தேர்தல் நெருங்கி விட்டது!

mk stalin 433கூட்டணிப் பேச்சுவார்த்தைகள்  ஒருபுறம், விருப்ப மனுக்கள் வாங்குவது மறுபுறம் என்று எல்லா பக்கங்களிலும் தேர்தல் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது!

வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக அணி, பாஜக அணி, விஜய் கட்சி என்று மும்முனைப் போட்டி உறுதியாகிவிட்டது! இவற்றைத் தவிர, சில சின்னச் சின்னத் கட்சிகளும், சுயேச்சைகளும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்!

திமுக கூட்டணியில், எந்தெந்தக் கட்சிக்கு எவ்வளவு இடங்கள், யாருக்கு எந்தத் தொகுதிகள் என்பன இன்னும் முழுமையாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அங்கு ஏறத்தாழ எல்லாம் முடிவாகி விட்டன என்றே தெரிகிறது. இதோ கூட்டணி உடையப் போகிறது, இந்தக் கட்சி இங்கிருந்து விலகி விஜய் கட்சியுடன் சேரப் போகிறது, ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்பதைத் திமுக ஒப்புக்கொண்டே ஆக வேண்டிய நிலை வரப்போகிறது என்றெல்லாம் என்னென்னவோ வதந்திகள் பரவின.

எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, வெற்றிகரமாகக் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் அங்கு ஏறத்தாழ நிறைவடைந்து விட்டன. 234 தொகுதிகளுக்கு திமுகவின் சார்பில் மட்டும் 15000 க்கும் மேற்பட்ட விருப்ப அணுக்கள் வந்துள்ளன. மிகப் பெரிய அளவிலான தேர்தல் சிறப்பு மாநாடு, வரும் திங்கள் கிழமை திருச்சிக்கு அருகில் நடைபெற இருக்கிறது!

என் டி ஏ கூட்டணி என்று அழைக்கப்படும் அந்தக் கூட்டணியில், இன்னும் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தொடங்கப்படவே இல்லை! அதிமுகவா, பாஜகவா - தலைமை தாங்கப் போகிற கட்சி எது என்பதைக் கூட உறுதியாய்ச் சொல்ல முடியவில்லை!

அதிமுக தான் தமிழ்நாட்டில் பெரிய கட்சி என்பது வெளிப்படை. ஆனால் மாநாட்டில் பெரியார் படத்தை நீக்கிவிட்டுத் தாமரை படத்தை வைக்கும் அதிகாரம் பாஜக கையில்தான் இருக்கிறது. அதிமுக கைகட்டி வேடிக்கைதான் பார்க்கிறது! அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களையாவது வைத்துக் கொள்ள அனுமதித்திருக்கிறார்களே என்று ஆனந்தம் அடைகிறது!

தான் பேசிய எல்லா கூட்டங்களிலும், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு தருகிறோம் என்று விஜய் கூவிக் கூவி அழைத்தார்! ஆனால் இன்று வரையில் கூட்டணிக்கு ஒரு கட்சியும் வரவில்லை!

இன்னும் சில நாள்களில் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு வரவிருக்கும் சூழலில், திமுகவின் வெற்றிப் பயணம் தொடங்கி விட்டது என்றே தெரிகிறது!

நேற்று சென்னையில், மீண்டும் வெல்வோம், மீண்டும் மீண்டும் வெல்வோம் என்று சூளுரைத்திருக்கிறார் கழகத்தின் தலைவர் !

ஓங்கி ஒலித்த அவர் குரல், காற்றின் அலைகளில் கலந்து, நாடெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!

- சுப.வீரபாண்டியன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.