மணிப்பூர் என்ற பெயருக்குத் தமிழில் அழகிய நகரம் என்று பொருள். இன்று அந்தப் பொருள் நேர் எதிராக மாறியிருக்கிறது.

குக்கி மற்றும் மொய்தி இவ்விரு இனங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இன, மத மோதலாக மாறி இன்று பற்றி எரிகிறது மணிப்பூர்.

ஏறத்தாழ கடந்த மூன்று மாதங்களாகக் கொலை, கொள்ளை, தீ வைப்பு, பாலியல் கொடுமைகள் அத்துமீறி நடந்துகொண்டு இருந்தபோது அக்கலவரத்தைத் தடுக்கவோ, தணிக்கவோ அம்மாநில பா.ஜ.க அரசும், ஒன்றிய பா.ஜ.க. அரசும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.manipur gang rape incidentமணிப்பூர் பற்றி எரிந்து கொண்டு இருந்தபோது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருந்தார் பிரதமர் மோடி. அதை முடித்துவிட்டு பிரான்ஸ், எகிப்து என்று வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவருக்கு மணிப்பூருக்குப் போக வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.

உள்துறை அமைச்சர் போனால் போகிறது என்று இரண்டு முறை போனார், ஒரு பயனும் இல்லை.

விளைவு ஒரே ஒரு வீடியோ உலக அரங்கில் இந்திய ஒன்றியத்தின் தலையைக் கவிழ்த்து விட்டது.

இருபது வயது, ஐம்பத்து நான்கு வயதுடைய இரண்டு பெண்களைக் கேடுகெட்ட, தரங்கெட்ட கும்பல் ஒன்று பிடித்து, அவர்களை அம்மணமாக சாலையில் நடக்க வைத்து, பார்க்கக் கண்கள் கூசும் காமசேட்டைகள் செய்து, இறுதியில் வயல்வெளியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மாபெரும் கொடுமையை, ஒரு வீடியோ இணையத்தில் வெளிவந்து நாட்டையே அதிர வைத்து விட்டது.

கடந்த மூன்று மாதங்கள், ஒரு காங்கிரஸ் தலைவர் சொல்வது போல 1800 மணி நேரங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல், வாய்மூடி இருந்த மோடியை, 30 வினாடிகள் பேச வைத்துவிட்டது அந்த வீடியோ.

அதுவும் குற்றவாளியைத் தண்டிப்போம் என்று தான் அவர் சொன்னாரே ஒழிய கலவரத்தை அடக்க, அமைதியை நிலை நாட்ட ஒன்றுமே சொல்லவில்லை.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானத்தின் மூலம் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று தி.மு.க அறிவிப்பு கொடுத்தும், அனைத்து எதிர்கட்சிகள் கோரியும் கூட மறுக்கப்பட்டு விட்டது. மோடி இது குறித்து ஓர் அறிக்கை கூட வைக்கவில்லை நாடாளுமன்றத்தில்.

இது குறித்து உச்சநீதிமன்ற எச்சரிக்கை என்ன ஆகும் என்று தெரியவில்லை.

மணிப்பூர் நிகழ்வுகளைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It