இந்தியத் துணைக்கண்டத்தில், 1947 முதலே மிகப்பெரிய மாநிலமாக விளங்குவது, உத்தரப் பிரதேசம்.

ஏற்கெனவே உத்தரகாண்ட் பகுதியின் காங்கிரசுப் பார்ப்பனத் தலைவர்கள் தான், 1967 வரை யில், உ.பி. மாநில முதல்வராகப் பொறுப்புக்கு வந்தனர். கடைசியாக உ.பி. முதல்வராக இருந்தவர் என்.டி. திவாரி.

உத்தரகாண்ட், உ.பி.யிலிருந்து, 1991 போராட் டத்துக்குப் பிறகு ஒரு தனி மாநிலமாகப் பிரிந்தது. அது மிகச்சிறிய மாநிலம். அங்கு பார்ப்பனர்கள் கணிசமான அளவில் உள்ளனர். மற்ற மேல்சாதிக் காரரும் அதிகம் பேர். பிற்படுத்தப்பட்டோரும் பட்டியல் வகுப்பினரும் மிகக் குறைவானவர்கள்.

ஆனால் உத்தரப்பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்டோர் அதிக எண்ணிக்கையி னர். பட்டியல் வகுப்பினர் 21% பேர்.

உ.பி. பிற்படுத்தப்பட்டோரில், 2000க்குப் பிறகு, மிகப் பிற்பட்டோர் என்கிற கஷ்யாப் போன்ற சாதியினர், உள்ளூர யாதவ், லோதி, கொய்ரி (அ) குஷ்வாகா, குர்மி முதலான - பணக்காரப் பிற்படுத்தப்பட்டோரை வெறுக்கத் தலைப்பட்டனர் என்பதை-அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவை, மற்றும் மா.பெ.பொ.க. வினர் 7 பேரும் இடஒதுக்கீடு பரப்புரையை 30 நாள்கள் மேற்கு உ.பி. 30 மாவட்டங்களில் மேற்கொண்டபோது, நேரில் கண்டுணர்ந்தோம்.

2000ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி வெற்றி பெற்றிட - பாபர் மசூதி இடிப்பும், பிற்பட்டோர் - மிகப் பிற்பட்டோரிடையே இருந்த பகையும்; பட்டியல் வகுப்பினர் - பிற்படுத்தப்பட்டோரிடையே அப்போதிருந்தே நிலவிய உள்பகையும், உ.பி. முஸ்லிம்கள் இரு அணிகளாகப் பிரிந்து நின்ற நிலைமையும் பாரதிய சனதாவின் வெற்றிக்கு உதவின.

கன்ஷிராம் தலைமையிலிருந்த பகுஜன் சமாஜ் கட்சி உ.பி.யில் - இந்துக் களில் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்டோரையும், 21% உள்ள பட்டியல் வகுப்புகளில் பெரும்பான்மையாக உள்ள ஜாடவ் (அ) சமார் என்கிற சக்கிலிய ரையும், பட்டியல் பழங்குடியினரையும் இணைப்பதில் ஓரளவு வெற்றி பெற்றது.

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், 1948இல் விரும்பியபடி, ஒரு வலிமை வாய்ந்த “ஒடுக்கப்பட்டோர் கூட்டணி” அப்போது அமைந்தது. அதனால் பகுஜன் சமாஜ் கட்சியும், சமாஜ் வாதக்கட்சி என்கிற லோகியா சோசலிசக் கட்சிகளின் ஆட்சி - மாறி மாறி, 2002 முதல் 2016 வரை உ.பி.யில் ஆட்சி அமைக்கிற வாய்ப்பைப் பெற்றன.

இந்த இரண்டு கட்சிகளும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் அடியோடு தோற்றன.

பாரதிய சனதாக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியது.

