ஆட்சி நிர்வாகத்தில், அடக்குமுறைகளில், அள்ளிவிடும் பொய்கள் மற்றும் அவதூறுகளில், அப்படியே இன்னொரு பாஜக அல்லது ஆர் .எஸ்.எஸ் ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறதோ என்கிற அச்சம் நாட்டைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது!
அங்கே பிரதமர் மோடி அதிகம் பேசுவதில்லை. ஊடகங்களைச் சந்திப்பதில்லை! திட்டமிடுவது, பேசுவது எல்லாம் அமித் ஷாதான்!
அதே பாணிதான் இங்கும் பின்பற்றப்படுகிறது. முதலமைச்சர் விஜய் அதிகம் பேசுவதில்லை. ஊடகங்களைச் சந்திப்பதில்லை. ஆனால் அவருக்கும் சேர்த்து ஆதவ் அர்ஜுனா எல்லாவற்றையும் பேசுகிறார். அல்லது ஆர் .எஸ்.எஸ் காரரான நிர்மல் குமார் அளந்து விடுகிறார்!
குதிரை பேரம் நடத்திச் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதிலும், அது பாஜகவின் முறையைத்தான் தவெகவும் பின்பற்றுகிறது!
நாளுக்கு நாள் அடக்கு முறையும் கூடிக் கொண்டே போகிறது!
இன்று காலையிலிருந்து, எல்லா ஊடகங்களிலும் திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது தான் தலைப்புச் செய்தி!
எதற்காகக் கைது செய்யப்பட்டார் ? முதலமைச்சரை ஒருமையில் பேசி விட்டாராம்! தேர்தலுக்கு முன்னால் நடந்த பரப்புரைக் கூட்டங்களில் ஆதவ் அர்ஜுனா அன்றைய முதலமைச்சர், நம் தலைவரை எவ்வளவு தரக்குறைவாகப் பேசினார்! முட்டாள் முதலமைச்சர் என்னும் அளவுக்குக் கீழ்த்தரமாகப் பேசிய அந்த உரைகளை நாடு ஒரு நாளும் மறக்காது!
ஆனால் கைது செய்யப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன், தன்னை தவெக வில் சேரும்படி கட்டாயப்படுத்தினார்கள் என்கிறார். அதை மறுத்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், அனிதாவைப் போன்ற ரவுடிகளை எல்லாம் நாங்கள் எங்கள் கட்சியில் கெஞ்சினாலும் சேர்க்க மாட்டோம் என்று திமிராக விடை சொல்கிறார். ஒரு சட்டமன்ற உறுப்பினரை ரவுடி என்று சொல்வது எந்த விதத்தில் நாகரிகம் ?
மறுபடியும் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த 1991- 96 காலகட்டத்தை நோக்கி நாடு கடந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது!
- சுப.வீரபாண்டியன்