தேசிய மக்கள் பதிவேடு, தேசிய குடியுரிமைப் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

மக்கள் தொகை கணக்கெடுப்பில் (census) நாம் சொல்வதை அவர்கள் எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆரிடம் ஒருமுறை மதம் என்னவென்று சென்சசுக்காக கேட்டார்கள்; அவர் ‘திராவிட மதம்’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். இந்து மதம் என்று கூறவில்லை. ஆனால் அப்படி ஒரு மதம் உண்டா என்று கேள்வியெல்லாம் கேட்கக் கூடாது; மக்கள் சொல்வதை எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கென உள்ள கையேடு அப்படித்தான் கூறுகிறது. அதை எழுதிக் கொண்டார்கள். மக்கள் என்ன கூறுகிறார்களோ அதை எழுதிக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர்-யை திராவிட மதம் என்று தான் எழுதினார்கள். அதுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பு.

assam protest against CABஆனால் தற்போது இவர்கள் கொண்டு வரப் போகும் தேசிய மக்கள் பதிவேட்டில் தவறான தகவல்களைக் கூறினால் தண்டனை தரப்படும். உள்ள செய்திகளை மட்டும் கூற வேண்டும். சரி சொல்லி விடுகிறோம், ஆனால் உள்ளூர் அளவில் ஒரு அதிகாரி இருப்பார் அவர், சந்தேகமானவர்களை சந்தேகமானவர் என்று எழுதி வைக்கலாம். அவர்களுக்குத் தான் சிக்கல். அதை இஸ்லாமியர்களுக்கு மட்டும் போடுவார்கள் என்று கூறிவிட முடியாது. குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டுமானால் இஸ்லாமியர்களைப் பிரித்து பார்த்தது என்று சொல்லலாம். ஆனால் தேசிய மக்கள் பதிவேட்டில் அந்தக் கணக்குக் கிடையாது. D என்று எழுதினால் (Doubtful) சிக்கல்தான்.

அதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். ஆவணங்களைக் கொடுப்பது இஸ்லாமியர்கள் மட்டுமா? அனைவரும்தான் கொடுக்க வேண்டும். அதில் சந்தேகம் வந்தால் நமது பிறப்புச் சான்றிதழைக் கேட்கிறார்கள். மோடியே இரண்டு பிறப்புச் சான்றிதழ் வைத்துள்ளார். இரண்டு பிறந்த நாள் அவருக்கு. 12 ஆம் வகுப்புப் படித்த விஸ்நகர், எம்.என். கல்லூரியில் 29.08.1949 இல் பிறந்தவர் என்று சான்றிதழில் உள்ளது. தற்போது பாஜக இணைய தளத்தில் 17.09.1950இல் பிறந்தார் என்று உள்ளது. வேறொருவர் ஆட்சியில் இருந்தால். அவருடைய சான்றிதழ்களைக் காட்டினாலே குடியுரிமை மோடிக்கு இல்லையென்று கூறி விடுவார்கள்.

பிறப்பு, இறப்புப் பதிவு செய்ய வேண்டும் என்ற சட்டமே 1969இல் தான் கொண்டு வரப்பட்டது. அதற்கு பின்னர்தான் பதிவுகள் இருக்கின்றன. 1969இல் சட்டம் வந்ததென்றால் தற்போது 50 வயதிற்குட்பட் டோருக்கு மட்டும்தான் பிறப்புச் சான்றிதழ்கள் இருக்கும். என்னை சந்தேக நபர் என்று குறித்து வைத்தால் என்னுடைய தந்தையின் பிறப்புச் சான்றிதழை நான் எப்படி காட்ட முடியும்? ஒருவரை இந்தியர் என்று காட்ட வேண்டும் அதற்கு தாய் அல்லது தந்தையின் சான்றிதழ் வேண்டும். அதில் ஒரு திருத்தம் காங்கிரசால் கொண்டு வரப்பட்டது பெற்றோரில் ஒருவர். அதற்கு முன் வரை தந்தை சான்றிதழை மட்டுமே காட்ட வேண்டும் என்று இருந்தது.