அத்துடன் 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் பாரதிய சனதாக் கட்சி, உ.பி.யில் திட்டமிட்டு இந்துத் துவா கொள்கைகளையும் முசுலீம்கள் பேரில் இந்துக் களை ஏவிவிடும் கொள்கைகளையும் சிற்றூர் தொடங்கி, மாவட்ட ஆட்சி வரை பா.ச.க. இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய இவற்றின் இந்துமத வெறிப் பரப்புரை மூலம் வலிமை யாகக் கட்டி வளர்த்தன.

சமாஜ்வாதக் கட்சி தந்தை-மகன், பெரியப்பன்-சிற்றப்பன் அணிகளாகப் பிரிந்து, அதைச் சிற்றூர் முதல் மாநில மட்டம் வரை வளர்த்தெடுத்தனர்.

“பகுஜன்” சமாஜ், “சர்வஜன்” சமாஜ் கட்சி ஆகி, பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், யாதவ், லோதிக்கு எதிரான பிற்படுத்தப்பட்ட சாதிகளையும், முசுலீம்களையும் இணைத்துக் கொள்வதில் நாட்டம் செலுத்தியது. பார்ப்பன வேட்பாளர்களையும், முசுலீம் வேட்பாளர்களையும் சம எண்ணிக்கையில் முறையே 80 + 80 = 160 வேட்பாளர்களைக் களத்தில் இறக்கியது. பார்ப்பனர், சத்திரியர், வைசியர் வாக்குகளையும் அவ்வகுப்பினரின் பணத்தையும் பெரிதாக நம்பியது.

ஆனால், பார்ப்பனர், சத்திரியர் மற்றும் யாதவ் - லோதிக்கு எதிரான மிகப் பிற்பட்டோர் அணியினர் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சியின் பக்கம் சென்றுவிட்டனர். இது பாரதிய சனதாவுக்கு மிகப்பெரிய வலிமையாக அமைந்துவிட்டது.

இந்திய அரசியலில், காங்கிரசுக் கட்சியை இந்திரா காந்தி 1969 முதல் கையாண்டவிதம்-உள்கட்சி மக்கள் நாயக முறைக்கு எதிரானது.

அனைத்திந்திய காங்கிரசுத் தலைவர் மாநிலக் காங்கிரசுக் கமிட்டிகள், மாவட்டக் காங்கிரசுக் கமிட்டிகள் அனைத்துக்கும் நியமனம் மூலம் தலைவர், செய லாளர், பொருளாளர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மாறாக, எல்லாம் அமர்த்தப்பட்ட - (நியமனப் பதவிகளாக) பதவி களாக மாறின. எந்த மாவட்ட-வட்ட மட்டத்திலும் உள்கட்சி சனநாயகம் இல்லை. அதனால் காங்கிரசுக் கட்சி (அ) கட்சி உள்கிளைகள் வேர், சிற்றூர் அளவில் செத்துப் போயிற்று.

1969 ஆகத்தில் ஏற்பட்ட இந்திராகாந்தி-கருணாநிதி ஒப்பந்தம், தமிழகக் காங்கிரசைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. இனி தமிழகத்திலோ, இந்தியாவிலோ எந்த மட்டத்திலும் சோனியா காந்தி தலைமையில் உள்ள காங்கிரசால், வெற்றி பெற முடியாது.

1967 வரையில், எதிர்க்கட்சி எதுவும் தலையெடுக்க முடியாமல் ஆட்சிபுரிந்த காங்கிரசு, 1969 முதலே சிற்றூர் கிளை முதல் மாநிலக் கிளைகள் வரையில் மக்கள் நாயக முறையில் கட்சியை வளர்த்திருக்க வேண்டிய காங்கிரசு - 1984 வரையிலுமோ, 1991 மே வரையிலுமோ, 1991 மே மாதத்திற்குப் பிறகு நெடுங் காலமான 2016 வரையிலுமோ அப்படிக் கட்சி அமைப்பு களைக் கட்ட முடியாத காங்கிரசு, இனி வானுக்கும் மண்ணுக்கும் எகிறினாலும் கடைத்தேற முடியாது.

