‘பொது மக்களிடம் பெரிதும் புத்தியும் இல்லை; ஒழுக்கமும் இல்லை; மானமும் இல்லை என்ற நிலை இருப்பதால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆளும் கட்சியும் வயிற்றுப் பிழைப்புக்கும் பொது நல வேடம் போட்டுக் கொண்டு திரியும் எந்த அரசியல் கட்சியும் திருந்துவதற்கு வகையே இல்லாமல் போய்விட்டது.” - இது 1959ஆம் ஆண்டு பெரியார் ‘விடுதலை’யில் எழுதிய அரசியல் குறித்த மதிப்பீடு.
சுமார் 60 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் தமிழ்நாட்டில் கட்சி அரசியல் - தேர்தல் அரசியல் - மாண்புகள் மேலும் மேலும் சீரழிந்து கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இப்போது எம்.ஜி.ஆர். தொடங்கிய ‘அ.இ.அ.தி.மு.க.’வில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளன என்ற உண்மையை மறுக்கவே முடியாது.
இந்தியாவிலேயே முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர் - முடிவெய்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே. சிறைத் தண்டனையோடு 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
உடல் நலிவுற்ற நிலையில் ‘குற்றவாளி’யாகவே அவர் முடிவெய்தினார். எனவே அவர் தண்டிக்கப்பட முடியாத நிலையில் சட்டபூர்வமாக விடுவிக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு தமிழக அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு அரசுப் பணம் ரூ.90 கோடி அளவில் செலவிடப்படுகிறது.
அரசு விளம்பரங்களில் அவரது படம் வெளியிடப்படுகிறது. அவர் வாழ்ந்த இல்லம் அரசு செலவில் நினைவிடமாக்கப்படுகிறது. பிறப்பால் ‘பிராமணராக’ இருந்த காரணத்தால் இவைகள் விவாதத்துக்கு வராமலே கள்ள மவுனம் காக்கப்படுகிறது.
அரசியல் கெட்டுப்போய் விட்டது என்று புலம்பும் பார்ப்பனிய ஊடகங்கள், பார்ப்பனிய தலைவர்கள் - இதைக் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள். ஜெயலலிதாவுடன் இந்த வழக்கில் இணைக்கப்பட்ட சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் முறைகேடாக சொத்துக்களை வாங்கிக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
ஒவ்வொருவருக்கும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவர்கள் எந்த அரசுப் பதவியிலும் இல்லாதவர்கள். இப்போது ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை ‘தியாகத் தலைவி’ என்று கூறி உற்சாக வரவேற்பு தரப்படுகிறது.
ஜெயலலிதா முடிவெய்தியதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பை அம்மையார் சசிகலா ஏற்றார். இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, அவரது அமைச்சரவை சகாக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் அம்மையார் சசிகலாவை பதவி ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்து தீர்மானங்களையும் நிறைவேற்றினார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முதல்வர் பதவிக்கும் தேர்வு செய்தார்கள். ஆனால் பதவி ஏற்க விடாமல் நடுவண் பா.ஜ.க. ஆட்சி தமிழகத்தின் ஆளுநர் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி இழுத்தடித்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பெங்களூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அம்மையார் சசிகலா, சிறைக்குச் செல்ல வேண்டிய நிலையில், தன்னிடம் விசுவாசமாக இருப்பார் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை தனக்கு பதிலாக முதல்வராக்கினார்.
ஏற்கனவே அரசுக்கு சொந்தமான டான்சி நிறுவனத்தின் இடங்களை முதல்வராக இருந்த ஜெயலலிதா முறைகேடாக வாங்கிய வழக்கு ஒன்றை சந்தித்தார். அரசுப் பதவியில் இருப்பவர்கள் அரசுக்கு சொந்தமான இடங்களை வாங்குவது சட்டப்படி குற்றம். அம்மையார் ஜெயலலிதா அதை மீறிய நிலையில் உச்சநீதிமன்றம் விசித்திரமான ஒரு தீர்ப்பை வழங்கியது.
“முதல்வர் செய்தது குற்றம் தான்; ஆனாலும் தண்டனையை அனுபவிக்க வேண்டாம்; அரசு நிலத்தை திருப்பி ஒப்படைத்தால் போதும்” என்று நீதிமன்ற வரலாற்றிலேயே இல்லாத ஒருதீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வழக்கு நடந்த காலங்களில் முதல்வராக தொடர முடியாத நிலையில் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதா வாங்கிய நிலங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு இந்த வழக்கிலிருந்து ஒரு வழியாக தன்னை விடுவித்துக் கொண்டு மீண்டும் முதல்வராக பதவி ஏற்க வந்தார். ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் பதவியிலிருந்து விலகி, அம்மையாருக்கு வழி விட்டார்.
முதல்வர் பதவியில் இருக்கும் போதே ஜெயலலிதா, முடிவெய்திய நிலையில் அவசர இடைக்கால ஏற்பாடாக மீண்டும் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார்.
அம்மையார் சசிகலா, தன்னை முதல்வர் பதவிக்கு தயார் செய்து கொண்டிருந்தபோது சிறை செல்ல வேண்டிய நிலையில் முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்துக்கு வழங்காமல், எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கிவிட்டார். கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தனது உறவினர் தினகரனை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக்கிவிட்டு சிறைச் சென்றார்.
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அரசியலை நடத்திவரும் பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க.வைப் பிளவுபடுத்தி ஒரு பகுதியை தன் வசமாக்க சதி செய்தது. அந்த வலையில் சிக்கிய ஓ. பன்னீர்செல்வம் முதல்வர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக ‘தர்மயுத்தம்’ நடத்தப் போவதாக தனிக்கட்சி தொடங்கினார்.
