மணிப்பூர் தனி மாநிலமாக 21.1.1972-இல் உதயமானது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மணிப்பூர் மக்கள் தொகை

இந்துக்கள் 41.39 விழுக்காடு

இசுலாமியர்கள் 8.40 விழுக்காடு

கிறித்துவர்கள் 41.29 விழுக்காடு

சீக்கியர்கள் 0.05 விழுக்காடு.

மணிப்பூரின் தலைநகரம் இம்பால். அதை ஒட்டிய சமவெளிப் பகுதிகளில் ‘மெய்த்தேயி’’ (Meitei) இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 53 விழுக்காடு உள்ளனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருட்டிணரை வழிபடுபவர்கள். வேளாண் மைத் தொழிலே முதன்மையான தொழிலாகக் கொண்டவர்கள். பழங்குடி மக்களைக் காட்டிலும் வளமாக உள்ளவர்கள். இவர்களே ஆட்சியதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்துவோராக உள்ளனர். 1992-இல் மண்டல் ஆணையத்தின் பரிந்துரை நடை முறைக்கு வந்த பிறகு இவர்கள் இதரப் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை அறுபது பேர். இதில் மெய்த் தேயி இனத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் நாற்பது பேர்.

மணிப்பூர் மாநிலத்தின் மலைப் பகுதிகளில் முப்பத்து நான்கு வகையான மலைவாழ் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இதில் முதன்மையானவர்கள் குக்கி-சோமி (Kukki-Zomi) நாகா இனத்தவர் ஆவர்.

இவர்கள் மலைகளிலும், காடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். மணிப்பூர் மக்கள் தொகையில் இவர்கள் 40.88 விழுக்காடு ஆவர். மலைவாழ் பழங்குடியினருக்கான (ST) பிரிவில் இவர்களுக்கு 31 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப் படுகிறது. இவர்களில் பெரும்பான்மையினர் கிறித்தவர்கள் ஆவர்.

வாக்கரசியலில் வெற்றி பெற்று தொடர்ந்து ஆட்சி நடத்துவதற்காகப் பெரும்பான்மை இந்துக்களாக உள்ள மெய்த்தேயி மக்களை மலைவாழ் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக பா.ச.க. ஆசை வார்த்தைகள் கூறிவந்தது.

தற்போது மணிப்பூரில் பா.ச.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. என். பைரோன் சிங் முதல மைச்சராக உள்ளார். அவர் மெய்த்தேயி சமூகத்தைச் சேர்ந்தவர். பா.ச.க.-32, காங்கிரசு-5, ஜெ.டி.யூ.-6, நாகாலாந்து மக்கள் முன்னணி (N.P.F.)-7, மற்றவர்கள் 10 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.

மெய்த்தேயி வகுப்பைச் சார்ந்த சிலர் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்குமாறு வழக்குத் தொடுத்தனர்.

மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி.முரளிதரன் மெய்த்தேயி வகுப்பு மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான பரிந்துரை செய்து நான்கு வாரங்களுக்குள் ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டுமென உத்தர விட்டார்.

இதனால் மலைவாழ் பழங்குடியினரான குக்கி-சோமி, நாகா இன பழங்குடி மக்கள் தங்களுடைய வேலை வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று அச்சமடைந்தனர். மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பழங்குடிகளின் தலைவர் தின்காங்க் லூங்க் காங்க்மேய் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி முரளிதரன், பழங்குடி தலைவர் மீது அவமதிப்பு வழக்குத் தொடுத்து அவரை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த மாநிலக் காவல் துறைத் தலைவருக்கு உத்தரவிட்டார்.

மலைவாழ் பழங்குடியினரின் உரிமையைப் பாது காப்பதற்காக 3.5.2023 அன்று மணிப்பூர் அனைத்துப் பழங்குடிஇட மாணவர் கூட்டமைப்பு (All Tribal Students’ Union Manipur) (ATSUM) சார்பில் மலைவாழ் பழங்குடி யினரின் ஒற்றுமைப் பேரணியை எட்டு மலை மாவட்டங்களில் நடத்தினர். பா.ச.க. ஆட்சியின் ஆதரவோடு மெய்த்தேயி குழுவினர் பழங்குடி மக்கள் மீது மிகப்பெரியத் தாக்குலை நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையில் மிகப்பெரிய வன்முறை மூண்டது.

3.5.2023 அன்று தொடங்கிய வன்முறைப் போராட்டம் இன்று வரை தொடருகிறது. ஏராளமான வீடுகள், தேவால யங்கள், மருத்துவமனைகள் தீக்கிரையாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப் பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் பழங்குடியினரே ஆவர். இலக்கக்கணக் கானவர்கள் தங்கள் உடைமைகளை இழந்து பரிதவித்தனர். வீடிழந்தவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அகதிகள் முகாம்களில் தங்கினர். இராணுவமும், அசாம் ஆயுதப்படையும் வரவழைக்கப்பட்டது. மெய்த்தேயி இன மக்கள் வாழும் சமவெளிப் பகுதியில் பெரும்பான்மையினர் இந்துக்கள், சிறுபான்மையினர் கிறித்தவர்கள். சங்பரிவாரக் கும்பல்கள் அந்த பகுதியில் மட்டும் 247 தேவாலயங்களை அழித்தனர்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தின்காங்க்லுங்க் காங்க்மேய் இரண்டு மேல்முறையீடுகளை உச்சநீதி மன்றத்தில் செய்தார். ஒன்று மெய்த்தேயி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரைக்குத் தடை. இரண்டாவது நீதிமன்ற அவமதிப்புக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் முன் விசாரணைக்கு வந்தது. மேல் முறையீடு செய்த பா.ச.க. சட்டமன்ற உறுப்பினரும் மலைவாழ் பகுதி குழுவின் தலைவருமான தின்காங்க் லுங்க் காங்க்மேய் பா.ச.க. வின் மேலிடம் அழுத்தம் காரணமாகத் திரும்பப் பெற்றார்.

