திருவள்ளுவரிடம் எவ்வளவு தெளிவும், தொலைநோக்குப் பார்வையும் இருந்திருக்கின்றன என்பதற்கு, "கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல்" என்னும் குறளே சான்றாக உள்ளது! உண்மையான நண்பர்கள் யார் என்பதை நமக்குத் துன்பம் வரும் போதுதான் அறிந்து கொள்ள முடியும் என்கிறார் வள்ளுவர்! எனவே துன்பத்திலும் ஒரு நன்மை உள்ளது என்பது அதன் உட்பொருள்!
நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள், திமுகவிற்கு ஒரு துன்பத்தைக் கொண்டு வந்திருக்கின்றன என்பது உண்மைதான்! ஆனால் அந்த கேட்டினும் ஒரு நன்மை இருக்கிறது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது!
தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே காங்கிரஸ் கட்சி நம்மை விட்டுப் போய்விட்டது! 28 இடங்களில் போட்டியிட்டு, ஐந்து இடங்களில் வென்ற காங்கிரஸ், இப்போது அமைச்சரவையில் இரண்டு இடங்களையும், மாநிலங்களவையில் ஓர் இடத்தையும் பெற்று உள்ளது!
இடதுசாரிகள், சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் நம்மிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றார்கள் என்றாலும், அவர்களின் நிலைப்பாட்டிலும் இப்போது சில வேறுபாடுகள் தெரிகின்றன!
இந்திய பொதுவுடமைக் கட்சி (சிபிஐ) யினர், வெளிப்படையாகவே நாங்கள் திமுக கூட்டணியில் தொடரவில்லை என்று கூறிவிட்டனர்!
மதிமுக வின் நிலை பெரும் ஊசலாட்டத்தில் இருப்பதை அறிய முடிகிறது! துரதிருஷ்டவசமாக உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டியதாகி விட்டது என்கிறார் துரை வைகோ! இதற்கும் ஒரு படி மேலே போய், திமுக ஒரு நச்சுப் பாம்பு என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டார் மதிமுகவின் அவைத் தலைவர் அர்ஜுன்ராஜ்!
அற்ற குளத்து அறுநீர்ப் பறவைகள் என்பதுதானே பழந்தமிழ்ப் பாட்டு!
இந்தச் சூழ்நிலைகளை வைத்து, திமுக பலவீனம் ஆகிவிட்டது என்று சில விமர்சனங்களை, திமுக பலவீனம் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்ட சிலர் உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்!
இந்தத் தருணத்தில், திமுகவினர், திமுகவின் மீது ஆழ்ந்த பற்றுடையவர்கள் அனைவரும் உறுதியாக ஒன்றைப் புரிந்து நம்பலாம்!
திமுக பலவீனம் அடையவில்லை.... உண்மையில் இப்போதுதான், முன்னெப்போதைக் காட்டிலும் கூடுதலாகப் பலம் பெற்று இருக்கிறது!
- சுப.வீரபாண்டியன்