அன்று ‘அவதாரங்களாக’ வந்த பார்ப்பனர்கள் இன்று ‘ஆட்சி அதிகாரங்களாக’ வருகிறார்கள்

பார்ப்பனர் - திராவிடர் போராட்டம் ரொம்பவும் வளர்ந்து விட்டது; பார்ப்பனர்களும் துணிந்து விட்டார்கள்; துணியக் காரணமும் இல்லாமல் இல்லை. இன்று ஆட்சி அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறது. அநேகமாக அவர்கள் ஆதிக்கத்திற்கு இதுவே கடைசி காலமாகவும் இருக்கக் கூடும். இன்று தவறின், நாளை ஆட்சி யார் கைக்குச் செல்லுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆகவே ஆட்சி தம் ஆதிக்கத்தில் உள்ள போதே நம்மீது பாய்ந்து தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். - பெரியார், ‘விடுதலை’ 19.03.1948

இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து வேத பார்ப்பன புரோகிதக் கும்பல் இந்துக்களை அணி திரட்டுகிறது. இதுவே ‘அவாளின்’ நீண்ட கால தந்திரம். பார்ப்பனரல்லாத ‘இந்து’க்களை ‘வர்ணம்-ஜாதி’களாக்கி, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்று இழிவுபடுத்தும் பார்ப்பனர்கள், தங்களின் சமூக - புரோகித மேலாதிக்கத்தை வெகு ‘இந்து’ மக்களிடம் மறைப்பதற்கு ஓர் எதிரியைக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ‘இஸ்லாமியர்கள்’ பலிகடாவாக்கப் படுகிறார்கள்.

muslim women against caa• காஷ்மீரில் 370 ஆவது பிரிவை நீக்கி இஸ்லாமியர்களின் சிறப்புரிமையை பறித்தார்கள்.

• அயோத்தியில் 400 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமியர்களிடமிருந்த ‘பாப்ரி மஸ்ஜித்’ - 12 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேதாயுகத்தில் பிறந்ததாகக் கூறப்படும் ‘இராமன்’ பிறந்த இடம் என்று கூறி உச்ச நீதிமன்றம் வழியாகத் தீர்ப்பைப் பெற்றார்கள்.

இப்போது இந்தியாவின் ‘குடியுரிமை’ பெற - ஒரு குடிமகன் இஸ்லாமியனாக இருக்க முடியாது என்று இஸ்லாமியரை மீண்டும் தனிமைப்படுத்தும் ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

காஷ்மீர் பிரச்சினை, அயோத்தி தீர்ப்புகளில் வெற்றி பெற்றுவிட்ட இறுமாப்பில் குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது பா.ஜ.க. ஆட்சி. விளைவு எதிர்மறையாகி விட்டது.

வடகிழக்கு மாநிலங்களிலும், தலைநகர் டெல்லியிலும், உ.பி.யிலும் ‘மதவாத’ சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து விட்டன. தமிழ்நாட்டில் இயக்கங்களும், தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் களமிறங்கிப் போராடுகின்றன. கேரளாவில் இரு துருவங்களாக நிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரசும் இணைந்து போராட்டக் களத்துக்கு வந்துவிட்டன.

இது குறித்து சில அடிப்படையான அம்சங்களைப் பார்ப்போம்.

• 1955 ஆம் ஆண்டு இந்தியாவில் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பிறகு அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. சட்டமும் சட்டத் திருத்தங்களும் குடியுரிமை வழங்குவதற்கு மதத்தை அடிப்படையாக ஏற்கவில்லை. ஒரு நாட்டில் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்குதல் குறித்தே சட்டத்தின் பிரிவுகள் உருவாக்கப்பட்டன.

• பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து மதத் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட பிரிவினர் இந்தியாவில் 5 ஆண்டுகள் தங்கியிருந்ததற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் குடியுரிமை வழங்கப்படும் என்று கூறும் இந்த திருத்தச் சட்டம், இஸ்லாமியர்களாக இருந்தால் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று கூறுகிறது. இஸ்லாமிய மத ஆட்சி நடக்கும் பாகிஸ்தான் - பங்களாதேஷ் நாடுகளில் மத துன்புறுத்தல்களுக்கு உள்ளாகிறவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்று மத்திய அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

அடைக்கலம் தேடி வரும் மக்களை அரசியல் - இனம் - ஒடுக்குமுறை என்று பார்க்காமல் ஒரு மதச் சார்பற்ற நாடு மதத்தின் அடிப்படையில் ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

பாகிஸ்தான் நாட்டிலேயே இஸ்லாமியர்களின் வேறு பிரிவினரான அகமதியர்கள், ஷியாக்கள் துன்புறுத்தப்படுகின்றனரே என்ற கேள்விக்கும் பா.ஜ.க. பார்ப்பன ஆட்சி மவுனம் சாதிக்கிறது.