2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெற்றோரில் ஒருவர் இந்தியர் என்பதற்கான சான்றிதழ் மட்டுமல்ல; மற்றொருவர் சட்டவிரோதமாகக் குடியேறியவர் இல்லை என்பதற்கான ஆதாரத்தையும் காட்டியாக வேண்டும். இந்த சட்டத்தை எதிர்த்து அய்.ஏ.எஸ்அதிகாரிகள் வெளியே வருகிறார்கள். கோபி கண்ணன் கேரளாவைச் சேர்ந்த அதிகாரி தனது பதவியை விட்டு வெளி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த குஜராத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த சசிகாந்த் செந்தில், இந்த சட்டத்தைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று பதவியை விட்டு வெளியே வந்துவிட்டார். இருவரும் இந்துக்கள் என்று சொல்லப்பட்டவர்கள்தான்; இஸ்லாமியர்கள் இல்லை. ஒரு அய்.ஏ.எஸ் அதிகாரியாக நான் இந்த சட்டத்தை நடைமுறைப் படுத்துவதா? அரசினர் இந்த சட்டத்தின் மூலம் மக்களை அசிங்கப் படுத்துகிறார்கள், அவமானப் படுத்துகிறார்கள், அந்நியர்களாக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறி விட்டு பதவியை விட்டு வெளியேறியுள்ளனர்.

எல்லோரும் ஆதாரம் கொடுத்தாக வேண்டும் என்பது தான் சட்டம். D என்று எழுதிய அதிகாரியிடம் சான்றிதழ் கொடுக்க வேண்டும். அவர் சரி பார்த்து 90 நாட்கள் அல்லது தேவையேற்பட்டால் இன்னும் அதிக காலம் எடுத்துக் கொண்டு அவர் அதை பரிசீலித்து உங்களை ஏற்றுக் கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம். ஏற்றுக் கொண்டால் பட்டியலை வெளியிட வேண்டும். அந்த பட்டியலில் உள்ளவர்களை யார் வேண்டுமானால் ஆட்சேபிக்கலாம். அப்படி மற்றொருவர் நமது சான்றிதழ்கள் தவறு என்று கூறி விட்டால் நாம் மீண்டும் மேல் முறையீட்டிற்கு செல்ல வேண்டும். அவரிடம் நாம் 30 நாட்களுக்குள் கூடுதல் ஆதரங்களை, சான்றிதழ்களைக் கொடுக்க வேண்டும். அந்த அதிகாரி ஆலோசித்து 90 நாட்களில் தீர்ப்பு கூறுவார். அதிலும் ஏற்றுக் கொண்டால் சரி. ஏற்றுக் கொள்ளாவிட்டால் மீண்டும் ஒரு மேல் முறையீடு செல்ல வேண்டும்.

