இந்தியா - பாகிஸ்ன்தான் பிரிவினைக்கு ஜவகர்லால் நேருவும், முகமத்அலி ஜின்னாவும் ஒருமித்த கருத்தில் இருக்கிறார்கள். நவகாளியில் இந்து - முஸ்லிம் கலவரம். இதில் முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி போன்ற காரணங்களால் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர உறுப்பினர் நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்று விடுகிறான்.

madhan mohan malaviyaஇதற்கான விளக்கத்தை அதே ஆண்டு பிப்ரவரி 4ஆம் நாள் அன்றைய இந்திய அரசு அறிக்கையாகத் தந்ததை இணையதளம் இப்படிச் சொல்கிறது : “ஆர்.எஸ்.எஸ். இந்துக்களிடையே ஒற்றுமையை வளர்ப்பதுதான் தங்களுடைய நோக்கம் என்று கூறுகிறது. ஆனால், நடைமுறையில் அந்த இயக்கத்தவர் அப்படி நடந்து கொள்ளவில்லை. விரும்பத்தகாத, அதே சமயம் பயங்கரமான சில நடவடிக்கைகளில் அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ளனர். பொதுச் சொத்துகளுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரிய வருகிறது. அரசுக்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறும் ஆயுதங்களைச் சேகரிக்குமாறும் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டி விடுமாறும் காவல் துறை – ராணுவம் ஆகியவற்றுக்குக் கட்டுப்பட மறுக்குமாறும் கூட அவர்கள் கூறுகின்றனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன.” இந்த அறிக்கை காந்தி கொலைக்கு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என்று சொல்லவில்லை என்றாலும், அந்த இயக்கத்தை அரசின் அறிக்கை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். திடீரென்று தோன்றிய அமைப்பன்று. அதன் வேர் இந்து மகா சபையில் இருந்து புறப்படுகிறது.

இந்து மகாசபா

மதன்மோகன் மாளவியா, லாலா லஜபதிராய் ஆகியோர் தலைமையில் 1915 ஆம் ஆண்டு அமிர்தசரசில் 'அகில பாரதிய இந்துமகாசபா' என்ற அமைப்பை உருவாக்கினார்கள், பார்ப்பனர்கள். இந்த அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான வினாயக் தாமோதர் சாவர்க்கர் 1920 ஆம் ஆண்டு தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

1949ஆம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23 தேதிகளில் அயோத்தி, பாபர் மசூதிக்குள் நள்ளிரவில் நுழைந்து கள்ளத்தனமாக பலராமன் சிலையை வைத்தது இந்து மகா சபா. இதற்கு உதவியாக இருந்தவர் அன்றைய அம்மாவட்ட ஆட்சித் தலைவர் கே.கே.நாயர். இதற்குப் பரிசாக 1967 இல் இவர் ஜன சங்கம் கட்சியால் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கப்பட்டார். இதை "வேலைக்கேற்ற கூலி" என்றார் பேராசிரியர் அருணன்.

ராஷ்டிரிய சுயம் சேவக்

இந்த அமைப்பில் இருந்து விலகிய கேசவ் பாலிராம் ஹெக்டேவர் 1925ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் ஆர்.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் "ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்" என்ற அமைப்பை உருவாக்கினார். இதன் முக்கிய தலைவர்களுள் ஒருவரான மகாதேவ் சதாசிவ கோல்வால்கர் 1940 முதல் 1973 வரை இவ்வமைப்பின் தலைவராக இருந்துள்ளார். இவர் காலத்தில்தான் காந்தி சுடப்பட்டு, அதன் விளைவால் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. இதற்குப் பின்னர் 1975-77 அவசர நிலை அமலில் இருக்கும் போதும், 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் இந்த அமைப்பு இரண்டு முறை தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா என்பது ஒரே நாடு. அதுவும் வர்ணாசிரமத்தைக் கொண்ட “ராமராஷ்டிரம்" ( ராமராஜ்ஜியம்) என்பது ஆர்.எஸ்.எஸ்- இன் கொள்கை. இதை அடைய அரசியல் அதிகாரம் தேவை என்ற குறிக்கோளுடன் ஓர் அரசியல் கட்சியை உருவாக்கியது ஆர்.எஸ்.எஸ். அக்கட்சியின் பெயர் “பாரதிய ஜனசங்".