• இந்தியாவில் எல்லைப்புற நாடுகளாக பாகிஸ்தான் - பங்களாதேஷ் நாடுகள் இருப்பதால், அந்நாடுகளிலிருந்து அடைக்கலம் தேடி இந்தியா வருவதாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் ஆப்கானிஸ்தான் நாட்டையும் ஏன் சேர்த்துக் கொண்டார்கள்? அது நிலவியல் அடிப்படையில் இந்தியாவின் அண்டை நாடு அல்லவே என்ற கேள்விக்கும் அவர்களிடம் பதில் இல்லை.

• இந்தியாவின் எல்லைப் பகுதிகளைப் பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடுகளான நேபாளம், மியான்மர், பூடான் போன்ற நாடுகள் ஏன் விலக்கப்பட்டுள்ளன? மியான்மர் நாட்டில் நடக்கும் இராணுவ கொடுங்கோல் ஆட்சியில் ‘ரோகிங்கா முஸ்லிம்கள்’ இனப்படுகொலைக்கு உள்ளாகிறார்கள். உயிர் பிழைக்க இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வரும் அவர்களை அனுமதிக்க இந்தியாவின் பார்ப்பன பாசிச ஆட்சி மறுக்கிறது. மற்றொரு அண்டை நாடான பூடானில் ‘வஜ்ராயன பவுத்தம்’ என்ற மதத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்கிறது. அங்கே கிறிஸ்தவர்கள் ‘தேவாலயங்களில்’ வழிபடும் உரிமை மறுக்கப்படுகிறது. தேவாலயங்களில் வழிபடுவதற்காகவே அவர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். பாகிஸ்தான் - பங்களாதேஷ் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை உண்டு. ஆனால் பூட்டானில் கிறிஸ்தவர்களுக்கு உரிமை இல்லை என்றால், என்ன காரணம்? பூட்டான் இஸ்லாமிய நாடாக இருந்திருந்தால் சட்டத் திருத்தத்தில் சேர்த்திருப்பார்கள்.

• இதைவிடக் கொடுமை, ஈழத்திலிருந்து கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் அகதிகளாக வாழும் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு பார்ப்பன பா.ஜ.க. ஆட்சி தயாராக இல்லை. ஈழத் தமிழர்கள் தமிழர் என்ற இன அடையாளத்தோடு மதம் என்ற அடையாளத்துக்காகவும் சிங்கள - பவுத்த பேரினவாத ஆட்சியால் துன்புறுத்தலுக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.

கடந்த காலங்களில் பா.ஜ.க.வினரும் சங்பரி வாரங்களும் இந்து முன்னணியும் ‘ஈழத் தமிழர்கள் இந்துக்கள்’ என்று உரிமை கோரி அவர்களுக்காகப் பேசியதை நாடு மறந்து விடவில்லை. ஆயிரக்கணக்கான இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ‘இந்து மக்கள் கட்சி’ ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இப்போது ஈழத் தமிழர்கள் மதரீதியாக ஒதுக்கப்படவில்லை; இன ரீதியாக ஒதுக்கப்படுகிறார்கள் என்கிறது, பா.ஜ.க. ஆட்சி. ‘இந்து’ அடையாளப் போர்வையுடன் மோடி ஆட்சியிடம் நெருங்கி விடலாம் என்று தமிழ்நாட்டில் காசி ஆனந்தன் போன்றவர்களும், ஈழத்தில் ‘சிவசேனா’ அமைப்பைத் தொடங்கிய சச்சிதானந்தம் போன்றவர்களும் இப்போது கையறு நிலைக்கு அவர்கள் நம்பிய ‘காவி’ ஆட்சியாளர்களாலேயே தள்ளப்பட்டு விட்டார்கள். பார்ப்பனர்கள் ஈழத் தமிழர் பிரச்சினையை பெரியார் இயக்கத்துடனும், திராவிட இயக்கத்துடனும் தான் இணைத்துப் பார்ப்பார்கள் என்பதை இப்போதாவது ‘இந்து அரிதாரம்’ பூசிக் கொண்ட அந்த ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்வது நல்லது.

• இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு; உச்ச நீதிமன்றத்தின் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளும் இதை உறுதி செய்துள்ளன. அரசியல் சட்டத்தின் 14ஆவது பிரிவு என்ன கூறுகிறது? இந்திய நிலப் பரப்புக்குள் எந்த நபருக்கும், எந்தக் குடிமகனுக்கும் ‘சட்டப்படி சமத்துவமானவர்கள்’ என்ற உரிமையையே வழங்குகிறது. மதத்தின் அடிப்படையில் இனத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டவில்லை.

• ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் ஷதன் ஃப்ராசத் எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்ட கேள்விகளை எழுப்புகிறார்.

