1967 ஆம் ஆண்டே ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி எனும் வாக்குறுதி கொடுத்துத் தொடங்கிய திராவிட இயக்க ஆட்சி, இன்று இலவச அரிசி வழங்குவது வரை பொது விநியோகத் திட்டத்தில் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குச் சிறந்து விளங்கி வருகிறது. இதனை அனைத்துப் பொருளாதார அறிஞர்களும் எடுத்துரைத்திருக்கின்றனர். பொருளாதார அறிஞரும் நோபல் பரிசு பெற்றவருமான அமர்த்தியா சென் "An Uncertain Glory - India and its Contradictions” என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"One of the pioneer states, here as in many other fields (as we have observed), was Tamil Nadu, where the PDS is universal, regular and relatively corruption free.” (பக்கம் 206)

ration card 396மற்ற எல்லா துறைகளிலும் முன்னோடியாக விளங்குவது போலவே பொது விநியோக முறையிலும் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கி வருகிறது. இங்கு பொது விநியோகத் திட்டம் என்பது அனைவருக்கும் பரவலாக்கப்பட்டதாகவும், முறையாகவும், ஒப்பீட்டளவில் ஊழல் அற்றதாகவும் இருக்கிறது.

இப்படிப்பட்ட வளர்ச்சியை முடக்கும் செயலாக "ஒரே நாடு ஒரே ரேஷன்” என்ற திட்டத்தைக் கொண்டு வருவதாக அண்மையில் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் யார் பயன்பெறப் போகிறார்கள்? எதற்காக இந்த நாட்டு மக்கள் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குக் குடிபெயர்ந்து கொண்டே இருக்க வேண்டும்? அப்படிக் குடிபெயர்கிறவர்கள் அந்த மாநிலத்தில் குடும்ப அட்டை வாங்கிக்கொள்ளப்போகிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மாநிலத்தில் குடியேறப் போகிறார்களா இந்நாட்டு மக்கள்? இப்படிப்பட்ட திட்டமே தேவையற்றது.

பொதுவாக எல்லா நாடுகளிலும் மையப்படுத்தப்பட்ட திட்டங்களைப் பரவலாக்கி அது அனைவருக்கும் சென்று சேரும் விதமாக மாற்றி வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் பரவலாக்கப்பட்டு மக்கள் பயன் பெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்களை மீண்டும் மக்களிடம் இருந்து பறித்து அரசு எடுத்துக் கொள்கிறது, இது ஒருபோதும் வளர்ச்சிக்கு உதவாது. நாட்டின் வளர்ச்சியில் உண்மையிலேயே இவர்கள் அக்கறை கொண்டிருந்தால் இப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்டி இருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை நாட்டின் வளர்ச்சி அல்ல இந்துத்துவத்தின் வளர்ச்சி.

எதற்காக இவர்கள் ‘ஒரே நாடு ஒரே வரி’, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’, ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ போன்றவற்றைக் கொண்டு வரவேண்டும்.? ஆர்எஸ்எஸ்-பாஜகவின் செயல்திட்டம் என்பது மதச்சார்பற்ற இந்த நாட்டை இந்துத்துவ நாடாக மாற்றுவது. ஆனால் நடைமுறையில் அது மக்களை இந்துக்களாக ஒன்றிணைப்பதாக இல்லை. ஏனெனில் இந்து மதமே பார்ப்பனர்களின் நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதானே. இங்குள்ள பல்வேறு தரப்பட்ட மக்களையும் இந்துமயமாக்கவும் மக்கள் அனைவருக்கும் காவிச் சாயம் பூசவுமே இது போன்ற ஒற்றைக் கலாச்சார முறையை உருவாக்குகிறார்கள். இவர்கள் மக்களை எல்லாம் இந்துக்கள் என்றும், ஒரே நாடு என்றும் ஒருங்கிணைப்பது அவர்களை அவரவர் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் இருந்து விலக்கி ஒற்றைக் கலாச்சாரத்தை ஒரே மொழியைத் திணிப்பதற்காகவே. ஆனால் சாதிகளாக மக்களை அப்படியே பிரித்து வைக்கத்தான் இத்தனை ஒருங்கிணைப்பும் என்பதைச் சூத்திரர்கள் உணர வேண்டும்.

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து இன்னும் ஓராண்டு கூட நிறைவடையாத நிலையில் ஒரு நூற்றாண்டாகப் போராடிப் பெற்ற உரிமைகளையும் வளர்ச்சியையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் இதுபோன்ற மையப்படுத்தப்பட்ட திட்டங்கள் எல்லாம் தோல்வியையே சந்திக்கும். மேலும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இது எதிரானதாகும். அந்தந்த மாநில மக்களின் உரிமைகளைப் பறிப்பதோடு சுரண்டலுக்கும் வழிவகுக்கும். இங்கே சுரண்டப்படுவது வளர்ச்சியடைந்த தென் மாநிலங்கள் அதுவும் குறிப்பாகத் தமிழ்நாடாகவும், சுரண்டுபவர்கள் வட மாநிலத்தவர்களாகவுமே வழக்கம் போல் இருப்பார்கள்.

சித்தம் தடுமாறியவர்களுக்கு ஒரு பொருள் பலவாறாகத் தெரியும். ஆனால் இங்கே சித்தம் தடுமாறிய இவர்களுக்குப் பல பொருள்கள் ஒன்றாகத் தெரிகின்றன. இவர்கள் பன்மைத்துவத்தை ஒற்றைத் தன்மையானதாகப் பார்க்கும் அந்தப் பார்வையில் ஒளிந்திருப்பது நயவஞ்சகமும் சூழ்ச்சியுமே ஆகும். இந்தச் சூழ்ச்சிகளால் இங்கே அவர்கள் நிலைநாட்ட விரும்புவது பார்ப்பன ஆதிக்கத்தையே ஆகும்.

இன்று "ஒரு நாடு ஒரு ரேஷன்” என்று சொல்பவர்கள் நாளை "ஒரு நாடு ஒரே உணவு” என்றும் சொல்லத் தொடங்குவார்கள். வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்தப்படும் என்றும் சொல்லப்படும். பொருளாகக் கொடுக்கும் போதுதான் அது பசியால் வாடும் மக்களுக்குப் பயன்படும். வங்கியில் செலுத்தப்படும் பணத்தை வைத்துக் கொண்டு சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் பொருள்களை அவர்கள் எப்படி வாங்க முடியும். இன்னும் சில நாள்களில் இந்தப் பொது விநியோக முறையே இல்லாத வகையில் தனியாருக்கு அதனை ஒப்படைத்துப் பின்னர் நீர்த்துப் போகச் செய்து ஒழித்துக் கட்டி விடுவார்கள்.

பசியால் வாடுபவர்களுக்கு அரிசி விநியோகம் செய்வதற்காக அல்ல, பார்ப்பனர்களுக்கு அதிகாரத்தை விநியோகம் செய்யவே "ஒரே நாடு ஒரே ரேஷன்” திட்டம்.

 - மா.உதயகுமார்

Pin It