அந்த மேல் முறையீட்டு வழக்குகளை அனைத் திந்திய பழங்குடி மாணவர் சங்கத்தின் தலைவர் பட்டின்தாங் லூபெங் (Paotin thang Lupheng) தொடர்ந்து நடத்தினர்.

7.5.2023 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “எந்த மாநிலத் திற்கும் எவர் எவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதை எடுத்துக்காட்டி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது” என்று தீர்ப்பளித்தார்.

இந்தத் தவறான தீர்ப்புதான் மே மாதம் 3-ஆம் நாள் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு மூலக்காரணமாகும். மணிப்பூர் சட்டப்படி பழங்குடியினர் வாழும் மலைப் பகுதியில் பள்ளத்தாக்கில் வாழும் மெய்த்தேயி இனமக்கள் நிலம் வாங்கமுடியாது. அதனால்தான் நிலம் வாங்கும் உரிமையைப் பெற்று மலைப் பகுதியின் நிலவளங்களைச் சுரண்டுவதற் காகவே இந்துக்களான இவர்கள் பட்டியல் இனப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்கின்றனர்.

பா.ச.க. பற்ற வைத்த தீயில் எண்ணெய் ஊற்றி எரிய வைத்தது மணிப்பூர் உயர்நீதிமன்றம்.

மணிப்பூர் பா.ச.க. அரசின் முதலமைச்சர் பைரோன் சிங் கடந்த ஓராண்டாகவே மணிப்பூர் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்கும் வகையில் காடுகளின் பாதுகாப்புச் சட்டத்தை திருத்தி, மலைவாழ் மக்களின் வாழ்விடங்களில் பல வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்துத் தள்ளினார்.

பழங்குடியினர் கஞ்சா பயிரிடுகின்றனர் என்று கூறி பல இடங்களில் அவர்களின் பயிர்களை அழித்து விரட்டியத்தனர். பழங்குடியினரில் பெரும்பான்மையினர் கிறித்துவர் என்ப தால் பா.ச.க. ஆட்சி இத்தகைய ஒடுக்குமுறைகளில் ஈடுபட்டது. இது பழங்குடியினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு மலை வளங்களை தாரைவார்ப்பதற்காக மணிப்பூர் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதற்குத் தடையாகவும் தங்களின் நீண்டகால வாழ்விடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் மலைவாழ் மக்கள் நீண்டகாலமாக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

மலைவாழ் பகுதியைச் சேர்ந்த பத்து சட்டமன்ற உறுப்பினர்கள் 10.5.2023 அன்று கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் ஏழு பேர் பா.ச.க. சட்ட மன்ற உறுப்பினர்கள்

அந்தக் கூட்டறிக்கையில் இனிமேல் மணிப்பூர் மாநிலத்தின் நிர்வாகத்தின்கீழ் நாங்கள் வாழ விரும்ப வில்லை. எங்களை ஒடுக்குவதிலேயே இந்த அரசு குறியாக இருக்கிறது. எனவே எங்களுக்கு தனி நிர்வாக அமைப்பு (யூனியன் பிரதேசம்) தேவை என்று வலியுறுத்தினர். உள்துறை அமைச்சர் அமித்ஷா அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மலைப்பகுதியில் வாழும் குக்கி, நாகா இனமக்கள் குறிப்பாக கிறித்தவர்கள், மே 3 அன்று நடைபெற்ற தாக்கு தலில் குக்கி இன மக்கள் அதிகமாக வாழும் கராசந்தபூர் பகுதிதான் மிக மோசமான அளவில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அங்குள்ள தேவாலயங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மாநில அரசின் துணையுடன் சங் பரிவாரக் கும்பல்கள்தான் இந்தத் தாக்குதலை மேற்கொண்டது. வழக்கம் போல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இந்த வன்முறைகளுக்குக் காரணம் கிறித்துவ மிஷனரிகள்தான் என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

காங்கிரசு கட்சித் தலைவர் கார்க்கே உள்ளிட்டோர் 30.5.2023 அன்று குடிஅரசுத் தலைவரைச் சந்தித்து மணிப்பூர் கலவரத்தை நீங்கள் தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா வன்முறை நிகழ்ந்த பிறகு பல நாள்கள் கழித்து 29.5.2023 முதல் 1.6.2023 வரை மணிப்பூரில் தங்கியிருந்து பல்வேறு போராளிக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை என்னும் நாடகத்தை நடத்தி முடித்தார். தலைமை அமைச்சர் நரேந்திர மோடி இதைப் பற்றி வாயே திறக்கவில்லை. கலவரத்தை நடத்தி இந்துத்துவா வெறியூட்டி பா.ச.க. ஆட்சியைத் தக்க வைத்து கொள்வதற்காகவே இப்படியெல்லாம் செய்கிறார்கள். யார் செத்தால் அவர்களுக்கு என்ன, அவர்களுக்கு வேண்டியது ஆட்சி.

வாலாசா வல்லவன்

Pin It