அமைதியாகச் சொல்வது வேறு. ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் அவரவர் விருப்பம்.

அடக்கு முறையால் திணிப்பது என்பது வேறு, அது வன்முறை.

மதத்தைக் கவனமாகக் கையாளா விட்டால் அது ஆபத்தை விளைவித்து விடும். ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவாரங்களின் கைகளில் மதம் ஆடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாகத் தேர்தல் வரும்போதெல்லாம் அது தலை விரித்து ஆடும்.

அண்மையில் கர்நாடகத்தில் பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்தின் போது இது தெளிவாக வெளிப்பட்டது. பிரதமர் மோடி தன் ஆட்சியில் என்ன செய்தார் என்பதைச் சொல்லி வாக்கு கேட்க வேண்டும். அதை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி அனுமனுக்கு எதிராக இருக்கிறது என்று சொல்லி “பஜ்ரங்பாலி “ என்று பஜ்ரங்தளத்தை, அனுமனைக் காட்டி முழக்கமிட்டு இருக்கிறார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களின் வாக்கு பா.ஜ.கவுக்குத் தேவையில்லை என்று பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க வேண்டும், அதிகாரத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் ஏதோ ஒரு வகையில் கலவரத்தை உருவாக்கி விடும். சிறு பொறி பெரும் விளைவை ஏற்படுத்தி விடும்.

அயோத்திக்குக் ‘கரசேவை’ என்று செங்கல் அனுப்பி, ரதயாத்திரை நடத்தியதன் விளைவு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கோத்ரா கலவரத்தின் பின்னணியில் மதம் இருந்தது.

அனைத்து மதங்களைத் தழுவிய மக்கள் தமிழ் நாட்டிலும் வாழ்கிறார்கள். இங்கு மத வேறுபாடோ, மதக் கலவரமோ நிகழ்ந்தது இல்லை. காரணம் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க சங்கிக் கூட்டத்தைத் தமிழர்கள் ஏற்காதது தான்.

காவடி எடுத்தார்கள், அரைக்கால் சட்டைப் பேரணி போனார்கள், ‘போனி’ ஆகவில்லை.

ஒன்றியத்தின் தென் மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டுமே ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க இப்பொழுது அதை இழக்கப் போவதாக தேர்தல் முன்கணிப்புகள் சொல்கின்றன.

அந்த பயத்தில், கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில், ஒரு மலையாளப் படத்தைச் சொல்லி, வன்முறை எந்தவடிவில் வருகிறது என்பதை மதத்தின் பார்வையில் பேசியிருக்கிறார் மோடி.

மதத்தை “அபின் “ என்ற ஒரு சொல்லால் விளக்கி விட்டார் காரல் மார்க்ஸ்.

மதத்தை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம். ஆனால் மதவெறியை உருவாக்குவதும், உருவாக்குபவர்களையும் மக்கள் அடையாளம் காண வேண்டும்.

அமைதி நிலவும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். காரணம் திராவிடச் சித்தாந்தம். மதவெறி அல்ல.

கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் தான் கோயிலுக்குள் செல்லவும், வைக்கத்திலும் போராடியிருக்கிறார்.

மதவெறியை எதிர்ப்போம்!

மனித நேயத்தை வளர்ப்போம்!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It