சரியான நேரப்படி பார்த்தால் மொத்தம் 300 நாட்கள். எந்த வேலையும் செய்யாமல் நமது குடியுரிமையை நிரூபிக்க செலவழித்தாக வேண்டும். அதுமட்டுமில்லை சான்றிதழ்களின் விலையும் ஏறிக் கொண்டே போகும். இப்போது பிறப்புச் சான்றிதழ் 500 என்றால் 5000 ஆகும். ஏனென்றால் ஈழத்தில் போர் நடைபெற்ற போது குழந்தைப் போராளிகள் என்ற குற்றச்சாட்டைப் புலிகள் மீது கூறினார்கள் உயர்ஜாதிப் பணக்காரர்கள். அந்த ஊர் அரசுப் பிரதிநிதியிடம் சென்று 13 வயது என்று சான்றிதழ் கொடுக்கச் சொன்னார்கள். அதற்கு 50000 வரை பணம் கொடுக்கவும் செய்தார்கள். அய்.நா-வில் எனது குழந்தைகளைப் போராளிகள் ஆக்கி விட்டார்கள் என்று பெரிய ஜாதி பணக்காரர்கள் செய்தார்கள். இதே போல் நாமும் பணம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இப்போது ஒரு ஆய்வு நிறுவனம் கூறியிருக்கிறது, “அசாமில் NRC-ஆல் அரசுக்கு ஆன செலவை விட மக்களுக்கு ஆன செலவு தான் இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது' என்று. 1.600 கோடி அரசுக்கு செலவானது ஆனால் மக்கள் அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக செலவழித்துள்ளனர். ஆறு வருடம் கணக்கெடுக்க எடுத்துக் கொண்டார்கள். 52 ஆயிரம் பேர் இதற்காக வேலை செய்தார்கள். இதற்கு நாம் எவ்வளவு செலவு செய்வது? செலவு மட்டுமல்லாமல் ஓராண்டாக எந்த வேலையும் இல்லாமல் அலைய வேண்டும். அப்படி செய்தாலும் உள்ளூர்காரர்கள் மறுக்கலாம்.

சிறியதாக பொதுக் கூட்டம் நாம் போட்டாலே எதிர்ப்பு மனுவை காவல் துறையிடம் கொடுப்பார்கள். காவல் துறையும் ஏற்றுக் கொண்டு எதிர்ப்பு மனு வந்துள்ளது, கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று நம்மிடம் கூறுவார்கள். நாம் கூறுவதை காவல் துறை கேட்பதில்லை. தற்போது பழனிச்சாமிஜி ஆட்சியில் இதுபோன்றுதான் நடந்து கொண்டிருக்கிறது. இதே போல் ஏதாவது மனு கொடுத்துக் கொண்டிருப்பார்கள்; அந்த மனுவிற்கெல்லாம் நாம் பதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு மட்டுமா கொடுப்பார்கள்? அனைவருக்கும் தான் கொடுப்பார்கள். யார் யாரெல்லாம் அவர்கள் கருத்தை எதிர்ப்பவர்களோ, ஏற்காதவர்களோ அவர்களுக்கு எதிராக மனு கொடுப்பார்கள்.

கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கவுரி லங்கேஷ் இவர்களெல்லாம் இஸ்லாமியர்களா? பிறப்பால் இந்துக்கள் தானே! பகுத்தறிவாளர்கள் என்று வேண்டுமானால் கூறலாம். இவர்களையே கொன்றவர்கள் நமக்கு எதிராக மனுவா கொடுக்க மாட்டார்கள்? நமக்கு எதிராக மனு கொடுப்பார்கள், நாம் அலைந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிக்கல்களை நாம் கவனிக்க வேண்டும்.