பாரதிய ஜனசங்

1951 அக்டோபர் 21 அன்று ஆர்.எஸ்.எஸ். பின்புலத்தில் இக்கட்சியை உருவாக்கிய சியாமா பிரசாத் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ் - ஆல் தயாரிக்கப்பட்டவர் என்று “ஜன சங்கம்” என்று நூலை எழுதிய கிரைக் பாக்ஸ்டன் கூறுகிறார். இவர் மூன்று ஆண்டுகள் ஜவகர்லால் நேரு அமைச்சரவையில் இருந்தவர், அடல் பிகாரி வாஜ்பாய், லால்கிஷன் அத்வானி இருவருக்கும் இவர் குருநாதர் ஆவார்.பாரதிய ஜன சங்கத்தின் உறுப்பினர் படிவத்தின் பின்புறத்தில் ஒற்றை ஆட்சி முறையை உருவாக்கி, அகண்ட பாரதம் அமைப்பது அதன் இலட்சியம் என்று பதிவு செய்யப்பட்டிருந்ததை அருணன் விளக்கியிருக்கிறார்.

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே கலாசாரம், அது பாரத்வர்ஷம் என்ற பிரகடனம் ஜன சங்கத்தால் 1952 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டது.

தேவநாகரி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் வரி, ஒலி வடிவங்களையும், சொல்லாட்சிகளையும் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் ஏற்க வேண்டும். அகில இந்திய மொழியாக விரைவில் இந்தி மொழியைக் கொண்டு வரக் கட்சி உழைக்கும் என்ற அன்றைய ஜனசங்கத்தின் அறிக்கையை இன்று பா.ஜ.க ஆட்சி நடைமுறைப்படுத்த முனைப்புக் காட்டுவதைப் பார்க்கிறோம்.

இந்நிலையில் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஜனசங்கம், ஜனதா கட்சியாக உருமாறி நிறுவனக் காங்கிரஸ், பாரதிய லோக்தள், சோசலிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஜனதா கட்சியின் பிரதமராக மொரார்ஜி தேசாய், வெளியுறவு அமைச்சராக வாஜ்பாய், செய்தி ஒலிபரப்பு அமைச்சராக அத்வானி ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர். பின்னர் ஜனதா கட்சி உடைந்து, அதிலிருந்து உருவானது "பாரதிய ஜனதா பார்ட்டி" என்ற (பா.ஜ.க) கட்சி.

பாரதிய ஜனதா கட்சி

1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வாஜ்பாய் தலைமையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க. வலிமையான ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இயக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில், அன்றைய முதல்வர் கல்யாண் சிங்கின் கடைக்கண் பார்வையில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. வினரால் பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டது. இது குறித்து மன்மோகன்சிங் லிபரான் ஆணைக் குழுவிடம் அளித்த அறிக்கையில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்கள் வாஜ்பாய், அத்வானி, கல்யாண் சிங் என்று கூறியிருக்கிறார்.

2014 இல் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து ஒரு பாசிச ஆதிக்கம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. 282 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பெரும்பான்மை அதிகாரத்தில் இருக்கும் பா.ஜ.க, ஏறத்தாழ 70 விழுக்காடு இந்திய நிலப்பரப்பில் தனி ஆட்சியாகவும், அதற்குச் சாதகமான ஆட்சிகளையும் கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை.

அந்தக் கட்சி தமிழ்நாட்டில் ஊடுருவுகிறது என்றாலும் அதனால் காலூன்ற முடியவில்லை, அதற்கு மக்களும் வழிவிடவில்லை.

காரணம் ஐயா தந்தை பெரியார். அந்தப் பகுத்தறிவுப் புரட்சிக்காரரின் மாபெரும் சித்தாந்தங்களை, சிந்தனைகளை தமிழ் நாட்டில் வலுப்பெறச் செய்த பேரறிஞர் அண்ணா, அரசியல் ஞானி தலைவர் கலைஞர் ஆகியோர்.

இன்று தந்தை பெரியாரின் அறிவாயுதத்தையும், அண்ணாவின் அரசியல் ஞானத்தையும், தலைவர் கலைஞரின் முழுஆற்றலோடு தாமரையிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்டு இருக்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அவர் கரத்தைப் பலப்படுத்த தமிழக மக்களுடன் நாம் அவரோடு ஒன்றிணைவோம்.

இலக்கியத்தில் தாமரை மலரட்டும். அரசியலில் சூரியக்கதிரால் வாடி உதிரட்டும். அது வளரக்கூடாது!

- எழில்.இளங்கோவன்

Pin It