சென்னை மேற்கு மாம்பலம், சீனிவாசா திரையரங்கு அருகில் உள்ள சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மொழி யுரிமை மாநாடு நடைபெற்றது. 20-9-2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இம்மாநாட்டிற்கு, தமிழ்நாடு மொழியுரிமை முன் னெடுப்பு அமைப்பைச் சேர்ந்த தோழர் மணி. மணிவண்ணன் தலைமை ஏற்றார். பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் பங்கேற்றனர்.

மொழிகளுக்கிடையில் சமநிலையைக் கோரியும், மொழி உரிமை அடிப்படையில், இந்திய அரசியல் யாப்பின் 17ஆம் பகுதியை முழுமையாகத் திருத்தக் கோரியும், அரசியல் யாப்பின் 8ஆம் அட்டவணையில் உள்ள 22 மொழி களையும் இந்திய ஒன்றிய நடுவண் அரசின் ஆட்சிமொழி களாக ஆக்கக் கோரியும் இந்த மாநாடு நடைபெற்றது.

“இந்திக்கு இணையாக இந்தியாவின் எல்லாத் தேசிய மொழிகளையும் இந்திய நடுவண் அரசின் ஆட்சி மொழி களாக்கு” என்கின்ற கோரிக்கை, “மொழிகளின் உரிமைக் கான சென்னைப் பேரறிவிப்பாக” வெளியிடப்பட்டது.

இந்தி ஒன்றே தனிப்பெரும் இந்திய மொழியாக மேம்படுத்தப்பட்டுவரும் இன்றைய சூழலில், பஞ்சாப், மேற்குவங்காளம், மகாராட்டிரம், ஒரிசா, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்து கலந்துகொண்ட மொழி உரிமைச் செயல்பாட்டாளர்கள், மைய அரசின் இந்தி, ஆங்கிலம் என்னும் இருமொழிக் கொள்கை பெரும்பான்மை இந்திய மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக எப்படித் தாழ்த்தியுள்ளது என்பதை விளக்கிக் கூறினர்.

மாநாட்டில் கர்நாடகத்தின் சார்பில் கலந்துகொண்ட பிரியங்க் கட்டளகிரி கூறியது : “சென்னையிலிருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா வானூர்தியில் பயணம் செய்கிற போது தமிழிலோ கன்னடத்திலோ எந்த அறிவிப்பும் செய்யப்படுவதில்லை. பாதுகாப்புத் தொடர்பான விளக்க வுரைகள்கூட இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே சொல் லப்படுகின்றன. பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் செயலாகவே இதனைக் கருத வேண்டும்.”கர்நாடகப் பேராளர் பேசியதை வழிமொழிந்து, மேற்குவங்கப் பேராளர் டாக்டர் கர்கா சாட்டர்ஜி பேசினார்.

“அவர் கூறியதெல்லாம் உண்மை. தொடர்வண்டிப் பதிவு அட்டவணையாக இருந்தாலும், எரிவளி உருளை பற்றிய பாதுகாப்பு விளக்கவுரைகளாக இருந்தாலும் மைய அரசு முகமைகள் யாவும் இந்தியிலும் ஆங்கிலத்திலுமே எல்லாக் குறிப்புகளையும் வெளியிடுகின்றன. மைய அரசின் வங்கிப் பயன்பாடுகள், பணியாளர் தேர்வுகள் எல்லா வற்றுக்கும் ஆங்கிலமும் இந்தியும் மட்டுமே பயன்பாட்டு மொழிகள். நம் சொந்த நாட்டில் நாம் இரண்டாந்தரக் குடிமக்களாக ஆக்கப்பட்டுவிட்டோம்” என்றார் சாட்டர்ஜி.

“கேரளத்திலிருந்து துபாய்க்குச் செல்லும் ஓர் அயல் நாட்டு வானூர்தி மலையாளத்தில் அறிவிப்புச் செய்கிறது. ஆனால், நம் ஏர் இந்தியா வானூர்தி ஆங்கிலத்தையும் இந்தியையும் தவிர, வேறு எந்த மொழியையும் தீண்ட மறுக்கிறது” என்று பிரியங்க் கூறினார். “இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள்கூட, அங்குள்ள இந்தியர்களுக்கு வெளியிடும் அறிவிப்புகளை பஞ்சாபி, தமிழ், கன்னடம் போன்ற இந்திய மொழிகளில் வெளியிடுகின்றன. ஆனால், இந்தி பேசாத பெரும்பான்மை இந்தியர்களுக்கான எந்த அறிவிப்பையும் இந்திய அரசு ஆங்கிலத்திலும் இந்தியிலுமே வெளியிடுகின்றன. இது எந்த வகை நீதி?” என்றார் அவர்.

