"கடைவிரித்தேன்- பொருள், கொள்வோர் இல்லையே... கலக்கம் வராதோ, தோழி", என்று அன்றே ஒருபாடல் எழுதினார் கவியரசர் கண்ணதாசன். இன்று நடிகர் விஜய் 'கடைவிரித்த கட்சிக்கு' அது மிகக் கச்சிதமாகப் பொருந்திவிட்டது.
வாருங்கள் கூட்டணிக்கு! ஆட்சியில் பங்கு தருகிறேன், தொகுதிகளையும் நிறையத் தருகிறேன் என்று பனையூர் பங்களாவுக்குள் 'தவெக' கட்சி, என்ற கடையை விரித்த விஜய்க்கு மற்ற கட்சிகள் டாட்டா காண்பித்தன, தாங்கிரஸால் 04-03-2026 அன்று பட்டை நாமத்தைச் சாத்த வைத்து, நடிகரின் கடையை மூட வைத்தார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.
"ஓம் சக்தி... பராசக்தி... திமுக தீயசக்தி" யாம். தஞ்சை, சிங்கிப் பட்டியில் இப்படிச் சிங்கியடித்துப் பேசியிருக்கிறார் அந்த மகா நடிகர்.
"ஓம்சக்தி... 'ஜனநாயகன்' சக்தி, ஈரோட்டில் நாற்பது உயிர், பனையூருக்கு ஓடிய தீய சக்தி" - யார் என்று மக்களுக்குத் தெரியாதா?
கட்சி ஆரம்பித்தால் அரசியல் பேசவேண்டும். மக்கள் குறித்து, வளர்ச்சி குறித்துப் பேசவேண்டும். அதுவும் நாகரீகமாகப் பேசவேண்டும். இப்படி எதுவும் இல்லாத ஒரு தலைவராகிய நடிகரை நாடும் மதிக்காது மக்களுக்கான 'நடுவர்மன்றமும்' மன்னிக்காது.
ஒரு தலைவனுக்குத் தலைமைப் பண்பு வேண்டும். ரசிகர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். விஜய் கூட்டம் போடுகிறார் என்றால், ஐயோ என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பதறுகிறார்கள் மக்கள். தஞ்சாவூர் கூட்டத்தில் கூட விபத்தில் சிக்கினர் விஜய் ரசிகர்கள் என்று செய்தி வருகிறதே!
நடிகர் தவெக விஜய் முதலில் அவரைச் சரிசெய்து கொள்ளட்டும். கட்சியைச் சரிசெய்து கொண்டு, ரசிகர்களைக் கட்டுப்படுத்தி அவர்களையும் சரிசெய்து கொண்டு, பகுதிநேர அரசியல்வாதியாக இல்லாமல் இருக்கப் பயிற்சி எடுக்க வேண்டும். பக்குவப்படாத வரை அவர் ஓர் அரசியல்வாதியாக இருக்க முடியாது!
- கருஞ்சட்டைத் தமிழர்