mk stalin and jayalalithaநாளை (அக்டோபர் 26) முதல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என்ற அறிவிப்பும். நாளை காலை தலைமைச் செயலகத்தில், அது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் கலந்துரையாடுகின்றார் என்ற செய்தியும் இன்று நாளேடுகளில் ஒன்றாகவே வந்துள்ளன.

இந்த அறிவிப்புகள், 2015இல் என்ன நடந்தது என்று எண்ணிப் பார்க்கச் சொல்கிறது. ஜெயலலிதா ஆட்சியைக் குறை கூறுவது நம் நோக்கமில்லை. ஆனாலும் ஒப்பீட்டைத் தவிர்க்க முடியவில்லை.

“மழை பொழிவது தெரிவதில்லை
மாளிகை வாசலிலே - அது
வருமுன்னாலே தெரிந்துவிடும்
ஏழை குடிசையிலே “

என்பது பட்டுக்கோட்டையாரின் பழைய பாடல் வரிகள்!

2015 ஆம் ஆண்டு வெள்ளம் வந்ததே ஜெயலலிதாவின் ஆடம்பர மாளிகைக்குள் தெரியவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து விட்டது. ஆனால் அதிகாரிகளால் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. டிசம்பர் முதல் வாரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி உடையும் நிலைக்கு வந்துவிட்டது. சிங்கப்பெருமாள் கோயில் ஏரி உடைந்தே விட்டது. திருப்பெரும்புதூர் வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கியது.

என்ன நடந்து என்ன பயன்? முதல்வரை யாராலும் தொடர்பு கொள்ள இயலவில்லை.

சென்னை, சைதை, மறைமலையடிகள் பாலத்திற்கு மேல் தண்ணீர் ஓடிய காட்சியை அன்றுதான் முதன்முதலாக மக்கள் கண்டனர். ஆனாலும் ஜெயலலிதாவைக் காண முடியவில்லை. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன குடிசைகள். உயிர்ப்பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது.

எல்லாம் முடிந்துபோன பின் ஜெயலலிதா வெள்ளம் வந்ததை அறிந்து கொண்டார். ஒரே நாளில் 60 செ .மீ. மழை பெய்ததால் வெள்ளத்தைத் தடுக்க முடியவில்லை என்று கூறி, ஒன்றிய அரசிடம் 25,912 கோடி நிதி வேண்டும் என்று கேட்டார். அவர்கள் வழக்கம்போல் கொடுக்கவில்லை.

இதுதான் கடந்தகாலச் சரித்திரம்.

இப்போது தளபதி மாண்புமிகு முதல்வராக இருக்கும் இந்நேரத்தில், மழை வருவதற்கு முன்பே, நிவாரணப் பணிகள் திட்டமிடப்படுகின்றன.

இவர்தான் மக்கள் முதல்வர்! இதுதான் ‘உண்மையான’ திராவிட மாடல்’ ஆட்சி!!

- சுப.வீரபாண்டியன்

Pin It