இன்றைய உ.பி. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசு கற்க வேண்டிய பாடம் இது.

மேதை அம்பேத்கர் 1948 சொன்ன ஒரு அரசியல் கொள்கை என்ன?

“அரசதிகாரத்தைக் கைப்பற்றுவோம். உண்மையான ஒரே அரசு தில்லியிலுள்ள இந்திய அரசு. அரசதிகாரம் அதனிடம் தேங்கிக் கிடக்கிறது. இந்தியாவில் 85 விழுக் காடு மக்களாக உள்ள - 1) பிற்படுத்தப்பட்டோர், 2) பட்டியல் வகுப்பினர், 3) பழங்குடியினர், 4) மதச் சிறுபான்மையினர் இந்நான்கு வகுப்பினரும் ஒன்று சேர்ந்தால், அந்த அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும். இம்மக்களை இவர்களின் தலைவர்கள் ஒன்றுசேருங்கள்” என அறைகூவல் விடுத்தார். எனவே

இது, கன்ஷிராமின் குறிக்கோளாக இருந்தது; ஆனால் மாயாவதியின் குறிக்கோளாக இல்லை.

இது முலாயம்சிங்கின் குறிக்கோளாக இருக்க முடியாது.

இந்த இரு அணியினரும் இனி தலைதூக்குவது கடினம்.

பீகார் நிலையும் அப்படியே. அங்கு குடும்ப வாரிசு அரசியல் தலைதூக்கிவிட்டது.

தமிழக நிலையும் அப்படியே. தமிழகம் பற்றித் தனியே எழுதுவோம். நிற்க.

உ.பி. தேர்தலுக்குப் பின்னர் :

1. உண்மையான மக்கள் நாயக அமைப்புகள் (Democratic Organisations or Parties).

2. ஊரறிந்த பொதுவுடைமைக் கட்சிகள் (Known Communist Parties).

3. இந்தியாவில் அரசை நிறுவ விரும்பும் மார்க்சிய - புலேயிய - அம்பேத்கரிய - லோகியா சிந்தனையுள்ள அமைப்புகள்.

இவர்கள் எல்லோரும் தீவிரமாகச் சிந்தித்து முடி வெடுத்துச் செயல்பட்டாலொழிய இந்திய உழைக்கும் மக்களுக்கு விடுதலை ஒருநாளும் வராது.

இனி, பா.ச.க. பற்றி ஆர அமரச் சிந்திப்போம்.

1. 30.01.1948இல் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அ) காந்தியார் பாக்கிஸ்தானுக்குத் தரவேண்டிய பங்குத் தொகையை இந்திய அரசு உடனே தரவேண்டும் என்றார்.

ஆ) சென்னை மாகாணப் பிரதமர் (Premier) ஓமாந் தூரார், முதன்முதலாகப் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியிலும் வேலையிலும் 1947 நவம்பரில் தனி ஒதுக்கீடு அளித்தார். பெரியார் கோரியதன் பேரில், ஓமந்தூரார் செய்தார்.

அதை காந்தியார் ஆதரித்தார். தமிழ்நாட்டுப் பார்ப் பனரை நேரில் அழைத்துக் கடிந்து கொண்டார்.

இனி காந்தியார் இருப்பது நமக்கு ஆபத்து என்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நினைத்தனர்.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர் நினைத்ததை கோட்சே செய்து முடித்தான்.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள், 1948 பிப்ரவரியில், பூனாவில் இரகசியமாகக் கூடிப் பேசி ஒரு முடிவெடுத்தார்கள்.

என்ன முடிவு அது?

“கி.பி.2000இல் இந்தியாவில் இராமராஜ்யம் அமைக்க வேண்டும். அதற்கு ஏற்ற ஒரே கருவி இந்திய அரசு. இந்த இந்திய அரசை 2000இல் ஆர்.எஸ்.எஸ். கைப் பற்ற வேண்டும்.

