வரலாற்றில் இந்தியா என்பது என்றைக்கும் ஒரே நாடாக இருந்தது இல்லை. இங்கிலாந்தின் கிழக்கிந்திய வணிகக் குழுமம்தான் கி.பி.1700 களில் கல்கத்தாவை தலைநகராகக் கொண்டு மையப்படுத்தப்பட்ட ஆட்சி முறையை உருவாக்கியது. பெரிய நிலப்பரப்பு என்பதால் நிர்வாக வசதிக்காக முதலில் மூன்று மாகாணங்களை உருவாக்கியது. படிப்படியாக 1947-க்குள் 11 மாகாணங்களாக விரிவடைந்தது. மாகாணங்களை ஆளுநர்கள் மூலம் ஆட்சி செய்தது.

1857இல் ஏற்பட்ட சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக 1858இல் இந்தியாவை பிரித்தானிய அரசு தன் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டு வந்தது.

1919இல் மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டத்தின்படி மாகாணங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் சட்டசபைகள் ஏற்படுத்தப்பட்டன. இரட்டை ஆட்சி முறையில் படித்தவர்களும், பணக்காரர்களும் வாக்களித்து வேட்பாளர் களைத் தேர்வு செய்தனர். சில துறைகளின் பொறுப்புகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களுக்கும் பிற முதன்மையான துறைகளின் பொறுப்பை ஆளுநர் நியமனம் செய்பவர்களுக்கும் அளிக்கப்பட்டது.

1935இல் இயற்றப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின்படி இரட்டை ஆட்சி முறை நீக்கப்பட்டு ஒற்றை ஆட்சி முறை உருவாக்கப்பட்டது. மாகாணங் களுக்கு அதிக அதிகாரமும் அமைச்சர்கள் எண்ணிக்கையும் உயர்த்தப் பட்டன. மாகாணங்களில் கீழவை, மேலவை என்று உருவாக்கப்பட்டன.

இரண்டாம் உலகப் போரின் (1939-1945) முடிவிற்குப் பிறகு 1946இல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. 1946இல் சட்டமன்றங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல்கள் நடத்தப் பட்டன. அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்களைக் கொண்ட அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டது.

1946 திசம்பர் ஒன்பதாம் நாள் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. 1949 நவம்பர் 26இல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் அண்ணல் அம்பேத்கர் அவர்களை வரைவுக் குழுவின் தலைவராகக் கொண்டு எழுதி முடிக்கப்பட்டது.

1947 ஆகத்து பதினைந்தாம் நாள் இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கு சுதந்தரம் வழங்கியது. இந்தியா-பாக்கித்தான் என இரு நாடுகளாகப் பிரித்து அளித்தனர். அக்காலக்கட்டத்தில் இந்தியாவில் 562 சிற்றரசர்கள் ஆட்சி செய்து வந்தனர்.

மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு இங்கிலாந்து அரசின் நேரடி ஆட்சியிலும் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்பு சிற்றரசர்களின் ஆட்சியின் கீழும் இருந்தன. இந்தியா என்பது ஒரு துணைக் கண்டம் பல்வேறு மொழிகளை பேசக்கூடிய, பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட பரந்த நிலப்பரப்பாகும்.

1950 சனவரி 26இல் நடைமுறைக்கு வந்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் இந்தியா அதாவது பாரதம் என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டிருந்தபோதிலும் ஒற்றை அதிகாரம் படைத்த அரசாகவே இது கட்டி அமைக்கப்பட்டது.

1956இல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இன்று இந்தியாவில் 28 மாநிலங்களும் எட்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன.

1967 வரை மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத் திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாநில அரசுகளைக் கலைக்கின்ற அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 356இன்படி 1969இல் சில மாநில அரசுகளை ஒன்றிய அரசு கலைத்தது. 1972இல் நடைபெற வேண்டிய தேர்தலை 1971இல் ஒன்றிய அரசு நடத்தியது.

அதன்பிறகு பல்வேறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு கலைத்தது. மாநில அரசுகள் கலைக்கப்பட்டால் ஆறு மாதத்திற்குள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் (நெருக்கடி நிலை காலம் தவிர). அதனால் பல மாநிலங் களில், பல காலகட்டங்களில் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தினால் செலவினம் குறையும்; தேர்தல்களில் ஈடுபடுத்தப்படும் அலுவலர்களின் பணிநேரம் வீணாவது தடுக்கப்படும். தேர்தல் நடைமுறை விதிகள் காரணமாக மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் சுணக்கம் தவிர்க்கப்படும் என்பன ஒன்றிய அரசு முன்வைக்கும் கருத்தாகும். ஆனால் அதன் உள்நோக்கம் வேறாக உள்ளது.

