இந்தியப் பாராளுமன்றத்தின் பருவமழைக்காலக் கூட்டத்தொடர் 20.07.2023 வியாழன் அன்று தொடங்கியது. 26 எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பில் “I.N.D.I.A” என்ற வலுவான கூட்டணி நாடாளுமன்றத்தில் மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்பி விவாதிக்கத் தயாரானார்கள்.

நாடாளுமன்றம் கூடியதும் இந்திய ஒன்றியத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க விதி 267 இன் கீழ் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவரக் கோரினார்கள் எதிர்க்கட்சியினர்.

தொடக்கத்தில் மறுத்ததாலும், அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்குவதாலும் பா.ஜ.க அரசுக்கு ஏற்படும் நெருக்கடியைச் சமாளிக்க, விதி 176 இன் கீழ் மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்கலாம் என்று இறங்கி வந்தார் அமித்ஷா.parliament 550விதி எண் 267 என்பது அவையின் அனைத்து அலுவல்களையும் ஒதுக்கி, ஒத்தி வைத்துவிட்டு காலவரையின்றி விவாதங்கள் நடக்க வழி செய்கிறது. விதி 176 என்பதன் கீழ் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே விவாதம் நடத்த முடியும்.

எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை. பிரதமரே நேரில் அவைக்கு வந்து அறிக்கை வைக்க வேண்டும். அதன்பின் 267 ஆம் விதியின் கீழ் விவாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

 மணிப்பூர் கலவரம் நாட்டையே உலுக்கி இருக்கிறது. மணிப்பூரில் குக்கி இனப் பெண்கள் நிர்வாணப் படுத்தப்பட்டு, கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட காணொளிகள் கசிந்த அடுத்த சில நாட்களிலேயே பாராளுமன்றம் கூடியது.

மணிப்பூரில் கலவரம் தொடங்கி 82 நாட்கள் ஆகிவிட்டன. 140க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகி உள்ளன. 300க்கும் மேற்பட்ட தேவாலயங்கள், கோயில்கள் கொளுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 60000 பேர்களுக்கும் மேல் மக்கள் வீடுகளை விட்டு அப்புறப் படுத்தப்பட்டு, அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி நிறுத்தப்பட்டுள்ளது.

 இணையம் செயல்பட தடை விதித்து கடந்த 3 மாதங்களாக அங்கே நடந்த கொடுமைகளை வெளி உலகிற்குக் காட்டாமல் மறைத்துள்ளார்கள்.

நாட்டின் பிரதமரோ, நீரோ மன்னனுக்கு சற்றும் குறைவில்லாத அலட்சியத்துடனும், மாய உலகில் இருப்பது போலவும், ஆஸ்த்ரேலியா, அமெரிக்கா, எகிப்து, பிரான்ஸ் என நாடுநாடாகச் சுற்றிக்கொண்டும்; விருதுகளும், விருந்துகளும், அனுபவித்துக் கொண்டு இருந்திருக்கிறார். இதில் இவர் பிற நாடுகளுக்கெல்லாம் நம் ஜனநாயகம் இரத்தத்திலும் நரம்புகளிலும் இருப்பதாகப் பீற்றிக்கொண்டும் உலா வருகிறார்.

மெய்த்தி இனப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார் என ஒரு புரளியைக் கிளப்பி, அந்த முகாந்திரத்தின் அடிப்படையில் குக்கி இன மக்கள் மீது கட்டற்ற வன்முறையை ஏவச் செய்திருக்கிறது மணிப்பூர் அரசு. கிட்டத்தட்ட குஜராத்தைப் போன்ற ஒரு திட்டமிட்ட இன அழிப்பை அவர்கள் அரங்கேற்றி உள்ளதாகவே நாம் சந்தேகப்படும்படி இருக்கிறது.

தங்கள் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அவகாசம் கொடுத்தது போல, வன்முறை வெடித்து, 25 நாள்கள் கழித்து அந்த மாநிலத்துக்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு கலவரத்தைக் கட்டுப்படுத்த ஒன்றுமே செய்யவில்லை. இந்த வேளையில் நாடாளுமன்றம் கூடியது.

 பிரதமர் அவைக்கு வருவதில்லை. எதிர்க்கட்சிகளின் முழக்கங்களை ஒடுக்குவதும், காங்கிரஸ் உறுப்பினர் கார்கேவின் ஒலிவாங்கியை அணைப்பதும், ஆம்ஆத்மி உறுப்பினர்களை தற்காலிகத் தகுதி நீக்கம் செய்வதுமான நடவடிக்கைகளை அங்கே பார்க்கிறோம்.

இவ்வளவு அமளிகளிலும் ஒரு வாரத்தில், தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, தேசிய செவிலியர் ஆணைய மசோதா, அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) சட்டத் திருத்த மசோதா என மூன்று புதிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களின் கூட்டுறவு வங்கி மசோதா, வனப் பாதுகாப்பு மசோதா என மாநிலங்களின் உரிமைப் பறிப்பு மசோதாக்கள் மட்டும் நிறைவேற்றப் பட்டுள்ளன.

இதில் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்துப் பேசவேண்டும் என்றும், ராகுல் காந்தி அவர்கள் மணிப்பூருக்குச் சென்று ஏதோ வன்முறையைத் தூண்டியது போன்றும் பழிமாற்றல் வேலைகளையும் செய்து தன் கலக்கத்தையும், கீழ்த்தரமான தன் கோர அரசியல் முகத்தையும் ஒரு சேர இந்த நாட்டு மக்களுக்கும், உலகத்தாருக்கும் காட்டியுள்ளது ஆளும் பா.ஜ.க. அரசு.

சாரதாதேவி

Pin It