11 சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்களுடன் தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’ தீர்மானத்தில் எடப்பாடி ஆட்சிக்கு எதிராக 11 அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் வாக்களித்தார்.
ஓ.பி.எஸ். ‘தர்மயுத்த’ கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்று ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட பா.ஜ.க., மீண்டும் இரு பிரிவினரையும் ஒன்றாக இணைக்க வைத்தது.
‘தர்மயுத்தம்’ நடத்திய காலத்தில் தன்னை முதல்வராக்காத சசிகலாவை வஞ்சம் தீர்க்க ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறி நீதிபதி ஆறுமுகம் விசாரணை ஆணையத்தை நியமித்தவரும் ஓ. பன்னீர்செல்வம் தான். ‘ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ்.’ இணைந்த பிறகு - ஆட்சிக்கு எதிராக வாக்களித்த
11 அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல் தடை சட்டத்திலிருந்து பதவி பறிபோகாமல் காப்பாற்றப்பட்டனர். அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
ஜெயலலிதா, மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று விசாரணை ஆணையம் அமைத்த ஓ. பன்னீர்செல்வம், 8 முறை விசாரணை ஆணையம் சாட்சி சொல்ல அழைப்பாணை விடுத்தும் சாட்சி சொல்ல வரவில்லை.
தொடர்ந்து இணைந்த இரு பிரிவினரும் பொதுக் குழுவைக் கூட்டி அம்மையார் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கினர். பொதுக் குழுவைக் கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளராக தனக்கு மட்டுமே உண்டு; அந்தப் பொதுக் குழுவே சட்ட விதிகளுக்கு உட்பட்டது அல்ல என்று சசிகலா வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது.
இப்போது எடப்பாடி பழனிச்சாமி, கட்சிக்குள் பதவியைப் பயன்படுத்தி மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை உறுதிப்படுத்திக் கொண்ட நிலையில், சசிகலாவுக்கும், அ.இ.அ.தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார்.
அவருடன் தொடர்பு வைத்துக் கொண்டவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார். தன்னை முதல்வராக்கியது அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களே தவிர, சசிகலா அல்ல என்கிறார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சசிகலாவுடன் சேர்ந்து தண்டனை பெற்று விடுதலையாகியுள்ள சுதாகர், இளவரசி சொத்துக்களை பறிமுதல் செய்யும் உத்தரவுகளை எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்துள்ளார். இதை சட்டப்படி ஜெயலலிதாவின் கொடைக்கானல் மாளிகை, சிறுதாவூர் பங்களாக்களையும் பறிமுதல் செய்திருக்க வேண்டும்.
ஆனால் அதைச் செய்யத் தயாராக இல்லை. பா.ஜ.க. உத்தரவு போட்டால் செய்யத் தயங்க மாட்டார்கள். இப்போது சசிகலா ஆதரவு அணி - எதிர்ப்பு அணி என்று கட்சிக்குள் கடும் ‘யுத்தம்’ நடக்கிறது. இந்த ‘பொம்மலாட்டத்தை’ திரைமறைவிலிருந்து பா.ஜ.க. அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளையும் தமிழகத்தின் தனித்துவங்களையும் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியிடம் அடகு வைத்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை மட்டும் தக்க வைத்துக் கொள்ளும் துரோகங்களை அடுக்கடுக்காக செய்து கொண்டிருப்பதே அ.இ.அ.தி.மு.க.வின் ‘அரசியல்’ என்றாகிவிட்டது.
எந்தக் கொள்கையும் வேண்டாம்; ‘இரட்டை இலை’ என்ற சின்னம் மட்டுமே போதும் என்கிறார்கள். மறைந்த எம்.ஜி.ஆர். திரைப் படங்களில் கதாநாயகனாக நடித்தபோது திரைப்படப் பாடலாசிரியர்கள் எழுதிக் கொடுத்த பாடல்தான் தங்களின் கொள்கை என்கிறார்கள். மத மூடநம்பிக்கைச் சின்னங்களான வண்ணக் கயிறுகளும் நெற்றியில் விபூதி குங்குமமும் கட்சிக்காரர்களின் கட்டாய அடிப்படை அடையாளமாக்கப்பட்டுவிட்டன.
அரசியல் சீரழிந்து விட்டது; பொது வாழ்க்கையில் நேர்மையில்லை; திராவிடக் கட்சிகள் நாட்டை சீர்குலைத்து விட்டன என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்து அரசியல் நடத்தும் கட்சிகளானாலும் சரி; புரட்சி பேசும் இயக்கங்களானாலும் சரி; பார்ப்பனிய ஊடகங்களும் சரி; தி.மு.க.வை மட்டுமே குறி வைத்து தாக்குதல்களை நடத்துகின்றன.
அ.இ.அ.தி.மு.க.வில் நடக்கும் ‘உலகமகா சீர்கேடுகள்’ குறித்து ஒரு கண்டனத்தைக்கூட தெரிவிப்பது இல்லை. ஒவ்வொரு நாளும் அரசு தரும் விளம்பரங்களுக்காக ஊடகங்கள் அரசு எதிர்ப்பைவிட எதிர்கட்சியான தி.மு.க. எதிர்ப்பிலேயே தீவிரம் காட்டி வருகின்றன.
‘ஊழல் - நேர்மை - சிறந்த ஆட்சி’ என்பவற்றிற்கு புதிய அகராதிகளை பார்ப்பனர்களே இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். வேத காலத்தில் தொடங்கிய இவர்களின் சூழ்ச்சி - சுயநல ஆதிக்க அரசியல் இப்போதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
- விடுதலை இராசேந்திரன்