தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நிலைப்பாடு

1. தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கூட்டணி பேரங்கள், தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர் தேர்வுகள், பரப்புரைக் கூட்டங்கள், தேர்தல் வாக்குறுதி அறிக்கைகள் என்று நாடே களைகட்டி நிற்கிறது. தமிழ்த் தேசிய விடுதலைக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடி வரும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் “வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்” என்ற குறள்நெறிப்படி இத்தேர்தல் குறித்து தன் நிலைப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும்.

2. நாம் தேர்தல் என்ற குடியாட்சிய வடிவத்தை விரும்பி ஏற்றுக் கொள்கிறோம். வாக்குரிமை என்பது அடிப்படையான குடியியல் உரிமைகளில் ஒன்று. வயது வந்தோர் அனைவர்க்கும் வாக்குரிமை என்பதற்காக உலகில் பல தேசங்களும் நீண்ட நெடுங்காலம் போராடியிருப்பதை நாம் மனங்கொள்கிறோம். தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவுமான உரிமை இல்லையேல் குடியாட்சிய உரிமை பொருளற்றதாகி விடும்.

3. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சந்திக்கும் முதல் தேர்தலன்று இது. நாம் பொதுவாகத் தேர்தலில் போட்டியிடவோ வாக்குக் கேட்கவோ இல்லை என்றாலும், நாம் புறக்கணிப்புவாதிகள் அல்லோம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். மூலவுத்தி நோக்கில் தேசிய விடுதலைக் குறிக்கோளை அடைய இப்போதுள்ள வடிவில் இந்தியத் தேர்தல் முறை உதவாது என்பது தமிழ்க் குமுகத்தின் வரலாற்றுப் பட்டறிவு ஆகும்.

4. நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த வரை எவ்வளவு முயன்றாலும் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் பத்திலொரு பங்குக்கும் குறைவாகவே தமிழ் மக்களால் பெற முடியும். ஒடுக்குண்ட தேசங்களின் அடிமைமுறியாக இருக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நாம் விரும்புகிற எந்த் திருத்தத்தையும் கொண்டுவர நூறாண்டு ஆனாலும் வழியே இல்லை.

5. சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்த வரை சட்டப் பேரவை என்பது இறைமையற்றது. அதனால் தன்னுரிமையோடு ஒரே ஒரு சட்டம் கூட இயற்ற முடியாது. மாநில அரசு என்பது அரசே அன்று. அது இந்திய அரசின் முகமை நிறுவனமாக மட்டுமே இருக்க முடியும். சொல்லளவிலும் செயலளவிலும் இது மெய்ப்பிக்கப்பட்ட உண்மையாகும். தனித்தோ ஒத்த நோக்குள்ள இயக்கங்களுடன் கூட்டாகவோ சட்டப் பேரவைத் தேர்தலில் பங்கேற்று மாநில அரசைக் கைப்பற்றி விடுதலைக் குறிக்கோளை அடையவோ அந்தத் திசையில் முன்னேறிச் செல்லவோ கோட்பாட்டளவில் கூட வாய்ப்பில்லை. ஆகவே ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற நிலையில் மூலவுத்தி நோக்கில் இப்போதைய இந்தியத் தேர்தல் முறையில் முனைப்புடன் பங்குபற்றும் வாய்ப்பே நமக்கில்லை. குடியாட்சிய நோக்கிலும் தமிழ்த் தேசிய நோக்கிலும் தேர்தல் முறையில் உரிய மாற்றங்கள் ஏற்பட்டு நம் நோக்கங்களுக்கு அதில் பங்குபற்றும் வாய்ப்பு அமையுமானால் நம் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளத் தடையில்லை.