அதற்கு ஏற்ற வழி சமூகத்தின் எல்லாப் பிரிவுகளி லும் (all winggs) ஊடுருவ வேண்டும் என்று முடி வெடுத்தனர்.

2000இல் அரசு அமைந்தது - பாரதிய சனதா கூட்டணி அரசு.

2014இல் ஆர்.எஸ்.எஸ். அரசு அமைந்தது, சுதந்தர மாக.”

ஆர்.எஸ்.எஸ். எதற்காக 1925இல் அமைக்கப் பட்டதோ, அந்த இலக்கை 2014இல் அடைந்துவிட்டது.

அதற்கு நல்ல ஊன்றுகோலாக - கைத்தடியாக, 11.3.2017 உ.பி. சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன.

அம்முடிவுகள் யாவை?

உ.பி. சட்டமன்ற மொத்த இடங்கள் 403.

கட்சிவாரி வெற்றி பெற்ற இடங்கள் :

1. பாரதிய சனதாக் கூட்டணி (312+13)   325

2. சமாஜ்வாதி + காங்கிரசு          54

3.  பகுஜன் சமாஜ் (எ) சர்வஜன் சமாஜ்   19

4.  மற்ற கட்சிகள்                                     5

 மொத்தம்         403

இவ்வளவு பெரிய அளவில் வாக்குகளை அள்ளிக் குவிக்க எப்படி முடிந்தது?

அமித் ஷா, பா.ச.க.வின் தேசியத் தலைவர்.

அவர் ஓராண்டுக்கு முன்னரே உ.பி.யில் ஒரு வாக்குச்சாவடிக்கு (Booth) 10 முதல் 21 பேர்கள் வீதம் வாக்குச் சேகரிப்போரை அமர்த்திவிட்டார்.

உ.பி.யில் மொத்த வாக்குச்சாவடிகள் 1,47,401 ஆகும். இவற்றில் வாக்குச் சேகரிக்க 13,50,000 ஆள்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.

அதனால்தான் உ.பி.யில் பதிவான மொத்த வாக்கு களில், பாரதிய சனதா கூட்டணி 41.4 விழுக்காடு வாக்கு களை வாரிக்குவிக்க முடிந்தது.

இவ்வளவு பெரிய பட்டாளத்துக்கு எத்தனை ஆயிரம் கோடி ரூபா செலவாயிற்றோ!

மோடிக்கும், ஷாவுக்கும் தான் அது தெரியும்!

இதற்கு, மேலும் வலுச்சேர்த்தது, உத்தரகாண்ட் தேர்தல்.

உத்தரகாண்ட் சட்டமன்ற மொத்த இடங்கள் 70

கட்சிவாரி வெற்றி பெற்ற இடங்கள்

1.            பாரதிய சனதா            57

2.            காங்கிரசு         11

3.            சுயேச்சைகள்  2

                மொத்தம்         70

சென்னை மாகாணச் சட்டமன்றத் தேர்தலில் - 1952இல் மொத்த இடங்கள் 375.

1.            காங்கிரசு         150

2.            கம்யூனிஸ்டுக் கட்சி   69

3.            தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19

4.            மற்ற கட்சிகள் 137

ஆனால் சி. இராசகோபாலாச்சாரியார், காங்கிரசு7 முதலமைச்சர் ஆனார்.

இது மாகாண முறைஅரசில் அன்று இருந்த நிலை.

I.          26.12.1925இல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 2017ஆம் ஆண்டைய நிலை என்ன?

II.         26.12.1926இல் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கம், இந்திய அரசில், 2017இல் - எந்த வடிவத் தில், என்ன நிலை பெற்றுள்ளது? ஏன் அந்நிலை?

எல்லோரும் இவற்றுக்கு விடை காணுவோம், வாருங்கள்!

Pin It