசு கொண்டுவரும் ‘பசுமைவழிச் சாலையும்’ அடிப்படையில் பெருமுதலாளிகளின் நலனுக்காக, வளங்களை கொள்ளையடிக்கவும் அதற்கு எதிராக உள்ள சக்திகளை ஒழித்துக் கட்டவும்தான்.

தமிழகம் ஒரு பெரும் அபாயத்தை சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு பாசிச கொலைவெறி பிடித்த கூட்டம் தமிழகத்தை அழித்தொழிக்க சதி செய்து கொண்டிருக்கின்றது. தனது கொள்ளையும், கொலையையும் எதிர்க்கும் அனைவரையும் தனது கூலிப்படையை ஏவி அழித்தொழிக்கின்றது. ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் போன்றவற்றை துப்பாக்கி முனையில் பறிக்கின்றது. எதிர்க்குரலை நசுக்கி விழிபிதுங்கச் செய்கின்றது. பாசிசம் அம்மணமாக அரியணையில் அமர்ந்திருக்கின்றது. ஹிட்லரின் ஆட்சியையும், முசோலினியின் ஆட்சியையும் வரலாற்றுப் புத்தகத்தில் மட்டுமே படித்த தலைமுறை அதை இப்போது நேரில் பார்க்கின்றது. சுயமரியாதைக்காக உலகத்திலேயே பெரும் போராட்டத்தை நடத்திய ஒரு மண்ணில் இன்று அந்த மண்ணின் மைந்தர்களின் சுயமரியாதை சுட்டு வீழ்த்தப்படுகின்றது. நம்மையும், நம் சந்ததிகளின் வாழ்க்கையையும் அழிக்க வந்திருக்கும் இவர்கள் யார்? ஓட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றிக்கொண்ட இந்தக் கும்பல், இன்று பால் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்து பதம் பார்க்கின்றது. நம் அனைவரையும் சூடுசுரணையற்ற பேர்வழிகள், கோழைகள் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகின்றது. காவி பயங்கரவாதிகளின் கோலுக்கு ஆடும் குரங்குகளாய் மாறிப் போன இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை முன்னெடுப்பதே இப்போதைக்கு தமிழக மக்கள் தங்கள் உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிக் கொள்ள இருக்கும் ஒரே வழி.