மணிப்பூரில் பிஜேபி திட்டமிட்டு தூண்டி விட்டிருக்கும் வன்முறையால் அந்த மாநிலமே கலவர பூமியாக மாறியிருக்கின்றது. பெரும்பான்மை மெய்தெய் சாதி இந்துக்களை வழக்கம் போல பழங்குடியின மக்களுக்கு எதிராக கொம்பு சீவிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றது.

மணிப்பூரின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே சுமார் 30 முதல் 35 லட்சம் வரைதான் இருக்கும். மாநிலத்தில் பெரும்பான்மை மெய்தெய் மக்கள் 64 சதவீதம் பேர் இருக்கின்றனர். ஆனால் இவர்கள் தங்களை சாதி இந்துக்களாக சொல்லிக் கொள்பவர்கள்.

மீதி இருக்கும் நாகா மற்றும் குக்கி மக்களே உண்மையான பழங்குடியின மக்கள் ஆவார்கள். அவர்களில் பெரும்பான்மையான மக்கள் கிருஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள்.

அரசியல் களத்திலும் மெய்தெய் மக்களின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கின்றது. சட்டமன்ற உறுப்பினர்களில் 60 பேரில் 40 பேர் மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மீதமுள்ள 20 பேர் நாகா மற்றும் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.manipur violence 431இதுவரை, மணிப்பூரின் முதலமைச்சர்களாக பதவி வகித்த 12 பேரில், இருவர் மட்டுமே பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள்.

தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையின் மூல காரணம் பழங்குடியின மக்களாக இல்லாமல் இருக்கும் மெய்தெய் மக்கள், தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனப் போராடுவதாகும்.

இது தொடர்பாக மெய்தெய் சமூகத்தினர் மணிப்பூர் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில், வழக்கை விசாரித்த மணிப்பூர் உயர்நீதி மன்றம் ஏப்ரல் 19 அன்று தனது உத்தரவில் மெய்தெய் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் இட ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் இந்த உத்திரவை எதிர்த்து சுராசந்த்பூர் மாவட்டத்தின் டோர்பாங்கில் கடந்த 3-ம் தேதி அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம் சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

மேலும் மாநிலத்தில் உள்ள சேனாபதி, உக்ருல், காங்போக்பி, தமெங்லாங், சண்டேல் மற்றும் தெங்னௌபால் பகுதிகளிலும் பேரணிகள் நடத்தப்பட்டன.

இந்தப் பேரணிகளின் போது பழங்குடியின மக்களுக்கும் பெரும்பான்மை மெய்தெய் சமூகத்திற்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் இதுவரை ஏறக்குறைய 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மெய்தெய் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற பழங்குடியின மக்கள் கோரிக்கை நியாயமானதாகும். இதனால் இட ஒதுக்கீடு பறிபோவதுடன் அவர்களின் பூர்வீக நிலமும் சாதி இந்துக்களால் கையகப்படுத்தப்படும் நிலை ஏற்படும்.

காரணம் எண்ணிக்கையில் 64 சதவீதம் இருக்கும் மெய்தெய் மக்களிடம் 10 சதவீத நிலங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் ஏறக்குறைய 30 சதவீதம் உள்ள பழங்குடியின மக்களிடம் 90 சதவீத நிலங்கள் உள்ளன.

தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற மெய்தெய் மக்களின் கோரிக்கைக்குப் பின்னால் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக வனங்களில் இருந்து விரட்டி அடித்துவிட்டு, அவர்களின் நிலங்களைக் கொள்ளையிடும் மறைமுகத் திட்டம் இருக்கின்றது.

மெய்தெய் சமூகத்தினர் நீண்ட காலமாக பழங்குடியினர் அந்தஸ்து கோரி வந்தாலும், அவர்கள் வரலாற்றுப் பூர்வமாக ஒருகாலத்திலும் மலைப்பகுதிகளில் வசிக்கவில்லை. அவர்கள் இன்றும் சமவெளிப் பகுதிகளில்தான் வாழ்கின்றனர். பழங்குடியின மக்களின் பண்பாடும் இவர்களின் பண்பாடும் முற்றிலும் வேறுபட்டதாகும்.

இதை எல்லாம் நன்றாகத் தெரிந்திருந்தும் பெரும்பான்மை மெய்தெய் சமூகத்தின் ஓட்டுக்களைப் பெற பிஜேபி திட்டமிட்டு நாடகமாடி வருகின்றது. வழக்கம் போல பிஜேபியின் இந்த கீழ்த்தரமான அரசியலுக்கு நீதிமன்றமும் துணைபோய் இருக்கின்றது. இல்லை என்றால் மெய்தெய் மக்களின் இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டிருக்காது.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக 550க்கும் மேற்பட்ட சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் தனிநபர்கள் மோடியின் கள்ள மெளனத்தைக் கண்டித்து கடிதம் எழுதி இருக்கின்றார்கள்.

மணிப்பூர் வன்முறையின் காரணமாக மட்டும் 300க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் 50000க்கும் மேற்பட்ட மக்கள் தஞ்சம் அடைந்து இருக்கின்றார்கள். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

மத்தியிலும் மாநிலத்திலும் பிஜேபியே ஆட்சியில் இருப்பதால் அவர்களால் எளிதாக பிரித்தாளும் அரசியலை மணிப்பூரில் செய்ய முடிகின்றது. ஒரு பெரும் உள்நாட்டுப் போரை பிஜேபி மணிப்பூரில் தொடங்கி வைத்திருக்கின்றது என்றால் அது மிகையாகாது.

