muslim agitation against caaஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தொகை, மதம், மொழி, இனம் என்னும்  அடிப்படையில் அங்கு வாழும் மக்கள் பெரும்பான்மை மற்றும்  சிறுபான்மை   என்று வகைப்படுத்தப்படுகின்றார்கள். அதனடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 18-ம் நாளை சர்வதேச சிறுபான்மையினர் உரிமைகள் நாளாகக் கடைப்பிடிக்க வேண்டுமென்று 1992-ம் ஆண்டு டிசம்பர் 18 அன்று, ஐ.நா. மன்றத்தால் அறிவிக்கப்பட்டதை அடுத்து,  உலகின் ஜனநாயக நாடுகள் அனைத்தும் அதை ஏற்றுக் கொண்டன -  இந்தியா உட்பட.  
 
ஆனால், இன்றைய நிலையில் சிறுபான்மையினரின் உரிமைகள் இந்தியாவில் பாதுகாக்கப் படுகின்றதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தங்களுடைய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும் சிறுபான்மையினர் குரல் எழுப்பினால், அவர்களுடைய  குரல்வளையை நெறிப்பதற்கான ஒடுக்குமுறைச் சட்டங்கள்/ மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு சிறுபான்மையின மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. தங்களுடைய அடிப்படை உரிமைகள் கோரி மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஈவு இரக்கம் இல்லாமல் ஒடுக்கப்படுகின்றன. சிறுபான்மையினர் உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாக்க வேண்டிய ஆளும் வர்க்கமே அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது ஜனநாயக நாட்டிற்கு உகந்ததல்ல..
 
ஜனநாயகம் என்பது வெறும் பெரும்பான்மையினர் ஆட்சி புரிவது என்பதல்ல.. சிறுபான்மையினரும் சேர்ந்ததால் தான்  ஜனநாயகம் என்று வரையறுக்கப்படுகின்றது. சிறுபான்மையினருக்கு முழுச் சுதந்திரமும் அவர்களின் கருத்துக்களைப் பேசுவதற்கும், பரப்புவதற்கும் முழு வாய்ப்பும்  அளிக்கப்பட்டால்தான் ஜனநாயகம். இல்லையனில் அது வெறும் சர்வாதிகாரமே.
 
சிறுபான்மை மக்களை  இரண்டாம் தர மக்களாக, அகதிகளாக மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சர்வாதிகார அரசின் அடக்குமுறை தாங்காமல் நாடெங்கிலும் மக்கள் புரட்சி வெடித்துள்ளது. இவ்வாறான வேளையில்,  அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் கூற்று  தான் நினைவுக்கு வருகின்றது... 
 
"சிறுபான்மையினர் ஒரு வெடித்தெழும் சக்தியாக இருக்கிறார்கள்; அந்தச் சக்தி வெடித்தெழுமானால், அரசின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் வெடித்துச் சிதறடித்து விடலாம். இதற்கு ஐரோப்பிய வரலாறு போதுமான சாட்சியங்களைக் கொண்டுள்ளது" என்கிறார்.
 
- அப்சர் சையத், சென்னை
Pin It