உலக சமாதானத்திற்கான நோபல் பரிசைத் தனக்கே வழங்க வேண்டும் என்று வலியவலிய கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருந்தவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதற்கு அவர் சொன்ன காரணம், நடக்க இருந்த ஏழு போர்களை "கூடுதல் வரிவிதிப்பேன்" என்று 'மிரட்டி' தடுத்து விட்டாராம். மிரட்டலுக்குப் பொருள் அமைதி என்பது அவரின் அகராதி போலும்.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹெகனில் நடந்த ஐரோப்பிய அரசியல் தலைவர்கள் மாநாட்டில், அல்பேனியாவுக்கும் - அஜர்பைஜானுக்கும் இடையில் நடைபெற்ற போரைத் தடுத்து நிறுத்தியதாகச் சொன்ன டொனால்ட் ட்ரம்பை "நடக்காதபோரை தடுத்து நிறுத்த டொனால்ட் ட்ரம்பால் மட்டும்தான் முடியும்" என்று அல்பேனியாவின் பிரதமர் எடிர்மாவே கிண்டலடித்துள்ளார்.us iran warகனடாவை 51 ஆவது மாநிலமாக இணைப்பேன் என்றும், கிரீன்லேண்டை அமெரிக்காவுடன் சேர்த்துவிடுவேன் என்றும் மிரட்டிப்பார்த்த ட்ரம்ப், வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி  நியூயார்க்கில் விசாரணையை எதிர்கொள்ள அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்தார் என்பதெல்லாம் அவர் 'கேட்ட' நோபல் பரிசுக்கு அளவுகோலோ என்னவோ தெரியாது, ஆனால் இப்பொழுது வளைகுடாவில் பற்றி எரியும் நெருப்புக்கும், பதற்றத்திற்கும் அவரே முழுக்காரணமாவார்.

அணு ஆயுதங்கள் உருவாக்கத் தேவையான செரிவூட்டப்பட்ட யுரேனியம் ஈரானிடம் இருப்பதாகவும், அது அமெரிக்காவுக்குப் பெரும் ஆபத்தாக இருப்பதாகவும் சொல்லி, இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் தலைநகர் டெஹ்ரானைத் தாக்கியது அமெரிக்கா-இஸ்ரேல். இதில் ஈரானின் உயர்நிலைத் தலைவர் அயத்துல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதால், டெல்அவிவ், ஜோர்டான் உள்ளிட்ட இஸ்ரேலின் பகுதிகளையும், வளைகுடா நாடுகளின் பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் உள்ளிட்ட நாடுகளின் அமெரிக்க ராணுவ தளங்களையும் தாக்கிப் பெரும் பேரழிவையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது ஈரான்.

ஒரு கேள்வி! ஈரானிடம் மட்டும்தான் யுரேனியம், அணு ஆயுதங்கள் இருக்கின்றனவா? பிறநாடுகளிடம் இல்லை என்று சொல்ல முடியுமா? வடகொரியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலும் இருக்கின்றன. அதனால் ஈரானை அமெரிக்கா குறி வைப்பது அணு ஆயுதம் என்பதற்காக அல்ல, மாறாக அங்குள்ள எண்ணெய்க் கிணறுகளே அமெரிக்காவின் கண்களை உறுத்துகிறது.

வெனிசுலா, சவூதி அரேபியாவுக்கு அடுத்த இடத்தில், அதாவது உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள எண்ணெய் வயல்கள் உள்ள பெரிய நாடு ஈரான். ஏறத்தாழ 208 பில்லியன் பீப்பாய்கள் கொண்ட கச்சா எண்ணெயைக்கையிருப்பில் வைத்துள்ளது. மத்திய கிழக்கின் எண்ணெய் இருப்பில் கால் பகுதியையும், உலக இருப்பில் 12% க்கும் அதிகமாகவும் கொண்டுள்ளது. நாளொன்றுக்கு 3.3 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்கிறது ஈரான். இந்த எண்ணெய் வளங்களைத் தன்மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கம், ட்ரம்பின் போர்வெறி.

எண்ணெய் கொண்டு செல்லும் கடல்வழி பாதையான ஹார்மோஸ் நீரிணையை மூடிவிட்டது ஈரான். விளைவு? கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 100 டாலருக்குமேலே உயரும். போக்குவரத்து பெரும்பாதிப்புக்கு உள்ளாகும், தொழில்கள் பாதிக்கப்படும், பொருள்களின் விலைவாசி  மடமடவென உயரும் அபாயங்கள் இருக்கின்றன.

அனைத்தையும் விட மூன்றாம் உலகப்போருக்கு இது வழிவகுத்துவிடும் அபாயமும் இல்லாமல் இல்லை.

உலகமக்கள் அமைதியாக வாழ வேண்டும்.

போரில்லா உலகம் வேண்டும். அதற்குத் தடையாக அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்பும், இஸ்ரேலின் நெதன்யாகுவும் இருந்து கொண்டு ஆதிக்கம் செய்வது கண்டனத்திற்கு உரியது.

உலக நாடுகளும், ஐக்கிய நாடுகள் அவையும் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்காவின் போரை நிறுத்தி அமைதி காணத் தேவையான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பது, இன்றையக் கட்டாயத் தேவை.

"புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்" - புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்!

- எழில்.இளங்கோவன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.