மேலும் 1970களில் இருந்து பல்வேறு அரசியல் பொருளாதாரக் காரணங்களால் மியான்மர் போன்ற அண்டை நாடுகளில் இருந்து மணிப்பூரில் குடியேறியவர்களை வனப்பகுதியில் இருந்து விரட்டுகின்றோம் என்ற போர்வையில், பழங்குடியின மக்களை எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை வெளியேற்றும் அயோக்கியத்தனத்தில் பிஜேபி அரசு ஈடுபட்டு வருகின்றது.

அஸ்ஸாம் என்ஆர்சி பயிற்சியின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அசாம் முதல்வரும் சிறுபான்மை சமூகத்தை எல்லாம் சட்டவிரோதமானது எனக் குறிப்பிட்டுப் பேசியதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. வடகிழக்கு மாநிலங்களில் திட்டமிட்டே ஒரு உள்நாட்டு போரைப் கட்டவிழ்த்துவிட சங்கி கும்பல் வெளிப்படையாக வேலை பார்த்து வருகின்றது.

சிறுபான்மையின மக்கள் எவ்வளவுதான் பிஜேபிக்கு விசுவாசமாக இருந்தாலும், சங்கிகளின் ஒரே நோக்கம் அந்த விசுவாசத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுவதுதான்.

2022 சட்டமன்றத் தேர்தலின் போது குக்கி ஆயுதக் குழுக்கள் பிஜேபிக்கே வாக்கு கேட்டன என்பதும், மணிப்பூர் சட்டமன்றத்தில் உள்ள பத்து குக்கி எம்எல்ஏக்களில் ஏழு பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதையும் பார்க்கும் போது, பாஜகவினர் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தற்போது வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்கள். இதுவரை பள்ளிகள், தானியக் களஞ்சியங்கள் மற்றும் வீடுகள் ஆகியவற்றுடன் சேர்ந்து 200க்கும் மேற்பட்ட குக்கி மக்களின் தேவாலயங்களும் எரிக்கப்பட்டிருக்கின்றன.

அப்படியும் ஆத்திரம் அடங்காத மெய்தெய் பெரும்பான்மை இந்துக்கள் மணிப்பூர் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையைக் கொண்டுவர வேண்டும் என்றும், மியான்மரில் இருந்து வந்து குடியேறிய குக்கி இன வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும் எனவும் புதிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதுதான் அவர்களின் உண்மையான நோக்கம். தேசிய குடிமக்கள் பதிவேட்டை தீவிரமாக நடைமுறைப் படுத்துவதன் மூலம் பழங்குடியின மக்களை  ‘வந்தேறிகள்’, ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று முத்திரை குத்தி மலைகளில் இருந்து அவர்களை வெளியேற்றிவிட்டு, அவர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பது.

பெரும்பாலான பழங்குடியின மக்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுவதால் பெரும்பான்மை மெய்தெய் இந்து மக்களை பழங்குடியின மக்களுக்கு எதிராக கொம்பு சீவிவிட்டு அவர்களை ஒழித்துக்கட்டும் கீழ்த்தரமான மதவெறி அரசியலை முன்னெடுப்பது பிஜேபிக்கு எளிமையாக உள்ளது.

இதுவரை மோடி மணிப்பூர் பிரச்சினையைப் பற்றி வாயே திறக்கவில்லை. அதுமட்டுமல்ல மணிப்பூரைச் சேர்ந்த 10 எதிர்க்கட்சிகள் மோடியைச் சந்திக்க வாய்ப்பு கேட்டும் அனுமதி கொடுக்கப்படவில்லை.

மணிப்பூரில் தினம் தினம் அரங்கேற்றப்படும் படுகொலைகளை ரசித்துப் பார்க்கும் ஒருவரால்தான் இப்படி இருக்க முடியும். மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் பெரும்பான்மை மெய்தெய் மக்களின் சார்பாக நின்று பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை நடத்திக் கொண்டு இருக்கின்றார்.

வட கிழக்கு மாநிலங்களில் மிகத் தீவிரமாக தனிநாடு கேட்ட போராடிய வீரமிக்க ஒரு மாநிலத்தை இன்று தனது கேவலமான பிரிவினைவாத அரசியலால் பிஜேபி நெருப்புக் காடாக மாற்றி இருக்கின்றது.

மணிப்பூரில் சில பகுதிகளில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் நீக்கப்பட்டதாக பிஜேபி நாடகமாடினாலும், இன்று அங்கு நடக்கும் கொலைவெறித் தாக்குதல்களைப் பார்க்கும் போது இந்து மதவெறி ஊட்டப் பெற்ற சங்கிகளின் தாக்குதல், இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு கொஞ்சமும் சளைத்தல்ல என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

2024 பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தனது கேடுகெட்ட நச்சுப் பரப்புரையை மிக வீச்சாக சங்கி கும்பல் எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றது. அவர்கள் எந்த விலை கொடுத்தேனும் ஆட்சியை கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மனித உயிர்களைத் தின்று அதிகாரத்தை அடையத் துடிக்கும் கொடிய மிருகங்களை மக்கள் அடையாளம் கண்டு விரட்டி அடிக்கவில்லை என்றால் ஒருநாள் அது ஒட்டுமொத்த மக்களையும் தின்று செரித்து விடும்.

- செ.கார்கி

Pin It