1996 ஆம் ஆண்டு தேர்தலின் போதே பாரதிய ஜனதா கட்சியின் தேசியக் குழு போபாலில் கூடியது, அதில் மூன்று தீர்மானங்கள் போடப்பட்டன. அதில், ‘சட்ட விரோதமாக வந்தடைந்தவர்களை கண்டறிய வேண்டும், அவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், பின் அவர்களை நாடு கடத்த வேண்டும், (detection, deletion, deportation) ஆகிய தீர்மானத்தை நிறைவேற்றி 1996ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையாகவே கொடுத்தார்கள். தற்போது கொண்டு வரப்பட்டதல்ல இவை. இப்போது பெரும்பான்மை வந்ததால் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களைவிட பல மடங்கு பெரும்பான்மையினராக இருக்கிறோம். பார்ப்பானும் பார்ப்பன அடிமையும் ஆர்.எஸ்.எஸ்.இல் இருக்கிறான். ஏமாந்த கூட்டமும் இருக்கலாம். ஆனால் உழைக்கும் மக்கள், சூத்திர, பஞ்சமர்கள், இஸ்லாமிய, கிருத்துவர்கள் எண்ணிக்கையில் அவர்களைவிட பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கிறோம் அவர்களின் இந்த சூழ்ச்சிகளை ஏன் முறியடிக்க முடியாது என்பதற்குதான் இந்த போராட்டங்களை நாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சி ஆள்கின்ற மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் மட்டும்தான் துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. வேறு எங்கேயும் துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை. தற்போதுதான் தமிழ்நாட்டில் தடியடி தொடங்கியிருக்கிறது. இங்கே யார் ஆட்சி என்பதை நாம் முடிவு செய்து கொள்ள வேண்டும். நாம் வீறுகொண்டு வீதிக்கு வந்துள்ளோம், போராட வந்துள்ளோம். ஆனால் எதிர்ப்பாளர்களாக இஸ்லாமியர்களை மட்டும்தான் அரசாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்ளும். ஆனால் இதை எதிர்ப்பவர்கள் வீதிக்கு வர முடியமல் இருந்தால் அவர்களை ஆதரவாளர்கள் என்று தான் அரசாங்கம் எடுத்துக் கொள்ளும். எனவே நமது எதிர்ப்பை எந்த வகையிலாவது காட்டுவோம், இப்போது கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள் கையெழுத்து போடுவோம், அரசாங்கத்திற்கு கடிதம் எழுதலாம், நாமெல்லாம் எதிராக இருக்கிறோம் என்பதை சொல்லிக் கொண்டே இருப்போம், ஜனநாயக, உரிமைப் போராட்டங்கள் எப்போதும் தோற்றதில்லை நாமும் வெற்றி பெறுவோம். இந்த ஜனநாயகத்திற்கு புறம்பான, அரசியல் சட்டத்திற்கு புறம்பான ஆட்சியை எதிர்த்து போராடுவோம்.

 மற்றொன்றையும் கூறி விட வேண்டும், தற்போது இரண்டு தீர்ப்புகள் வந்துள்ளன.

ஒரு வழக்கு ஜபேதா பேகம் என்ற இஸ்லாமியப் பெண்ணுடையது. அவரது பான் கார்டு, குடும்ப அட்டை, இரண்டு வங்கிக் கணக்குப் புத்தகங்கள், அவரது அப்பா ஜாபேத் அலியின் NRC பதிவு விவரங்கள், அவரது தாத்தா, பாட்டி, பெற்றோர்கள், கணவர் ஆகியோருடன் இணைந்து அவர் பெயரும் உள்ள வாக்காளர் பட்டியல்கள், நில வரி இரசீதுகள் போன்ற 14 வகை ஆவணங்களைக் காட்டியும் தனது குடியுரிமையை ஏற்காத குடியுரிமைப் பதிவேட்டு ஆணையத்தின் மறுப்பை எதிர்த்து அசாம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அவரது கோரிக்கைகளை மறுத்து அவ்வழக்கின் தீர்ப்பு இப்போது வந்துள்ளது.

அவரது கோரிக்கையை மறுப்பதற்கான காரணங்களை நீதிபதிகள் கீழ்க்கண்டவாறு கூறியிருக்கிறார்கள். ஏற்கனவே வங்கிக் கணக்கு, பான் கார்டு ஆகியவற்றைக் குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என 2016இல் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினைச் சுட்டிக் காட்டி மறுத்துள்ளது.

அடுத்து, கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த நிலவரி இரசீதுகளை ஆவணமாக ஏற்கமுடியாது; ஆனால் திருமணத்துக்குப் பின்னர் கணவன் வீட்டுக்கு வந்து விட்டார் என்றளிக்கும் சான்றிதழ் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் விளக்கமளித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் அடுத்தடுத்துப் பெயர்கள் இருப்பினும், அவரது தாத்தா, பாட்டிக்கும், பெற்றோருக்கும், சகோதரருக்கும் உள்ள உறவுமுறை உரிய சான்றிதழ்கள் (வாரிசு சான்றிதழ்கள்) வழியே நிரூபிக்கப்படவில்லை போன்ற காரணங்களால் அவரது குடியுரிமைக் கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது உயர்நீதி மன்றம்.

