இந்தி எதிர்ப்பு என்பது ஏதோ ஒரு மொழிக்கு எதிரான உணர்வு அல்ல. அது ஆதிக்கத்தின் எதிர்ப்பு!

1920,30களுக்குப் பின்னர் நீதிக் கட்சி ஆட்சியின் மூலம் கிடைக்கப் பெற்ற கல்வி உரிமையின் மூலம் முதல் தலைமுறையாகக் கற்கத் தொடங்கியத் தமிழர்கள், தாய் மொழி தமிழுடன் ஆங்கிலத்தையும் கற்கத் தொடங்கிய நேரத்தில் அவற்றோடு இந்தியையும் கட்டாயமாகப் படிக்க அன்றைய முதல்வர் ராஜகோபாலாச்சாரியார் ஆணையிட்டார்.தலைமுறை தலைமுறையாக சமஸ்கிருத வேதக் கல்வி கற்பதைக் குலத் தொழிலாகக் கொண்ட பார்ப்பனர்களுக்கு சமஸ்கிருதத்தின் மாற்று வடிவமான இந்தி கற்பது கடினம் அல்ல. ஆனால் முதல் தலைமுறையாகத் தமிழையும் ஆங்கிலத்தையும் கற்று அதற்குமேல் இந்தியையும் கட்டாயப்படுத்தினால் அவர்கள் படிப்பே வேண்டாம் என்று மீண்டும் ஆடு மாடு மேய்க்கச் சென்று விடுவார்கள் என்று ஆச்சாரியார் எதிர்பார்த்தார்.

hindi agitationஆச்சாரியாரின் சூதுமதியை அறிந்ததோடு ஆதிக்க இந்தி திணிப்புக்கு எதிராகத் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினார். போராட்டக் களத்தில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ் காவலர் கிஆபெ விசுவநாதம் போன்ற தமிழறிஞர்களை முன்னிறுத்தினார். அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியைத் திருச்சியிலிருந்து சென்னை வரையில் இந்தி எதிர்ப்புப் பிரச்சார நெடும்பயணம் செய்யத் தமிழர் பெரும்படையை நடத்தச் செய்தார். ஆண்கள் மட்டுமன்றி தாய்மார்களையும் திரட்டி போராட்டக்களத்தில் ஈடுபடுத்தினார். பலநூறு தாய்மார்கள் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றனர். இக்‘குற்ற’ங்களைச் செய்ததால் தந்தை பெரியாருக்குப் பெல்லாரி சிறையில் கல்லுடைக்கும் கடும் தண்டனை வழங்கப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போர்க்களத்தில் நடராசனும், தாளமுத்துவும் முதல் களப்பலியாகினர். போராட்டத்தின் விளைவாகக் கட்டாய இந்தி திரும்பப் பெறப்பட்டது.

 வெள்ளையர் ஆட்சியில் தொடங்கிய இந்தித்திணிப்பு, நாடு விடுதலை அடைந்த பின்னரும் 1948, 1952, 1965, 1986 என்று தொடர்ந்து கொண்டே இருந்தது. அனைத்து நிலைகளிலும் திமுகழகம் இந்தித் திணிப்பை எதிர்த்து கடுமையாகப் போராடி வந்தது. குறிப்பாகத் தலைவர் கலைஞர் அவர்களின் பங்கு மகத்தானது.

 1938ஆம் ஆண்டு 14 வயது மாணவராக இருந்த நேரத்தில் சக மாணவர்களைத் திரட்டி இந்தி எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினார் அவர். 1948ஆம் ஆண்டு திருமணக் கோலத்தில் இருந்த கலைஞர் மணவிழாவை விட்டு அவ்வழியே சென்ற இந்தி எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்கேற்றார். 1952ஆம் ஆண்டு இந்தி எழுத்துகளைத் தார்பூசி அழிக்கும் போராட்டத்திதில் ராவிடர் கழகமும், தி.முகழகமும் ஈடுபட்டபோது திருச்சியில் புகைவண்டி நிலையத்தில் தந்தை பெரியாரும் அஞ்சல் நிலையத்தில் தலைவர் கலைஞரும் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தனர். 1965ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் தேசியப் பாதுகாப்புக் கொடிய சட்டத்தில் கைது செய்யப்பட்டுப் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தியை இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்பதற்கு எந்தவித நியாயமான காரணமும் கிடையாது. முதலில் அம்மொழி பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி என்பதே ஒரு மிகப்பெரிய பொய்.

 வட இந்தியாவில் பேசப்படும் பிகாரி, பிரஜ் பாஷா, புந்தேல்கண்டி, போஜ்புரி, பிரதாப்கர், ஆவ்தி, கன்னோஜி, கடுவாலி, குமோனி, ஹரியானி, ராஜஸ்தானி மொழிகளை எல்லாம் இந்தி மொழி பேசுவோரின் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் இந்தி பெரும்பான்மையான மக்களால் பேசப்படுவதாகக் கதை அளக்கின்றார்கள்.

இந்தியை அலுவல் மொழியாக ஏற்றால் வட இந்தியாவில் வேலை வாய்ப்பு கிட்டும் என்பது மற்றொரு பொய். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட, பட்டம் பெற்றவர்கள் கூட தமிழகத்தின் வீதிகளில் சோன் பப்டி, பானி பூரி, பூட்டு, போர்வை போன்றவற்றை வணிகம் செய்வதைக் காண்கின்றோம். அங்கே வேலை இருந்தால் அவர்கள் இங்கே ஏன் வருகிறார்கள்? அதுமட்டுமல்ல லட்சக்கணக்கில் வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் கட்டட வேலை பின்னலாடைத் தொழில் உள்ளிட்ட உடல் உழைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதைப் பார்க்கின்றோம்.

இந்தியை அலுவல் மொழியாக ஏற்பது என்பது ஆதிக்க இந்’தீ’ யைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு மட்டுமே நன்மை பயப்பதாகும்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களை இரண்டாம்தரக் குடிமக்கள் ஆக்குவதற்கு வழிவகுத்துவிடும். இது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் உகந்தது அல்ல.

எத்தனை நியாயமான காரணங்களை அடுக்கி வைத்தாலும், அவற்றையெல்லாம் புறக்கணித்து இந்தி மொழியைத் திணிப்பதில் ஒன்றிய பாஜக அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. பாஜகவின் நோக்கம் இந்தியை முன்னிலைப்படுத்துவது மட்டுமல்ல; எதற்கும் எவருக்கும் பயன்படாத செத்துப்போன சமஸ்கிருதத்தை அரியணையில் அமர்த்தி அழகு பார்க்க அவர்கள் துடிக்கிறார்கள். அதற்கு முன்னோடியாகத்தான் இந்தியை முதன்மைப் படுத்துகின்றனர். ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்துக்கும் இந்தியிலேயே பெயர் சூட்டி பயன்படுத்துகின்றனர்.

 அதுமட்டுமல்ல தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பயன்படும் சலான்களில் பெரும்பாலும் ஆங்கிலமும் இந்தியும்தான் இருக்கின்றன. மாநில மொழியான தமிழ் இருப்பதில்லை.

1965ஆம் ஆண்டு தமிழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட அந்த மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தணல் இன்னமும் தமிழ்நாட்டில் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

மொழிப்போர்த் தியாகிகளை நெஞ்சில் ஏந்துவோம்! இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்போம்!

- பொள்ளாச்சி மா.உமாபதி

Pin It