6. ஆகவே, மூலவுத்தி வகையில் இந்தியத் தேர்தல் முறையில் பங்குபற்றும் வாய்ப்பில்லாதவர்களாக நாம் இருந்த போதும் குறுவுத்தி வகையில் தேர்தல் அரசியலில் இடையீடு செய்வதில் நமக்குத் தயக்கமில்லை. இந்த அடிப்படையில்தான் ஈழத்தில் இந்தியாவும் சிங்களமும் ஏவிய தமிழினவழிப்புப் போரின் பகைப்புலத்தில், ”இந்தியாவே, போரை நிறுத்து!” என்ற முழக்கத்தின் தொடர்ச்சியாக 2009 பொதுத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்ளத் தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து முடிவெடுத்துச் செயல்பட்டோம்.

7. இப்போது வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் பாசிச பாரதிய சனதாக் கட்சி தமிழகத்தில் கால் பதிக்க முயன்று வரும் பகைப்புலத்தில் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, ”பாசிச பாசகவை வீழ்த்துவோம்” என்ற முழக்கத்துடன் ஒருங்கிணைந்துள்ள அமைப்புகள் சார்பில் பாசகவை எதிர்த்து வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க முடிவெடுத்துள்ளோம்.

8. மற்றத் தொகுதிகளைப் பொறுத்த வரை பாசக ஆதரவுக் கட்சிகளையும் தோற்கடிக்குமாறு அழைப்பு விடலாமா? என்று கருதிப் பார்த்தால், பெரும்பான்மைத் தொகுதிகளில் இப்படிச் செய்வது புறநோக்கில் திமுகவை ஆளும்கட்சியாக்குவதற்கு அளிக்கும் ஆதரவாக அமைந்து, மாநில ஆட்சியால் பயனில்லை என்ற நம் மூலவுத்தி நோக்கிற்கு முரணாக அமைந்து விடும். திமுக அதிமுக இரண்டுமல்லாத எந்தக் கட்சிக்கும் இந்தத் தேர்தல் முடிவில் தாக்கமுண்டாக்கும் வலிமை இல்லை என்றே கணிக்கிறோம்.

9. தனித்தோ தோழமை அமைப்புகளோடு சேர்ந்தோ நாமே போட்டியிட்டு பாசக கூட்டணியைத் தோற்கடிக்கலாம், பிறகு இறைமையற்ற ஆட்சியமைக்க மறுத்துப் பதவி விலகலாம் என்பதும் கூட கோட்பாட்டளவில் ஓர் உத்திதான். ஆனால் அதற்கான வலிமை இப்போதுள்ள நிலையில் நமக்கு இல்லை. போராட்ட வலிமையின் அடிப்படையில்தான் இவ்வாறான உத்திகளை நாம் வகுக்கவும் செயலாக்கவும் முடியும். பாசகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதும், அதற்கு எதிராகப் போட்டியிடும் யாருக்கும் வாக்களிக்குமாறு கேட்காமல் விடுவதும் ஒரு முரண்பாடுதான். இந்த முரண்பாட்டை ஏட்டளவில் தீர்க்க முடியாது. நடைமுறை வாழ்க்கையில்தான் தீர்க்க முடியும். போராடும் ஆற்றல்களின் வலிமை பெருகுவதுதான், அதற்காக உழைப்பதுதான் தீர்வுக்கு வழி.

10. அனைத்திந்திய அளவிலான உழவர் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் கூட வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்காமலே பாசகவைத் தோற்கடிக்குமாறு அழைப்பு விடுத்திருப்பது நம் நிலைப்பாட்டுக்கு வலுச் சேர்ப்பதாக உள்ளது.

11. இறைமையற்ற மாநில ஆட்சியாக இருந்தாலும் இந்திய பாசக அரசின் மக்கள்பகைச் சட்டங்களையும் அடக்குமுறை நடவடிக்கைகளையும் எதிர்த்து மக்கள் பக்கம் நிற்க வேண்டும் என்ற பரப்புரையை நாம் மேற்கொள்ளலாம். இது இப்போதைய ஆட்சியாளர்கள் பற்றி மட்டுமல்லாமல் இந்திய அரசமைப்பு பற்றியும் மக்களிடையே விழிப்புண்டாக்கப் பயன்படும்.

- தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

Pin It