இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்திருக்கும் ஒரே தேசம் ஒரே தேர்தல் முறை நடைமுறைச் சாத்தியமற்றதோடு அரசியலமைப்பிற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானது என்பதை விளங்கிக் கொள்ளப் பெரிய சட்ட ஆராய்ச்சி எல்லாம் தேவையில்லை. எளிய மக்கள் கூட மிக எளிமையாக விளங்கிக் கொள்ளக்கூடிய ஒன்று தான் இது. நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் பட்டால் பல கோடிகள் அரசுக்கு மிச்சமாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மிக இயல்பாக எழுப்பப்படும் கேள்விகள்:

* 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது இது நடைமுறைப்படுத்தப்பட்டால் 2015-இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிஹார் சட்டப் பேரவை முதல், கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை மற்றும் இந்த ஆண்டு கடைசியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் போன்ற மாநில சட்டசபைகள் ஐந்தாண்டுகளை நிறைவு செய்வதற்கு முன்னரே கலைக்கப்படுமா?

hindu rashtra* ஆட்சியமைக்கத் தேவைப்படும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்பட்டு எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படும் போது மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா?

* தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் ஓரிரு ஆண்டுகளில் கட்சிப் பிளவு, கட்சித்தாவல், அணி மாற்றங்கள் போன்ற காரணங்களால் கலைக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஐந்து வருடங்களில் மீதமுள்ள காலத்தில் மத்திய அரசே ஆட்சிப் பொறுப்பை ஆளுநர் மூலம் ஏற்றுக் கொள்வது ஜனநாயகத்திற்ககு எதிரானதாகாதா?

* மாநிலத்தில் ஒரு ஆட்சி கவிழ்ந்தாலோ அல்லது பிற காரணங்களுக்காக சட்டசபை கலைக்கப்பட்டாலோ, மத்திய அரசு நேரடியாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் மத்தியில் ஆளும் அரசே ஒருவேளை கவிழ நேர்ந்தால்? மாநிலங்களில் ஆளுநர் ஆட்சி போல மத்தியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு அரசியல் சட்டத்தில் இடமில்லை. அதனால் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடத்த வேண்டும். அப்போது மீண்டும் எல்லா மாநில சட்டசபைகளும் கலைக்கப்படுமா?

* அமெரிக்கா போல, மக்கள் நேரடியாகத் தங்களை ஆளுபவரைத் தேர்ந்தெடுக்கும் அதிபர் முறைக்கு மாறினால் மட்டுமே இம்முறை சாத்தியப்படும். அப்படி அதிபர் ஆட்சி முறைக்கு மாற அரசியலமைப்பு திருத்தப்படுமா?

இந்த நிலைகள் ஏற்பட வேண்டும், அதிகாரம் என்பது நூற்றுக்கு மூன்று சதவிகிதம் மட்டுமே இருக்கும் ஒருசிலரிடமே இருக்க வேண்டும் என்பது தான் இன்றைய மத்திய அரசின் நிலைப்பாடு.

குறையுமா செலவு?

ஜனநாயகத்திற்கு எதிரான பல திட்டங்களைப் பொருளாதாரத்தை முன்னிறுத்தியே மத்திய அரசு முன்மொழிகிறது. அப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் செலவு குறைக்கப்படும் என்பதே காரணமாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால் பணத்தை மிச்சப்படுத்தும் பொருட்டு எதை வேண்டுமானாலும் இந்நாட்டு மக்கள் இழக்க வேண்டுமா? இது ஒருபுறம் இருக்க செலவு குறைக்கப்படும் என்பதாவது சாத்தியமா என்று பார்த்தால் அதற்கும் பல்வேறு தரப்பினரும் வேறு வேறான விடையையே தருகின்றனர்.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்தினால் இந்தியக் கூட்டாட்சிக் கட்டமைப்பு அழிந்துவிடும் என்று சட்ட ஆணையத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரான திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், “2014-இல் பொது தேர்தல் நடத்த மத்திய அரசு 3870 கோடி செலவு செய்தது. அதாவது ஒரு வாக்காளருக்கு செய்த செலவு ரூ.45 ஆகும். அவ்வாறிருக்கையில் இது எப்படி பெரிய தொகை செலவிட்டது போன்றதாகும் என்பது புரியவில்லை.” என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஆக செலவு குறைக்கப்படும் என்பதும் மக்களிடம் ஒரு பொதுப்புத்தியைக் கட்டியமைத்து அதன் மூலம் மக்கள் ஆதரவைப் பெறும் நோக்கோடு சொல்லப்படுவதாகவே இருக்கிறது.

இந்து ராஷ்டிரக் கனவு:

2019 இல் இந்தியாவை “இந்து ராஷ்டிரமாக” அறிவிக்கும் இலக்கோடு செயல்படும் RSSஇன் செயல் திட்டங்களில் இதுவும் ஒன்று. அதிகாரத்தை ஒரே மய்யத்தில் குவிப்பது, அங்கிருந்துகொண்டு அதிகாரத்தைச் செலுத்துவது இதுவே மத்திய அரசின் வாடிக்கை. ‘Central Government is a legal fiction’ என்று பொதுவாகச் சொல்லப்படுவது உண்டு. அதாவது கூட்டாட்சி முறையில் மத்திய அரசு என்று ஒன்று இருப்பது சட்டப்பூர்வமான கற்பனையே ஆகும். அதை மாற்றி அதிகாரங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டு பல்வேறு பண்பாடு, பல்வேறு கலாச்சார வாழ்வியலைக் கொண்ட மக்கள் வாழும் இந்தியத் துணைக்கண்டத்தில் மாநில சுயாட்சியை ஒழித்து ‘State Government is a legal fiction’ என்று சொல்லும் அளவிற்கு நிலைமையை மாற்ற முயற்சிக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு.

இப்படித் தொடர்ந்து பன்மைத்துவத்தை அழிக்க முயற்சிக்கும் பா.ஜ.க அரசிற்கு இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் பாடம் புகட்ட வேண்டும். மாநிலக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களின் வளர்ச்சியையும் தேசியக் கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களின் வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்து மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களைப் பொதுத் தேர்வு, மருத்துவத்திற்கு ஒரு நுழைவுத் தேர்வு, பொறியியலுக்கு ஒரு நுழைவுத் தேர்வு என ஒவ்வொரு துறைக்கும் ஒரு நுழைவுத் தேர்வு என்பதோடு தற்போது ஆண்டிற்கு இரண்டு முறை NEET என்கிற வரைக்கும் வாட்டி வதைக்கும் மத்திய அரசு தேர்தலை மட்டும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று சட்ட ஆணையத்தின் மூலம் கேட்பதன் நோக்கமெல்லாம் எல்லா இடங்களிலும் ‘மத்தவா வராம பாத்துக்கனும்’ என்பது தான்.

Pin It