நாடாளுமன்றத்திற்கும் மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தும்போது மாநிலங் களுக்கே உரித்தான தேவைகள், சிக்கல்கள் புறக் கணிக்கப்படும். மாநிலங்களின் உரிமைகள் பின்னுக் குத் தள்ளப்படும். மாநிலக் கட்சிகள் செல்வாக்குப் படிப்படியாகக் குறையும். ஒன்றிய அரசில் அதிகாரங்கள் மேலும் குவிக்கப்படும் நிலை ஏற்படும். ஒரே தேர்தல் என்பது கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரான தாகும்.

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றங் களுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என்று 1982இல் தேர்தல் ஆணையம் அறிவித்தது. நீதிபதி ஜீவன்ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம் 1999இல் இதே கருத்தை அறிவித்தது. தலைமை அமைச்சர் வாஜ்பேயி 2003இல் இதை அறிவித்தார். எல்.கே.அத்வானி 2010இல் இதே கருத்தைத் தெரிவித்தார். 2014இல் பா.ச.க. தேர்தல் அறிக்கையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படும் என்பதை அறிவித்தது.

2018இல் நீதிபதி சௌகான் தலைமையிலான சட்ட ஆணையம் ஒரே தேர்தல் முறையைப் பரிந் துரை செய்தது. ஆனால் இது உடனடியாக செயல் படுத்தக்கூடியது அல்ல என்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கூறுகள் 83, 85, 172, 174, 356 ஆகியவற்றில் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரவேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

இந்த ஆண்டு செப்டம்பர் இரண்டாம் நாள் பா.ச.க. அரசு முன்னாள் குடிஅரசுத் தலைவர் இராம்நாத் கோவிந் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழுவை அமைத்தது.

1. இராம்நாத் கோவிந் (தலைவர்), 2. நிதின் சந்திரா (செயலாளர்), 3. ஆதிர் ரஞ்சன் சௌதிரி, 4. குலாம்நபி ஆசாத், 5. என்.கே. சிங், 6. டாக்டர் மகபாஷ் கஸ்யாப், 7. அரிஸ் சால்வே, 8. சன்ஜெய் கோத்தாரி.

இந்தக் குழு ஆய்வு செய்து இரண்டு மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சௌதிரி அக்குழுவில் இருந்து விலகி உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளைத் தான் மோடி நிறைவேற்றுகிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குரு கோல்வல்கர் அவர்கள் கூட்டாட்சி முறைக் கூடாது; இது ஒரே நாடு என்று கூறியுள்ளார். கோல்வால்கர் கூறுகிறார் :

“நமது நாடு ஒரே நாடு, நாம் அனைவரும் ஒரே சமுதாயத்தினர். இது ஒரே ராஷ்ட்டிரம். இன்றைய கூட்டாட்சி (Federal System) அமைப்பு பிரிவினைப் போக்குகளை ஊட்டி வளர்க்கிறது. ஒரு விதத்தில் பார்த்தால் இன்றையக் கூட்டாட்சி முறை நாம் ஒரே ராஷ்ட்ரம் என்ற சாத்தியத்திற்கே முரணானது. கூட்டாட்சியின் அமைப்பே பிரிவினைப் போக்குள்ளது தான். இந்தத் தவறை திருத்த வேண்டும். ஏகாத்மா அரசை (Unitary Form of Government) நிலைநாட்டக் கூடிய விதத்தில் நமது நாட்டு அரசியல் சாசனத்தை மாற்றி அமைக்க வேண்டும்” (ஞானகங்கை, பக்கம். 245 முதல் பதிப்பு 2017).

மாநில அரசுகளே இருக்கக்கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை. அதை நோக்கித்தான் மோடி அரசு செல்கிறது. ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு, ஒரு நாடு ஒரு சட்டம் (பொது சிவில் சட்டம்), ஒரே நாடு ஒரே கல்வி முறை, (தேசியக் கல்விக் கொள்கை இந்த வரிசையில்தான்) ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதும் ஆகும். இந்தியாவிற்கு மாற்றாக பாரதம் என்பதும் இதில் அடங்கும். இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான அடிப்படை வேலைகளை மோடி அரசு திட்டமிட்டுச் செய்கிறது. தி.மு.க., காங்கிரசு, பொதுவுடைமைக் கட்சிகள் இது மாநில நலன்களுக்கு எதிரானது என்று கண்டிக் கின்றன.

பா.ச.க.வின் ஆதரவு கட்சி களான அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இதை ஆதரிக்கின்றன. பா.ச.க. காவி பாசிச ஒன்றிய அரசின் தீய உள்நோக்கம் கொண்ட மாநில நலன்களுக்கு எதிரான ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை முறியடிக்க வேண்டும்.

- வாலாசா வல்லவன்

Pin It