திராவிட முன்னேற்ற கழக அரசு பதவியேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் சூழலியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கொண்டு வருவதில் உறுதியாக செயலாற்றி வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் பல்லுயிர் சூழலியலில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டின் மொத்த வனப்பரப்பு 26,419.23 சதுர கிலோ மீட்டர். இது மாநிலத்தின் மொத்த பரப்பில் 20.31 விழுக்காடு. உலகிலுள்ள முக்கியமான 36 உயிர்ப் பன்மை மிக்க தலங்களில் மேற்கு தொடர்ச்சி மலையும் ஒன்றாக விளங்குகிறது. தமிழ்நாட்டின் பல்லுயிர்ப் பெருக்கத்தில் 165 வகையான மீன் இனங்களும், 76 வகையான நீர் நில வாழ்வன, 177 வகையான ஊர்வன, 454 வகையான பறவைகள் மற்றும் 187 பாலூட்டிகள் தமிழகத்தில் காணப்படுகின்றன.

வனம் மற்றும் வன உயிரினங்களை பாதுகாத்து சூழலியல் சமத்துவத்தை பேணுவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் 5 புலிகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோளக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள், 2 வன உயிரின காப்பகங்கள் என தமிழ்நாடு இந்தியாவில் தனித்துவமான சூழலியல் தன்மையை கொண்டுள்ளது.mk stalin 401பசுமை தமிழ்நாடு இயக்கம்

திராவிட முன்னேற்ற கழக அரசு பதவியேற்றதில் இருந்து வனப் பரப்பை அதிகரிப்பதிலும், புதிதாக பறவைகள் மற்றும் வன உயிரினக் காப்பகங்கள் உருவாக்குவதிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது. 2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.08 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக உயர்த்தும் வகையில் ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் கீழ் அடுத்த பத்தாண்டுகளில் 261 கோடி உள்ளூர் மர வகைகள் நடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஈர நில இயக்கம் – ராம்சார் குறியீடு

இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பருவ நிலை மாற்ற இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈர நில இயக்கம் ஆகியவற்றையும் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 100 ஈர நிலங்களை கண்டறிவது இதன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈர நிலங்களின் மேம்பாட்டிற்காக சர்வதேச அளவில் வழங்கப்படும் ராம்சார் அங்கீகாரம் தமிழ்நாட்டில் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு அரசு எடுத்த பெரும் முயற்சிகளால் தமிழ்நாட்டில் பள்ளிக்கரணை, கரிக்கிலி, பிச்சாவரம், வேடந்தாங்கல், கூந்தன்குளம், மன்னார் வளைகுடா, வெள்ளோடு, உதயமார்த்தாண்டபுரம், வேம்பனூர் ஆகியவை ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன. ஒரே ஆண்டில் 10 இடங்கள் என தமிழ்நாட்டில் இதுவரை 13 இடங்கள் ராம்சார் அங்கீகாரம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் வளைகுடா கடற்பசு காப்பகம்

தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடல் பகுதியில் காணப்படும் மிகவும் அரிய வகை கடல்வாழ் பாலூட்டி Dugong எனப்படும் ஆவுளியா ஆகும்.

கடல்மாசு மற்றும் கடற்புல் படுகைகள் அழிக்கப்படுவதால் இந்த ஆவுளியா இனம் அண்மை காலங்களில் பெரும் அழிவை சந்தித்து வருகிறது. இதனை பாதுகாக்கும் பொருட்டு இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா மற்றும் பாக் விரிகுடா கடற்பகுதியில் அமைத்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேவாங்கு சரணாலயம்

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் தேவாங்குகளை அருகி வரும் உயிரினமாக பட்டியலிட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய வனப் பகுதியில் தேவாங்குள் வாழ்ந்து வருகின்றன.

வேட்டையாடுதல் மற்றும் காடுகளின் அழிவால் தேவாங்குகள் அழிந்து வரும் சூழலை கருத்தில் கொண்டு அவற்றை பாதுகாக்கும் வகையில் மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக கடவூர் தேவாங்கு சரணாலயத்தை அறிவித்து தமிழ்நாடு அரசு.

அகத்தியர் மலை யானைகள் காப்பகம்

தமிழ்நாட்டில் நீலகிரி, ஆனைமலை, கோயம்புத்தூர் மற்றும் திருவில்லிபுத்தூரில் யானைகள் காப்பகங்கள் அமைந்துள்ளன. ஆசிய யானைகளின் வாழ்விட மேம்பாட்டிற்காக கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களிலுள்ள வன வாழ்விடங்களை உள்ளடக்கி தமிழ்நாட்டின் 5-வது யானைகள் காப்பகமாக அகத்தியர் மலை யானைகள் காப்பகத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.

பறவைகள் சரணாலயங்கள்

கழுவெளி பறவைகள் சரணாயலம்

பல்வேறு நாடுகளில் இருந்து வரும் வலசைப் பறவைகள் மற்றும் உள்நாட்டுப் பறவைகளுக்கு வசிப்பிடமாக விளங்கும் தமிழ்நாட்டின் ‘மசாய் மரா’ என்று அழைக்கப்படும் கழுவெளி சதுப்பு நிலம் பழவேற்காடு ஏரிக்கு அடுத்து தமிழ்நாட்டின் மிகப் பெரிய ஏரியை உள்ளடக்கியது. விழுப்புரம் மாவட்டத்தின் வானூர் மற்றும் மரக்காணம் தாலுகாக்களில் 5,161.60 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள கழுவெளி சதுப்பு நிலத்தை தமிழ்நாட்டின் 16வது பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பல ஆண்டுகளாக கழுவெளியை பறவைகள்சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் சூழலியலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயம்

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் சர்க்கார் பெரியபாளையம் என்னும் இடத்தில் சுமார் 440 ஏக்கரில் அமைந்துள்ள நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் என்று கடந்த 2009 ஆம் ஆண்டு முதலே கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து நஞ்சராயன் குளத்தை உள்ளடக்கிய 125.88 ஹெக்டேர் நிலத்தை உள்ளடக்கிய பகுதியை தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது திமுக அரசு. 

வன உயிரின சரணாலயங்கள்

காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்

கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் 686.405 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய காப்புக்காடுகளை தமிழ்நாட்டின் 17-வது சரணாலயமாக ‘‘காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம்’ என்று உருவாக்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் மற்றும் கர்நாடக மாநிலத்தின் காவிரி வன உயிரின சரணாலயம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. நீலகிரி உயிர்கோளக் காப்பகம் வரை தொடர்ச்சியான பாதுகாக்கப்பட்ட வன உயிரின சூழலை ஏற்படுத்துகிறது.

அரிட்டாப்பட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலம்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு, நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் வாழ்விடங்கள் போன்றவற்றை பாதுகாக்கும் நோக்கில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும்.

இவ்வாறு ஆட்சிப் பொறுப்பேற்ற 18 மாதங்களில் தமிழ்நாட்டின் வன உயிரின பாதுகாப்பு மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நடவடிக்கைகளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசு எடுத்து வருவது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பையும் நம்பிக்கையையும் பெற்றுள்ளது.

- இரா.வெங்கட்ராகவன்

Pin It