மற்றொரு வழக்குக்கு, அசாம் உயர்நீதிமன்றத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி ஒரு தீர்ப்பு வந்துள்ளது. ஒருவருக்கு குடியுரிமை இல்லையென்று கூறினார்கள். யாரைச் சொல்கிறார்களென்றால், முனீந்திர பிஸ்வாஸ்என்கின்ற இந்துக்குத்தான் சொல்கிறார்கள். அவர் அப்பா இந்திர மோகன் பிஸ்வாஸ் இராணுவத்தில் பணியாற்றியவர். அவருடைய தாத்தா துர்கா சரண் பிஸ்வாஸ், அவரும் இராணுவத்தில் பணியாற்றியவர். இராணுவத்தில் பணியாற்றியவரின் பேரனுக்கு குடியுரிமை இல்லை யென்று கூறிவிட்டார்கள். அவர் 1964, 1970 ஆகிய ஆண்டுகளில் அவர் பெயரில் நிலங்களை வாங்கியுள்ளார்; அவற்றை ஆவணங்களாகக் காண்பிக்கிறார், வாக்காளர் அட்டையையும் கொண்டு போனார், அவர்கள் சொல்கிறார்கள் 1997 வாக்காளர் பட்டியலில்தான் உள்ளது; அதற்கு முன்னர் எங்கே என்று கேட்கிறார்கள்.

1997 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை காண்பிப்பதே கடினம்; அதற்கு முன்பான தேர்தல்களின் வாக்காளர் பட்டியல்களை ஒரு சாதாரண குடிமகன் எப்படிப் பெற முடியும், எப்படிக் காண்பிப்பது? நீ கொடுத்த சொத்து ஆவணம் என்பது தனி நபர் ஆவணம். அது பதிவானதை உரிய சாட்சிகளுடன் நிரூபிக்கவில்லை என்பதால் ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறுகிறது உயர்நீதி மன்றம்; 1964இல் பதிவானபோது விற்றவர், 21 வயதுள்ளவராக இருந்திருந்தாலே அவருக்கு இப்போது 77 வயதாக இருக்கும். 30, 40 வயதானவர் என்றால் நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். சாட்சிகளுக்கும் இதுவே பொருந்தும். இதனைக் காரணமாகக் காட்டி சொத்து ஆவணத்தை சான்றாக ஏற்க மறுத்துள்ளது; ஏற்றுக் கொள்ள முடியாது என்று நிராகரித்து விட்டார்கள். குடியுரிமை மறுத்த தீர்ப்பு கடந்த 12ஆம் தேதி வந்துள்ளது.

அன்றாடம் வேலைக்காக இடம் பெயர்ந்து வீடில்லாதவர்களுக்கு, சொத்தில்லாதவர்களுக்கு மட்டுமல்ல; சொத்து வைத்துள்ளவர்களும் ஆவணங்களைக் காட்டினாலும், அதையும் ஏற்க முடியாது என கூறுமளவுக்குத்தான் நீதி பரிபாலனம் உள்ளது.

எனவே, இச்சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; இந்துக்களுக்கும் எதிரானது என்று தெரிந்து கொண்டு, இஸ்லாமியர்களின் முன்முயற்சிக்கு நன்றி கூறியவர்களாக, இந்துக்களும் அதிகளவில் வந்து சேருங்கள் அனைத்து தரப்பினரும் இணைந்து போராடுவோம், அனைவருக்கும் எதிரான சட்டம், சங்கிகள் தங்களுக்கு விருப்பம் இல்லாதவர்களை, தங்கள் கருத்தை ஏற்காதவர்களை, இணங்காதவர்களை, எதிர்ப்பவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற, நாடற்றவர்களாக ஆக்கப் பயன்படும் சட்டம், இதை எதிர்த்து போராடுவோம்; வெற்றி பெறுவோம்.                                   

 (நிறைவு)

Pin It