“முன்னேறிய நாடுகள், கல்விக்கும் ஆராய்ச்சிக்கும் தங்கள் தாய்மொழியைத்தான் பயன்படுத்துகின்றன. தாய்மொழி இல்லாமல் முன்னேற்றம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். இந்திய ஆட்சியாளர்களோ தாய்மொழிகளை அப்புறப்படுத்திவிட்டு முன்னேற்றம் காண ஆசைப்படுகிறார்கள். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைப் பயன் படுத்தும் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் இந்தி என்பது கட்டாயப் பாடம். தாய்மொழிகளை விரும்பினால் படிக்கலாம்; இல்லையேல் விட்டுவிடலாம். தாய்மொழிகளை மக்கள் துறக்க வேண்டும் என்பது இந்திய அரசின் விருப்பமாக உள்ளது” என்று பேசினார் பாட்டியாலாவிலுள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் பேராசிரியர் டாக்டர் ஜோகா சிங்.

“கேரளத்திலிருந்து துபாய்க்குச் செல்லும் ஓர் அயல்நாட்டு வானூர்தி மலையாளத்தில் அறிவிப்புச் செய்கிறது. நீங்கள் பெங்களூரிலிருந்து புறப்பட்டால் உங்களுக்கான உணவுப் பட்டியலைக் கன்னடத்தில் அவர்கள் தருகிறார்கள். இது பரந்த நோக்கிலான ஓர் எளிய வணிக உத்தி. இந்திய அரசு இதை யெல்லாம் திரும்பிப் பார்ப்பதில்லை” என்றார், பிரியங்க்.

“சிங்கப்பூர் அரசு தமிழை ஓர் அலுவல் மொழியாக ஏற்றிருக்கிறது. ஆனால் இந்திய அரசு இன்னும் இதைச் செய்யவில்லை” என்றார், சாட்டர்ஜி.

நிலம் ஒன்று கையகப்படுத்தல் பற்றிய அறிவிப்பு குசராத்தில் இந்தி மொழியில் வெளியிடப்பட்டபோது, குசராத் உயர்நீதிமன்றம் அப்போது கூறிய ஒரு தீர்ப்பை ஜோகா சிங் தெரிவித்தார். ‘இந்தி என்பது இங்குள்ள மக்களுக்கு அயல் மொழி ஆகும். இந்தி அல்லாத மொழிச் செய்தி ஏடுகளில், இந்தி மொழியில் தரப்படும் விளம்பரங்கள் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலே’ என்று நீதிபதி தீர்ப்பு உரைத்தார் - என்றார் சாட்டர்ஜி.

“மக்கள் மொழிகளைப் புறந்தள்ளிவிட்டு, மக்களைத் தேசப்பற்று இல்லாதவர்கள் என்று கூறுவது கண்டனத்திற் குரியது. இந்தியில் ஒரு சொல்கூட அறியாத ஏராளமான மக்கள் தேச விடுதலைக்குப் போராடினார்கள். அவர்கள் இந்தி தெரியாதவர்கள் என்பதால் தேசப்பற்று இல்லாதவர் என்று கூறமுடியுமா?” என்று பேராளர்கள் கேள்வி எழுப்பி னார்கள். இந்திய மொழிகள் அனைத்தையும் இந்திய நடுவணரசின் ஆட்சி மொழிகளாக ஆக்க வேண்டும்; அனைத்து மொழி களுக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று பேராளர் அனைவரும் வலியுறுத்தினர்.

“எங்கள் அடையாளங்களை அழிக்காதீர்கள்!

இந்தி அட்டூழியங்களை நிறுத்துங்கள்!

மொழிகளின் சம வாய்ப்பே எம் பிறப்புரிமை!”

என்னும் பதாகைகளைப் பல்வேறு தேசிய இனப் போராளிகளும் உயர்த்திப் பிடித்தனர்!

பகைவனை எதிர்ப்பதற்கு நண்பர்கள் ஒன்று கூடியது வரவேற்கத்தக்கது.

- இரணியன்

Pin It