“மியான்மரிலிருந்து தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்தியாவுக்கு வரும் ஒரு ரோகிங்கியா முஸ்லிம், இந்தியக் குடியுரிமை பெற முடியாது. ஆனால் மத ரீதியில் உயிருக்கு அச்சுறுத்தலே இல்லாத வங்க தேசத்திலிருந்து பொருள் தேடலுக்காக இந்தியாவுக்கு வரும் ‘இந்து’வுக்கு மத ரீதியான அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்கள் என்று குடியுரிமை வழங்குவது எந்த வகையில் நியாயம்? குண்டுவீச்சிலிருந்து உயிர் தப்பியதற்காக ஒரு கள்ளத் தோணியில் ஏறி ஈழத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு அடைக்கலம் தேடி வரும் ஒரு தமிழருக்கு குடியுரிமை இல்லை என்று மறுப்பது என்ன நியாயம்?” என்ற நியாயமான கேள்விகளை எழுப்புகிறார்.

• மத அடிப்படையில் காங்கிரஸ் ஆட்சி இந்தியாவிலிருந்து பாகிஸ்தானைப் பிரித்ததால்தான் இப்படி ஒரு திருத்த சட்டம் கொண்டு வந்ததாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகிறார். இது அப்பட்டமான வரலாற்றுப் புரட்டு.

• ‘ஆரிய சமாஜம்’ அமைப்பின் தலைவர்களில் ஒருவரான பாய் பரமானந்தா (1874-1947) 1908இல் என்ன எழுதினார்?

“சிந்து பகுதிக்கு அப்பாற்பட்ட நிலப்பரப்பை ஆப்கானிஸ்தானத்துடனும், வடமேற்கு எல்லை மாகாணத்துடனும் இணைத்து முஸல்மான்களின் (இஸ்லாமியர்களின்) பெரிய ஆட்சியை உருவாக்க வேண்டும். அங்கு வாழும் இந்துக்கள் வெளியேறி இங்கே வர வேண்டும். இங்கு வாழும் முஸல்மான்கள் வெளியேறி அவர்கள் பகுதிக்குப் போய்விட வேண்டும். (பரமானந்த பாய் எழுதிய ‘எனது வாழ்வின் கதை’ நூல்)

இவர் எழுதியது 1908இல்! 1937இல் இந்து மகாசபை தலைவர் சாவர்க்கர் என்ன கூறினார்?

“இந்தியாவில் இரண்டு முரண்பட்ட தேசங்கள் அருகருகே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒன்று இந்துக்கள் தேசம்; மற்றொன்று முஸ்லிம்கள் தேசம். இரண்டும் ஒரே தேசமாக முடியாது.” (அகமதாபாத்தில் நடந்த இந்து மகாசபை கூட்டத்தில் பேசியது)

1939இல் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வாக்கர் என்ன கூறினார்?

“இந்துக்கள் அல்லாதவர்கள் இந்து கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்து மதத்தைப் புகழ்ந்து பேச வேண்டும். அதைத் தவிர இந்துக்கள் அல்லாதவர்களுக்கு வேறு எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது.” (ஆதாரம்: ‘நாம் அல்லது நமது தேசியம் வரையறை’ என்ற நூல்)

இவ்வளவுக்குப் பிறகுதான் 1940இல்தான் லாகூரில் முஸ்லிம் லீக் மாநாட்டில் பாகிஸ்தான் கோரிக்கையை ஜின்னா முன் வைத்தார். இதுதான் வரலாறு.

• மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படும் ‘இஸ்லாமியர்’ அல்லாத ‘இந்து’க்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறது பா.ஜ.க. பார்ப்பன ஆட்சி.

‘பார்ப்பனர்’ என்ற மைனாரிட்டி ஆதிக்கக் கும்பலின் ஒடுக்குமுறைக்கும் உரிமை பறிப்புக்கும் உள்ளாகி நிற்பவர்கள் பார்ப்பனரல்லாத ‘சூத்திர’, ‘பஞ்சமர்கள்’, ‘இஸ்லாமியர்கள்’, ‘கிறிஸ்தவர்கள்’. இவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ‘திராவிடர்கள்’ என்ற அடையாளத்தில் இணைந்து நிற்கிறோம். ‘ஆரியம்’, ‘பார்ப்பனர்’ என்ற அடையாளத்தோடு வேத காலத்தில் தொடங்கிய போராட்டம் இன்று வரை தொடருகிறது. எனவே ‘திராவிடர்’ அடையாளம் வரலாற்றுத் தேவையாகியுள்ளது.

அன்று பார்ப்பனர்கள் ‘அவதாரங்களாக’ வந்தார்கள். இன்று ஆட்சி அதிகாரத்துடன் வருகிறார்கள். நாடாளுமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், இராணுவம் என்ற அரசமைப்புகளின் ஆதரவோடு வெகுமக்கள் மீது இந்த போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. 340யை பறித்தார்கள். பாப்ரி மசூதியை இடித்து, ‘இராமனுக்கு’ சொந்தமாக்கினார்கள். இனங்களின் மாநிலங்களின் அடையாளங்களைப் பறிக்கிறார்கள். இப்போது குடியுரிமைச் சட்டத்திலும் கை வைக்கிறார்கள். இப்போது நடப்பதும் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் போராட்டத்தின் தொடர்ச்சி தான்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It